9/05/2026


யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending
 

4/26/2023

முந்தானையும்... மொபைலும்...!

வாழ்க்கை முழுவதும் கணவன் தனது முந்தானையை பிடித்துக் கொண்டு பின்தொடர வேண்டும் என்பதுதான் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் ஆசையும் ஏக்கமும்...

நடிகர் வடிவேலு கூட ஒரு படத்தில் “மாலா மாலா” என தனது மனைவியின் முந்தானையைப் பிடித்தவாறே திரிவதை நகைச்சுவையாகவும், எதார்த்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். பல குடும்பங்களில் இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. சில குடும்பங்கள் விதி விலக்காகவும் இருக்கத்தான் செய்கின்றன. 

நாகரீக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பவை இந்த காட்சிகளை தலைகீழாக மாற்றியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு அறைக்குள் இருந்தாலும் இருவருக்குள்ளும் பகிர்தல் என்பது வெவ்வேறாகி விட்டது. இருவருக்கும் தொழில்நுட்ப ரீதியாக அந்தரங்கங்களும் வெவ்வேறாகவே இருக்க விருப்பப்படுகிறார்கள்.

போனால் போன இடம், வந்தால் வனவாசம் என்று ஒருவரை ஒருவர் தேடாமலும், யாரும் எப்படியும் போனால் நமக்கென்ன வந்தது என கண்டுகொள்ளாமலும் குடும்ப வாசம் செய்யவே ஆசைப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என வந்துவிட்டபிறகு கணவன்-மனைவி இடையிலான அன்யோன்யம் குறைந்து விட்டதாகவே அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பங்களை கூறுபோட்டதில்தான் இவற்றுக்கு பெரிய பங்கு இருக்கிறது.

வாழ்க்கையில் தன்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்களும், பெண்களும் தங்களை வாட்ஸ்அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ பின்தொடர வேண்டும் என விரும்புவதில்லை.

முந்தானைக்கும், மொபைலுக்கும் அப்படி என்ன வித்யாசம்? முந்தானையை பிடித்துக்கொண்டு ஒரு ஆடவன் திரிந்தால் அடுத்த ஆடவர் அந்த பெண்ணை ஏறெடுத்துப் பார்க்க அஞ்சுவார்கள். மொபைலில் பின்தொடர்ந்தால் கண்ணுக்குத் தெரியாத எதிரியும் பெண்களை அண்டிவர தயங்குவார்கள். இதே நிலைதான் ஆண்களுக்கும்..!

அப்படியிருக்க மொபைலில் பின்தொடர்ந்தால் மட்டும், என் மீது சந்தேகமா? ஏன்? எதற்காக? என்றெல்லாம் ஆணியமும், பெண்ணியமும் பேசுவது எதுமாதிரியான லட்சணம்? பிடித்தவர்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்... பிடித்தவர்களுக்கு பிடிக்காததை செய்யாதிருங்கள்! தானாக எல்லா எதிர்மறை சிந்தனைகளும், அதிர்வுகளும் அகன்றுவிடும்...

எல்லாம் ஆரம்ப நாட்களில் சற்றே சிரமத்துக்குரியதுதான்... ஆனால் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்... தானாக எல்லாம் மாறிவிடும். 

மாறினால்தான் வாழ்க்கை இனிக்கும்... மாற்றம்தான் வாழ்க்கை..! 


-இதழாளர் ஜே.பி. 

5/24/2022

புரிதல் இல்லாத நாகரீக மாற்றங்கள்..!

 

உலகின் ஒவ்வொரு பிறப்புக்குடிகளுக்கும் தனித்தனி கலாச்சாரங்கள், பண்பாட்டு அம்சங்கள், ஒழுக்க விழுமியங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இருக்கும் ஒரு கலாச்சாரம் மற்றொரு நாட்டில் சட்டமீறலாக அமைகிறது. அந்த நாட்டில் இருக்கும் ஒரு பண்பாட்டு அம்சம் இந்த நாட்டின் விதிமீறலாக, ஒழுக்க முறை மீறலாக பார்க்கப்படுகிறது. 

மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, வீரம் இப்படி எதுவாக இருந்தாலும் உலகின் ஒட்டு மொத்த குடிகளில் தமிழ்க்குடிக்கு மட்டும் விசேஷித்த நடைமுறைகள் தொன்றுதொட்டு வழக்கில் இருக்கிறது. இதைத்தான் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை ரத்தின சுருக்கமாக “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று பாடி வைத்திருக்கிறார். இதுதான் உலக அளவில் தமிழர்களுக்கு உயர்ந்ததோர் மதிப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது.

காலம் நமக்கான மாற்றங்களை நதியின் ஓட்டத்தின் நாணலாய் தன் இயல்பிலேயே மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதையும் தாண்டி இந்த நாகரீக மாற்றம் என்ற வட்டத்திற்குள் தேவையில்லாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு வம்படியாக பயணிக்கத் தொடங்குகிறோம். இந்த பயணம்தான் நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றமா? என்பதை சிந்திக்க தவறிவிடுகிறோம்.

மாற்றங்கள் என்பது மறுக்க முடியாது என்றாலும்கூட உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் ஏற்படும் நாகரீக மாற்றங்கள் மெல்ல மெல்ல "Modernization", "Updation" என்ற பெயர்களில் கலாச்சாரம், பண்பாட்டு கட்டமைப்புகளை மனதிற்குள் மாற்றியமைக்கும் பட்சத்தில்தான் காலத்தின் முகம் கோரமாக மாறி சீரழிவுக்கு வித்திடுகிறது. சுதந்திரம் என்பது எதில் இருக்கிறது என்பது தெரியாமலேயே அதன் அர்த்தத்தை தலைகீழாக மாற்றி விடுகிறது. 

கிட்டத்தட்ட உடலில் இருக்கக்கூடிய DNA மூலக்கூறுகளை மாற்றி அமைக்கும் விபரீத சிகிச்சைக்கு ஈடானதாக அமைந்து விடுகிறது இந்த மாதிரியான மாற்றங்கள். காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சில பிரத்யேக நடைமுறைகளும், சொல் வழக்குகளும்தான் நம்மை மற்ற நாடுகளில் இருந்து, மாநிலங்களில் இருந்து, பிற குடிகளிடம் இருந்து நம்மை சிறப்புக்குரியவர்களாக வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

மொழியாக இருந்தாலும், நமக்குரியதை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை விடுத்து, அவர்களுக்குரியதை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்வதில் நாம் குறியாக இருக்கிறோம் என்பதை பட்டவர்த்தனமாக்கி விடுகிறது. பேச்சு வழக்குகளில் கூட அதற்கான மாற்றத்தை காண்பிப்பதில் நாகரீகம் அடங்கியிருக்கிறது என்ற தப்புக்கணக்கை சரியாக போட்டு விடுகிறோம்.

நட்பின் இலக்கணத்தை தாண்டி வார்த்தை சொல்லாடல்களில் கூட வந்தேறிகளை தூக்கி சுமப்பதன் மாற்றங்கள் நெருக்கமான உறவுகளில் கூட வழக்குகளையும் பிணக்குகளையும் ஏற்படுத்தி விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் அடைபட்டுக்கொண்டிருக்கிற அல்லது ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சம பாலினமோ, எதிர் பாலினமோ யாராக இருந்தாலும் அவர்களை வரம்பு மீற வைக்கிற வார்த்தை சொல்லாடல்கள் பரஸ்பர உறவுகளுக்கு பாதகம் விளைவித்து விடுகிறது என்பதை உணர மனம் மறுத்து விடுகிறது.

வந்தேறிகள் பயன்படுத்தும் பல வார்த்தைச் சொல்லாடல்கள் அவர்களைப் பொறுத்தவரை சப்பையான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடும். ஆனால் அதே வார்த்தை பிரயோகங்கள் இங்கே எதிர்பாலினத்தவரை அழைக்க தகுதியற்றதாக, வரம்பை மீறுவதாகவே பார்க்கப்படுகிறது. உறவுக்கு உரியவர்களின் மனதை ரணமாக்கி உணர்வுகளை சிதையில் ஏற்றி விடுகிறது. நண்பர்களுக்கு உச்சபட்ச அன்பின் முக்கியத்துவத்தை இந்த வார்த்தைகளினூடே அளிப்பதாக எண்ணி தவறான புரிதலுக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கான கால நேர வரம்புகளையும் வரையறுக்கத்தவறி விடுவது மற்றுமொரு பங்கம்.

நமக்கான மாற்றங்கள் தொழில் ரீதியாகவும், நமக்கான சுதந்திரங்கள் நம்மை நம்மில் இருந்து பிரிக்காத ஒன்றாகவும் இருந்தால் வரவேற்புக்கு உரியதுதான். அந்த மாற்றங்கள் நமக்குரியவர்களை நம்மிடம் இருந்து பிரிப்பதாக இருந்தால் அதில் ஏதோ தவறுகள் இருப்பதாகத்தான் அர்த்தம். தொழில் ரீதியான மாற்றங்களும், "Modernization", "Updation" எல்லாம் தேவைதான். ஆனால் மனதளவில் நாம் பிறப்புக்குடி சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கான விழுமியங்களை காப்பாற்றி அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அவைகளை கொண்டு சேர்ப்பதாக அமையும். நாகரீக மாற்றம் என்ற போர்வையில் அழிந்து போன நமக்கான பல கட்டமைப்புகளை மீட்கவும் பேருதவி புரியும்.

நாம் நாமாக இருப்பதில் தவறில்லை. நாம் அவர்களாக மாற நினைப்பதில்தான் தவறுகள் பொதிந்திருக்கிறது. காலமும், அனுபவமும் சொல்லும் பாடம் இதுதான்.

 

-இதழாளர் ஜே.பி.



5/19/2022

சமூக வலைதள வக்கிரங்களை வாசல் வரை அனுமதிக்காதீர்! - இதழாளர் ஜே.பி.

தொழில்நுட்பத்தின் பெருக்கம் ஒரு வகையில் மனித இனத்திற்கும், இயந்திர யுகத்திற்கும் பேருதவி புரிவது போல தெரிந்தாலும், இதன் பின்னணியில் பல மனித அழிவுகளுக்கு பாதாளத்தை தயார் செய்து கொண்டிருப்பதை மனம் உணர மறுப்பதில்லை. சமூக வலைதளங்களின் விரிவாக்கம் நொடிக்கு நொடி கையடக்க கைபேசிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் உங்கள் கண்களை அகலவிரிய வைக்கும் அளவிற்கு தினம் ஒரு புத்தாக்கம் அந்த தொழில்நுட்பங்களுக்குள் புரட்சி என்ற வார்த்தையோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. 

ஆரம்ப காலத்தில் முகநூல் மட்டுமே முகம் தெரியாத நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள அடிகோலியது. இப்போது வாயில் நுழையாத பேர்களில் எல்லாம் ஆண்டிராய்ட் மொபைல்களின் ப்ளேஸ்டோரிலும், ஆப்பிள் மொபைலின் ஆப்ஸ்டோரிலும் தினுசுக்கு ஒன்றாக செயலிகள் கடைவிரித்து விட்டன.  வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டெலிகிராம், ஷேர்சாட், மோஜ், ஹைக், ஐஎம்ஓ, பொட்டிம், வீ-சாட், ஹாங்அவுட், கக்காவுடாக் இன்னும் பலப்பல. யார் எதைப் பயன்படுத்தி யாரோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிவதே பெரும்பாடுதான். போதிய தொழிநுட்ப அறிவு இல்லா பெற்றோர்களின் கண்களில் சுலபமாக மண்ணைத் தூவிவிட்டு கண்டபடி கண்ட செயலிகளை கண்டுபிடித்து இன்றைய தலைமுறையினர் கதைக்க தொடங்கி விடுகிறார்கள்.

சைபர் குற்றங்களின் பெருக்கத்திற்கும் தூபக்கால்கள் இவைகள்தான். கண்முன் திரியும் நண்பர்களையும், உறவுகளையும் கண்டுகொள்ளத்தவறிவிட்டு கண்ணால் காணாத நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள எதற்குத் துடிக்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. நாளாக பேசி பேசி நண்பர்கள் என்ற போர்வையில் நாகரீகத்துடனும், கண்ணியத்துடனும் தங்களைக் காட்டிக் கொண்டு ஊடுருவும் சமூக வக்கிர ஜந்துக்கள் மெதுவாக தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டும் போது அவர்களது மிரட்டல்களுக்கும், மானத்திற்கும் அஞ்சி மாண்ட உயிர்கள் ஏராளம் தாராளம். 

பணத்தை இழந்தால் கூட மீண்டெழுந்து விடலாம் என்று எண்ணினால் மானத்தை தொலைத்து விட்டு சமூக வலைதள வக்கிரக்காரர்களுக்கு அடிமையாக மாறி கூனிக்குறுகி அவர்கள் சொன்னதையெல்லாம் ரிமோட் பொம்மை போல இன்னமும் செய்து கொண்டி ருப்பவர்களின் நிலைமையை அவ்வளவு எளிதான வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. 

ஆரம்பத்தில் நட்பை பெறத்துடிக்கும் இதுபோன்ற கயவர்கள் Hi Sis, Hi Maam, Hi Thozhi என்றுதான் நுழைவார்கள். நட்பு வட்டத்தை அங்கீகரித்து சில நாட்களில்தான் எதிர்முனையில் இருப்பவர்களின் அழகை வர்ணிக்கத் தொடங்கி தங்களது சில்மிஷத்தை ஆரம்பிப்பார்கள். படிப்படியாக பேச்சில் மாற்றத்தைக் கொண்டு வந்து தங்களது பிடித்தவாறெல்லாம் அவர்களை ஆட்டுவிப்பார்கள். கடைசியில் தங்களுக்கான வக்கிர ஆசைகளுக்கு உடன்பட வைத்து அதனை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ காட்சிப்படுத்திக் கொண்டு மிரட்டி பணத்தை கறக்கவோ, கற்போடும் மானத்தோடும் விளையாடவோ தொடங்குவார்கள்.

இதற்கெல்லாம் உடன்பட்டு போகிறவர்கள் உயிரோடு மட்டுமே இருப்பார்கள். மற்றபடி கிட்டத்தட்ட நடைபிணமாகத்தான் வலம் வருவார்கள், எப்போது என்ன நடக்குமோ? குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எப்போது தெரியுமோ? என்ற மரண பீதியில்தான் நாட்கள் நகரும், அடிவயிற்றில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு நடப்பது போன்றதாகிவிடும் இவர்களது அந்தோ பரிதாப நிலைமை. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் பல குடும்ப பெண்களை பணத்திற்கு ஆசைகாட்டி விபசாரிகளாக வலம் வர வைத்திருப்பது சமீபத்திய நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிர்ச்சி செய்தியாக ஒளிபரப்பாகி இருப்பதுதான். 

சமூக வக்கிர கொடூரர்களைப் பொறுத்தவரை அவர்களது இலக்கு பாலினத்தை பொறுத்து ஆண், பெண், குடும்பப்பெண்கள், பள்ளி-கல்லூரி குழந்தைகள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. யார் சிக்கினாலும் அவர்களது நிலைமை அதோகதிதான். வீட்டில் திருடி இவர்களுக்கு இரையளிப்பதுவும், உடலை இரையாக்கிக் கொள்வதும்தான் அவர்களது அந்திம நிலைமை. உடன்பட மறுத்து உயிரைப் போக்கிக் கொண்ட கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களின் மரணங்கள் பல இன்றளவும் மர்மமான மண்ணிற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. உயிரைப்பறித்த காலன்களோ அடுத்து அடுத்து என யாரை விழுங்கலாம் என சாத்தான் போல வகைதேடிக் கொண்டுதான் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற செயலிகளை ஒரு நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு அந்த நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முழுவதுமாக அதனை அலசி ஆராய்ந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர்தான் அனுமதியை வழங்க வேண்டும். ஆனால் பணம் படுத்தும்பாடு எந்த அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா கிட்டத்தட்ட குப்பைத் தொட்டியாகத்தான் இந்த விஷயத்தில் இருக்கிறது. எந்த கண்காணிப்பும் இல்லை. பாதுகாப்பும் கேள்விக்குறிதான். விபரீதம் முற்றினால்தான் கொஞ்சமாக கண்விழிக்கும் தகவல்தொழில்நுட்பத்துறை. ஒரு செயலியை முடக்கிய பின்னர் வேறு பெயரில் அனுமதியை வாங்கிக் கொண்டு புறவாசல் வழியாக மீண்டும் அட்டூழியத்தை தொடங்கி விடுவார்கள். 

ஆக சமூக பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஒழிய இதற்கான தீர்வை எட்ட முடியாது. தேவைக்கு மீறிய தொழில்நுட்பத்தின் தேடலும், சமூக வலைதளங்களின் மீதான ஈடுபாடும், முகம் அறியாத நட்புக்களின் அவசியத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பதும் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகத்தான் அமைந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கண் முன் இருக்கும் எத்தனையோ குடும்ப உறவுகள் உங்களது ஆறுதலான பேச்சுக்காக காத்திருக்கிறார்கள், எத்தனையோ நாகரீகமான நட்புக்கள் உங்களுடனான நட்பை புதுப்பிக்க தவம் இருக்கிறார்கள். எது உண்மையான நட்பு என்பது தெரியாமல் உங்களை தொலைத்து விடாதீர்கள்! சமூகவலைதள வக்கிரங்களை வீட்டின் வாசல் வரை அனுமதிக்காதீர்கள். அதையும் மீறினால் நீங்கள் தொலைப்பது உங்களை மட்டுமல்ல... உங்கள் சுதந்திரத்தையும் எதிர்காலத்தையும், கனவுகளையும்தான். 


-இதழாளர் ஜே.பி.

2/21/2022

ஆறுகள் பாதுகாப்பை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத ஆட்சியாளர்கள்: இதழாளர் ஜேபி காட்டம்

மணலை கொள்ளையடித்துவிட்டால் தண்ணீரை சுத்தம் செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை, அமராவதி, சிறுவாணி, பாலாறு, வைகை என பல நதிகள் பாய்கின்றன. இதன் கிளை நதிகளும் பல இடங்களில் பயணிக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாததால் இன்றளவும் ஆண்டொன்றுக்கு மழைக்காலங்களில் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக ஒரு மாவட்டத்தில் தோன்றி ஒன்றுபட்ட மாவட்டத்திற்குள் பயணித்து 121 கி.மீ. தூரத்திற்குள் மக்களுக்கான விவசாயத்துக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் 80 கி.மீ. நீளம் தவிர மற்ற அனைத்து ஓட்டமும் மலைப்பகுதிக்குள்தான்.

இந்த 80 கி.மீ. ஆற்றை பராமரிக்க துப்புக்கெட்ட அரசாகத்தான் இன்றளவும் ஆட்சியாளர்கள் தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். கோக்க கோலா, ஏஆர்சி டயர் கம்பெனி போன்ற எத்தனையோ பன்னாட்டு கம்பெனிகள் ஆட்சியாளர்களின் பணப்பசியை யாசகமாக கொடுத்து அடிமாட்டு விலைக்கு தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சி கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த பன்னாட்டுக் கம்பெனிகளை பயன்படுத்தி இந்த தாமிரபரணி ஆற்றுக்கு ஆட்சியாளர்கள் எந்த நன்மையை செய்திருக்கிறார்கள்? 80 கி.மீ. நீளத்திற்கு இருபுறமும் கரைகள் கட்டி பராமரிக்க எத்தனை கோடிகள் செலவாகிவிடப் போகிறது? ஆங்காங்கே ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் கேட்டுக் கொண்டிருக்கும் தடுப்பணைகளை கட்டிக் கொடுக்க எத்தனை கோடிகள் செலவாகி விடும்?

மனமும் இல்லை… மார்க்கமும் இல்லை… இதுதான் தாமிரபரணி தாய்க்கு நேர்ந்த அவலநிலை. பாதாள சாக்கடைகளையும், கம்பெனி கழிவுகளையும், குடியிருப்புகளின் சாக்கடைகளையும், பழைய துணிகளையும், குப்பைகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாகத்தான் தாமிரபரணி நதிக்கரையை மாற்றித்தொலைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு ஜீவநதியை கற்பழித்து சின்னாபின்னமாக்கி வைத்துக் கொண்டு, தண்ணீருக்காக அண்டை மாநிலத்தில் தண்ணீர் பிச்சை கேட்டு ஒவ்வொரு ஆண்டும் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நிலைமைதான் மற்ற ஆறுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஆட்சியாளர்களுக்கு இயற்கை பற்றிய அறிவோ, ஆறுகளை பாதுகாப்பதைக் குறித்த அடிப்படை அறிவோ இருப்பதில்லை. மணலை அள்ளி பிணத்தை திண்பது போல பணத்தை திண்ண வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். சாகும்போது ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் எனத் தெரிந்தும் ஆட்சிக்காலத்தில் இவர்கள் போடும் ஆட்டம் எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்துக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு சிந்தனை இல்லாத அற்பஜீவிகளாக மங்குனிகளாக பதவியில் இருந்து கொண்டு மக்களை இம்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை நாளுக்கு நாள் ஊனம் அடைந்து கொண்டிருக்கிறது. இயற்கை தன்னை சமன் செய்து கொள்ள முற்படும் போது இயற்கை சீற்றங்களால் மாளப்போவது அப்பாவி ஜனங்கள்தான். சொகுசு ஓட்டல்களில் கும்மாளம் போடும் அரசியல்வாதிகள் அல்ல என்ற மிதப்புதான் இந்த அத்துமீறல்களை துணிகரமாக செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. கடைசி நீரும், கடைசி மீனும் பிடிபட்டு எல்லாம் அழிந்த பிறகு யாருக்காக, யாரை வைத்து ஆட்சி செய்யப்போகிறார்கள் இந்த அற்பஜீவிகள்?

உன் சந்ததிகளையும் ஊனமாக்கும் படுபாதக செயலைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும், பணப்பித்தர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை… இது இயற்கை உங்களுக்கு வழங்கும் தொடர் எச்சரிக்கை… திருந்துங்கள்  இல்லையேல் இயற்கையின் சீற்றத்தால் திருத்தப்படுவீர்கள்.

இதழாளர் ஜே.பி.

கேரள மக்களுக்கு இருக்கும் மண் மீதான உணர்வு தமிழக மக்களிடம் மழுங்கிப்போனது ஏன்?

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கடத்தப்படுவதால் நமது பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

  • கல்குவாரிகளில் அரசு விதிமுறைகளைத் தாண்டி பாதாள பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு இயற்கைக்கு நிரந்தர ஊனம் ஏற்படுத்தப்படுகிறது.
  • கல் குவாரிகளில் வெடிவைத்து பல நூறு அடிக்கு கீழே பாறை நிலத்தட்டுக்கள் தகர்க்கப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஆழ்துளை கிணறுகள் சேதமாகின்றன.
  • கல்குவாரிகளில் வெடிவைப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளின் சுவர்களில் விரிசலும், அதிர்வும் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • தினமும் 10 ஆயிரம் டன் முதல் 20 ஆயிரம் டன் வரை இங்கிருந்து கேரளாவிற்கு கல், மண் போன்ற கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதால் மக்கள் நிதியில் போடப்பட்ட சாலைகள், சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமாகின்றன.
  • கல்குவாரிகளுக்காக ஏற்படுத்தும் நிரந்தர ஊனத்தை இயற்கை சமன் செய்ய முற்படும்போது கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  • கனிமவளங்கள் தாறுமாறாக சூறையாடப்படுவதால் விளைநிலங்களும், விவசாயமும் அடியோடு பாதிக்கப்படும் அபாயங்கள் உருவாகி வருகிறது.
  • உள்ளூர் தேவைக்காக இல்லாமல், அண்டை மாநில தேவைக்காக கனிமவளங்கள் கடத்தப்படுவதால் உள்ளூரில் கல், மண் ஆகியவற்றின் விலை 3 மடங்கு வரை உயர்ந்து இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது.
  • “கடவுளின் தேசம்” என்ற பெயரை வைத்துக் கொண்டு தங்களிடம் அநேகமாக கனிமவளங்களை வைத்துக் கொண்டு என்ன விலை கொடுத்தாவது தமிழக மண்ணை நாசமாக்கத் துடிக்கும் கேரளாவிற்கு இருக்கும் மண் மீதான உணர்வு நம்மிடத்தில் இல்லாமல் போனது ஏன்?
  • கேரள மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அம்மாநில அரசு தங்களது கனிமவளங்களின் மீது கைவைக்காமல், அடுத்த மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கி வரும் நிலையில் தமிழக ஆட்சியாளர்களிடத்தில் உணர்வுகள் மழுங்கிப் போனது ஏன்?
  • டீசல் விலை, ஆள் சம்பளம், கனிம வளத்துக்கான விலை அனைத்தையும் தாண்டி தமிழக கனிமவளத்தை வாங்குவதில் கேரள மாநிலத்தவர் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணில் இருக்கும் சதியையும் ஆபத்தையும் புரிந்து கொள்ளுங்கள்...

உங்கள் மண் உங்கள் உரிமை... உரிமை மீட்க திரண்டு வாரீர்...

தாய்மண்ணை காப்போம்..! கனிமவளக்கொள்ளை தடுப்போம்..!

-இதழாளர் ஜே.பி.


 

2/01/2022

கேரளாவிற்கு கொள்ளை போகும் தமிழக கனிமவளங்கள்: ஆண்மை தவறும் அரசு இயந்திரம்

 


தமிழக கனிமவளங்கள் சூறையாடப்பட்டு கேரள மாநிலத்திற்கு கொள்ளை போகின்றன. ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் அரசு இயந்திரம் ஆண்மை தவறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு பிடி மண்ணையோ, கல்லையோ பெயர்த்து எடுக்க முடியாத அளவிற்கு வலுவான சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள மக்களும் மண் மீதான உணர்வோடு வாழ்கின்றனர்.  வெளி மாநிலங்களில் இருந்து என்ன விலை கொடுத்தாவது கல்லையும், மணலையும் வாங்கிக் கொள்ளும் பக்குவம் அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழக, கர்நாடகா எல்லைகள் வழியாக அவர்களுக்கு தேவையான கல்லும், மணலும் கடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 

குறிப்பாக தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் கல்லும், மணலும் இரவு பகலாக ராட்சத கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பணத்திற்காக எதையும் தின்னும் பிண வியாபாரிகள் சொந்த மண் மீது உணர்வில்லாமல் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளின் துணையோடு இந்த அத்துமீறலை அச்சமின்றி செய்கின்றனர். ஆளும்கட்சியாக இருப்பவர்களை எதிர்க்கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்த காலத்தில் நடப்பு ஆளும்கட்சியினரும் ஒருவரையொருவர் குறை கூறினார்களே தவிர, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் பணம் சம்பாதிக்க எடுக்கும் ஒரே ஆயுதம் கல்லும், மணலும்தான்.


 

எடுத்துக்காட்டாக தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் 250க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் தலா 20 டன் வீதம் 5000 டன் கல்லும், மணலும் கடத்தப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 1.50 லட்சம் டன்னும், ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் டன்னும் கனிமவளங்கள் இங்கிருந்து கேரளாவிற்கு கொள்ளை போகின்றன. ஒரு ஒன்றியத்தில் இருந்து இந்த கணக்கீடு என்றால் மாவட்டம் முழுவதிலும் இருந்து எவ்வளவு கொள்ளை போகும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். 

அதலபாதாளத்திற்கு அரசு விதிமுறைகளையெல்லாம் உடைத்தெறிந்து பாறைகளை வெடி வைத்து தகர்த்து அள்ளி கல்லாகவும், மணலாகவும் மாற்றி இரவு பகல் பாராமல் கடத்தப்பட்டு வருகிறது. அரசு துறைக்கும், காவல் துறைக்கும், வனத்துறைக்கும் கட்டவேண்டிய கப்பமெல்லாம் கட்டி விட்டு தங்களது கொள்ளையை துணிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கனிமவள மாஃபியாக்கள். 

இறந்த பிறகு ஆறடி நிலமே சொந்தம் எனத் தெரிந்தும் காசு பணத்திற்காக ஆவலாய் பறந்து அவக்காய்ச்சலில் நோய்களுக்கு உயிர்களை பலி கொடுப்பதுடன், பிள்ளைகளையும் சோம்பேறிகளாக்கி சொத்துக்களுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் பித்து பிடித்தவர்களாக மாற்றி விட்டுச் செல்கிறார்கள். மாற்றான் வீட்டு குழந்தைகளின் உயிரையும் பச்சை பசேலென தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்கு ஆசைகாட்டி கவர்ந்திழுத்து ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலங்களில் பல உயிர்களை காவு வாங்கி விடுகின்றனர். அரசு இயந்திரமும் ஆண்மை தவறி இந்த அத்துமீறலை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கொடிய வேதனை.

இயற்கையை நாம் சீண்டிக் கொண்டே இருந்தால், தனக்கான காலம் வரும் போது இயற்கை நம் மீது கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொள்ளும் என்பதை அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் அதன்பின் இவற்றை மறந்து விட்டு மீண்டும் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார்கள். அதுவும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையர்களாக வெள்ளை உடையுடன் சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள். 

உலகத்திலேயே மிகப்பெரிய அணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்ட சீனா அந்த அணையால் நேரிட்ட துன்பத்தை கண்முன்னே கண்டதை உலகமறியும். அந்த அணை கட்டப்பட்டதன் காரணமாக பூமிப்பந்தின் சுழற்சியே பாதிக்கும் அளவிற்கு பின்விளைவு கொடியதாய் இருந்தது. ஏரிகளை அழித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவது என்பது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இன்றளவும் தொடர்கதைதான். 

கல்குவாரிகள் ஏற்படுத்திய அதல பாதாளங்கள் என்பது இயற்கைக்கு நேரிட்ட நிரந்தர ஊனம் என்பதை மூளைமுடக்குவாதம் கொண்ட அதிகாரிகளால் உணர முடிவதில்லை. அவர்களுக்குத் தேவை லஞ்சம் மட்டும்தான். லஞ்சம் கொடுத்தால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தாய்க்கு நிகரான மண்ணையே அந்நிய மாநிலத்திற்கு வாரி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் இவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடு, அந்த பணத்தில் பெண்டு பிள்ளைகளுக்கு உணவளிக்கும் இவர்களைவிட கேடுகெட்ட ஜென்மங்கள் வேறு யாரும் இருக்க முடியாது. 


 

நமக்கு பாதிப்பு ஏற்படாதவரை அந்த பாதிப்பின் வீரியம் யாருக்கும் அவ்வளவு எளிதில் புரிவதில்லை. நமது வீடு வரை அதன் பாதிப்பு வந்தால்தான் கூச்சலும், குழப்பமும் ஒப்பாரியும் ஓங்கும். பூமியின் ஒருபக்கத்தை அளவுக்கு அதிகமாக தோண்டி மற்றொரு பக்கத்தில் குவிக்கும் பட்சத்தில் பூமி தன்னைத்தானே சமநிலை செய்து கொள்ளும் போது பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை தானே ஈடுசெய்துகொள்ள முயற்சிக்கும் போது இயற்கையை வாரி வாரி தூற்றும் மனித இனத்தை தமிழகத்தில் மட்டுமே அதிகம் காணமுடிகிறது. 

மாற்றம் என்பது மக்களிடத்தில் தோன்றாத வரை இது போன்ற அத்துமீறல்கள் குறைய வாப்பில்லை. மக்கள் சக்தியே மாபெரும் சக்தி. நமது மண் நமது உரிமை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டாலொழிய இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவும் போவதில்லை. 



இதழாளர் ஜே.பி.



யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending