12/17/2021

"சாஃப்டர் பள்ளி” பெயரைக் குறிப்பிடுவதில் என்ன குழப்பம்?

நெல்லையில் சாஃப்டர் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில் பள்ளியின் பெயரைக் குறிப்பிடுவதில் ஒரு சில மீடியாக்களுக்கு என்ன குழப்பம்? கட்டிடம் இடிந்ததும் உண்மைதான், மாணவர்களின் உயிர் பறிபோனதும் உண்மைதான். இதை விட வலுவான ஆதாரமாக எதைத் தேடுகிறார்கள்?

பாலியல் விவகாரங்கள் நடந்தாலும் பள்ளியின் பெயரை மறைக்கிறார்கள்... உயிர் பறிபோனாலும் பள்ளியின் பெயரை மறைக்கிறார்கள்... பள்ளியின் பெயரை மறைத்துக்காட்டி யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்? அது என்ன தனியார் பள்ளியில் என குறிப்பிடுவது... ஊதியம் அரசுதானே தருகிறது. நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளி என குறிப்பிடலாமே...

பெயர்களைக் குறிப்பிட்டால்தானே அடுத்த முறை தவறு செய்யக் கூடாது... விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பயம் தோன்றும். மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். பள்ளியின் நற்பெயரைக் காக்கவும் மெனக் கெடுவார்கள்? 

பள்ளியின் தாளாளர் பதவியைக் கைப்பற்ற டயோசீசன் தேர்தலுக்கு வாரி இறைக்கும் பணத்தை இந்த மாதிரியான கட்டிட சீரமைப்பு பணிகளுக்கு வழங்கலாமே? பதவி பதவி என பேயாய் பறக்கும் கூட்டம்தானே நிரம்பிக் கிடக்கிறது. இப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தயக்கம் ஏனோ? பலியான மாணவர்களின் உயிர்களைக் காட்டிலும் இவர்கள் உயர்ந்தவர்களா? இவர்களின் பெயரைக் காப்பாற்றுவது அத்தனை முக்கியமா? 

எத்தனை கனவுகளோடு அந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை தினமும் காலையில் கிளம்பும் போது பள்ளிக்கு வழியனுப்பி வைப்பார்கள். இன்றும் அப்படித்தானே போய்வா மகனே என்று அனுப்பியிருப்பார்கள். காலையில் சென்றவன் மாலையில் உயிரோடு திரும்ப மாட்டான் என்றால் யாரேனும் பள்ளிக்கு அனுப்புவார்களா? அப்படியானால் இந்த சம்பவத்தில் குற்றம் யாருடையது? 

மதங்களைத் தாண்டி மனிதத்துடன் யோசியுங்கள்… பணங்களைத் தாண்டி பெற்றோரின் பாசத்தை வைத்து சிந்தியுங்கள்… பெயரோடு செய்தி வெளியிட்ட அனைத்து மீடியாக்களுக்கும் தலைவணங்குகிறேன். விளம்பரத்திற்காகவும், விளம்பர பார்ட்டி என்ற பெயரிலும், பணத்திற்காகவும் திட்டமிட்டு பெயரை மறைத்த மீடியாக்களைக் கண்டு வெட்கித்தலைகுனிகிறேன். இது ஊதியத்திற்காக வேலைபார்க்கும் பத்திரிகையாளர்களின் தவறல்ல… அவர்களை இப்படித்தான் எழுத வேண்டும் என நிர்பந்திக்கும் நிறுவனங்களின் தவறுதான். 

ஒரு வகையில் அரசும் இதில் குற்றவாளிதான். கும்பகோணம் தீவிபத்து நிகழ்ந்த பிறகுதான் எந்த பள்ளியிலும் கூரைகள் வேயப்பட்டிருக்க கூடாது, தப்பிச் செல்ல வாசல்கள் இருக்க வேண்டும், காற்றோட்டமான வகுப்பறைகள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது. சென்னையில் பள்ளி பஸ் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்த பிறகுதான் வாகனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. இப்படி கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாகத்தான் எந்த அரசு வந்தாலும் அதன் நடவடிக்கைகள் அமைகின்றன.  

இந்த நிலை மாற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தயக்கம் இன்றி தடுமாற்றம் இன்றி கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிகள் விவகாரத்தில் தவறுகளை மூடி மறைப்பது எதிர்காலத்தின் தூண்களை காலனுக்கு காவு கொடுப்பதற்கு உடந்தை போவதாகி விடும். பலியான 3 மாணவர்களின் உயிர்ப்பலிக்கு சரியான நீதி வேண்டும்… சாஃப்டர் பள்ளி நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்படும் தண்டனை பிற பள்ளிகளுக்கு படிப்பினையாக அமைய வேண்டும். 

இதழாளர் ஜே.பி.

#tirunelveli #schaffter #school  #journalist #media #MediaNews 

சாதிக்காரன் - பகுதி 4 (இதழாளர் ஜே.பி.)

வந்தாரை வரவேற்று உபசரிப்பதை பண்பாடாகக் கொண்ட இம்மண்ணில் வந்தேறிகளாய் வந்த கூட்டம் அந்நிய மண்ணில் அடிமைகளாகவும், அகதிகளாகவும் இருந்த போது தங்களை மேற்கொண்ட ஆளுமையை பார்த்து பாடனுபவித்து கற்றுக் கொண்டு இங்கே இறக்குமதி செய்தார்கள். ஆரம்பத்தில் நட்புறவாடிய சொற்ப கூட்டம் பின்னாளில் மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கிய போது அவர்களின் டாம்பீக ஆளுமைக்குள் இம்மண்ணின் மக்கள் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.

வந்தேறிகள் உரைக்கும் தர்மப்படி எடுத்துக் கொண்டால் கூட சத்திரிய வருணத்தில் கோபமும், வீரமும், ஆளுமையும்தான் பிறவிக்குணம் என்றால் இந்திய நிலப்பரப்பு முழுவதுமே சத்திரிய குடிகளால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பதை தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டிருக்கும் கல்வெட்டுக்கள், புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல், புதைந்து போன நாகரீகங்களின் அகழாய்வு மீட்பு ஆகியவை பறைசாற்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

ஒவ்வொரு இனக்குழுவிலும் தங்களது இனத்தை அந்நிய படையெடுப்பில் இருந்தும், விலங்குகளின் தாக்குதல்களிலும் இருந்து காப்பதற்காக போராளிகளும், போர் வீரர்களும், காவலாளிகளும் இருந்தார்கள் என்பதை இன்றளவும் மக்கள் கொண்டாடும் முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடுகள் சான்று பகிர்கின்றனவே. குடி, படை, காவல் இதுதானே இம்மண்ணின் பண்பாடாக பாராம்பரியமாக போற்றப்பட்டிருக்கிறது.

அப்படித்தானே சாதிகள் பாகுபாடின்றி மாடனும், இசக்கியும், சுடலையும் ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் சாமிகளாக்கப்பட்டு பீடங்களாக நிற்கிறார்கள். ஆண்டு தோறும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நினைவு நிகழ்வாக கொடை விழாக்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையல்களாக படைத்து வணங்கி வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்திய பரப்பு முழுவதுமே இயற்கை வழிபாடு மட்டும் இருந்த காலத்தில் எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டது சாதி? வந்தேறிகள் வந்திறங்கிய பின்பு தோன்றியதுதானே?

இனக்குழுக்களாக மண்ணின் குடிகள் வாழும் காலம் தொட்டே தத்தம் இனக்குழுவினருக்கிடையே ஒழுக்க விழுமியங்களில் ஒரே குடையின் கீழ் இருந்தாலும் அவர்கள் பேசிய மொழிகளாலும், அன்றாட புழக்க மற்றும் பழக்க வழக்கங்களிலும், பண்பாடுகளிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தன. விருந்துசரிப்பில் கூட வந்தோருக்கு தண்ணீர் வழங்குவது, நீராகாரம் வழங்குவது, மோர் வழங்குவது, பானகம் வழங்குவது என தங்களிடையே இருந்த வசதிகளைக் கொண்டு பரிமாறினர். அன்ன ஆகாரங்களிலும் நடை உடை பாவனைகளிலும் இனக்குழுவுக்கு தக்கவாறு, அவர்கள் செய்யும் தொழில்களுக்கு தக்கவாறு பண்பாடுகள் மாறுபட்டிருந்தன.

இதன் காரணமாக பெண் கொடுக்கல் வாங்கலைக் கூட இனக் குழுவுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டனர். இதற்கும் பலவாறான காரணங்கள் இருக்கத்தான் செய்தன. தங்களது வீட்டுப் பெண் மாற்று இனக் குழுவிற்கு செல்கையில் அவர்களது பழக்க வழக்கத்திற்கு தக்கவாறு மாறுவதற்குள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததும் ஒரு காரணம். இதனால் பெரும்பாலும் அடுத்த இனக்குழுக்களை நாடிச் செல்லாமல் இருந்தனர். இந்த இடைவெளியைத்தான் வந்தேறிகள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு படையலாக்கிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி வீர தீர சாகச செயல்களில் துணிவோருக்கு பெண்களை மனையாட்டிகளாகக் கொடுக்கும் நடைமுறையில் இருந்தே இந்திய நிலப்பரப்பு முழுமையுமே சத்திரிய இனமாக இருந்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.  பின்னாளில்தான் வருண பேதங்களால் பிரிக்கப்பட்டு சாதி அரசியலுக்குள் மக்கள் பிணை வைக்கப்பட்டனர் என்பதுவும் இறந்தகாலம் பகிரும் வரலாறு.  

இதைத்தானே திட்டாந்தரமாக “ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம்” என்று அம்பேத்கார் கூறியிருந்தார். எப்படியெல்லாம் மக்கள் துண்டாடப்பட்டனர், சாதியால் பிளவுபடுத்தப்பட்டனர் என்பதனை பக்தவச்சலபாரதி என்பவர் தனது “மானிடவியல் கோட்பாடு” என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். மனித இனமானது மரபுக் கோட்பாடு (traditional theory), தொழிற் கோட்பாடு (occupational theory), சமயக் கோட்பாடு (religious theory), அரசியற் கோட்பாடு (political theory), இனக் கோட்பாடு (racial theory), படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory) என ஆறுவகையான கோட்பாடுகளால் பிரிக்கப்பட்டனர் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆக சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல என்பது நிரூபணமாகிறது.

அப்படியானால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எங்கிருந்து பிறந்தன? என்பதை அடுத்த கட்டுரையில் விவரிப்போம்….

===============================

சாதிக்காரன் வலிய பின்தொடருவான்

===============================

இதழாளர் ஜே.பி.


 

 

 

 


12/16/2021

சாதிக்காரன் - பகுதி 3 (இதழாளர் ஜே.பி.)

நாகரீகம் மறுக்கப்பட்டவர்கள் தாழ்ந்தவர்களாகவும், ஏனையவர்கள் நாகரீகஸ்தவர்களாகவும், கல்வி மறுக்கப்பட்டவர்கள் இழிகுடிகளாகவும் கற்றவர்கள் உயர்ந்தவர்களாகவும் பாவிக்கப்பட்டார்களே தவிர, ஆரம்ப காலம் தொட்டே சம வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்களும் சமகுடிகளாகவே இருந்திருப்பார்கள். இந்த உலகத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர்த்து இந்த சாதிய கொடுமைகள் பெரும்பான்மை பெறவில்லையே ஏன்? கடவுள் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் சாதியை அறிமுகப்படுத்தினாரா?

பின் எதற்காக சாதி என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்ற கட்டுக்கதை இங்கே விளம்பப்பட்டிருக்கிறது. வேதங்களையும் அவ்வாறே மரபுக்கோட்பாடாக இந்த சாதியத்தை வடிவமைத்ததன் உள்நோக்கம் என்ன? ஒருவர் பிழைப்பதற்காக மற்றவரை தாழ்த்துதல் என்பதுதானே இதன் ஆணிவேராக இருக்கக்கூடும். இதைத்தானே விவேகானந்தர் சுட்டிக்காட்டினார். மதங்களுக்கும் சாதிகளுக்கும் சம்பந்தமே இல்லை… சமுதாய அமைப்பே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்று உரக்கச் செப்பினார்.

ஆக வந்தேறிய கூட்டம் தங்களுக்கான சலுகைகளையும் அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உயர்ந்த சாதி என்ற இல்லாத ஒன்றை உருவாக்கி, அந்த கட்டமைப்பின் கீழ் குறிப்பிட்ட தொழில் செய்யும்  மண்ணின் மக்களை அகப்படுத்தினார்கள் என்பதுதானே உண்மை.  இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்த மக்களை செயற்கை தெய்வ வழிபாட்டிற்குள் புகுத்தி மதத்தின் பெயரால் சாதிகளை பிரித்து ஆட்சிக் கோலோச்சினார்கள். உழைக்காமல் உண்ணும் வழிமுறைகளையும் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்டார்கள்.

மதத்தின் பெயரால் யாரையெல்லாம் தீட்டுப்பட்டவர்கள் என வகைப்படுத்தினார்களோ, அவர்கள் கையால் விளைவித்த உணவுப் பொருட்களை உண்டு கொழுத்து அந்த மக்களை காலம் காலமாக அடிமைத்தளையில் இருந்து விடுவிக்காமல் பார்த்துக் கொண்டனர். பரம்பரைத் தொழில்கள் நிமித்தமாக இனக்குழுக்களாக வசித்த மக்களை பிறப்பின் அடிப்படையில் சமூக அமைப்பாய் மாற்றி, மெல்ல மெல்ல சாதி என்ற வக்கிரத்தை உட்புகுத்திய கொடூரங்கள் இலைமறை காயாய் நடந்தேறியதை மக்கள் அறியாமற்போனார்கள்.

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணனும், தோளில் இருந்து சத்திரியனும், தொடையில் இருந்து வைசியனும், பாதத்தில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்ற கட்டுக்கதையை புராணங்களில் இருந்து திரித்து வழங்கி பிறரை முன்னேற விடாமல் ஆட்சி பீடத்தின் அருகிலேயே அந்த(ண)க் கூட்டம் ஜபர்தஸ்த்தாக அமர்ந்து கொண்டது. மற்ற மூன்று வர்ணங்களை பிரித்தாளும் சூழ்ச்சி வாயிலாக கட்டமைத்து தங்களுடைய வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். உண்மையில் தொடை இடுக்கி்ல் பிறந்தவர்கள் மட்டுமே மனிதர்களாக இருக்க முடியும் என்ற எதார்த்தத்தை போதிக்க மனமும் இல்லை…

அப்படியானால் மனிதர்களையே நான்கு வருணங்களில் உள்ளடக்கிய பின்னர் சாதிகள் எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு வருணங்களுக்குள்ளும் எதன் அடிப்படையில் எந்தெந்த சாதிகள் சேர்க்கப்பட்டன? ஏன் பிராமண வருணத்தில் மட்டும் எவருமே சேர்க்கப்படவில்லை? இப்படியெல்லாம் மனித இனங்களை பிரித்தாள எங்கிருந்து இவர்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இனக்குழுக்களாக வாழ்ந்த மக்களுக்கு சாதி என்ற ஒன்று தேவைப்படாமல்தானே வாழ்ந்திருந்திருந்தனர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றளவும் விடைகள் இல்லை… விடைகளும் கொடுக்க முடியாது. அத்தனையும் பிரிவினை சூழ்ச்சி.   

அந்தப்படியே நோக்கின் யார் சத்திரியர்? சத்திரிய பிரிவில் எந்தெந்த சாதிகள் உள்ளடக்கம்?  நாட்டுக்காக வீரமாக போரிடக்கூடிய யாவருமே சத்திரியர் தானே! வீரமும் கோபமும் எப்படி ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமாகும்? உழைக்காமல் திண்பவனை விட, நிலத்தில் வியர்வை சிந்த பாடுபட்டு உழைப்பவனுக்குத்தானே உரம்பாய்ந்த தேகமும், வீரமும் சொந்தமாகக் கூடும். அப்படியானால் உண்மையான சத்திரியர்கள் அவர்கள்தானே? விளைவித்தவனை தீட்டுப்படுத்தி அவனை வியாபாரத்தில் புறக்கணித்தார்கள். வியாபாரத்திற்கென வைசியக்கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். வைசியக் கூட்டத்தில் யாரெல்லாம் உண்டு? இவர்கள் நிலைமை கீழிறங்கியும் பழக முடியாது… மேல்தட்டு என சொல்லிக் கொண்டவர்களுடனும் கலக்க முடியாது.

இந்த ஊரில் இருப்பவன் அடுத்த ஊரில் மேல் சாதி, அடுத்த ஊரில் மேல் சாதியாக இருப்பவன் இந்த ஊரில் கீழ் சாதி. ஆனால் எந்த ஊரானாலும் அந்த(ண)க்கூட்டம் மட்டுமே மேல் சாதி. அது எப்படி சாத்தியமானது? மதத்தால், சாதியால், மந்திரத்தால் தந்திரங்கள் செய்து செய்து மக்களின் சுதந்திரத்தை பறித்து வைத்திருந்தார்கள்… கேள்வி கேட்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வியல் சுதந்திரம் நசுக்கப்பட்டு எதிர்ப்பவர்கள் தேச துரோகிகளாகவும், மறுப்பவர்கள் சிறைப்பட்டும் மாண்டார்கள். காதலும் காமமும், உடையும் கூட மறுக்கப்பட்ட வரலாறுகள் மறக்க முடியாத சுவடுகளாக சோகங்களாக இருக்கத்தானே செய்தது. இதுதானே இன்றளவுமே நடக்கிறது.

உரிமைகளைக் கேட்கும் போராளிகளின் குரல்வளை நசுக்கப்பட்டுக் கொண்டேதான் சமகாலத்திலும் சட்டம் என்ற பெயரில் சித்ரவதைகள் தொடர்கின்றன.

இந்த நிலைமைக்கு மக்களும் ஒரு காரணம்… மக்களும் குற்றவாளிகளே… ஏன்?

==========================

சாதிக்காரன் வலிய பின்தொடருவான்

=========================

இதழாளர் ஜே.பி.

12/15/2021

சாதிக்காரன் - பகுதி 2 (இதழாளர் ஜே.பி.)

எந்த சாதிக்காரன் அந்த சாதியில் உள்ளவனை, எத்தனை பேர்களை வணிக ரீதியாக முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதனை உற்று நோக்குங்கள்... அந்த எண்ணிக்கை மிக சொற்பமே... அது பெரும்பாலும் நெருங்கிய உறவுக்காரனாக இருந்திருப்பானே தவிர பொத்தாம் பொதுவான சாதிக்காரனாக இருந்திருக்க மாட்டான்.

தனக்கு இது பாதுகாப்பு, சுற்றும் சூழ இருந்தால் பலம், இறந்தால் புதைக்க இடம் வேண்டும், கோவிலில் கொண்டாட உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் சாதியத்தை அணுகுகிறார்களே தவிர சுய ஆதாயம் பேணும் சாதிய தலைவர்களை கொண்டாடுவதற்காக அல்ல. 

அப்படி பார்த்தால் ஒவ்வொரு கட்சியிலுமே அனைத்து சாதியினரும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஒரு சாதியை குறித்து பேசியதும் சாதிய ரீதியான கட்சியை நடத்துபவர்கள் பொங்கி எழுவார்களே தவிர, ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் அதே சாதியை சேர்ந்தவர்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு இருப்பார்களே தவிர, கட்சியையும் மீறி சாதிய பாசத்தையோ, உணர்வுகளையோ வெளிக்காட்டுவதில்லையே ஏன்? அவர்களுக்கு சாதிய உணர்வு இல்லையா? பாசம் இல்லையா?

அப்படி இல்லை... அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க சாதிய அரசியல் என்று. தங்களைப் போன்றே அரசியல் நடத்துவதற்கு இதுவும் ஒரு உக்தி என்று.

சரி... ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்... ஆண்டசாதி என்ற பெருமையை பேசுபவர்கள் யார்? எந்த சாதியை சேர்ந்தவர்கள்? ஏறக்குறைய அனைத்து சாதியினருமே ஆண்டசாதி பெருமை பேசுபவர்கள்தான். அதில் ஏதேனும் பாகுபாடு இருக்கிறதா? எல்லாருமே தங்களை மன்னர் வகையறாக்களாகத்தானே வரையறுத்துக் கொள்கிறார்கள்.

சேர, சோழ, பாண்டிய மன்னர் வகையறாக்கள் தாங்கள்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் யாரென்றே முழுமையான வடிவத்தை ஆராய்ச்சியில்தான் வைக்க முடிகிறதே தவிர, இவர்கள்தான் என்று திட்டாந்தரமான முடிவுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஆராய்ச்சியாளன் இருக்கிறான். அவன் தன்னை அந்த அடையாளத்திற்குள் பிணைத்துக் கொள்கிறான். அதற்கு ஒரு வரலாற்றை உதாரணமாக முன்னிறுத்துகிறான். சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என நில எல்லைகளை பிரித்து ஆட்சி செய்தார்களே ஒழிய இவர்கள் சொல்லும் பெயர்களில் தங்களை நிலைநிறுத்தாமல் போனது ஏன்? என்பதை எந்த சரித்திர ஆராய்ச்சியாளரும் சொல்லவில்லை.

ஒரே சாதிக்காரனாக இருந்தாலும் பல வேளைகளில் பெண் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தம் செய்து கொள்வதில்லையே ஏன்? நல்ல வேலைகளில் வரண்கள் இருந்தாலும் திருமணம் செய்து கொடுக்க மறுப்பது ஏன்? எதிர்பார்ப்புக்கு ஏற்ற நல்ல குணங்கள் இருந்தாலும் மணமுடித்துக் கொடுப்பதில் தயக்கம் காட்டுவது ஏன்? அது ஒரு புறம் இருக்கட்டும். வீட்டின் அந்தம் வரையல்ல வீட்டு முற்றத்தில் கூட சக சாதிக்காரர்களையே ஏற்றுவதில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேர் அதனை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்கள்?

அப்படியானால் சாதி எங்கே இருக்கிறது? எதில் ஒளிந்திருக்கிறது? என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணத்திலும், வசதியிலுமே ஒளிந்திருக்கிறது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும் வெளித் தோற்றத்தில் மனம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. கீழ் சாதிக்காரன் என்று யாரைக் குறிப்பிடுகிறார்களோ, அவர்கள் பணம் பதவி என மேலோங்கி நின்றால் உயர்சாதிக்காரன் என்று வெளிஉலகத்தில் பெருமை பீற்றிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி சேவகம் செய்ய கிளம்பி விடுகிறார்களே? அது எப்படி சாத்தியம்?

அப்படியானால் பணம் இல்லாதவன்தானே கீழ்சாதி. பணமிருப்பவன் மேல் சாதி என்பதுதானே இங்கே எதார்த்த சித்தாந்தம். கோடிகளில் புரள்பவர்களும், பன்னாட்டு தொழில் செய்யும் அதிபர்களும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் சாதி வேற்றுமை பார்க்காமல் திருமண பந்தத்திலும், சம்பந்தத்திலும் அடியெடுத்து வைக்கிறார்களே? அவர்களை ஏன் இந்த சமூகமோ, அவர்கள் சார்ந்த சாதிகளோ குற்றந்தீர்ப்பதில்லை. சாதிக்கலப்பில் ஈடுபட்ட அவர்களிடமே சென்று கோவில் விழாக்களுக்கும், இன்ன பிற பொது நிகழ்வுகளுக்கும் சாதி பேசித்திரியும் தலைவர்களே தங்களது தேவைக்காக நன்கொடை கேட்டு படியேறுகிறார்களே? நன்கொடை கேட்கச் செல்லும் போது சாதி தடுக்கவில்லையா? இது எத்தகைய உணர்வு?

சாதாரணக்காரன் வீட்டில் மட்டும் சாதி வாழ்கிறதே? ஆணவக் கொலைகளும் இன்றும் நடந்து கொண்டிருக்கிறதே? என்றால் சாதிக்குள் ஒரு சதி அரசியல் இருப்பது யாருக்கும் தெரியாமலா இருக்கிறது? அவனுக்கு மட்டும் சாதிய உணர்வு சோற்றில் உப்பு சேர்க்கப்படுவது போல ஒவ்வொரு நடைமுறையிலும் சாதி என்பது தவறாமல் ஊட்டப்படுவதும், உசுப்பேற்றுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே ஏன்? ஆண்ட பரம்பரை, அடிமைப்பரம்பரை என்ற வித்யாசம் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அதன்சாரம் தெரிந்தோ தெரியாமலோ கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

வெள்ளையும், கருப்புமே சாதி வேற்றுமையாக பார்க்கப்படும் வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தால் கூட, சாதி பார்த்து பழகுவதும், சாதிய வட்டத்தை தேடிப்பிடித்து அதற்கு வாழச் சொல்வதுமாக காலில் ஒட்டியிருக்கும் சாதி என்னும் சகதியைக் கழுவாமல்தான் கடல் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கருப்பு, வெள்ளை முதலாளிகளுக்கு சம்பாதிக் கொடுக்க சாதிகள் பாரபட்சமின்றி ஒரே அலுவலகத்தில், ஒரே ஊதிய விகிதத்தில் ஒரேவித வசதிகளோடு ஏசி அறைக்குள் ஒரே சுவாசக் கலப்போடு பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு வேளை நோய்த் தொற்று கிருமிகள் சாதி பார்க்காமல் ஒருவனிடம் இருந்து மற்றொருவனிடம் இருந்து தொற்றிக் கொண்டு உலகையே அவ்வப்போது அச்சுறுத்துகையில், ஏசி அறைக்குள்ளான சகவாசத்தில் சுவாசங்கள் கலப்பதில் சாதி மட்டும் கலக்காதோ என்னவோ?

==========================

சாதிக்காரன் வலிய பின்தொடர்வான்

==========================

இதழாளர் ஜே.பி.

சாதிக்காரன் - பகுதி 1 (இதழாளர் ஜே.பி.)

எந்த சாதிக்காரன் யாரைக் காப்பாற்று கிறான்? கேள்வியின் நோக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்மீகப்படி ஆதிப்பெற்றோர் ஈன்றனரோ, அறிவியல் கூற்றுப்படி டார்வின் கோட்பாட்டின் இணக்கமாக பிறந்தோமோ அதுவல்ல இப்போதைய விவாதம். எப்படி பிறந்திருந்தாலும் ஆதியில் ஒரு குடியாகத்தான் இருந்திருப்போம். குடிகள் பெருகி இனக்குழுக்களாக மாறி திசைக்கொன்றாக சிதறி தெரிந்த வேலைகளை செய்து தேர்ந்து செய்யும் வேலைக்குத்தக்க இனமாக மாறி பின்னாளில் சாதி அடையாளமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டது மனித சமூகம்.

மேலை நாடுகளில் நிறவேற்றுமை தீவிரவாதம் என்றால், தாய் திருநாட்டிலோ சாதீய ரீதியான தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. நிற வேற்றுமை தீவிரவாதம் கூட மெல்ல மெல்ல எடுபட்டு நாகரீகம் தழைத்து விட்டதாக தோன்றினாலும், நமது சாதீய தீவிரவாதமோ நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு செல்கிறதே தவிர எந்த இறுதித் தீர்வையும் எட்டவில்லை.

ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்கிறவன் அறிவியலை வெறுக்கிறான். இறைக் கொள்கையில் இருந்து தடம்புரண்டு மதவாத அரசியலுக்குள் எளிதில் வயப்பட்டு சக மனிதனுக்கு எதிராக நிற்கிறான். அறிவியலை ஏற்றுக் கொண்டவனோ ஆண்டவனையே பகைக்கிறான். சக மனித இனத்தை நடமாடும் பரிசோதனைக் கூடமாக மாற்றி பிரபஞ்சத்தை அச்சுறுத்தும் நோயுற்ற சமுதாயம் படைக்கிறான்.

எது அழிவுக்கானது, எது ஆக்கப்பூர்வ மானது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சாமானியக் கூட்டம் சடிதியில் மாட்டிக் கொண்டதைப் போல பன்னெடுங்காலமாக திணறிக் கொண்டிருக்கிறது. இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்களை செய்யும் தொழிலுக்குத்தக்க பெயர்களை வைத்து பிரித்துக் கொண்ட சாதித்துவம் மனிதத்திற்குள் புரையோடி மனிதக்குடிகளை துண்டாடி அரசியல் லாபம் அடைந்து வருகிறது.

ஆதிக்குடிகளாக இருந்த போது காணக்கிடைத்த ஒற்றுமை, இனக்குழுக்களாக பிரிந்த போது எதிர்காலத்தில் தங்களை சாதி முதலைகள் விழுங்கும் என்ற அறிவு கொண்டிருக்கவில்லை. ஆதிக்க சாதிகள் என்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள், தங்களுக்கு அடிபணிந்தவர்களை தாழ்ந்த சாதிகளாக பாவிக்கத் தொடங்கியதன் வரலாறு நீண்ட நெடியது. துயரங்களும் வலிகளும் மிகுந்தது.

நாம் நடந்து செல்லும் பாதையில் குறுக்கிடும் எறும்புகளை தெரிந்தோ தெரியாமலோ மிதித்துக் கொல்லும் போது யாருக்கும் மனவலியை கொடுப்பதில்லை. சாதாரண எறும்புதானே என்ற எண்ணத்தில் லேசாக மனம் கடந்து சென்று விடுவதைப் போலத்தான் மனிதனும் மனிதனை சாதியப் பசிக்காக இரையாக்கத் தொடங்கினான். விமானத்தில் பறக்கும் போது மனித தலைகளையும் எறும்புகளாக பார்ப்பது போன்ற உணர்வைத்தான் வலியவன் மெலிந்தவனை பார்க்கும் போது அடைந்தான்.

வலுத்தவன் பெருகத் தொடங்கினான்… மெலிந்தவன் ஓடி ஒளியத் தொடங்கினான். காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்தான். புற உலகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டு புறந்தள்ளினான். ஆதிக்குடியின் அதே வாசனையோடு பழங்குடியினனாகவே வாழ்வைத் தொடர்ந்தான். அவனுக்குத் தெரியாது ஆதிக்குடியினான அவன் பழங்குடியினன் என்ற பெயர் பெற்ற வரலாறு.  அன்றாட உணவுக்கானது மட்டுமே அவனது போராட்டம்.

பரந்து விரிந்த நிலப்பரப்பை ஆளத் துடித்தவனே சாதிகளை பரப்பி சாதிக்குள் பிரிவுகளை உட்புகுத்தி கலவரங்களை நிலைப்படுத்தி உயிர்களை கொலைப்படுத்தி ஆணவத்தை தலைக்கேற்றி சாதிக் கொரு தலைவனாக தங்களை நிலைநிறுத்தி பரம்பரை பரம்பரையாக தங்களை ஆதிக்கசாதி, ஆண்டசாதி என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்து வருகிறார்கள்.

உயிரைக் கொடுத்து, உழைப்பைக் கொடுத்து, காடு மலைகளைத் திருத்தி, நிலங்களை பண்படுத்தி, பள்ளங்களை மேபடுத்தி, வயல்வெளிகளாக சீர்திருத்தி உழைக்கும் வர்க்கமாக உணவு கொடுப்பவர்களின் உழைப்பைச் சுரண்டி, உரிமைகளைப் பறித்து, உணர்வுகளைச் சிதைத்து அடிமைச் சாதிகளின் பட்டியலில் சேர்த்தது அந்த ஆணவ ஆதிக்கம்.

வலியவனுக்கு எளியவன் அடிமை என்றிருந்ததே தவிர, இந்த சாதிதான் அடிமை என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆளுகைக்கான அந்த மண்ணில் வலுத்தவன் எவனோ அவனே ஆதிக்க சாதியினன் ஆனான். ஒரு நிலப்பரப்பில் எளிய சாதியினனாக இருந்தவன் மற்றொரு நிலப்பரப்பில் மன்னனாக முடி சூடியிருந்தான். இதுதான் உண்மை வரலாறு. ஒரு குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே அடிமைகளாக நடத்தப்படவில்லை. பெரும் பரப்பிலான உண்மை என்னவென்றால் உழைக்கும் சாதி அடிமை சாதியாக்கப்பட்டதுதான். உழைப்பை பிடுங்கித்தின்றவன் உயர்சாதியினன் ஆனான்.

பெருவெடிப்பு கோட்பாட்டின் படி சூரியனில் இருந்து கோள்கள் வெடித்துச்சிதறி பூமி என்ற கோள் உருவான போது கண்டங்களோ, துண்டங்களோ இல்லாமல் நீர்த்திரள் தனியாகவும், நிலப்பரப்பு தனியாகவும் தன்தன் எல்லைகளில் சீராகத்தான் இருந்தன. இயற்கைச் சீற்றங்களும், பெருங்கோள்களுமே கண்டங்களும், துண்டங்களுமாக நாடுகளையும், தீவுக் கூட்டங்களையும் உருவாக்கி பின்னாளில் உருவான மனித இனம் தேவைக்கு தக்கபடியான நிலங்களுக்கு பயணமாகிக் கொண்டனர். தங்களது நிலப்பரப்புக்கும் கண்டம், துண்டம் என பெயர்களையும் வைத்துக் கொண்டனர்.

இப்படித்தான் ஒன்றாய் தோன்றிய மனிதக்குடியில் சாதியப்பிளவுகளும் தோன்றின. தொழில்களுக்குத் தக்கபடி பெயர் சூடி இனக்குழுக்களாக பிரித்து ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தலைவனோடு மற்ற இனக்குழுக்களை ஆளத்துடித்தன. ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து ஓரறிவு கூடுதலாக பெற்ற மனிதனோ தன் சுயநலத்திற்காக சக மனிதனையே வேட்டையாடுவதற்கு எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் சாதியாக மாறிப் போனது.

எந்த சாதிக்காரனும் யாரையும் காப்பாற்ற மாட்டான்... அவனவன் தன்பிழைப்புக்காக போராடுவானே தவிர தன் இனத்துக்காக போராடும் தலைவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. தற்காலத்தில் சாதிப்பெருமை பேசித்திரிபவன் யாவருமே தன் இனத்தின் வளர்ச்சிக்காக பெரிதாக எதையும் செய்திருக்க மாட்டாதவன்தான். ஒரு கூட்டத்தை வைத்து, தலைகளின் எண்ணிக்கையை வைத்து தனக்கான பிழைப்பை, ஆதாயங்களை, வருமானத்தை தேடிக் கொண்டிருப்பவன்தான்.

(*ஆகடியம் - பொல்லாங்கு

*ஆகந்துகம் - இடையில் வந்தேறியது)

====================

சாதிக்காரன் வலிய பின்தொடர்வான்...

===================

இதழாளர் ஜே.பி. 

=============


12/12/2021

அடுத்துவரும் சந்ததிகளுக்காக வளப்படுத்துவோம் வாருங்கள்..! - இதழாளர் ஜே.பி.

🤝👋🙏 அடுத்தவருக்கும் பகிருங்கள் 🤝👋🙏 

மேற்கு தொடர்ச்சி மலை,-யை வளப்படுத்தும் திட்டமாக உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், இயற்கை நேசர்கள், பள்ளி கல்லூரி மாணவச்செல்வங்களை ஒருங்கிணைத்து #மேற்குத்தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் #குறுங்காடுகள் (Miyawaki Forest) அமைக்க #பனைவாழ்வியல்இயக்கம் (#மண்அறக்கட்டளை) சார்பில் திட்டமிட்டுள்ளோம்.

இழந்து போன இயற்கை செல்வங்களை மீட்டெடுக்கவும், அழியும் நிலையில் உள்ள #இயற்கை பொக்கிஷங்களை பாதுகாக்கவும், புதிதாக இயற்கை வளங்களை தோற்றுவிக்கவும் இத்திட்டம் #பேருதவி புரியும் என நம்புகிறோம். 

சமகாலத்தில் நாம் அனுபவிக்கும் சுத்தமான காற்றும், நீரும், இயற்கையும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எமது #இலக்கு..!

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களால் இயன்ற மரக்கன்றுகளையும், மனித உழைப்பையும் எங்களுக்கு வழங்குங்கள்..! அற்ப ஆயுள் கொண்ட மனித இனம் மரங்களின் வாயிலாக ஆண்டாண்டு காலம் தழைத்து வாழட்டும்! 

உங்கள் பெயரிலோ, உங்களது பிள்ளைகளின் பெயரிலோ நீங்கள் வழங்கும் மரக்கன்றுகளாலும், மனித உழைப்பாலும் நமக்கு அரணாக விளங்கும் #மேற்குத்தொடர்ச்சி மலையின் வளம் பெருகட்டும்… 

#மண்ணில்_மரங்களை_நட்டு_விண்ணில்_நீரைத்தேடுவோம்!

வாருங்கள் கரம் கோர்ப்போம்!

மரம் நடுவோம்! மழை பெறுவோம்!

மண், மலை வளம் காப்போம்!


அன்புடன் அழைக்கும்…

பா.ஜான்பீட்டர் @ ஜே.பி. 

(பத்திரிகையாளர்)

தலைவர், பனை வாழ்வியல் இயக்கம் 

johnpeterdt@gmail.com 

9047145880, 9791544880

முடிந்தவரை நண்பர்களுக்கு பகிருங்கள்… நன்றி் 🙏 🙏 🙏

12/09/2021

அமைச்சகங்கள் மூடப்படுவது எப்போது?

இந்தியாவின் அடையாளமான ஏர்இந்தியா, துறைமுகங்கள், ரெயில்வே, எல்ஐசி, பெட்ரோலிய நிறுவனங்கள், பிஎஸ்என்எல், அகில இந்திய வானொலி இப்படி எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மக்கள் பணத்தில் பல்லாயிரம் கோடிகளில் உருவாக்கப்பட்ட துறைகள் எல்லாம் மலிந்த விலைக்கு கூவி கூவி விற்கப்படுகின்றன.

அவற்றை வாங்கிய தனியார் முதலாளிகளோ இனிமேல் அவர்களுக்கான தரத்திற்கு கார்ப்பரேட் அலுவலகங்களை நிர்மாணித்து அதிகாரிகள், ஊழியர்களை நியமித்து வேலை வாங்கப் போகிறார்கள். அப்படியானால் விற்கப்பட்ட துறைகள் சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றியவர்களுக்கு இனிமேல் என்ன வேலை? 

காலை 10 மணிக்கு அவசர அவசரமாக பயணித்து அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு எந்த கோப்புகளை கையாளப் போகிறார்கள்? எந்த கோட்டையை ஆளப்போகிறார்கள்? அலுவலகங்களை விட்டுத்தள்ளுங்கள்... இவர்களை விற்கப்படாத துறைகளுக்கு மாற்றி வேலை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த துறைகளையெல்லாம் நிர்வகிக்க மத்திய அமைச்சகங்கள் அமைக்கப்பட்டனவே? அந்த அமைச்சர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அந்த அமைச்சகத்தின் பணிதான் இனி என்ன? அந்த துறைக்கு இனி பட்ஜெட்டும் இருக்கப் போவதில்லை. பட்ஜெட்டே இல்லாமல் அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் என்ன வேலை? எது சார்ந்த தலைப்பில் அவர்கள் பேசக்கூடும்?

ஒட்டுமொத்தமாக இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து ஊதியம் வழங்கப்படப் போகிறது? விற்பனை செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கப்படுமா? அரசுதான் ஊதியம் கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டால், எந்த துறை வாயிலாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்? அந்த வரவு செலவு கணக்குகளை எந்த அமைச்சகம் பார்த்துக் கொள்ளும்?

ஒரு துறையில் லாபமே இல்லாமல் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், நஷ்டத்தில் இயங்குகிற துறையை தனியார் நிறுவனங்கள் வாங்கி என்ன செய்யப் போகின்றன? சரி... தனியாரால் லாபத்தில் இந்த துறைகளை இயக்க முடியுமென்றால் இத்தனை ஆண்டுகாலமும் அமைச்சகம், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பணியாளர்களைக் கொண்டு ஏன் லாபத்தில் இயக்க முடியவில்லை. அத்தனை பேரும் அறிவில் சிறந்தவர்கள்தானே... ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என மெத்தப்படித்தவர்கள்தானே தலைமை வகித்தார்கள்... 

இவர்களைக் காட்டிலும் இந்த துறைகளை வாங்கிய முதலாளிகள் கூட மெத்தப்படித்தவர்கள் அல்லவே??? 

அந்தப்படி நோக்கினால் ஒருவேளை விற்கப்பட்ட துறைகள் சார்ந்த அமைச்சகங்கள் மூடப்படுமோ? அமைச்சகங்களை மூடும் நோக்கம் இருப்பின் புதிய பாராளுமன்ற கட்டிடம் எதற்காக? இருப்பதே போதுமானதல்லவா? எல்லா துறைகளையும் படிப்படியாக விற்று விட்ட பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கையை எதற்காக அதிகப்படுத்தும் திட்டம்? 

இத்தனை விடை தெரியா கேள்விகளும் என்னைப் போன்ற ஒரு மெத்தப்படிக்காத சாமானியனின்  மண்டைக்குள் குருவிகளாக படபடக்கின்றன. பதில் தெரிந்தவர்கள் பண்பாக சொல்லுங்கள்... கட்சி விசுவாசத்தோடு பதில் அளிக்க வராதீர்கள்... இந்த கேள்விகள் அனைத்துமே தவறே செய்தாலும் தலைவர்களை தாங்கிப்பிடித்து தொங்கும் கட்சிக்காரர்களுக்காக அல்ல???  பதில் தெரிந்து கொள்ளும் ஆவலோடு நான்....

இதழாளர் ஜே.பி.

11/27/2021

நாய்கள் ஜாக்கிரதை… கவனமாகச் செல்லுங்கள் நண்பர்களே..!

நேற்று இரவு எனக்கு நேர்ந்த அந்த விபத்து… நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்து வலது கை மற்றும் காலில் காயங்கள்… மெதுவாக சென்றதாலும் மழைக்கான ஸ்பாஞ்ச் ஆடை (#jerkin)  அணிந்திருந்ததாலும் ரத்த காயங்கள் குறைவே… இருந்தாலும் ரத்தக்கட்டு உள்காயங்களால் கை, காலை அசைப்பதில் அப்படி ஒரு வலி…

இது மாதிரியான விபத்துக்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு… உணர்வு ரீதியாக நேற்றிரவு அனுபவித்த வலி இருசக்கர வாகனம் ஓட்டுவதில் இன்னும் பல எச்சரிக்கைகளை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே மழை பெய்து சாலைகளில் ஈரம் காயவில்லை. 

நமது சாலைகளின் தரம் பற்றியும் நமக்கு நன்றாகவே தெரியும்… பள்ளங்களில் விழுந்தால் பூமியின் மறுபக்க தேசத்தில்தான் எழுந்திருப்போம்… பள்ளங்களை தவிர்த்து வாகனங்களை ஓட்டுகையில் சில நேரங்களில் சரிந்து விழுந்து காயப்படுவதுண்டு…



நாய்களின் இனப்பெருக்க காலமும் இதுவே… நாய்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக திரியும்… வாகனங்களை விரட்டிச் சென்று அச்சுறுத்தும்… வாகன வெளிச்சம் தெரிந்ததும் சாலைகளை கடக்க முயற்சிக்கும்…

எனவே சாலைகளின் சீர்கேடுகளை தாண்டிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நாய்களிடத்திலும் பிற கால்நடைகளிடத்திலும் மிக அதிகம் தேவை… இருசக்கர வாகனம் ஓட்டுவதில் எத்தனை நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், பல ஆண்டு கால அனுபவம் பெற்றிருந்தாலும் இதுமாதிரியான திடீர் குறுக்கீடுகள் நம்மை நிலைகுலையச் செய்துவிடும்… காயங்களையும் சில நேரங்களில் மரணங்களையும் கூட ஏற்படுத்தி விடும்…

ஆகவே எச்சரிக்கையாக பயணம் செய்யுங்கள்… கேட்பதன் வலியை விட அனுபவத்தால் உணர்வதன் வலி கொடூரம்தான்…

#பா_ஜான்பீட்டர் @ ஜே.பி. இதழாளர்


#safedrive #dogs #bikeaccident

11/21/2021

பன்றியை விட பனை கேவலமானதா? - பா.ஜான்பீட்டர் கேள்வி

ஒரு காட்டுப்பன்றிக்கு கொடுக்கும் மரியாதையையாவது மாநில மரமான #பனைக்கு கொடுங்கள்..!

காட்டுப்பன்றியை வேட்டையாடினால் சிறை தண்டனையும், 10 ஆயிரத்துக்கும் மேல் அபராதமும் இருக்கிறது..!
வனத்துறையும், காவல் துறையும் வேட்டையாடிகளை புண்ணாக்கி விடுகிறார்கள்!
ஆனால் பன்றிக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட தமிழகத்தின் தமிழர்களின் அடையாளமான பனைக்கு அளிக்க மறுப்பது எத்தனை வேதனைக்குரியது.. இதற்கு மேல் எனக்கு அசிங்கமாக கேட்கத்தெரியவில்லை!
தடைச்சட்டம் போட்ட பிறகும் பனைகள் வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. காவல் துறையிடம் புகார் தெரிவித்தால், என்ன பிரிவில் வழக்கு செய்வது என்று மேலிடம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்கிறார்கள்.
பனைகள் வெட்டிக் கடத்தல் என்று ஏன் பதிவிடுகிறீர்கள்? பனை என்ன சந்தன மரமா அதனை கடத்தி விற்பதற்கு? என்று பத்தாம்பசலித்தனமாக கேட்கிறார் காவல் ஆய்வாளர் ஒருவர். மாநில மரத்திற்குரிய மரியாதையை அவருக்கு கற்றுத்தராமல் போனது யார் குற்றம்? அரசின் குற்றமா? பதவிகளை அலங்கரிக்கும் ஆட்சியாளர்களின் குற்றமா? சம்பளத்துக்கும் கிம்பளத்துக்கும் மட்டுமே கடமைக்கு மாரடிக்கும் அரசு அதிகாரிகளின் குற்றமா?
வருவாய்த்துறையைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! தனக்கான தனி வருவாய் கல்லா கட்டுவதை உறுதி செய்துவிட்டால் போதும் புறம்போக்கு நிலங்களையெல்லாம் ஊழல்வாதிகளுக்கு பட்டா போட்டு கொடுத்தும், மரங்களையெல்லாம் செங்கல்சூளை மாபியாக்களுக்கும் 2C பட்டா உரிமை கொடுத்தும் தன்வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இந்தப்பணத்தில் எப்படி பெண்டு பிள்ளைகளுக்கு சோறும் தீனியும் வாங்கிக்கொடுக்கிறார்கள்? என்று யோசிக்கவே அசிங்கமும் அருவெறுப்புமாகத்தான் இருக்கிறது.
காட்டில் திரியும் பன்றியை வேட்டையாடினால் தவறு, வனச்சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என சொல்லிக் கொடுத்த அரசு நிர்வாகம், காட்டை உருவாக்கும் காரணியான பனையை தறிப்பது தேச விரோத செயல் என சொல்லித்தரவில்லை!
மலைகளில் வாழும் வரையாடுகளை வேட்டையாடுவதை தண்டனைக்குரிய செயல் என வகைப்படுத்தும் அரசு, மலைகளை செழிப்பாக்க மழை ஈர்ப்பு மையமாக செயல்படும் பனைகளை தறிப்பதில் மெத்தனம் காட்டுவது இயற்கைக்கு இழைக்கும் கொடூரத்தின் உச்சம்..!
குறைந்தபட்சம் பன்றிக்கு கொடுக்கும் மரியாதையாவது பனைக்கு கொடுங்கள் ஆட்சியாளர்களே! வரலாறும், அடுத்தடுத்து வரும் சந்ததிகளும் உங்களை வாழ்த்துவர்! இதே காற்றும், நீரும், இயற்கையும் இனி வரும் சந்ததிகளுக்கு கிடைக்கட்டும்!!!


-இதழாளர் பா_ஜான்பீட்டர் ஜே.பி.

அப்படியானால் நீங்கள் யார்? - பா.ஜான்பீட்டர்

மனதிற்கோ மக்களுக்கோ தவறென பொருள்படும் எதையும் பதிவாக இட்டு விட்டால் தலைவன் தவறு செய்துவிட்டான் என்ற எந்தவித சிறு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தவறுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்களே ஏன்? அப்படியானால் தவறுகள் சரியென்று பொருள்பட்டு விடுமா?

ஆட்சியாளர்கள் பார்வையில் மட்டுமே சரியெனப்படுவது மக்கள் பார்வையில் தவறெனப்படுமாயின் மக்கள் கருத்தை ஏற்பதுதானே நல்லாட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் அழகு. அப்படியானால் பார்வையின் கோணத்தை மாற்ற வேண்டியது ஆட்சியாளர்களே தவிர மக்கள் அல்லவே..! அது எந்த தலைவனானாலும், கொம்பனானாலும் சரி மக்களாட்சி முன் மண்டியிடத்தான் வேண்டும்... நடப்பது மக்களாட்சியே தவிர மன்னராட்சியல்ல!

எந்தவொரு நியாயமான பதிவையோ, போராட்டத்தையோ மேற்கொண்டால் ஆட்சியாளர்களின் தவறை நியாயப்படுத்த சொம்பு தூக்கிகள் களத்திலும், சமூக வலைதளத்திலும் படையெடுத்து விடுகிறார்கள்... கட்சிகள் பாகுபாடின்றி ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் கேட்ட கருத்து சுதந்திரத்தை எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும்கட்சியான பிறகு மறந்தும் மறுத்தும் விடுகிறார்கள்..!!!

நியாயத்திற்காக எடுக்கப்படும் போராட்டங்கள் அனைத்தும் யாவருக்குமானவை... அடுத்த சந்ததிகளுக்கானவை... எதிர்ப்பு தெரிவிக்கும் வீட்டானுடைய குழந்தைகளுக்குமானவை...

பாதிக்கப்படுபவனே பதிவுகளை இடுகின்றான்... நியாயம் கேட்கின்றான்... பதிவுகளுக்கு மறுஉத்தரம் கொடுக்கிறேன் என்ற பெயரில் பதிவாளர்களின் கருத்து சுதந்திரத்தையோ, குரல்வளையை மிதிக்காதீர்கள்... பதிவுகள் பிடிக்காவிட்டால் படித்து விட்டு கடந்து சென்று விடுங்கள்... உங்களுக்கான கருத்தை நாகரீகமாக ஆதாரத்துடன் விளக்க முடியுமானால் தெரிவியுங்கள்... அநாகரீகமான வார்த்தைகள் உங்களுக்குள் இருக்கும் அசிங்கமானவனையோ, அருவெறுப்பானவனையோ வெளிக்கொணர்ந்து விடும்..! சற்றே சிந்தித்து செயல்படுவீர்!!!





பா.ஜான்பீட்டர் @ இதழாளர் ஜே.பி.

பனை மேம்பாட்டு இயக்கம் வெறும் கண்துடைப்பா?- பா.ஜான்பீட்டர் கேள்வி


 #பனைமேம்பாட்டுஇயக்கம் எதற்காக அமைக்கப்பட்டது? 

* #பனைமேம்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்? #அனுதாபிகள், #கட்சிக்காரர்களுக்கு  பதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதா? 
* #பனைமேம்பாட்டு இயக்கத்தின் வெளிப்படையான செயல்பாடுதான் என்ன? அதன் #அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளனவா?

* #பனைமேம்பாட்டுஇயக்கத்தை முறைப்படி செயல்படுத்த மாநில, மாவட்ட, கிராம அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? 
* ரேசன் கடைகளில் #கருப்பட்டி வழங்கும் திட்டத்தில் கலப்படமே இல்லாத #பனங்கருப்பட்டி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?
* #கலப்படகருப்பட்டிக்கும், #சீனிக்கருப்பட்டிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்கள் #பொதுவிநியோக துறையில் இருக்கிறார்களா?

* #பனங்கள் குறித்து இலக்கிய ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்களை பட்டியலிட்டு அதிகார வர்க்கத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலிலும் கூட #பனங்கள்ளுக்கான தடை நீக்கப்படாமல் தொடர்கிறதே அது ஏன்?
* #பனைத்தொழிலாளர்கள் மீது பொய்வழக்குகள் போடுவதை நிறுத்திக்கொள்ள #தமிழகமுதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள #காவல்துறை-க்கு உத்தரவிடப்பட்டு விட்டதா?
* பனைகளை வெட்ட தடைவிதிக்கப்பட்டதே? அதனை எந்த துறை கண்காணிக்கிறது? #வருவாய்த்துறையா? #வனத்துறையா? #காவல்துறையா?
* #பனைகளைவெட்டினால் என்ன தண்டனை என்ற சட்டவரைவு கொண்டுவரப்பட்டு விட்டதா? எந்த பிரிவுகளின் கீழ் #வழக்கு தொடர வேண்டும் என வரையறுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதா? 
* #பனைகள் வெட்டப்படுவதை தடுக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அதிகாரிகளுக்கு என்ன #தண்டனை வழங்கப்படும்? 
* #பனைமரத்தொழிலாளர்கள்நலவாரியம் என்னதான் ஆனது? அதன் சொத்துக்கள் என்ன ஆனது? அந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களின் நிலை என்ன?
* #பனைமரத்தொழிலாளர்கள்நலவாரியம் முற்றிலுமாக மூடப்பட்டது எனில் அதன் சொத்துக்கள், கோப்புகள் #பனைமேம்பாட்டுஇயக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டதா? 
இத்தனை கேள்விகளுக்குமான விடையே புதிதாக தோற்றுவிக்கப்பட்ட #பனைமேம்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விடையாக அமையும் என்பதை #தமிழகமுதல்வரும், #அமைச்சர்களும், #அதிகாரிகளும் உணர்ந்தாலொழிய இதைப்போன்ற எந்த திட்டமும் முழு வெற்றியை அடைய வாய்ப்பில்லை..!



#பா_ஜான்பீட்டர் @ ஜே.பி.
நிறுவனத்தலைவர்
#பனைவாழ்வியல்இயக்கம்-#தமிழ்நாடு









M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam #TNGovt #TNGovernment

11/19/2021

நமக்குள் ஒரு “கலாரசிகன்”

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரசிகன் ஒளிந்திருக்கிறான்... பிறப்பில் இருந்து இறப்புவரை வயதுக்கேற்ற ரசனைகள் இருக்கின்றன. வாலிப காலத்தில் இருக்கும் ரசனை வயோதிக காலத்தில் வேறுதிசையில் திரும்புமே தவிர நின்றுவிடுவதில்லை. பொதுவெளியில் அதனை காட்டிக் கொள்வதில்தான் சற்றே யாவருக்கும் தயக்கம். கவிதைகளில் புலம்மிகு கவிஞர்கள் என்று பெயரெடுத்தவர்கள் எதையும் எந்நேரத்தும் வார்த்தைகளால் வர்ணித்து கைதட்டல் பெற்று விடுகிறார்கள். சமூகம், மரியாதை, பதவி என்ற பலவற்றிற்கும் அச்சப்பட்டு ரசனைகளை மனதில் புதைத்துக் கொள்பவர்களே இதில் அதிகம். 

தியேட்டரோ, திருவிழாவோ, காதுகுத்தோ, திருமணமோ, வெற்றி விழாவோ, சாவு வீடோ உணர்வுகளுக்கு தக்கவாறு சத்தம்போட்டு விசிலடிக்க உணர்வுகள் பரபரக்கும், நடுரோட்டில் நடனமாட மனம் எத்தனிக்கும், சத்தமிட்டு பாட்டு பாட மனம் ஆர்ப்பரிக்கும்.. சந்தோஷத்தின் உச்சத்தில் ஓ“வென கத்தி கூப்பாடு போட மனம் துடிக்கும், இஷ்டத்துக்குரியவர்களை கட்டிப்பிடித்து கொண்டாட கற்பனைக் குதிரைகள் கட்டுக்கடங்கா வேகத்தில் அடம்பிடிக்கும்.... ஆனால் ஏனோ செய்வதில்லை.

தன்னிலை மறந்து இதையெல்லாம் செய்பவர்களோ யாரைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. யாருக்காகவும் நான் வாழவில்லை... மற்றவர்களின் விமர்சனங்களும் என்னை பாதிப்பதில்லை... தான் இப்படித்தான் என இந்த சமுதாயத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து விட்டார்கள்.

நல்லவன், பண்புள்ளவன், மரியாதைக்குரியவன் என ஆரம்பம் முதலே மக்களிடத்தில் பதிவு செய்ய முயற்சித்தவர்கள் அந்த பக்கமும் இருக்க முடியாமல், இந்த பக்கத்திற்கும் வர முடியாமல் இருதலைக்கொள்ளியாக தத்தளிக்கிறார்கள். சந்தோஷத்தைக் கூட தங்களது மனவிருப்பத்தின்படி கொண்டாட முடியாமல் மனதிற்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.

பார்த்தவுடன் வசீகரிக்கும் அழகுடன் கண்ணில் படும் பெண்களையோ, ஆண்களையோ அதனதன் எதிர்பாலினத்தவரை ரசிப்பதில் கூட இதுமாதிரியான உள்ளே, வெளியே ஆட்டங்களும் தடுமாற்றங்களும் மனதை ஆட்டிப்படைப்பதுண்டு... ரசனையை குடும்பத்தினரிடமே பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு... பார்வைகளை மட்டுமே திருப்பி மனதை அடக்கி ஒடுக்குபவர்களும் உண்டு... அதற்காக யாரைப்பார்த்தாலும் வழிந்து தீர்ப்பவர்களையும், ஜொள்ளு பார்ட்டிகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டாம். அவர்களது உலகமே இச்சையும், மனம்போன போக்கில் சல்லாபமும் நிறைந்ததுதான்...

ரசிக்கத்தான் கண்கள், அடையத்துடிப்பதில்தான் இருக்கிறது வக்கிரம் என்ற சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வாரும் உண்டு.... எதிர்ப்பாரும் உண்டு... அப்படியானால் இதில் எதை தேர்வு செய்வது என்பதுதான் தடுமாற்றவாதிகளுக்கு குழப்பம் மேலிடுகிறது.

ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோவில்களில் உள்ள சிலைகளில் தங்களது திறமைகளையெல்லாம் கொட்டி தத்ரூபமாக, தத்ரூபத்தையும் மிஞ்சிய கற்பனையைக் கொட்டித் தீர்த்திருந்தார்கள். ரசிக்கத் தெரிந்த சிற்பியால்தானே அப்படியொரு சிலைகளை வடிக்க முடியும். அப்படியானால் பெண் சிலைகளை அழகு முகத்தோடும், காலடி தொடும் நீண்ட கூந்தலோடும், தேகங்களை வருடி நிற்கும் நகைகளோடும், வாளிப்பான உடலோடும், பெரிய மார்பகங்களோடும், மெல்லிய இடையோடும், பருத்த தொடையோடும், விரல்களைத் தாண்டிய நகங்களோடும் ரசித்தது சிற்பியின் தவறா? அவரது வக்கிர எண்ணங்களா? அல்லது கலைவடிவமா?

ஒரு பெண்ணின் அழகு எப்படி இருக்க வேண்டும்? அங்க லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற அவரது கற்பனைகளாகக் கூட இருக்கலாம், அல்லது அக்காலத்துப் பெண்டிர் அத்தனை அழகோடும் ஆரோக்கியத்தோடும், உடலைப் பேணுபவர்களாக இருந்திருக்கலாம். அடுத்தடுத்த சந்ததிகள் இப்படி தங்களது உடல்நலணை பேண வேண்டும் என்பதற்காகக் கூட அர்த்தம் கொள்ளலாம்.

ஆண் சிலைகளையும் அவ்வாறேதானே வடித்தார்கள். அகண்ட மார்பும், வீரம் புடைத்த அங்கங்களும், முகத்தில் கிடா மீசைகளும், உயர்த்திய புருவங்களும், வெறிப்பார்வையும், வீரத்தின் அடையாளங்களும், விலங்குகளோடு போரிடுதலுமாக ஆண்களுக்குரிய லட்சணங்களையும் அங்குலம் அங்குலமாக சிலைகளிலே தீட்டியிருக்கிறார்கள். இப்படித்தான் ஆண்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் லயிக்கும் விதமாகத்தானே அந்த சிலைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளைத்தாண்டி சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.

முழுக்கவும் ஃபாஸ்ட்புட் காலத்தில் ஒபிசிட்டி என்ற பிரச்னையோடு உடற்பயிற்சி நிலையங்களுக்கும், எடை குறைப்பு நிலையங்களுக்கும் படையெடுப்பதை முன்கூட்டியே கணித்திருந்தார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். கணவன் மனைவி தங்களை பரஸ்பரம் ரசிக்கவும், ரசித்ததை சொல்ல தயங்குவதும் மறுப்பதுமே வாழ்க்கையை கசக்கச் செய்கிறது. இன்னும் பலருக்கு காதலியாக, காதலனாக இருக்கும் போது இருந்த ரசனை மணவாழ்க்கைக்குள் புகுந்த பின் இருப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்த ரசனை பிற்பாடு மாயமாவதின் விளைவு அது.  நம்மை ரசிப்பதற்கான ஈர்ப்பதற்கான களத்தையும் நாம்தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.

ஆக... ரசனை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வரைதான் வாழ்க்கை என்பதுவும் வாழும் காலம் வரை ரசிப்பதற்கான சுவாரஸ்யத்தின் களமாக இருக்கும். ஆயுள்கால அடுத்த நாட்களின் தேடலாகவும் இருக்கும்.  ரசனை இல்லா மனமும், வாசனை நுகரா நாசியும் நோயுற்றதுதான். ரசித்து வாழுங்கள்... ரசனையோடு வாழுங்கள்..!

-கடையத்தான்

11/16/2021

கதைக்களம் என்பது யாதெனின்?

சினிமா என்பது கற்பனைக்கும், கனவுகளுக்கும் வடிவம் கொடுக்கும் தொழிற்சாலை. அவரவர் எண்ணங்களுக்கேற்ப, மனதை பாதித்த சம்பவங்களுக்கேற்ப கதைக்களம் அமையும். பணத்தை முதலீடு செய்பவர்களின் பாதிப்பாக இருக்கலாம், படத்தை இயக்குபவரின் மனத்தோன்றலாக இருக்கலாம், கதாசிரியரின் கற்பனை ஓட்டமாக இருக்கலாம். உண்மைச் சம்பவமாக இருக்கலாம்.

ஆக ஏதோ ஒரு பாதிப்பின் வெளிப்பாட்டை தனது கற்பனைகளின் மீது ஏற்றி காட்சி வடிவம் கொடுக்கப்படுகிறது. புலவர்கள் பாட்டில் ஏற்றிக் கூறுவது போல, மிகைப்படுத்துதல் என்பது இங்கே அவசியமாகிறது. சம்பவத்திற்குரியவர் சாமானியராக இருந்தாலும் கதைக்களத்தில் அவரே கதாநாயகன் என்பதால் அவருக்கான கதாபாத்திரம் சில பல இத்யாதிகளோடு மெருகேற்றப்படுகிறது.

ஆரம்ப கால தமிழ் சினிமாக்களில் நீங்களே கேட்டிருக்க வாய்ப்புண்டு… என்ன செட்டியாரே… முதலியாரே…. என்ன பிள்ளைவாழ் என்றெல்லாம் பல கதாபாத்திரங்களின் குரல்கள் இன்னமும் நமது மனதிற்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எளியவர்களை மட்டப்படுத்தும் சம்பவங்களும் அதில் காட்டப்படத்தான் செய்திருக்கின்றன. கீழ்நிலை மக்களை ஜமீன்தாராக வரும் நம்பியார், வில்லன்களாக தோன்றும் எம்.ஆர்.ராதா, அசோகன், வீரப்பன் ஆகியோர் உங்களுக்கெல்லாம் எதற்கடா படிப்பு? எங்களுக்கு வேலை செய்யத்தானே பிறந்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் வசன உச்சரிப்புகள் இருந்தனவே.

அந்த செட்டியார், முதலியார், பிள்ளைவாழ் கேரக்டர்களையும் சாமானியக் குடியில் பிறந்து சவுக்கால் வெளுத்து வாங்கிய எம்ஜிஆர், சிவாஜி போன்ற கதாநாயகர்கள் அந்த இனத்தவரை அவமதித்து விட்டார்களா? என்றால் இல்லை. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சினிமாவில் தோலுரித்துக் காட்டினார்கள். அதனை தவறு என வாதிட்டார்கள். ஏழை பணக்கார்கள் என்பதையெல்லாம் தாண்டி, சாதி மதங்களை கடந்து அனைவரும் சமம் என காட்டினார்கள்.

பல தலைவர்களின் தியாகங்கள், அரசியல் நகர்வுகள், போராட்டங் களுக்கு இடையில் சினிமாவும் தன் பங்குக்கு ஆற்றிய விழிப்புணர்வு திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்று எல்லோரும் எல்லாம் பெறத் தொடங்கி இருக்கிறார்கள். இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டது. தீண்டாமை தவிர்க்கப்பட்டு வருகிறது. கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை பெற்று முன்னேறி வருகிறார்கள். ஆக முந்தைய காலக்கட்டங்களை விட  கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலப்பல. அதற்கு அமைத்த அடித்தளங்களில் சினிமாத்துறையும் ஒன்று.

எடுக்கின்ற திரைப்படங்களையெல்லாம் குறைகூறியிருந்தால் சமூக மாற்றங்களுக்கான திரைப்படங்கள் பெரும்பாலும் பெட்டியில்தான் உறங்கியிருந்திருக்க கூடும். தேவர் மகன் என்ற படம் வந்திருக்காது. உன்னால் முடியும் தம்பி என்ற படம் ரிலீசாகி இருக்காது. இது நம்ம ஆளு என்ற படம் இதுவரை வெளிவந்திருக்காது.

தேவர் இனத்தை மையப்படுத்துவது போல படம் எடுத்திருந்தாலும் எல்லோரும் கோவிலுக்குள் செல்ல லாம் என்பதுதானே அப்படத்தின் நீதி. அங்கே தேவர் இனம் அவமதிக்கப் பட்டதா? சவரம் செய்யும் சாதியில் முளைத்தவர் என்றாலும் பூநூல் அணிந்து மந்திரம் ஓத முடியும் என்று தானே இது நம்ம ஆளு படத்தில் சொல்லப்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயில் தீட்டு என்பது ஏது என்பதை உரக்கச் சொன்னார்களே? நாயகன் படத்தில் நாயக்கர் கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்த கமலஹாசனை படத்தின் முடிவில் என்ன செய்தார்கள்? அப்படியானால் அந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டதா?

எதற்கெடுத்தாலும் கொடி பிடித்திருந்தால் அந்த கதைக்களங்கள் சொல்ல வந்த உண்மைச் சேதி நம்மை வந்து சேர்ந்திருக்காது. ஒவ்வொரு படத்தயாரிப்பாளரும் கட்சி தலைவர்களுக்கு பதில் சொல்லவும், மான நஷ்ட ஈடு வழங்கவுமே நேரமும், பணமும் சரியாக போய் இருக்கும்.

அதற்காகத்தான் ஒரு படம் எடுக்கும் போது இறுதியில் அதற்கான நீதியையும் தருகிறார்கள். கதைக்களம் எவ்வாறாக நகர்ந்தாலும் நீதி என்ன சொல்லப்படுகிறது என்பதில்தான் கதைக்களத்தின் வெற்றி என்பது அமைந்திருக்கிறதே தவிர, யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவே மெனக்கெட்டால் அந்த திரைப்படம் பேசப்படாமல் போயிருக்கும்.

சாதிய வன்மத்துடன் படம் எடுப்பது தவறுதான். சாதிய வன்மங்களை அழித்தொழிக்கும் படங்கள் என்றால் வரவேற்க வேண்டியதுதானே. ஆட்சிப் பொறுப்பில் ஏற நினைக்கும் அனைத்து கட்சிகளும் செய்ய வேண்டியதும் அதுதானே. இதில் எங்கிருந்து சாதீய ரீதியான பாசம் வருகிறது. ரோசம் வருகிறது. ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்தால் யாரேனும் ஆட்சிப் பொறுப்பில் ஏறிவிடலாகுமா?

சினிமாவில் சாதி அரசியலும், சாதி அரசியல்வாதிகளால் சினிமாவும் சூழப்பட்ட பிறகே இதுபோன்ற வன்மங்கள், வக்கிரங்கள் அதிகமாகிப் போனது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லோரும் தாங்கள் சார்ந்ததாக சொல்லிக் கொள்ளும் சமுதாயத்தை வீரமிக்கதாக, விவேகமிக்கதாக, பணபலம் மிக்கதாக மிகைப்படுத்திக் கொள்ளவே பார்க்கிறார்கள்.

பல் குத்தும் குச்சி தொடங்கி மனிதர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சின்னமாக கொண்ட ஒரு கட்சி இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிப் பெருக்கங்களின் தவறே தவிர, காட்சிப்படுத்துதலில் தவறில்லை. எல்லோரது வீடுகளிலும் எல்லாவிதமான பொருட்களும் இருப்பதற்கான சூழல் வந்து விட்டது. ஒரு காலத்தில் நடுநிலையும், அதற்கு மேல்தட்டில் வசிப்பவர்கள் வீட்டில் மட்டுமே தொங்கிய தினசரி காலண்டர்கள் கூட எல்லோரது வீடுகளிலும் சுவருக்கு ஒன்றாக தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கொண்டைக்கும், மண்டைக்கும் பின்னால் என்ன இருக்கிறது? என்பதை பார்த்து பார்த்து படம் எடுக்க நேரிட்டால் அந்த படம் படமாக இருக்காது. வானத்தில் உள்ள சந்திரனும், நட்சத்திரமும் தான் பல நாடுகளின், பல மதங் களின், பல சாதிகளின் சின்னமாக இருக்கிறது. கசிந்துருகும் காதல் காட்சிகளில் வானமும் சந்திரனும், நட்சத்திரமும் அவமதிக்கப்படுகிறது என்று நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும். சாதிய வன்மங்களை புறந்தள்ளும் அதே வேளையில் படைப்பு சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது திரைத்துறையில் அவசியமானது என்றே கொள்ளப்படுகிறது.

அரசியல் என்பதை மக்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துங்கள். சினிமாவை வைத்து அரசியல் என்பது படைப்பு சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டையாகி விடும். நடிப்பை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பாக மாறிவிடும். சாதீய அரசியல் நடத்த விரும்பினால் ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டும் என்ற கனவை மறந்து விட வேண்டியதாகி விடும். திருந்தி விடுங்கள்..!

பா.ஜான்பீட்டர், இதழாளர்

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending