7/11/2019

இயற்கையின் பக்கம் திரும்புங்கள்

#இயற்கையின்_பக்கம்_திரும்புங்கள்!

சமீபகாலமாக பெண்கள் மீது மட்டுமல்ல இயற்கையின் மீதும் வன்புணர்வுகள் அதிமாகிக்கொண்டே போகின்றன. தேவைக்கு மீறிய பணம் பிணத்தை எரிக்கக்கூட உதவாது என்பதை உணராத உதவாக்கறை தமிழக அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் இயற்கையை கற்பழித்து கருவறுத்து காசு காசு என பேயாய் அலைகிறார்கள். கட்டு கட்டாக பணம் சேர்ப்பதில்தான் பெருமை என்றெண்ணி போட்டி போட்டுக்கொண்டு பாதாள அறைகள் அமைத்து பணத்தை குவிக்கிறார்கள்.
அண்டையில் உள்ள கேரள மாநிலத்திற்கு இயற்கையின் மேல் அக்கறையில் துளியளவேனும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது கண்சிவக்க சிவக்க ரௌத்திரத்தை கிளப்புகிறது. அவனது மண்ணிலோ மணலிலோ கைவைக்காமல் எவ்வளவு பணம் கொடுத்தாலாவது தமிழ்நாட்டு இயற்கை வளத்தை வாங்கி தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்றால் இவ்விரு மாநிலத்தவரில் யார் புத்திசாலி? யார் அரைவேக்காடு?
இங்குதான் சாதியென்றும், மதமென்றும், கட்சிகளென்றும் தாறுமாறாக சண்டைபோடவே கட்சி தொண்டர்களுக்கும், சாமானியர்களுக்கும் நேரம் போதாமல் இருக்கிறது. பிறகு எப்படி நம்மை உறுப்பினரென்று அடகு வைத்து தலைகளை கணக்கு காண்பித்து அரசியல் தலைமைவாதிகளால் இயற்கை சூறையாடப்படுவது தெரியும்?
குரல்வளை நரம்பு புடைக்க கத்தி கத்தி கட்சி தொண்டர்களை அடிமையாக்கி எதிர்க்கட்சிகளிடம் நேரத்திற்கு தகுந்தாற்போல், தேர்தலுக்கு தகுந்தாற்போல் கூட்டணி வைத்து கொள்ளையிலும் பதவியிலும் பங்கு கேட்பதே இவர்களது அரசியல் தார்மீகமும் தர்மமும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எப்போது உணரப்போகிறார்கள்.
ஒன்றே ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள். இந்த கேடுகெட்ட பணத்திற்காக மரத்தை திண்ணும் அரசியல்வாதிகள் சூறையாடுவது இயற்கையை அல்ல, மாறாக உங்கள் சந்ததிகளின் உயிர்களை ஈவுஇரக்கமின்றி காவு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆறுகளை, நீர்நிலைகளை அழித்து தண்ணீர் அரசியல், நிலங்களை அழித்து மண் அரசியல், மலைகளை அழித்து நாட்டின் பாதுகாப்பை வைத்து அரசியல், கடல் வளத்தை சீரழித்து சர்வதேச அரசியல் என எங்கு நோக்கினும் பணத்திற்காக மனிதனையே மனிதன் திண்ணும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தண்ணீரை விலைகொடுத்து வாங்கி புழங்கத்தொடங்கி விட்ட நாம் சுத்தமான காற்றையும் விலைகொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டதை யாவரும் அறிவீர். இனியாவது விழித்துக்கொள்ளுங்கள். கொஞ்ச காலத்திற்கு உங்களது சாதி,மதம், கட்சி அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இயற்கையால் ஒன்றுபடுங்கள். உங்கள் அருகாமையில் உள்ள இயற்கையை சூறையாட யாரேனும் முனைந்தால் (நீங்கள் சார்ந்த கட்சியோ, மதமோ, சாதியோ எவனாக இருந்தாலும்) தட்டிக்கேளுங்கள். உங்களுக்கு கிடைத்த நீரும் காற்றும் இயற்கையும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமை என்பதை உணருங்கள். இயற்கையின் ஊனம் மனித இனத்தின் ஊனம்! விழித்துக்கொள்ளுங்கள்! காலம் காலமாக உங்களை காப்பாற்றிய இயற்கை இனியும் உங்களை கைவிடாமல் காப்பாற்றும். இயற்கையின் பக்கம் திரும்புங்கள்!

#SaveNature #SaveTamilnadu

பா.ஜான் பீட்டர்

7/04/2019

நீயொரு நேம் ப்யூட்டி

சாலையோரம் நீ நின்றாலே
வழிப்பாதையும் அழகுகொள்ளும்!
காலையும் உன்னை காதலிக்கும்!
மாலையும் உன்னிடம் மயங்கிப்போகும்!
ஓங்கியுயர்ந்து ஒய்யாரமாய்
வானுயர `நீ’ நிற்கும் பேரழகில்
பேரண்டமும் குளிர்ச்சி கொள்ளும்!
மேகங்கள் உன்னை வளைத்துக்கொள்ளும்!
நீர்த்தடங்கள் மகிழ்ச்சி கொள்ளும்!
தாய்வீடென தஞ்சமடையும் பட்சிகளால்
ஆல் அரசு இச்சி இழுப்பையோடு
பால் வடியும் காட்டுத்தருக்களையும்
உன்னுடல் சூட்டால் பிரசவித்து
கானகத்தை நிறைக்கின்றாய்!
பல்லாண்டு நீடூழி யாம் வாழ
அனுதினமும் உடலுறுப்பு தானமிட்டு
தாயாக தரணியை காக்கின்றாய்!
உன்னன்பை புரிந்து கொள்ள
உள்ளபடியே எவருமில்லை!
தாயை ஒதுக்கும் தனயன்போல்
சோறிட்டு வளர்க்க திராணியின்றி
கூறிட்டு விற்கின்றார் விறகிற்காய்!
நானிலமும் நன்னீரின்றி வறண்டுபோக
இன்னமும் தாயருமை உணரவில்லை
தரணிவாழ் உன்மக்கள்!
உன்னருமை உணருங்கால் ஒன்றுவரும்!
அன்றுவரை கையில் உயிர்பிடித்து
காத்திடுவாயோ உம் சந்ததிதனை!

பா.ஜான் பீட்டர்

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending