வாழ்வில் எத்தனையோ ஏமாற்றங்கள், துரோகங்கள், மனக்கசப்புகள், வெறுப்புகள், ஆற்றாமைகள், சலிப்புகள், சஞ்சலங்கள், சங்கடங்கள்... இவையெல்லாம் கடந்துதான் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டியிருக்கிறது... இதில் நாம் யாராக இருக்கிறோம் என்பதுதான் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிற பாடம்... கொடுக்கிறவராக இருக்கிறோமா? அல்லது வாங்குகிறவராக இருக்கிறோமா? என்பதில்தான் யார் வாழ்க்கையை ஆக்கிரமிக்கிறார்கள்? யார் இழக்கிறார்கள்? என்ற சித்தாந்தம் ஒளிந்து கொண்டிருக்கிறது... பேருண்மை பொதிந்திருக்கிறது...
இவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்..! நேர்மறை உணர்வுகளையோ, எதிர்மறை விபரீதங்களையோ பிரதிபலிக்கலாம்... வலிகளை உணர்ந்தவர்களின் மனநிலையைப் பொறுத்தது அது!
ஆனால் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஒப்படைத்துவிட்டு கடந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்..! காலத்தின் கைகளில் தங்களது வலிகளைக் கொடுத்து விடுகிறார்கள்! கடவுள் என்ற கண்ணுக்குத் தெரியாத அரூபியிடம் முறையிட்டுக் கொள்கிறார்கள்!
இதில் மூடநம்பிக்கை இருக்கிறதா? முழு ஞானம் இருக்கிறதா? என்றெல்லாம் தேடத் தேவையில்லை... மனதைத் தேற்றிக் கொள்ள ஒரு வடிகால் அவ்வளவே... அடுத்தவரை பழிக்காமல் பகை நோக்காமல் மனம் நோகடிக்காது தனக்குத் தானே நொடிந்து கொள்வதானது... கிட்டத்தட்ட மனதை, மனசாட்சியை தற்கொலை செய்து கொள்ள வைப்பதற்கு ஈடானதுதான் என்றாலும் வேறு வழியில்லை... உயிரைப்போக்கிக் கொள்ள உரிமையில்லை என்ற உண்மை உணர்ந்தவர்கள் உயிர்வலியை விட கொடுமைச் செயலாக மனதை மாய்த்துக் கொள்கிறார்கள்...
மற்றவர்களுக்காகவே வாழப்பழகிக் கொண்ட மனித இனத்தில் தன்னைத்தானே அன்பு செய்தலும், தனக்கானவர்களை அன்பு செய்தலும் மறதி நோய்க்கு ஆட்பட்டதாகி விடுகிறது... இதை போதிப்பவர்கள் ஞானிகளாகவும், ஏற்க மறுப்பவர்கள் அஞ்ஞானிகளாகவும், கேட்டுக் கொண்டே செய்வதை செய்து கொண்டே இருப்பவர்கள் சாமானியர்களாகவும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள்!
பிறப்பு வடிவமெடுத்து என்றோ ஒருநாள் இறப்பு உறுதியென்று உள்ளூற உணர்ந்து கொண்டவர்களும் தங்களுக்கான கடமையை தத்தம் நிறைவேற்றிவிட்டு வாழ்க்கையை நிறைவு செய்து கொள்கிறார்கள்...
வாழ்க்கையின் வலிகளை உணர்ந்தவர்கள் ஆன்மீகப்பணி, அறப்பணி, சமூகப்பணி என மாற்று வழிகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள்... மற்றவர்கள் மனதால் ஊனமானவர்களாக அமைதியைத் தேடி தேடி உலவிக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் அதற்குள் தங்களது வலிகளையும் பழகிக் கொள்கிறார்கள்!
முடிந்தவரை வலிகளைக் கொடுப்பவர்களாக இராமல், நிவாரணங்களைக் கொடுப்பவர்களாக, ஆறுதல் செய்பவர்களாக இருந்து விட்டே செல்வது உத்தமம்... கையில் கொண்டு வராததை எடுத்துச் செல்ல அடம்பிடிப்பதுதான் அஞ்ஞானம்...
இதழாளர் ஜே.பி.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.