சாலையோரம் நீ நின்றாலே
வழிப்பாதையும் அழகுகொள்ளும்!
காலையும் உன்னை காதலிக்கும்!
மாலையும் உன்னிடம் மயங்கிப்போகும்!
ஓங்கியுயர்ந்து ஒய்யாரமாய்
வானுயர `நீ’ நிற்கும் பேரழகில்
பேரண்டமும் குளிர்ச்சி கொள்ளும்!
மேகங்கள் உன்னை வளைத்துக்கொள்ளும்!
நீர்த்தடங்கள் மகிழ்ச்சி கொள்ளும்!
தாய்வீடென தஞ்சமடையும் பட்சிகளால்
ஆல் அரசு இச்சி இழுப்பையோடு
பால் வடியும் காட்டுத்தருக்களையும்
உன்னுடல் சூட்டால் பிரசவித்து
கானகத்தை நிறைக்கின்றாய்!
பல்லாண்டு நீடூழி யாம் வாழ
அனுதினமும் உடலுறுப்பு தானமிட்டு
தாயாக தரணியை காக்கின்றாய்!
உன்னன்பை புரிந்து கொள்ள
உள்ளபடியே எவருமில்லை!
தாயை ஒதுக்கும் தனயன்போல்
சோறிட்டு வளர்க்க திராணியின்றி
கூறிட்டு விற்கின்றார் விறகிற்காய்!
நானிலமும் நன்னீரின்றி வறண்டுபோக
இன்னமும் தாயருமை உணரவில்லை
தரணிவாழ் உன்மக்கள்!
உன்னருமை உணருங்கால் ஒன்றுவரும்!
அன்றுவரை கையில் உயிர்பிடித்து
காத்திடுவாயோ உம் சந்ததிதனை!
பா.ஜான் பீட்டர்
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.