உலகின் ஒவ்வொரு பிறப்புக்குடிகளுக்கும் தனித்தனி கலாச்சாரங்கள், பண்பாட்டு அம்சங்கள், ஒழுக்க விழுமியங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இருக்கும் ஒரு கலாச்சாரம் மற்றொரு நாட்டில் சட்டமீறலாக அமைகிறது. அந்த நாட்டில் இருக்கும் ஒரு பண்பாட்டு அம்சம் இந்த நாட்டின் விதிமீறலாக, ஒழுக்க முறை மீறலாக பார்க்கப்படுகிறது.
மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, வீரம் இப்படி எதுவாக இருந்தாலும் உலகின் ஒட்டு மொத்த குடிகளில் தமிழ்க்குடிக்கு மட்டும் விசேஷித்த நடைமுறைகள் தொன்றுதொட்டு வழக்கில் இருக்கிறது. இதைத்தான் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை ரத்தின சுருக்கமாக “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று பாடி வைத்திருக்கிறார். இதுதான் உலக அளவில் தமிழர்களுக்கு உயர்ந்ததோர் மதிப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
காலம் நமக்கான மாற்றங்களை நதியின் ஓட்டத்தின் நாணலாய் தன் இயல்பிலேயே மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதையும் தாண்டி இந்த நாகரீக மாற்றம் என்ற வட்டத்திற்குள் தேவையில்லாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு வம்படியாக பயணிக்கத் தொடங்குகிறோம். இந்த பயணம்தான் நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றமா? என்பதை சிந்திக்க தவறிவிடுகிறோம்.
மாற்றங்கள் என்பது மறுக்க முடியாது என்றாலும்கூட உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் ஏற்படும் நாகரீக மாற்றங்கள் மெல்ல மெல்ல "Modernization", "Updation" என்ற பெயர்களில் கலாச்சாரம், பண்பாட்டு கட்டமைப்புகளை மனதிற்குள் மாற்றியமைக்கும் பட்சத்தில்தான் காலத்தின் முகம் கோரமாக மாறி சீரழிவுக்கு வித்திடுகிறது. சுதந்திரம் என்பது எதில் இருக்கிறது என்பது தெரியாமலேயே அதன் அர்த்தத்தை தலைகீழாக மாற்றி விடுகிறது.
கிட்டத்தட்ட உடலில் இருக்கக்கூடிய DNA மூலக்கூறுகளை மாற்றி அமைக்கும் விபரீத சிகிச்சைக்கு ஈடானதாக அமைந்து விடுகிறது இந்த மாதிரியான மாற்றங்கள். காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சில பிரத்யேக நடைமுறைகளும், சொல் வழக்குகளும்தான் நம்மை மற்ற நாடுகளில் இருந்து, மாநிலங்களில் இருந்து, பிற குடிகளிடம் இருந்து நம்மை சிறப்புக்குரியவர்களாக வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.
மொழியாக இருந்தாலும், நமக்குரியதை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை விடுத்து, அவர்களுக்குரியதை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்வதில் நாம் குறியாக இருக்கிறோம் என்பதை பட்டவர்த்தனமாக்கி விடுகிறது. பேச்சு வழக்குகளில் கூட அதற்கான மாற்றத்தை காண்பிப்பதில் நாகரீகம் அடங்கியிருக்கிறது என்ற தப்புக்கணக்கை சரியாக போட்டு விடுகிறோம்.
வந்தேறிகள் பயன்படுத்தும் பல வார்த்தைச் சொல்லாடல்கள் அவர்களைப் பொறுத்தவரை சப்பையான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடும். ஆனால் அதே வார்த்தை பிரயோகங்கள் இங்கே எதிர்பாலினத்தவரை அழைக்க தகுதியற்றதாக, வரம்பை மீறுவதாகவே பார்க்கப்படுகிறது. உறவுக்கு உரியவர்களின் மனதை ரணமாக்கி உணர்வுகளை சிதையில் ஏற்றி விடுகிறது. நண்பர்களுக்கு உச்சபட்ச அன்பின் முக்கியத்துவத்தை இந்த வார்த்தைகளினூடே அளிப்பதாக எண்ணி தவறான புரிதலுக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கான கால நேர வரம்புகளையும் வரையறுக்கத்தவறி விடுவது மற்றுமொரு பங்கம்.
நமக்கான மாற்றங்கள் தொழில் ரீதியாகவும், நமக்கான சுதந்திரங்கள் நம்மை நம்மில் இருந்து பிரிக்காத ஒன்றாகவும் இருந்தால் வரவேற்புக்கு உரியதுதான். அந்த மாற்றங்கள் நமக்குரியவர்களை நம்மிடம் இருந்து பிரிப்பதாக இருந்தால் அதில் ஏதோ தவறுகள் இருப்பதாகத்தான் அர்த்தம். தொழில் ரீதியான மாற்றங்களும், "Modernization", "Updation" எல்லாம் தேவைதான். ஆனால் மனதளவில் நாம் பிறப்புக்குடி சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கான விழுமியங்களை காப்பாற்றி அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அவைகளை கொண்டு சேர்ப்பதாக அமையும். நாகரீக மாற்றம் என்ற போர்வையில் அழிந்து போன நமக்கான பல கட்டமைப்புகளை மீட்கவும் பேருதவி புரியும்.
நாம் நாமாக இருப்பதில் தவறில்லை. நாம் அவர்களாக மாற நினைப்பதில்தான் தவறுகள் பொதிந்திருக்கிறது. காலமும், அனுபவமும் சொல்லும் பாடம் இதுதான்.
-இதழாளர் ஜே.பி.








