ஒரு காட்டுப்பன்றிக்கு கொடுக்கும் மரியாதையையாவது மாநில மரமான #பனைக்கு கொடுங்கள்..!
காட்டுப்பன்றியை வேட்டையாடினால் சிறை தண்டனையும், 10 ஆயிரத்துக்கும் மேல் அபராதமும் இருக்கிறது..!
வனத்துறையும், காவல் துறையும் வேட்டையாடிகளை புண்ணாக்கி விடுகிறார்கள்!
ஆனால் பன்றிக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட தமிழகத்தின் தமிழர்களின் அடையாளமான பனைக்கு அளிக்க மறுப்பது எத்தனை வேதனைக்குரியது.. இதற்கு மேல் எனக்கு அசிங்கமாக கேட்கத்தெரியவில்லை!
தடைச்சட்டம் போட்ட பிறகும் பனைகள் வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. காவல் துறையிடம் புகார் தெரிவித்தால், என்ன பிரிவில் வழக்கு செய்வது என்று மேலிடம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்கிறார்கள்.
பனைகள் வெட்டிக் கடத்தல் என்று ஏன் பதிவிடுகிறீர்கள்? பனை என்ன சந்தன மரமா அதனை கடத்தி விற்பதற்கு? என்று பத்தாம்பசலித்தனமாக கேட்கிறார் காவல் ஆய்வாளர் ஒருவர். மாநில மரத்திற்குரிய மரியாதையை அவருக்கு கற்றுத்தராமல் போனது யார் குற்றம்? அரசின் குற்றமா? பதவிகளை அலங்கரிக்கும் ஆட்சியாளர்களின் குற்றமா? சம்பளத்துக்கும் கிம்பளத்துக்கும் மட்டுமே கடமைக்கு மாரடிக்கும் அரசு அதிகாரிகளின் குற்றமா?
வருவாய்த்துறையைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! தனக்கான தனி வருவாய் கல்லா கட்டுவதை உறுதி செய்துவிட்டால் போதும் புறம்போக்கு நிலங்களையெல்லாம் ஊழல்வாதிகளுக்கு பட்டா போட்டு கொடுத்தும், மரங்களையெல்லாம் செங்கல்சூளை மாபியாக்களுக்கும் 2C பட்டா உரிமை கொடுத்தும் தன்வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இந்தப்பணத்தில் எப்படி பெண்டு பிள்ளைகளுக்கு சோறும் தீனியும் வாங்கிக்கொடுக்கிறார்கள்? என்று யோசிக்கவே அசிங்கமும் அருவெறுப்புமாகத்தான் இருக்கிறது.
காட்டில் திரியும் பன்றியை வேட்டையாடினால் தவறு, வனச்சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என சொல்லிக் கொடுத்த அரசு நிர்வாகம், காட்டை உருவாக்கும் காரணியான பனையை தறிப்பது தேச விரோத செயல் என சொல்லித்தரவில்லை!
மலைகளில் வாழும் வரையாடுகளை வேட்டையாடுவதை தண்டனைக்குரிய செயல் என வகைப்படுத்தும் அரசு, மலைகளை செழிப்பாக்க மழை ஈர்ப்பு மையமாக செயல்படும் பனைகளை தறிப்பதில் மெத்தனம் காட்டுவது இயற்கைக்கு இழைக்கும் கொடூரத்தின் உச்சம்..!
குறைந்தபட்சம் பன்றிக்கு கொடுக்கும் மரியாதையாவது பனைக்கு கொடுங்கள் ஆட்சியாளர்களே! வரலாறும், அடுத்தடுத்து வரும் சந்ததிகளும் உங்களை வாழ்த்துவர்! இதே காற்றும், நீரும், இயற்கையும் இனி வரும் சந்ததிகளுக்கு கிடைக்கட்டும்!!!
-இதழாளர் பா_ஜான்பீட்டர் ஜே.பி.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.