தமிழகம் முழுவதும் தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை, அமராவதி, சிறுவாணி, பாலாறு, வைகை என பல நதிகள் பாய்கின்றன. இதன் கிளை நதிகளும் பல இடங்களில் பயணிக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாததால் இன்றளவும் ஆண்டொன்றுக்கு மழைக்காலங்களில் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன.
குறிப்பாக
ஒரு மாவட்டத்தில் தோன்றி ஒன்றுபட்ட மாவட்டத்திற்குள் பயணித்து 121 கி.மீ. தூரத்திற்குள்
மக்களுக்கான விவசாயத்துக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி
பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் 80 கி.மீ. நீளம் தவிர மற்ற அனைத்து ஓட்டமும் மலைப்பகுதிக்குள்தான்.
இந்த
80 கி.மீ. ஆற்றை பராமரிக்க துப்புக்கெட்ட அரசாகத்தான் இன்றளவும் ஆட்சியாளர்கள் தமிழக
அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். கோக்க கோலா, ஏஆர்சி டயர் கம்பெனி போன்ற எத்தனையோ
பன்னாட்டு கம்பெனிகள் ஆட்சியாளர்களின் பணப்பசியை யாசகமாக கொடுத்து அடிமாட்டு விலைக்கு
தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சி கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மனமும்
இல்லை… மார்க்கமும் இல்லை… இதுதான் தாமிரபரணி தாய்க்கு நேர்ந்த அவலநிலை. பாதாள சாக்கடைகளையும்,
கம்பெனி கழிவுகளையும், குடியிருப்புகளின் சாக்கடைகளையும், பழைய துணிகளையும், குப்பைகளையும்
கொட்டும் குப்பைத் தொட்டியாகத்தான் தாமிரபரணி நதிக்கரையை மாற்றித்தொலைத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு ஜீவநதியை கற்பழித்து சின்னாபின்னமாக்கி வைத்துக் கொண்டு, தண்ணீருக்காக அண்டை
மாநிலத்தில் தண்ணீர் பிச்சை கேட்டு ஒவ்வொரு ஆண்டும் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதே நிலைமைதான் மற்ற ஆறுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஆட்சியாளர்களுக்கு இயற்கை பற்றிய அறிவோ, ஆறுகளை பாதுகாப்பதைக் குறித்த அடிப்படை அறிவோ இருப்பதில்லை. மணலை அள்ளி பிணத்தை திண்பது போல பணத்தை திண்ண வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். சாகும்போது ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் எனத் தெரிந்தும் ஆட்சிக்காலத்தில் இவர்கள் போடும் ஆட்டம் எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்துக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு சிந்தனை இல்லாத அற்பஜீவிகளாக மங்குனிகளாக பதவியில் இருந்து கொண்டு மக்களை இம்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை நாளுக்கு நாள் ஊனம் அடைந்து கொண்டிருக்கிறது. இயற்கை தன்னை சமன் செய்து கொள்ள முற்படும் போது இயற்கை சீற்றங்களால் மாளப்போவது அப்பாவி ஜனங்கள்தான். சொகுசு ஓட்டல்களில் கும்மாளம் போடும் அரசியல்வாதிகள் அல்ல என்ற மிதப்புதான் இந்த அத்துமீறல்களை துணிகரமாக செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. கடைசி நீரும், கடைசி மீனும் பிடிபட்டு எல்லாம் அழிந்த பிறகு யாருக்காக, யாரை வைத்து ஆட்சி செய்யப்போகிறார்கள் இந்த அற்பஜீவிகள்?
உன்
சந்ததிகளையும் ஊனமாக்கும் படுபாதக செயலைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும், பணப்பித்தர்களும்
செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை… இது இயற்கை உங்களுக்கு
வழங்கும் தொடர் எச்சரிக்கை… திருந்துங்கள்
இல்லையேல் இயற்கையின் சீற்றத்தால் திருத்தப்படுவீர்கள்.
இதழாளர்
ஜே.பி.