1/27/2022

தரமற்ற விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள் - இதழாளர் ஜே.பி.

 

வெகு நாட்களாகவே எழுத நினைத்த விடயம் இது... பத்திரிகை உலகில் நான் பிரவேசித்து 20 ஆண்டுகளை கடந்து விட்டன. வறுமைக்கு கூட கையேந்தி பிழைக்க பிடிக்காமல் ஒரு பிடிப்போடு, பிரியத்தோடு இந்த துறையில் பயணித்து வருகின்றேன். துவக்கத்தில் தினத்தந்தி, அடுத்து தினகரன், மாலைமுரசு என இடைவெளியற்று பல பத்திரிகைகளிலும் பயணித்து காலம் தந்த படிப்பினைகளால் டார்வினின் தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்ற கோட்பாட்டுப்படி ஒரு தமிழ் மாத இதழையும் தொடங்கி நடத்தி வருகின்றேன். 

தவறை தவறென்று ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், தவறல்லாதவற்றிற்கு போராடி சண்டையிடும் குணமும் கொண்டவன் என்பதால் பெரும்பாலும் சில சில தர்க்க பேதங்கள் எனக்கும் எனக்கு உயரே இருக்கும் அலுவலர்களுக்கும் இடையே ஏற்பட்டதுண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எனது குணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நேர்மறை பிம்பத்தையும், சில சந்தர்ப்பங்களில் நிறுவன விதிமுறைகளை மீறுபவனாக எதிர்மறை பிம்பத்தையும் காண்பிக்கவும் செய்தது.

எல்லாம் தெரிந்தவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது என்பதில் திண்ணம் கொண்டவன் என்பதினால் இன்னமும் பத்திரிகை உலகில் கற்றுக் கொள்ளும் மாணவனாகவே எனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். ஒரு விடயத்தை முழுமையாக அறிந்து கொள்ள எந்த அந்தத்திற்கும் செல்ல துணிவதுண்டு.   என்னை பயிற்றுவித்த பத்திரிகை ஆசிரியர்கள் இந்த காரணத்திற்காகவே இன்றளவும் என்னை ஊக்குவிப்பதும், அங்கீகரிப்பதுமாக என்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகின்றன. 

இதற்கிடையே மண் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பையும் நிறுவி அதன்கீழ் பனை வாழ்வியல் இயக்கத்தை தோற்றுவித்து இயற்கையை பாதுகாக்கவும், பனைகளை அழிவில் இருந்து மீட்கவும் ஒரு அறப்போராட்டத்தை சாத்வீக முறையில் எனது மனவிருப்பத்தின் படி செய்து வருகின்றேன். முழுக்க முழுக்க நண்பர்களின் ஒத்துழைப்போடு மட்டுமே இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எமது இயக்கத்தின் உண்மைத்தன்மை என்பது உடன் உழைப்பவர்கள் யாவரும் அறிந்ததே. 

பணத்திற்காக யாரையும் இதுவரை தொடர்பு கொண்டதும் இல்லை... இந்த இயக்கத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கமும் எங்கள் எவரிடத்திலும் இல்லை... அவரவர் சொந்த பணத்தை இயக்கத்திற்காக செலவழித்தே இயற்கையை பேணி வருகிறார்கள் என்பது எங்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய கௌரவம். நட்பு ரீதியாகவும், எங்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவும் பத்திரிகை துறையில் உடன் உழைக்கும் நண்பர்கள் நாங்கள் செய்யும் அறப்பணியை புற உலகிற்கு செய்திகள் மூலமாக அவ்வப்போது வெளிக் கொணர்வதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகாது...

ஆனால் நான் பணியாற்றிய பத்திரிகைகளில் நான் பத்திரிகை செய்தியாளனாக, அந்த பத்திரிகை உரிமையாளர்களுக்கு ஊழியனாக வேலை செய்த காரணத்திற்காகவோ என்னவோ எனது பெயரை விடுத்து செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால் இன்றுவரை அதை நான் பொருட்படுத்தவும் இல்லை. பெயர் வரவில்லையே என்று ஆதங்கப்பட்டதும் இல்லை. காரணம் பத்திரிகை அலுவலகத்தின் நிலைமையை யான் அறிவேன். 

ஆனால் என்னைப்பற்றி முழுமையாக அறியாமலேயே பத்திரிகை அலுவலகத்தில் திடீர் பதவிகளைப் பெற்ற சிலர் இந்த இயக்கத்தை வைத்து கோடிக்கணக்கில் நான் சம்பாதிப்பது போலவும், பெரிய ஆதாயங்களைப் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்ற விமர்சனங்களை வெளிக்கொட்டி தங்களது தரத்தைக்  குறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் முந்தைய நாட்களில் என்னவாக இருந்தார்கள் என்பதையும் மறந்து போகிறார்கள். 

ஒரு பத்திரிகையைில் இருந்து வெளியேறி இன்னொரு பத்திரிகைக்கு செல்வது என்பது எனது சுய உரிமை. ஊதிய மாறுபாட்டிற்காக தேவைக்காக பணித்தளத்தை மாற்றிக் கொள்வது எனது சுயம் சார்ந்த விடயம். தேவைகள் சார்ந்த பயணம். அந்த ஒற்றைக் காரணம் கொண்டு பின்னாட்களில் நாம் சமூக சேவையே செய்யக் கூடாது. அப்படி செய்தால் அதனை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பது மடமைத்தனம், மல்லாந்து படுத்துக் கொண்டு தனக்குத்தானே எச்சில் உமிழ்ந்து கொள்வதற்கு சமம். 

அலுவலகத்தை தாண்டி உங்களால் செய்ய இயலாததை, சம்பளத்திற்காக நீங்கள் இழக்க விரும்பாததை, உங்களுக்காகவும், உங்கள் சந்ததிகளுக்காகவும் துணிந்திறங்கி செய்வதை கொச்சைப்படுத்துவது என்பது எந்த வகையாக அறிவார்ந்த செயல் என்பதை அறிந்திருக்கவில்லை என்றே கருதுகிறேன்.  உதவிகள் செய்யத் தேவையில்லை... உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்றே பாவிக்கிறேன். நல்ல விமர்சனங்களை மனதார வரவேற்கிறேன். தற்குறி போன்ற விமர்சனங்களை முடிந்த வரை தவிர்த்தே செல்கிறேன். பலமிருந்தால் மோதித்தான் பாருங்கள் என சில நேரங்களில் எதிர்த்தும் நிற்கிறேன். 

உங்களுக்காகவும் சேர்த்து உழைக்க நான் எப்போதும் தயார்... உழைப்பை நீங்கள் கொடுக்க தேவையில்லை... எந்தவித உதவியும் உங்களிடத்தில் நாடவில்லை. முடிந்தால் ஊக்கத்தை கொடுங்கள் அது போதும். முடியாவிட்டால் ஊக்குவிக்க முயற்சியாவது செய்யுங்கள். அதுவே இயற்கைக்கு நீங்கள் செய்யும் தர்மமாக இருக்கட்டும்...


பா.ஜான்பீட்டர், இதழாளர்


யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending