4/26/2023

முந்தானையும்... மொபைலும்...!

வாழ்க்கை முழுவதும் கணவன் தனது முந்தானையை பிடித்துக் கொண்டு பின்தொடர வேண்டும் என்பதுதான் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் ஆசையும் ஏக்கமும்...

நடிகர் வடிவேலு கூட ஒரு படத்தில் “மாலா மாலா” என தனது மனைவியின் முந்தானையைப் பிடித்தவாறே திரிவதை நகைச்சுவையாகவும், எதார்த்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். பல குடும்பங்களில் இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. சில குடும்பங்கள் விதி விலக்காகவும் இருக்கத்தான் செய்கின்றன. 

நாகரீக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பவை இந்த காட்சிகளை தலைகீழாக மாற்றியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு அறைக்குள் இருந்தாலும் இருவருக்குள்ளும் பகிர்தல் என்பது வெவ்வேறாகி விட்டது. இருவருக்கும் தொழில்நுட்ப ரீதியாக அந்தரங்கங்களும் வெவ்வேறாகவே இருக்க விருப்பப்படுகிறார்கள்.

போனால் போன இடம், வந்தால் வனவாசம் என்று ஒருவரை ஒருவர் தேடாமலும், யாரும் எப்படியும் போனால் நமக்கென்ன வந்தது என கண்டுகொள்ளாமலும் குடும்ப வாசம் செய்யவே ஆசைப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என வந்துவிட்டபிறகு கணவன்-மனைவி இடையிலான அன்யோன்யம் குறைந்து விட்டதாகவே அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பங்களை கூறுபோட்டதில்தான் இவற்றுக்கு பெரிய பங்கு இருக்கிறது.

வாழ்க்கையில் தன்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்களும், பெண்களும் தங்களை வாட்ஸ்அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ பின்தொடர வேண்டும் என விரும்புவதில்லை.

முந்தானைக்கும், மொபைலுக்கும் அப்படி என்ன வித்யாசம்? முந்தானையை பிடித்துக்கொண்டு ஒரு ஆடவன் திரிந்தால் அடுத்த ஆடவர் அந்த பெண்ணை ஏறெடுத்துப் பார்க்க அஞ்சுவார்கள். மொபைலில் பின்தொடர்ந்தால் கண்ணுக்குத் தெரியாத எதிரியும் பெண்களை அண்டிவர தயங்குவார்கள். இதே நிலைதான் ஆண்களுக்கும்..!

அப்படியிருக்க மொபைலில் பின்தொடர்ந்தால் மட்டும், என் மீது சந்தேகமா? ஏன்? எதற்காக? என்றெல்லாம் ஆணியமும், பெண்ணியமும் பேசுவது எதுமாதிரியான லட்சணம்? பிடித்தவர்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்... பிடித்தவர்களுக்கு பிடிக்காததை செய்யாதிருங்கள்! தானாக எல்லா எதிர்மறை சிந்தனைகளும், அதிர்வுகளும் அகன்றுவிடும்...

எல்லாம் ஆரம்ப நாட்களில் சற்றே சிரமத்துக்குரியதுதான்... ஆனால் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்... தானாக எல்லாம் மாறிவிடும். 

மாறினால்தான் வாழ்க்கை இனிக்கும்... மாற்றம்தான் வாழ்க்கை..! 


-இதழாளர் ஜே.பி. 

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending