11/27/2021

நாய்கள் ஜாக்கிரதை… கவனமாகச் செல்லுங்கள் நண்பர்களே..!

நேற்று இரவு எனக்கு நேர்ந்த அந்த விபத்து… நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்து வலது கை மற்றும் காலில் காயங்கள்… மெதுவாக சென்றதாலும் மழைக்கான ஸ்பாஞ்ச் ஆடை (#jerkin)  அணிந்திருந்ததாலும் ரத்த காயங்கள் குறைவே… இருந்தாலும் ரத்தக்கட்டு உள்காயங்களால் கை, காலை அசைப்பதில் அப்படி ஒரு வலி…

இது மாதிரியான விபத்துக்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு… உணர்வு ரீதியாக நேற்றிரவு அனுபவித்த வலி இருசக்கர வாகனம் ஓட்டுவதில் இன்னும் பல எச்சரிக்கைகளை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே மழை பெய்து சாலைகளில் ஈரம் காயவில்லை. 

நமது சாலைகளின் தரம் பற்றியும் நமக்கு நன்றாகவே தெரியும்… பள்ளங்களில் விழுந்தால் பூமியின் மறுபக்க தேசத்தில்தான் எழுந்திருப்போம்… பள்ளங்களை தவிர்த்து வாகனங்களை ஓட்டுகையில் சில நேரங்களில் சரிந்து விழுந்து காயப்படுவதுண்டு…



நாய்களின் இனப்பெருக்க காலமும் இதுவே… நாய்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக திரியும்… வாகனங்களை விரட்டிச் சென்று அச்சுறுத்தும்… வாகன வெளிச்சம் தெரிந்ததும் சாலைகளை கடக்க முயற்சிக்கும்…

எனவே சாலைகளின் சீர்கேடுகளை தாண்டிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நாய்களிடத்திலும் பிற கால்நடைகளிடத்திலும் மிக அதிகம் தேவை… இருசக்கர வாகனம் ஓட்டுவதில் எத்தனை நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், பல ஆண்டு கால அனுபவம் பெற்றிருந்தாலும் இதுமாதிரியான திடீர் குறுக்கீடுகள் நம்மை நிலைகுலையச் செய்துவிடும்… காயங்களையும் சில நேரங்களில் மரணங்களையும் கூட ஏற்படுத்தி விடும்…

ஆகவே எச்சரிக்கையாக பயணம் செய்யுங்கள்… கேட்பதன் வலியை விட அனுபவத்தால் உணர்வதன் வலி கொடூரம்தான்…

#பா_ஜான்பீட்டர் @ ஜே.பி. இதழாளர்


#safedrive #dogs #bikeaccident

11/21/2021

பன்றியை விட பனை கேவலமானதா? - பா.ஜான்பீட்டர் கேள்வி

ஒரு காட்டுப்பன்றிக்கு கொடுக்கும் மரியாதையையாவது மாநில மரமான #பனைக்கு கொடுங்கள்..!

காட்டுப்பன்றியை வேட்டையாடினால் சிறை தண்டனையும், 10 ஆயிரத்துக்கும் மேல் அபராதமும் இருக்கிறது..!
வனத்துறையும், காவல் துறையும் வேட்டையாடிகளை புண்ணாக்கி விடுகிறார்கள்!
ஆனால் பன்றிக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட தமிழகத்தின் தமிழர்களின் அடையாளமான பனைக்கு அளிக்க மறுப்பது எத்தனை வேதனைக்குரியது.. இதற்கு மேல் எனக்கு அசிங்கமாக கேட்கத்தெரியவில்லை!
தடைச்சட்டம் போட்ட பிறகும் பனைகள் வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. காவல் துறையிடம் புகார் தெரிவித்தால், என்ன பிரிவில் வழக்கு செய்வது என்று மேலிடம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்கிறார்கள்.
பனைகள் வெட்டிக் கடத்தல் என்று ஏன் பதிவிடுகிறீர்கள்? பனை என்ன சந்தன மரமா அதனை கடத்தி விற்பதற்கு? என்று பத்தாம்பசலித்தனமாக கேட்கிறார் காவல் ஆய்வாளர் ஒருவர். மாநில மரத்திற்குரிய மரியாதையை அவருக்கு கற்றுத்தராமல் போனது யார் குற்றம்? அரசின் குற்றமா? பதவிகளை அலங்கரிக்கும் ஆட்சியாளர்களின் குற்றமா? சம்பளத்துக்கும் கிம்பளத்துக்கும் மட்டுமே கடமைக்கு மாரடிக்கும் அரசு அதிகாரிகளின் குற்றமா?
வருவாய்த்துறையைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! தனக்கான தனி வருவாய் கல்லா கட்டுவதை உறுதி செய்துவிட்டால் போதும் புறம்போக்கு நிலங்களையெல்லாம் ஊழல்வாதிகளுக்கு பட்டா போட்டு கொடுத்தும், மரங்களையெல்லாம் செங்கல்சூளை மாபியாக்களுக்கும் 2C பட்டா உரிமை கொடுத்தும் தன்வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இந்தப்பணத்தில் எப்படி பெண்டு பிள்ளைகளுக்கு சோறும் தீனியும் வாங்கிக்கொடுக்கிறார்கள்? என்று யோசிக்கவே அசிங்கமும் அருவெறுப்புமாகத்தான் இருக்கிறது.
காட்டில் திரியும் பன்றியை வேட்டையாடினால் தவறு, வனச்சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என சொல்லிக் கொடுத்த அரசு நிர்வாகம், காட்டை உருவாக்கும் காரணியான பனையை தறிப்பது தேச விரோத செயல் என சொல்லித்தரவில்லை!
மலைகளில் வாழும் வரையாடுகளை வேட்டையாடுவதை தண்டனைக்குரிய செயல் என வகைப்படுத்தும் அரசு, மலைகளை செழிப்பாக்க மழை ஈர்ப்பு மையமாக செயல்படும் பனைகளை தறிப்பதில் மெத்தனம் காட்டுவது இயற்கைக்கு இழைக்கும் கொடூரத்தின் உச்சம்..!
குறைந்தபட்சம் பன்றிக்கு கொடுக்கும் மரியாதையாவது பனைக்கு கொடுங்கள் ஆட்சியாளர்களே! வரலாறும், அடுத்தடுத்து வரும் சந்ததிகளும் உங்களை வாழ்த்துவர்! இதே காற்றும், நீரும், இயற்கையும் இனி வரும் சந்ததிகளுக்கு கிடைக்கட்டும்!!!


-இதழாளர் பா_ஜான்பீட்டர் ஜே.பி.

அப்படியானால் நீங்கள் யார்? - பா.ஜான்பீட்டர்

மனதிற்கோ மக்களுக்கோ தவறென பொருள்படும் எதையும் பதிவாக இட்டு விட்டால் தலைவன் தவறு செய்துவிட்டான் என்ற எந்தவித சிறு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தவறுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்களே ஏன்? அப்படியானால் தவறுகள் சரியென்று பொருள்பட்டு விடுமா?

ஆட்சியாளர்கள் பார்வையில் மட்டுமே சரியெனப்படுவது மக்கள் பார்வையில் தவறெனப்படுமாயின் மக்கள் கருத்தை ஏற்பதுதானே நல்லாட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் அழகு. அப்படியானால் பார்வையின் கோணத்தை மாற்ற வேண்டியது ஆட்சியாளர்களே தவிர மக்கள் அல்லவே..! அது எந்த தலைவனானாலும், கொம்பனானாலும் சரி மக்களாட்சி முன் மண்டியிடத்தான் வேண்டும்... நடப்பது மக்களாட்சியே தவிர மன்னராட்சியல்ல!

எந்தவொரு நியாயமான பதிவையோ, போராட்டத்தையோ மேற்கொண்டால் ஆட்சியாளர்களின் தவறை நியாயப்படுத்த சொம்பு தூக்கிகள் களத்திலும், சமூக வலைதளத்திலும் படையெடுத்து விடுகிறார்கள்... கட்சிகள் பாகுபாடின்றி ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் கேட்ட கருத்து சுதந்திரத்தை எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும்கட்சியான பிறகு மறந்தும் மறுத்தும் விடுகிறார்கள்..!!!

நியாயத்திற்காக எடுக்கப்படும் போராட்டங்கள் அனைத்தும் யாவருக்குமானவை... அடுத்த சந்ததிகளுக்கானவை... எதிர்ப்பு தெரிவிக்கும் வீட்டானுடைய குழந்தைகளுக்குமானவை...

பாதிக்கப்படுபவனே பதிவுகளை இடுகின்றான்... நியாயம் கேட்கின்றான்... பதிவுகளுக்கு மறுஉத்தரம் கொடுக்கிறேன் என்ற பெயரில் பதிவாளர்களின் கருத்து சுதந்திரத்தையோ, குரல்வளையை மிதிக்காதீர்கள்... பதிவுகள் பிடிக்காவிட்டால் படித்து விட்டு கடந்து சென்று விடுங்கள்... உங்களுக்கான கருத்தை நாகரீகமாக ஆதாரத்துடன் விளக்க முடியுமானால் தெரிவியுங்கள்... அநாகரீகமான வார்த்தைகள் உங்களுக்குள் இருக்கும் அசிங்கமானவனையோ, அருவெறுப்பானவனையோ வெளிக்கொணர்ந்து விடும்..! சற்றே சிந்தித்து செயல்படுவீர்!!!





பா.ஜான்பீட்டர் @ இதழாளர் ஜே.பி.

பனை மேம்பாட்டு இயக்கம் வெறும் கண்துடைப்பா?- பா.ஜான்பீட்டர் கேள்வி


 #பனைமேம்பாட்டுஇயக்கம் எதற்காக அமைக்கப்பட்டது? 

* #பனைமேம்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்? #அனுதாபிகள், #கட்சிக்காரர்களுக்கு  பதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதா? 
* #பனைமேம்பாட்டு இயக்கத்தின் வெளிப்படையான செயல்பாடுதான் என்ன? அதன் #அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளனவா?

* #பனைமேம்பாட்டுஇயக்கத்தை முறைப்படி செயல்படுத்த மாநில, மாவட்ட, கிராம அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? 
* ரேசன் கடைகளில் #கருப்பட்டி வழங்கும் திட்டத்தில் கலப்படமே இல்லாத #பனங்கருப்பட்டி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?
* #கலப்படகருப்பட்டிக்கும், #சீனிக்கருப்பட்டிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்கள் #பொதுவிநியோக துறையில் இருக்கிறார்களா?

* #பனங்கள் குறித்து இலக்கிய ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்களை பட்டியலிட்டு அதிகார வர்க்கத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலிலும் கூட #பனங்கள்ளுக்கான தடை நீக்கப்படாமல் தொடர்கிறதே அது ஏன்?
* #பனைத்தொழிலாளர்கள் மீது பொய்வழக்குகள் போடுவதை நிறுத்திக்கொள்ள #தமிழகமுதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள #காவல்துறை-க்கு உத்தரவிடப்பட்டு விட்டதா?
* பனைகளை வெட்ட தடைவிதிக்கப்பட்டதே? அதனை எந்த துறை கண்காணிக்கிறது? #வருவாய்த்துறையா? #வனத்துறையா? #காவல்துறையா?
* #பனைகளைவெட்டினால் என்ன தண்டனை என்ற சட்டவரைவு கொண்டுவரப்பட்டு விட்டதா? எந்த பிரிவுகளின் கீழ் #வழக்கு தொடர வேண்டும் என வரையறுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதா? 
* #பனைகள் வெட்டப்படுவதை தடுக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அதிகாரிகளுக்கு என்ன #தண்டனை வழங்கப்படும்? 
* #பனைமரத்தொழிலாளர்கள்நலவாரியம் என்னதான் ஆனது? அதன் சொத்துக்கள் என்ன ஆனது? அந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களின் நிலை என்ன?
* #பனைமரத்தொழிலாளர்கள்நலவாரியம் முற்றிலுமாக மூடப்பட்டது எனில் அதன் சொத்துக்கள், கோப்புகள் #பனைமேம்பாட்டுஇயக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டதா? 
இத்தனை கேள்விகளுக்குமான விடையே புதிதாக தோற்றுவிக்கப்பட்ட #பனைமேம்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விடையாக அமையும் என்பதை #தமிழகமுதல்வரும், #அமைச்சர்களும், #அதிகாரிகளும் உணர்ந்தாலொழிய இதைப்போன்ற எந்த திட்டமும் முழு வெற்றியை அடைய வாய்ப்பில்லை..!



#பா_ஜான்பீட்டர் @ ஜே.பி.
நிறுவனத்தலைவர்
#பனைவாழ்வியல்இயக்கம்-#தமிழ்நாடு









M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam #TNGovt #TNGovernment

11/19/2021

நமக்குள் ஒரு “கலாரசிகன்”

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரசிகன் ஒளிந்திருக்கிறான்... பிறப்பில் இருந்து இறப்புவரை வயதுக்கேற்ற ரசனைகள் இருக்கின்றன. வாலிப காலத்தில் இருக்கும் ரசனை வயோதிக காலத்தில் வேறுதிசையில் திரும்புமே தவிர நின்றுவிடுவதில்லை. பொதுவெளியில் அதனை காட்டிக் கொள்வதில்தான் சற்றே யாவருக்கும் தயக்கம். கவிதைகளில் புலம்மிகு கவிஞர்கள் என்று பெயரெடுத்தவர்கள் எதையும் எந்நேரத்தும் வார்த்தைகளால் வர்ணித்து கைதட்டல் பெற்று விடுகிறார்கள். சமூகம், மரியாதை, பதவி என்ற பலவற்றிற்கும் அச்சப்பட்டு ரசனைகளை மனதில் புதைத்துக் கொள்பவர்களே இதில் அதிகம். 

தியேட்டரோ, திருவிழாவோ, காதுகுத்தோ, திருமணமோ, வெற்றி விழாவோ, சாவு வீடோ உணர்வுகளுக்கு தக்கவாறு சத்தம்போட்டு விசிலடிக்க உணர்வுகள் பரபரக்கும், நடுரோட்டில் நடனமாட மனம் எத்தனிக்கும், சத்தமிட்டு பாட்டு பாட மனம் ஆர்ப்பரிக்கும்.. சந்தோஷத்தின் உச்சத்தில் ஓ“வென கத்தி கூப்பாடு போட மனம் துடிக்கும், இஷ்டத்துக்குரியவர்களை கட்டிப்பிடித்து கொண்டாட கற்பனைக் குதிரைகள் கட்டுக்கடங்கா வேகத்தில் அடம்பிடிக்கும்.... ஆனால் ஏனோ செய்வதில்லை.

தன்னிலை மறந்து இதையெல்லாம் செய்பவர்களோ யாரைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. யாருக்காகவும் நான் வாழவில்லை... மற்றவர்களின் விமர்சனங்களும் என்னை பாதிப்பதில்லை... தான் இப்படித்தான் என இந்த சமுதாயத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து விட்டார்கள்.

நல்லவன், பண்புள்ளவன், மரியாதைக்குரியவன் என ஆரம்பம் முதலே மக்களிடத்தில் பதிவு செய்ய முயற்சித்தவர்கள் அந்த பக்கமும் இருக்க முடியாமல், இந்த பக்கத்திற்கும் வர முடியாமல் இருதலைக்கொள்ளியாக தத்தளிக்கிறார்கள். சந்தோஷத்தைக் கூட தங்களது மனவிருப்பத்தின்படி கொண்டாட முடியாமல் மனதிற்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.

பார்த்தவுடன் வசீகரிக்கும் அழகுடன் கண்ணில் படும் பெண்களையோ, ஆண்களையோ அதனதன் எதிர்பாலினத்தவரை ரசிப்பதில் கூட இதுமாதிரியான உள்ளே, வெளியே ஆட்டங்களும் தடுமாற்றங்களும் மனதை ஆட்டிப்படைப்பதுண்டு... ரசனையை குடும்பத்தினரிடமே பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு... பார்வைகளை மட்டுமே திருப்பி மனதை அடக்கி ஒடுக்குபவர்களும் உண்டு... அதற்காக யாரைப்பார்த்தாலும் வழிந்து தீர்ப்பவர்களையும், ஜொள்ளு பார்ட்டிகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டாம். அவர்களது உலகமே இச்சையும், மனம்போன போக்கில் சல்லாபமும் நிறைந்ததுதான்...

ரசிக்கத்தான் கண்கள், அடையத்துடிப்பதில்தான் இருக்கிறது வக்கிரம் என்ற சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வாரும் உண்டு.... எதிர்ப்பாரும் உண்டு... அப்படியானால் இதில் எதை தேர்வு செய்வது என்பதுதான் தடுமாற்றவாதிகளுக்கு குழப்பம் மேலிடுகிறது.

ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோவில்களில் உள்ள சிலைகளில் தங்களது திறமைகளையெல்லாம் கொட்டி தத்ரூபமாக, தத்ரூபத்தையும் மிஞ்சிய கற்பனையைக் கொட்டித் தீர்த்திருந்தார்கள். ரசிக்கத் தெரிந்த சிற்பியால்தானே அப்படியொரு சிலைகளை வடிக்க முடியும். அப்படியானால் பெண் சிலைகளை அழகு முகத்தோடும், காலடி தொடும் நீண்ட கூந்தலோடும், தேகங்களை வருடி நிற்கும் நகைகளோடும், வாளிப்பான உடலோடும், பெரிய மார்பகங்களோடும், மெல்லிய இடையோடும், பருத்த தொடையோடும், விரல்களைத் தாண்டிய நகங்களோடும் ரசித்தது சிற்பியின் தவறா? அவரது வக்கிர எண்ணங்களா? அல்லது கலைவடிவமா?

ஒரு பெண்ணின் அழகு எப்படி இருக்க வேண்டும்? அங்க லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற அவரது கற்பனைகளாகக் கூட இருக்கலாம், அல்லது அக்காலத்துப் பெண்டிர் அத்தனை அழகோடும் ஆரோக்கியத்தோடும், உடலைப் பேணுபவர்களாக இருந்திருக்கலாம். அடுத்தடுத்த சந்ததிகள் இப்படி தங்களது உடல்நலணை பேண வேண்டும் என்பதற்காகக் கூட அர்த்தம் கொள்ளலாம்.

ஆண் சிலைகளையும் அவ்வாறேதானே வடித்தார்கள். அகண்ட மார்பும், வீரம் புடைத்த அங்கங்களும், முகத்தில் கிடா மீசைகளும், உயர்த்திய புருவங்களும், வெறிப்பார்வையும், வீரத்தின் அடையாளங்களும், விலங்குகளோடு போரிடுதலுமாக ஆண்களுக்குரிய லட்சணங்களையும் அங்குலம் அங்குலமாக சிலைகளிலே தீட்டியிருக்கிறார்கள். இப்படித்தான் ஆண்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் லயிக்கும் விதமாகத்தானே அந்த சிலைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளைத்தாண்டி சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.

முழுக்கவும் ஃபாஸ்ட்புட் காலத்தில் ஒபிசிட்டி என்ற பிரச்னையோடு உடற்பயிற்சி நிலையங்களுக்கும், எடை குறைப்பு நிலையங்களுக்கும் படையெடுப்பதை முன்கூட்டியே கணித்திருந்தார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். கணவன் மனைவி தங்களை பரஸ்பரம் ரசிக்கவும், ரசித்ததை சொல்ல தயங்குவதும் மறுப்பதுமே வாழ்க்கையை கசக்கச் செய்கிறது. இன்னும் பலருக்கு காதலியாக, காதலனாக இருக்கும் போது இருந்த ரசனை மணவாழ்க்கைக்குள் புகுந்த பின் இருப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்த ரசனை பிற்பாடு மாயமாவதின் விளைவு அது.  நம்மை ரசிப்பதற்கான ஈர்ப்பதற்கான களத்தையும் நாம்தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.

ஆக... ரசனை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வரைதான் வாழ்க்கை என்பதுவும் வாழும் காலம் வரை ரசிப்பதற்கான சுவாரஸ்யத்தின் களமாக இருக்கும். ஆயுள்கால அடுத்த நாட்களின் தேடலாகவும் இருக்கும்.  ரசனை இல்லா மனமும், வாசனை நுகரா நாசியும் நோயுற்றதுதான். ரசித்து வாழுங்கள்... ரசனையோடு வாழுங்கள்..!

-கடையத்தான்

11/16/2021

கதைக்களம் என்பது யாதெனின்?

சினிமா என்பது கற்பனைக்கும், கனவுகளுக்கும் வடிவம் கொடுக்கும் தொழிற்சாலை. அவரவர் எண்ணங்களுக்கேற்ப, மனதை பாதித்த சம்பவங்களுக்கேற்ப கதைக்களம் அமையும். பணத்தை முதலீடு செய்பவர்களின் பாதிப்பாக இருக்கலாம், படத்தை இயக்குபவரின் மனத்தோன்றலாக இருக்கலாம், கதாசிரியரின் கற்பனை ஓட்டமாக இருக்கலாம். உண்மைச் சம்பவமாக இருக்கலாம்.

ஆக ஏதோ ஒரு பாதிப்பின் வெளிப்பாட்டை தனது கற்பனைகளின் மீது ஏற்றி காட்சி வடிவம் கொடுக்கப்படுகிறது. புலவர்கள் பாட்டில் ஏற்றிக் கூறுவது போல, மிகைப்படுத்துதல் என்பது இங்கே அவசியமாகிறது. சம்பவத்திற்குரியவர் சாமானியராக இருந்தாலும் கதைக்களத்தில் அவரே கதாநாயகன் என்பதால் அவருக்கான கதாபாத்திரம் சில பல இத்யாதிகளோடு மெருகேற்றப்படுகிறது.

ஆரம்ப கால தமிழ் சினிமாக்களில் நீங்களே கேட்டிருக்க வாய்ப்புண்டு… என்ன செட்டியாரே… முதலியாரே…. என்ன பிள்ளைவாழ் என்றெல்லாம் பல கதாபாத்திரங்களின் குரல்கள் இன்னமும் நமது மனதிற்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எளியவர்களை மட்டப்படுத்தும் சம்பவங்களும் அதில் காட்டப்படத்தான் செய்திருக்கின்றன. கீழ்நிலை மக்களை ஜமீன்தாராக வரும் நம்பியார், வில்லன்களாக தோன்றும் எம்.ஆர்.ராதா, அசோகன், வீரப்பன் ஆகியோர் உங்களுக்கெல்லாம் எதற்கடா படிப்பு? எங்களுக்கு வேலை செய்யத்தானே பிறந்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் வசன உச்சரிப்புகள் இருந்தனவே.

அந்த செட்டியார், முதலியார், பிள்ளைவாழ் கேரக்டர்களையும் சாமானியக் குடியில் பிறந்து சவுக்கால் வெளுத்து வாங்கிய எம்ஜிஆர், சிவாஜி போன்ற கதாநாயகர்கள் அந்த இனத்தவரை அவமதித்து விட்டார்களா? என்றால் இல்லை. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சினிமாவில் தோலுரித்துக் காட்டினார்கள். அதனை தவறு என வாதிட்டார்கள். ஏழை பணக்கார்கள் என்பதையெல்லாம் தாண்டி, சாதி மதங்களை கடந்து அனைவரும் சமம் என காட்டினார்கள்.

பல தலைவர்களின் தியாகங்கள், அரசியல் நகர்வுகள், போராட்டங் களுக்கு இடையில் சினிமாவும் தன் பங்குக்கு ஆற்றிய விழிப்புணர்வு திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்று எல்லோரும் எல்லாம் பெறத் தொடங்கி இருக்கிறார்கள். இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டது. தீண்டாமை தவிர்க்கப்பட்டு வருகிறது. கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை பெற்று முன்னேறி வருகிறார்கள். ஆக முந்தைய காலக்கட்டங்களை விட  கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலப்பல. அதற்கு அமைத்த அடித்தளங்களில் சினிமாத்துறையும் ஒன்று.

எடுக்கின்ற திரைப்படங்களையெல்லாம் குறைகூறியிருந்தால் சமூக மாற்றங்களுக்கான திரைப்படங்கள் பெரும்பாலும் பெட்டியில்தான் உறங்கியிருந்திருக்க கூடும். தேவர் மகன் என்ற படம் வந்திருக்காது. உன்னால் முடியும் தம்பி என்ற படம் ரிலீசாகி இருக்காது. இது நம்ம ஆளு என்ற படம் இதுவரை வெளிவந்திருக்காது.

தேவர் இனத்தை மையப்படுத்துவது போல படம் எடுத்திருந்தாலும் எல்லோரும் கோவிலுக்குள் செல்ல லாம் என்பதுதானே அப்படத்தின் நீதி. அங்கே தேவர் இனம் அவமதிக்கப் பட்டதா? சவரம் செய்யும் சாதியில் முளைத்தவர் என்றாலும் பூநூல் அணிந்து மந்திரம் ஓத முடியும் என்று தானே இது நம்ம ஆளு படத்தில் சொல்லப்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயில் தீட்டு என்பது ஏது என்பதை உரக்கச் சொன்னார்களே? நாயகன் படத்தில் நாயக்கர் கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்த கமலஹாசனை படத்தின் முடிவில் என்ன செய்தார்கள்? அப்படியானால் அந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டதா?

எதற்கெடுத்தாலும் கொடி பிடித்திருந்தால் அந்த கதைக்களங்கள் சொல்ல வந்த உண்மைச் சேதி நம்மை வந்து சேர்ந்திருக்காது. ஒவ்வொரு படத்தயாரிப்பாளரும் கட்சி தலைவர்களுக்கு பதில் சொல்லவும், மான நஷ்ட ஈடு வழங்கவுமே நேரமும், பணமும் சரியாக போய் இருக்கும்.

அதற்காகத்தான் ஒரு படம் எடுக்கும் போது இறுதியில் அதற்கான நீதியையும் தருகிறார்கள். கதைக்களம் எவ்வாறாக நகர்ந்தாலும் நீதி என்ன சொல்லப்படுகிறது என்பதில்தான் கதைக்களத்தின் வெற்றி என்பது அமைந்திருக்கிறதே தவிர, யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவே மெனக்கெட்டால் அந்த திரைப்படம் பேசப்படாமல் போயிருக்கும்.

சாதிய வன்மத்துடன் படம் எடுப்பது தவறுதான். சாதிய வன்மங்களை அழித்தொழிக்கும் படங்கள் என்றால் வரவேற்க வேண்டியதுதானே. ஆட்சிப் பொறுப்பில் ஏற நினைக்கும் அனைத்து கட்சிகளும் செய்ய வேண்டியதும் அதுதானே. இதில் எங்கிருந்து சாதீய ரீதியான பாசம் வருகிறது. ரோசம் வருகிறது. ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்தால் யாரேனும் ஆட்சிப் பொறுப்பில் ஏறிவிடலாகுமா?

சினிமாவில் சாதி அரசியலும், சாதி அரசியல்வாதிகளால் சினிமாவும் சூழப்பட்ட பிறகே இதுபோன்ற வன்மங்கள், வக்கிரங்கள் அதிகமாகிப் போனது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லோரும் தாங்கள் சார்ந்ததாக சொல்லிக் கொள்ளும் சமுதாயத்தை வீரமிக்கதாக, விவேகமிக்கதாக, பணபலம் மிக்கதாக மிகைப்படுத்திக் கொள்ளவே பார்க்கிறார்கள்.

பல் குத்தும் குச்சி தொடங்கி மனிதர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சின்னமாக கொண்ட ஒரு கட்சி இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிப் பெருக்கங்களின் தவறே தவிர, காட்சிப்படுத்துதலில் தவறில்லை. எல்லோரது வீடுகளிலும் எல்லாவிதமான பொருட்களும் இருப்பதற்கான சூழல் வந்து விட்டது. ஒரு காலத்தில் நடுநிலையும், அதற்கு மேல்தட்டில் வசிப்பவர்கள் வீட்டில் மட்டுமே தொங்கிய தினசரி காலண்டர்கள் கூட எல்லோரது வீடுகளிலும் சுவருக்கு ஒன்றாக தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கொண்டைக்கும், மண்டைக்கும் பின்னால் என்ன இருக்கிறது? என்பதை பார்த்து பார்த்து படம் எடுக்க நேரிட்டால் அந்த படம் படமாக இருக்காது. வானத்தில் உள்ள சந்திரனும், நட்சத்திரமும் தான் பல நாடுகளின், பல மதங் களின், பல சாதிகளின் சின்னமாக இருக்கிறது. கசிந்துருகும் காதல் காட்சிகளில் வானமும் சந்திரனும், நட்சத்திரமும் அவமதிக்கப்படுகிறது என்று நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும். சாதிய வன்மங்களை புறந்தள்ளும் அதே வேளையில் படைப்பு சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது திரைத்துறையில் அவசியமானது என்றே கொள்ளப்படுகிறது.

அரசியல் என்பதை மக்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துங்கள். சினிமாவை வைத்து அரசியல் என்பது படைப்பு சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டையாகி விடும். நடிப்பை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பாக மாறிவிடும். சாதீய அரசியல் நடத்த விரும்பினால் ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டும் என்ற கனவை மறந்து விட வேண்டியதாகி விடும். திருந்தி விடுங்கள்..!

பா.ஜான்பீட்டர், இதழாளர்

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending