12/27/2020

கோமாளி சட்டங்களும்... ஆளுமையில்லா ஆட்சியாளர்களும்...

இந்தியாவின் சாபக்கேடு ஆளுமையில்லா ஆட்சியாளர்களால் முழுமை பெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கும், அவர்களுக்கு வாழ்வியலுக்கும் சற்றும் பொருந்தாத சட்டங்களால் நாடும், நாட்டின் நிர்வாகமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்ற பெயரில் மக்களையே மீண்டும் மீண்டும் வாட்டி வதைக்கும் சட்டங்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. எது தேவையில்லை என மக்கள் ஒதுக்குகிறார்களோ அதுவே அவர்கள் மீது கட்டாயச்சட்டமாக புகுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு சமீபமாக 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் கட்டமைப்பு தலைகீழாக மாறியுள்ளது.
மக்களுக்கான நாடாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பணம் கொழித்தவர்களுக்கும் சாமரம் வீசும் அடிமை ஆட்சியாளர்களால் நாட்டின் வளர்ச்சி படிப்படியாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது வெளியில் தெரியாமல் பூசிமெழுகும் வேலைகள் கனக்கச்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தோல்வியை தோல்வி என ஒப்புக்கொள்ளாத, ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் திறமையற்ற ஆட்சியாளர்களால் ஒவ்வொரு கனமும் இந்தியா தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறது. வல்லரசுக் கனவை நனவாக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காக நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்”
என்பதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை. மக்களாட்சி என்ற பெயரில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப அரசியலும், வழிவழியாக பதவி சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்ற கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் மூச்சுத்திணறி விக்கித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்துமே மக்களால் முகம் சுளிக்கப்பட்டதும், வெறுக்கப்பட்டதுமாகவே இருக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்காமலேயே தன்னிச்சையாக எதேச்சதிகாரத்துடன் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேளாண் மசோதாவை கண்டித்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் சமரச பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலை ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படியும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மட்டுமே ஆட்சியாளர்கள் எடுக்கப்போகிறார்கள் என்பதுதான் உண்மை. வீதியில் நின்று போராடும் விவசாயிகளின் நிலைமை கடைசி வரை கவலைக்கிடம்தான். இந்தியா விவசாயத்தை முதுகெலும்பாக கொண்டிருக்கின்ற நாடு என கூறிக்கொண்டே விவசாயிகளை பரதேசத்திற்கு அனுப்பும் வேலையைத்தான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இடைத்தரகர்களின் தலையீட்டை விவசாயிகளிடம் இருந்து அகற்றுவதாக கூறிக் கொண்டு பன்னாட்டு இடைத்தரகர்களை உட்புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் நன்மைக்காகவே என்று கூறப்படும் இந்த சட்டத்தை விவசாயிகள் அறவே நம்பவில்லை. நம்பிக்கையை ஏற்படுத்தும் சட்டமாகவும் அது இல்லை. பன்னாட்டு இடைத்தரகர்களுக்கு எதிர்காலத்தில் விவசாயிகளை அடிமையாக்கும் சாசனமாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. விவசாயிகளால் எதிர்க்கப்படுகிறது. மக்கள் விரும்பவில்லை எனில் எதற்காக கட்டாய உட்புகுத்துதல் என்பது பிரயோகிக்கப்படுகிறது. தற்போது புதிதாக கார்களில் பம்பர் அகற்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எந்த ஆட்சியாளர்களும் கூட கடைபிடிக்கப்போவதில்லை. அரசியல்வாதிகளும் கைக்கொள்ளப் போவதில்லை. கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் சட்டம் போல மக்களிடம் தண்டம் வசூலிக்க மற்றொரு உபாயம் அவ்வளவே.
ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு, அந்த சட்டத்திற்கான தேவை இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை திரும்பப் பெறுவதற்கான ஆளுமை ஆட்சியாளர்களிடம் இல்லை. கால காலத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டை ஆளுகின்றன. இதற்கான உதாரணங்கள் பல ரூபங்களில் நாட்டில் மலிந்து கிடக்கின்றன. நான்குவழிச்சாலைகளும், சுங்கக்கட்டணங்களும் இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்னையாகத்தான் இருக்கிறது. சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்றளவும் கட்டண விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறதே தவிர மக்களின் சுமை இன்னமும் அவர்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படவில்லை. சாலைகளும் செப்பனிடப்படுவதில்லை. அப்படியானால் இந்த பணம் எங்கே, யாருக்காக செல்கிறது என்பது விடை தெரியாத மர்மமாக நீடிக்கிறது. வழியெங்கும் வழிப்பறி கொள்ளையர்கள் போலவும், கௌரவ பிச்சையெடுக்கும் கூடாரங்கள் போலவும்தான் இந்த டோல்கேட்டுகள் காட்சி தருகின்றன. மக்களுக்கு வலிதெரியாமல் அவர்களிடம் பணத்தை பிடுங்குவதற்காக தற்போது பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட்டு வருவது உச்சக்கட்ட கொடூரம். உரிமம் காலாவதியான டோல்கேட்டுகள் கூட இன்னமும் வழிப்பறி செய்து கொண்டுதான் இருக்கின்றன. இதைப் போலவே ஜிஎஸ்டி தொடங்கி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பெட்ரோல் விலை நிர்ணயம், எட்டுவழிச்சாலைத் திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் என எட்டுத்திக்கில் இருந்தும் மக்களை நசுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. காலம் காலமாக மக்களும் விவசாயிகளும் போராடித்தான் ஜீவனம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
`வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

             கோலொடு நின்றான் இரவு.’

மன்னன் அளவுக்கதிகமாக வரிவசூல் செய்யக் கூடாது. வேலோடு வழியில் நின்று பொருட்களை அடித்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரரைப் போல் மன்னன் இயங்கலாகாது. அந்த வரி இந்த வரி என்று வரிவரியாய்ச் சட்டங்கள் கொண்டுவந்து நடுத்தர மக்களைச் சிரமப்படுத்துவதை வள்ளுவம் வன்மையாய்க் கண்டிக்கிறது. இதை மன்னராட்சிக்குச் சொன்னதாய் மட்டும் கொள்ளத் தேவையில்லை. மக்களாட்சிக்கும் இது பொருந்தும்.

12/26/2020

மிரட்டும் சங்கங்கள்: சவுக்கடி கொடுத்த மதுரை உயர்நீதிமன்றம்

“தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்”- இந்த ஒற்றை வாசகத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் புற்றீசல்கள் போல முளைத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் எண்ணிக்கை பல நூறுகளைக் கடந்து விட்டது. ஆரம்பத்தில் என்னவோ அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், சங்க உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது சுக துக்கங்களில் உதவுவதற்காகவும், ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்காகவும் போராடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனைகள் பல இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் சங்கங்களின் மீதான பார்வை யாருக்கும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

ஊழியர்களின் பொருளாதார நிலை உயர்வு, பணிச்சுமை தளர்வு இப்படி எல்லா நிலைகளிலும் சங்கங்களின் பங்களிப்பு அபரிமிதமானது. துறை ரீதியான செயல்பாடுகளில் கூட தலையீடு செய்யும் அளவுக்கு சங்கங்கள் சக்தி மிக்கவையாக இருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சங்கங்கள் சுய லாபங்களுக்காக நடத்தும் போராட்டங்கள், அதிகாரிகள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி பார்க்கும் போது, சங்கங்கள் தங்களது தார்மீக வலிமையை இழந்து அரசால் அச்சுறுத்தப்படும் நிலைக்கு மாறியிருக்கிறது என்றால், இதற்கு சங்கங்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம்.

உதாரணத்திற்கு ஆசிரியர் சங்கங்களை எடுத்துக் கொண்டால், அவை உருவான காலக் கட்டங்களில் மூத்த கல்வியாளர் ராஜகோபாலன் போன்றோர் அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் செயல்பட்டதன் விளைவாகப் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்ததை மறுப்பதற்கில்லை.  ஆசிரியர் நலன் சார்ந்த செயல்பாடுகள், உண்மைத் தன்மை, போராட்ட குணம், நேர்மை, தியாகம், தன்னலமற்ற அணுகுமுறை, கூட்டு வலிமை போன்றவைதான் அன்றைய சங்கங்களின் அடையாளங்களாக இருந்தன.

ஆனால் இன்று ஆசிரியர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சங்கங்கள், அவர்களுக்கிடையேயான மோதல்கள் என சங்கங்களின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் தகர்த்து விட்டன. பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கென தனிச்சங்கங்கள், பாட வாரியாக ஆசிரியர்களுக்கு தனிச்சங்கங்கள், தலைமை ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலை, உயர் தொடக்க நிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சிறப்பு ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் என கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் இன்றைய சூழலில் செயல்பட்டு வருகின்றன.

இதே போன்ற கட்டமைப்பில்தான் தொழிற்சங்கங்களும், இன்னபிற துறை ரீதியான சங்கங்களும் கணக்குவழக்கில்லாமல் பெருகியது மட்டுமல்ல, சொந்த பிரச்னைகளுக்காக சங்கத்தின் பெயரைப் பயன்படுத்துவது, ஒழுங்காக பணிக்கு வராமல் ஏமாற்றுவது, இதனை தட்டிக் கேட்பவர்களை அதிகார வர்க்கத்தின் துணையோடு அச்சுறுத்துவது என பல காரணங்கள் சங்கங்களின் மீதான நம்பிக்கை தகர்ப்பதாக அமைந்து விடுகின்றன. சங்க பிரதிநிதிகளுக்குள் நிலவும் போட்டி மனப்பான்மை, ஈகோ பிரச்னை, ஒற்றுமையில்லாமை போன்றவைதான் சங்கங்கள் அதிகரிப்பதற்கு மூலக்காரணம். இது தவிர கொள்கைப் பிடிப்பு இல்லாததும், நடுநிலை தவறுவதும் சங்கங்களை பலவீனப்படுத்தி, அரசின் ஒடுக்குதல்களுக்கு பணிய வைத்து விடுகிறது. சங்கங்களுக்கான சொத்துக்கள், இருப்பு நிதி இவற்றை கையாளுவதில்தான் நிர்வாகிகளுக்கிடையே மோதல்களும், அந்த சங்கத்தில் இருந்து பிற சங்கங்கள் புதிதாக தோன்றுவதுமாக சங்கங்களின் பெருக்கம் அதிகமாகிறது.

போராட்ட காலங்களில் ஒன்றுசேரும் ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும், தங்களுடைய சொந்த நலனுக்காக, லாபத்திற்காக கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுக்கும் நிலையில், மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் முன்வைப்பதில் ஏன் அக்கறை காட்டுவதில்லை. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதிலோ, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதிலோ முனைப்பு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. அதனால்தான் மக்களின் ஆதரவு இதுபோன்ற சங்கங்களுக்கு இருப்பதில்லை. அரசு ஊழியர்கள்-பொதுமக்கள், ஆசிரியர்கள்- பெற்றோர்கள் உறவுகள் பின்னடைவைச் சந்திக்கின்றன. இவர்களது போராட்டம் அனைத்துமே இவர்களது ஊதிய உயர்வு உள்ளிட்ட பணத் தேவைகளுக்கானது மட்டுமே என்ற கருத்து மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.  

சமீப காலத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போன்றோரின் வேலைநிறுத்தங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், முகச் சுளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை சாட்டையடி போன்ற கேள்விக்கணைகளை தொடுத்து சங்கங்களை அதிர்ச்சியின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அந்த சங்கங்களை அமைக்க அதிகாரம் கொடுத்தது யார்? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், அமைப்பு தலைவர்களை சமூகத்திற்கு எதிரானவர்களாகவே கருத வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என ஆணித்தரமான வாதத்தை முன்னெடுத்து சங்கங்களை கிடுகிடுக்க வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பல்லூரில் அரசு ஊழியர் என்பதை மறைத்து அதிகார துஷ்பிரயோகம் இலவச வீட்டு மனைப்பட்டா பெற முயன்ற வழக்கு ஒன்றில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான அமர்வு அரசுக்கு பல சவாலான கேள்விகளை விடுத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சங்கங்கள் வரிந்துகட்டிக் கொண்டு வருவதையும், இந்த முறைகேடுகளுக்கு அரசு அதிகாரிகள் துணைபோவதையும் நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்னொரு முக்கியமான கேள்வியையும் உயர்நீதிமன்றம் வினவியுள்ளது. அரசு ஊதியத்தைப் பெறும் ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை எந்த பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை? அவ்வாறு சேர்த்தால்தானே அரசு பள்ளிகளின் தரம் உயரும் என குறிப்பிட்ட நீதிபதிகள், பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு மோசமான உதாரணம் எனவும் கண்டித்ததுடன் இன்றைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் எதேச்சதிகார சுயநல போக்குகளை தோலுரித்துக் காட்டியுள்ளனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களை எடுத்துக் கொண்டால், ஆளுங்கட்சியில் உள்ள தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆட்சிக்காலம் முடியும் வரை டிரைவரானாலும், கண்டக்டரானாலும் அவர்கள் சீருடை அணிந்து பணியாற்றுவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் போல வெள்ளை வேட்டி சட்டையுடன் வலம் வந்து அதிகார பலத்தை காண்பிப்பதும், ஆட்சி மறைந்ததும் காட்சி மாறுவதும் எழுதப்படாத விதியாகவே தொடர்கிறது.  தட்டிக்கேட்டால் ஸ்டிரைக், தண்டனை கொடுத்தால் அதிகாரிகளுக்கே பணியிட மாற்றம் இதுதான் இவர்கள் கையில் எடுக்கும் அதிகார துஷ்பிரயோக ஆயுதங்கள்.

இதுபோன்ற சங்கங்கள் எல்லாம் களையெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் சாமானிய மக்களின் ஆதங்கம். சமீபகாலமாகவே மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்புகளும், துரித நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகின்றன. சங்கங்கள் விஷயத்தில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி சங்கங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, மக்களின் உணர்வுகளை புரிந்து இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்துமா?  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-----------------------------------------

நிதிவசூல் முறைகேடுகள்

தொடக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து நடத்தப்பட்ட சங்கங்கள் எல்லாம் சொந்த கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. சங்கங்கள் பெயரில் சொந்தமாக இடம் வாங்குதல், கட்டிடம் கட்டுதல், ஏசி உள்ளிட்ட சொகுசு வசதிகளை ஏற்படுத்துதல் என எதற்கெடுத்தால் நிதி வசூல், ஊழியர்களின் பணியிட மாறுதலுக்கு வசூல், தண்டனைகளை நீக்குவதற்கு, குறைப்பதற்கு வசூல் என சங்கங்கள் வசூல் மழையில் கொழிக்கின்றன. தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தலங்களில் பல சங்கங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் இருப்பதை காண முடியும்.

இதுதவிர அந்தந்த துறைகளில் புதிதாக வேலைவாங்கிக் கொடுப்பதற்கு லட்சங்களிலும் பேரம் பேசி பல பகுதிகளில் முறைகேடுகளும், போலீஸ் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளன. காரியங்களை சாதித்துக் கொள்ள அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல மட்டங்களிலும் லஞ்சம் பகிர்ந்து கொடுக்கப்படுவதாகவும் அப்பட்டமான குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending