கருவறுக்கப்படும் மாநில சின்னம்:
பனையை அழித்து வினையை தேடும் சமூகம்
நிலத்தடி நீர் கேள்விக்குறியாகும் அபாயம்
தமிழர்களின் வாழ்வியலோடு தொன்று தொட்டு பயணித்து மனித சமுதாயத்திற்கு மட்டுமல்லாது இயற்கையை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பனை என்ற தாவரம். கேட்டதெல்லாம் தரும் தேவலோக கற்பகத்தரு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பனையைத்தான் தமிழகத்தின் மாநில சின்னமாக வைத்துள்ளனர். ஏட்டளவில் இது மாநில சின்னமாக இருக்கிறதே தவிர இந்த பனை அழியாமல் தடுக்க எந்தவித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய உண்மை.
தொல்காப்பியம் தொடங்கி ஔவை மூதாட்டி வரை பனையின் முக்கியத்துவத்தை புட்டு புட்டு வைத்தாலும் தமிழனின் அடையாளங்கள் ஏனோ சிதைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. 100 ஆண்டுகளை தாண்டி வாழும் தன்மையுடைய பனைமரங்கள் காரண காரியங்களின்றி ரூ.100க்கும் ரூ.200க்கும் விலை வைக்கப்பட்டு வெட்டப்பட்டு நிலங்கள் கட்டாந்தரைகளாக்கப்பட்டு வருகின்றன.
நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பனைகளை அழிப்பதால் எதிர்கால சந்ததியினர் சந்திக்கப் போகும் சுற்றுப்புற சூழியல் சவால்களை நினைத்தாலே அச்சப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகளை போட்டு பூமியை சல்லடையாக்கி வைத்துள்ளனர். பற்றாக்குறைக்கு காடுகளை வெட்டி அழித்து குவாரிகளும், வீடுகளுமாய் பெருகி வான்மழையை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டமோ அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆயிரம் அடிகள் துளையிட்டாலும் ஒரு சொட்டு நீரைக்கூட பெற முடியாத அவலம் தமிழகத்தை சாபமாக பீடிக்கத் தொடங்கி விட்டது. காரணம் 200 அடி வரை தனது வேரால் நிலத்தை ஊடுருவி தண்ணீரை சேமிக்கும் பனையை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் முற்காலத்தில் தரிசாக கிடந்த நிலங்களிலெல்லாம் பலனை எதிர்பார்க்காமல் நமது முன்னோர்கள் பனைகளை நட்டு வைத்தார்கள். அவர்களை விவரம் தெரியாதவர்களாக, காலி இடங்களை வடலிகளை நட்டு விரயம் செய்தவர்களாக பார்த்ததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.
புற ஊதாக்கதிர்களை பூமிக்கு வராமல் புறக்கணிக்கும் ஓசோனைக்கூட ஓட்டையாக்கி விட்டு பசுமை பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல் என விழிப்புணர்வு கோஷங்களையும், பேரணிகளையும் நடத்துகின்றனர். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தாறுமாறாக ஊக்குவித்து பனை பொருட்களையெல்லாம் பரலோகம் அனுப்பிவிட்டு இப்போது மண் கெட்டு விட்டது, மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.
பனைத்தொழிலை ஊக்கப்படுத்தாமல் கள் இறக்கினால் தீவிரவாதம், பதநீர் இறக்கினால் படுபாதகம் என்றெல்லாம் பாடாய்படுத்தி பனையேறும் கூட்டத்தையெல்லாம் கூலித் தொழில்களுக்கு அடிமாடுகளாய் அனுப்பிவிட்டார்கள். பாளை சீவி பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் கூந்தல் இழந்து பட்டமரங்களாய் தலையிழந்து குச்சி குச்சியாய் முண்டங்களாக நிற்கின்றன பனையின் தடிகள்.
சர்க்கரை நோயாளிகள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டின் இன்றைய நிலை சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்பதுதான். பனை தந்த கருப்பட்டியும், நாட்டு சர்க்கரையும் கொடுத்த ஆரோக்கியத்தை நவீன சர்க்கரை பறித்துக் கொண்டது. பதநீர் கொடுத்த தேக ஆரோக்கியத்தை பாட்டில் பானங்கள் பாழடித்து விட்டது. கள் கொடுத்த தேகப்பொலிவை, வலிமையை டாஸ்மாக் மதுபானங்கள் சிதைத்து சீரழித்து விட்டன. பனைப்பொருட்களை கையில் தூக்குவதற்கு வெட்கப்பட்டு பிளாஸ்டிக்கை கையாள தொடங்கிய பின்னர் மண்ணே நச்சாகி விட்டது.
தென்னை மரங்களில் ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகளை வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலமாக நடத்தும் அரசு பனைகளை புறந்தள்ளுவது ஏன்? தென்னையில் நீராபானம் எடுக்க அனுமதித்த அரசு பனை நல்கும் பானங்களுக்கு தடை வழங்குவது ஏன்? முடி முதல் அடி வரை பலன்களை அள்ளிக் கொடுக்கும் பனை வளர்ப்பை விழிப்புணர்வு இயக்கமாக மாற்றுவதற்கு தயக்கம் ஏன்? அனைத்து மரங்களின் தோற்றுவாய் பனையே என்பதை ஏட்டிலும், பாட்டிலும் புலவர்கள் பாடியும் ஆளும் அரசுகளுக்கு புரியாதது ஏன்?
பனையை பாதுகாப்பதற்காக இதுவரை எத்தனையோ அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்கள் தோன்றியும் அவையெல்லாம் தோற்றுப்போய், துவண்டு போய் அடுத்தக்கட்ட பயணத்திற்கு செல்லமுடியாமல் போனது ஏன்? அரசின் ஒத்துழைப்பு அறவே இல்லை என்பது மட்டுமே இதற்கு காரணம். நாட்டிற்கு வருடத்திற்கு ரூ.200 கோடிக்கு மேல் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்த பனைத்தொழிலை இன்று இல்லாமல் செய்தது யார்? பன்னாட்டு கம்பெனிகளின் சதியும், மதுபான கம்பெனிகளின் கைவரிசையும் கையூட்டுகளும்தானே.
விளைவு கையில் நாகரீகத்திற்காக தூக்கிய பிளாஸ்டிக் பைகளை இன்று அரிசியாகவும், முட்டையாகவும் போலியாக தயாரித்து மக்கள் உண்ண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். ஆரோக்கியமான உணவுகளை அள்ளித்தந்த பனைகளின் வீழ்ச்சி மனைகளின் மகிழ்ச்சியை சூழ்ச்சிகள் சூறையாடிவிட்டன. எரியும் சூளைகளுக்கு இரையாக தந்து விட்டன. எட்டு கோடி பனைகள் இருந்த இந்தியாவில் தற்போது பனைகளின் எண்ணிக்கை அற்ப சொற்பமாக மாறிவிட்டன.
பனைகள் வேரற்று போனால், மனைகள் நீரற்றுப் போகும் என்பதை அரசு உணர வேண்டும். பனை வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பனை வளர்ப்பில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கட்டாயமாக்கும் அரசு தரிசு நிலங்கள், ஏரிக்கரைகள், குளக்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சுற்றிலும் பனைகளை நடுவதற்கு உத்தரவிட வேண்டும். பனைகளின் தேவையை பாடங்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். துவண்டு கிடக்கும் பனைபொருட்கள் கூட்டுறவு அங்காடிகளை புத்துயிர் பெறச் செய்ய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பனைபொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பனை செழித்தால் மனை செழிக்கும் என்ற கோஷம் விண்ணதிர முழங்க வேண்டும்.
---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.