12/09/2021

அமைச்சகங்கள் மூடப்படுவது எப்போது?

இந்தியாவின் அடையாளமான ஏர்இந்தியா, துறைமுகங்கள், ரெயில்வே, எல்ஐசி, பெட்ரோலிய நிறுவனங்கள், பிஎஸ்என்எல், அகில இந்திய வானொலி இப்படி எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மக்கள் பணத்தில் பல்லாயிரம் கோடிகளில் உருவாக்கப்பட்ட துறைகள் எல்லாம் மலிந்த விலைக்கு கூவி கூவி விற்கப்படுகின்றன.

அவற்றை வாங்கிய தனியார் முதலாளிகளோ இனிமேல் அவர்களுக்கான தரத்திற்கு கார்ப்பரேட் அலுவலகங்களை நிர்மாணித்து அதிகாரிகள், ஊழியர்களை நியமித்து வேலை வாங்கப் போகிறார்கள். அப்படியானால் விற்கப்பட்ட துறைகள் சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றியவர்களுக்கு இனிமேல் என்ன வேலை? 

காலை 10 மணிக்கு அவசர அவசரமாக பயணித்து அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு எந்த கோப்புகளை கையாளப் போகிறார்கள்? எந்த கோட்டையை ஆளப்போகிறார்கள்? அலுவலகங்களை விட்டுத்தள்ளுங்கள்... இவர்களை விற்கப்படாத துறைகளுக்கு மாற்றி வேலை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த துறைகளையெல்லாம் நிர்வகிக்க மத்திய அமைச்சகங்கள் அமைக்கப்பட்டனவே? அந்த அமைச்சர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அந்த அமைச்சகத்தின் பணிதான் இனி என்ன? அந்த துறைக்கு இனி பட்ஜெட்டும் இருக்கப் போவதில்லை. பட்ஜெட்டே இல்லாமல் அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் என்ன வேலை? எது சார்ந்த தலைப்பில் அவர்கள் பேசக்கூடும்?

ஒட்டுமொத்தமாக இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து ஊதியம் வழங்கப்படப் போகிறது? விற்பனை செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கப்படுமா? அரசுதான் ஊதியம் கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டால், எந்த துறை வாயிலாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்? அந்த வரவு செலவு கணக்குகளை எந்த அமைச்சகம் பார்த்துக் கொள்ளும்?

ஒரு துறையில் லாபமே இல்லாமல் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், நஷ்டத்தில் இயங்குகிற துறையை தனியார் நிறுவனங்கள் வாங்கி என்ன செய்யப் போகின்றன? சரி... தனியாரால் லாபத்தில் இந்த துறைகளை இயக்க முடியுமென்றால் இத்தனை ஆண்டுகாலமும் அமைச்சகம், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பணியாளர்களைக் கொண்டு ஏன் லாபத்தில் இயக்க முடியவில்லை. அத்தனை பேரும் அறிவில் சிறந்தவர்கள்தானே... ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என மெத்தப்படித்தவர்கள்தானே தலைமை வகித்தார்கள்... 

இவர்களைக் காட்டிலும் இந்த துறைகளை வாங்கிய முதலாளிகள் கூட மெத்தப்படித்தவர்கள் அல்லவே??? 

அந்தப்படி நோக்கினால் ஒருவேளை விற்கப்பட்ட துறைகள் சார்ந்த அமைச்சகங்கள் மூடப்படுமோ? அமைச்சகங்களை மூடும் நோக்கம் இருப்பின் புதிய பாராளுமன்ற கட்டிடம் எதற்காக? இருப்பதே போதுமானதல்லவா? எல்லா துறைகளையும் படிப்படியாக விற்று விட்ட பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கையை எதற்காக அதிகப்படுத்தும் திட்டம்? 

இத்தனை விடை தெரியா கேள்விகளும் என்னைப் போன்ற ஒரு மெத்தப்படிக்காத சாமானியனின்  மண்டைக்குள் குருவிகளாக படபடக்கின்றன. பதில் தெரிந்தவர்கள் பண்பாக சொல்லுங்கள்... கட்சி விசுவாசத்தோடு பதில் அளிக்க வராதீர்கள்... இந்த கேள்விகள் அனைத்துமே தவறே செய்தாலும் தலைவர்களை தாங்கிப்பிடித்து தொங்கும் கட்சிக்காரர்களுக்காக அல்ல???  பதில் தெரிந்து கொள்ளும் ஆவலோடு நான்....

இதழாளர் ஜே.பி.

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending