6/29/2019

பனை- மரமல்ல, மானுட வரம்!

பனை- மரமல்ல, மானுட வரம்!

பனையின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி ஏன்? தாறுமாறாய் தறிக்கப்படுவதன் பின்னணி அரசியல்தான் என்ன? ஆதி முதலாய் தமிழனின் சரித்திரத்தை அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்க்கு சுமந்துவந்து இன்று வாழும் சந்ததிகளுக்கு அறிவித்த இந்த பனையின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? தற்சார்பு பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்த பனையின் வீழ்ச்சியால் இந்த பூவுலகு எதை சந்திக்க தயாராகிறது? என்ற பலவாறான கேள்விகளுக்கு விடை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது பனைப்பயணம்.



1970களில் கதர் மற்றும் சிற்றூர்த் தொழில்குழுமம் மூலமாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் 10.2 கோடி பனை. தமிழகத்தில் மட்டும் 5 கோடி. அதிலும் குறிப்பாக தென்தமிழகத்தில் மட்டும் 2.5 கோடிக்கும் அதிகமான பனை இருந்ததாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். ஆனால் இன்றைய நிலை பனைமரத்தைக் கண்டாலே அடிமாட்டு விலைக்கு செங்கல் சூளைகளுக்கு விறகாக தறிக்கப்படும் அவலம். காரணம்?
1985-86ம் ஆண்டு நிலவரப்படி தேசிய அளவில் சுமார் 7 லட்சம் பேருக்கும், தமிழக அளவில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகளை இந்த பனைத் தொழில் அளித்து வந்துள்ளது. அதன்பின்னர் பனைக்கு நேர்ந்த சோகம் நாடறியும். கள் இறக்க தடை, பனை ஏறிகளுக்கு போலீசாரின் நெருக்கடிகள், தொந்தரவுகள், அரசின் ஒத்துழைப்பு குறைந்து போனது ஆகிய இன்னபிற இடையூறுகள் பனை வாழ்வியலை அடியோடு முடக்கிப் போட்டது. பனையை பராமரிக்கக் கூட விதியற்றுப் போய் விறகுக்கு விற்கலாகினர். செங்கல் சூளைகளின் எரிபொருள் மூலதனமே பனைகள்தான் என்றாயிற்று.
வருடம் முழுவதும் பலன்தரும் தென்னை மரங்களையும், தென்னை விவசாயிகளையும் காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக பல்வேறு ஆராய்ச்சிகளையும், தொழில் அபிவிருத்தி சாத்தியக்கூறுகளையும் கண்டறியும் இந்த அரசு, பனைக்கு மட்டும் பாராமுகம் காட்டிவிட்டது. தென்னை விவசாயிகள் நலன்காக்க நீராபானத்துக்கு அனுமதி வழங்கிய அரசு, பனையில் இருந்து ”கள்” இறக்க இன்றளவும் மனமிறங்காமல் பனைத்தொழிலாளர்களின் வாழ்வை புறந்தள்ளி விட்டது.
இத்தனைக்கும் பனை விவகாரத்தில் கொடிய வேதனை என்னவெனில் பனைதான் தமிழ்நாட்டின் மாநில மரம். தேசிய கொடிக்கு அளிக்கும் மரியாதைக்கு நிகரான மதிப்பை பெற வேண்டிய மரம். தேசிய சின்னங்களை பழிப்பது குற்றம், அழிப்பது குற்றம், அவமதிப்பதும் குற்றம். ஆனால் மாநில சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்ற பனையை வதம் செய்வது குற்றத்தின் பட்டியலில் கூட இடம்பெறாதது வேதனையின் உச்சம்.
இன்றைய சூழலில் சென்னை சொல்லொண்ணா தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கிறது. பாக்கம் என இறுதிப்பெயரிட்டு அழைக்கப்படும் ஏரிகளையெல்லாம் வீட்டு மனைகளாக்கி, அதில் முன்னோர்கள் நீர்நிலைகளை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காக நட்டுவைத்த பனைகளையெல்லாம் வேறோடும் வேறடி மண்ணோடும் பிடுங்கி வீசியதின் விளைவு குடிப்பதற்கு, கழுவுவதற்கு என எதற்குமே தண்ணீர் இல்லாத பொட்டல்காடாகிப் போய்விட்டது. ஊரைச்சுற்றி தண்ணீர் (கடல்நீர்) நின்றாலும் சென்னைவாசிகளின் தாகம் தீர்க்க முடியவில்லை.

இத்தனை ஆண்டுகாலமாய் தண்ணீர் அரசியல் மூலமாக தமிழக மக்களை பிரித்தாண்ட தலைநகர அரசியலின் ஜம்பம் இப்போது பலிக்காமல் போய்விட்டது. ஆண்டாண்டு காலமாய் கொடிய தண்ணீர் பஞ்சத்தோடு போராடிய பிற மாவட்டத்து மக்களின் நிலைமையை சென்னை மக்கள் கடந்த சில நாட்களுக்குள் கண்டுணர்ந்து விட்டார்கள். ஏட்டளவில் படித்த ”நீரின்றி அமையாது உலகு” என்ற பழமொழியை நேரில் ருசித்து விட்டார்கள்.
நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நீர்நிலைகளைச்சுற்றி பனை, இடிதாக்காமல் இருக்க குடியிருப்புகளின் அருகே இடிதாங்கிகளாய் பனை, மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஓலைகளின் தேவைக்காக பனை, விறகுத்தும்புகளுக்காக பனை, நுங்கு, பதநீர், கள்ளு, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ், பனங்கிழங்கு என உணவுக்கும், தும்பு, தூரிகை, கழிகள், வரிச்சல், பனையோலைப்  பொருட்கள், அலங்காரப் பொருட்கள், சமையல் கருவிகள் உள்ளிட்ட பயன்பாட்டு பொருட்களுக்கும் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளுக்காக தற்சார்பு பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்ததே இந்த பனைதான்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி யானைக்கு பொருந்துகிறதோ இல்லையோ பனைக்கு சாலப்பொருந்தும். அடி முதல் நுனி வரை எண்ணற்ற பயன்களை மானுடத்திற்கு வாரி வழங்குகிறது என்றால் இதனை தாவரம் என்பதை விட மானுடவரம் என்றுதான் ஒப்பிட முடியும். இத்தனை மகத்துவமும் தொன்றுதொட்டு இலக்கியங்கள் வாயிலாகவும், நேரடி அனுபவங்களின் மூலமாகவும் தெரிந்தும், அரசு தரப்பில் தெரியாதது போல காட்டிக் கொள்வதும், பனைத் தொழிலின் வளர்ச்சியை புறந்தள்ளுவதும் புதிராக உள்ளது.
பனையேற்றம் என்பது பருவ காலத்தொழில்தான். நெல்லை, தூத்துக்குடி தொடங்கி ராமநாதபுரம் வரை தென்மாவட்டங்களில் ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலும், சேலம், தர்மபுரி போன்ற வடமாவட்டங்களில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலும், கேரளமாநில எல்லையை ஒட்டிய குமரி மாவட்டத்தில் ஆகஸ்டு தொடங்கி மார்ச் மாதம் வரையிலுமாக இந்த பருவக்கால தொழில் நடக்கிறது. பிற மாதங்களில் இந்த தொழிலாளர்களின் நிலைமை சொல்வதற்கில்லை. 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத்தொழிலாளர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ்தான் வசிக்கிறார்கள்.
உணவுப்பொருட்கள் அல்லாத பனைப்பொருட்கள் உற்பத்தி செய்தல், நேரடி சந்தை வாய்ப்புகள், போதிய முதலீடு இல்லாமை, தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவது போன்றவை பனைத் தொழிலை அழிவைநோக்கி இட்டுச் செல்கின்றன. புதிய தொழிலாளர்களை ஈர்க்க முடியாமல் மெல்ல மெல்ல பனைத்தொழில் நலிந்து கொண்டே செல்கிறது. பனையை வைத்து அரசியல் செய்தவர்கள் எல்லாம் பதவிகளை வைத்து வளர்ந்து விட்டனர். பனைத் தொழிலாளர்கள் மட்டும் அதலபாதாளத்தில் தத்தளிக்கிறார்கள். அடுத்த சந்ததிக்கு இந்த தொழிலே தெரியாமல் மாற்றுத் தொழில்களுக்கு தடம்மாற்றி விடப்படுகிறார்கள்.
பனையின் அழிவு என்பது மக்களின் அழிவு என்பதை அரசு நிர்வாகம் உணரும் வகையில் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு என்பது கானல் நீர்தான். இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளில் பனையின் உணவுப் பொருட்கள், உணவிலிப்பொருட்கள் என பலவற்றின் வாயிலாகவும் உடல்நலத்திற்கோ, மனித சமுதாயத்திற்கோ கேடுவிளைவிக்காமல் பொருளாதார ஏற்றத்திற்கு வழிவகை செய்யும் நிலையில், பனையோடு ஒன்றித்து ஆதிகாலம் தொட்டு பயணிக்கும் தமிழர் வாழ்வியல் இன்று அதனை புறக்கணிப்பது வருத்தத்திற்குரியது.
பனை செழிக்க மழை செழிக்கும், மழை செழிக்க நிலம் செழிக்கும், நிலம் செழிக்க ஊர் செழிக்கும், ஊர் செழிக்க மனை செழிக்கும். இதனை உணருங்கால் நாடே செழிக்கும். எனவே, பனைத் தொழில் அழியாமல் பாதுகாக்க அரசு முனைப்பு காட்டி மாநிலச்சின்னமான பனைமரங்களை தறிப்பதற்கு தடையிடும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். செங்கல்சூளைகளுக்காகவும், பிற எரிபொருள் தேவைகளுக்காகவும் பனையை தறிப்பவர்களுக்கு தண்டனை வழங்க வழிசெய்யும் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
எந்தவித செயல்பாடுமின்றி வாரியத்தலைவர் என்ற அடைமொழியுடனான  வெறும் பதவிக்காக உருவாக்கப்பட்டு செயல்படாத நிலையில் உள்ள பனைத்தொழிலாளர் நல வாரியத்தை புணரமைத்து தொழில் மேம்பாட்டிற்கான புதிய வாரியம் அமைக்க வேண்டும். பனைத் தொழிலாளர்கள் ஏற்றம் பெற திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.  குறிப்பாக உடல்நலனிற்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத பனங்கள்ளு இறக்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும். பனைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க அரசு கொள்முதல் நிலையங்கள், அங்காடிகள் அமைத்து தொழில் அபிவிருத்திக்கு வழிவகை செய்ய வேண்டும். பனைப்பொருட்களில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் நீண்டகாலம் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும். எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர மாற்றாக பனைப் பொருட்களை பயன்படுத்த உணவகம் உள்ளிட்ட அனைத்து தொழில் நிலையங்களுக்கும் உத்தரவிட வேண்டும்.
இது போன்ற நோக்கங்களுக்காக பன்னெடுங்காலமாக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இதற்காகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறைவாசமே அனுபவித்துள்ளார். மக்கள் நலனுக்காக, எதிர்கால சந்ததிக்காக பனைத் தொழிலை பாதுகாக்க நடத்தப்படும் இந்த போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் அரசு செவி மடுத்து மாநில சின்னத்திற்கு மதிப்பளிக்க, உயிரூட்ட ஆவண செய்ய வேண்டும்.

பா.ஜான்பீட்டர்,
பனை ஆர்வலர்/ எழுத்தாளர்

பனை - ஒரு உயிர்ப்பெருக்கி

மனித சமுதாயத்திற்கு அளவில்லா எண்ணற்ற பயன்களை அளித்த பனை மரங்கள் இன்று மனிதனின் பார்வையில் பயனற்று நிற்கின்றன.


பனைச்சட்டங்களும் ஓலைக்குடிசைகளும் மாறி காங்கிரிட் வீடுகளாக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் மாறி குருந்தகடானது. கருமையான பனம் கருப்பட்டியை விட்டு வெள்ளை சீனியை விரும்புகின்றோம். இன்றைய நாகரிக வளர்ச்சியில் காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனைமரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் இரவில் வாழ்க்கை நடத்தும் பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பகல் பொழுதில்
ஓய்வெடுக்கவும், எதிரிகளிடமிருந்து ஒளிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய இடமாகவும் பனையே விளங்குகிறது.
பனையின்வேர் பகுதிகளில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன. பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளர்கின்றன. இயற்கையில் ஆலமரங்களும் அரச மரங்களும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல நன்மைகளைச் செய்கின்றன.
ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.
"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன. தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.
இப்படி எண்ணற்ற சிறப்புகளை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி வாழ்கின்றப் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பனையைக் காப்போம்!

#பனைகாப்போம்

எழுத்து: பா.ஜான்பீட்டர்

கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க என்ன அருகதை இருக்கிறது?

தமிழ்நாட்டிற்குள் ஆறுகள் பாழ்பட்டு, ஓட்டப்பாதையை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாக பரிதாபமாக இருக்கின்றன. சிறுவாணி, தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, அமராவதி இப்படி எந்த நதியையாவது உயிருடன் வைத்திருக்கிறீர்களா ஆட்சியாளர்களே?

ஒரே மாவட்டத்திற்குள் பிறந்து அதே மாவட்டத்திற்குள் (நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம்)தனது ஓட்டப்பயணத்தை முடித்துக் கொள்கிற தாமிரபரணி ஜீவநதியை முறையான கரையமைத்து தடுப்பணைகள் கட்டி நீர் நிர்வாகத்தை கட்டியமைக்க முடியவில்லை. நாம் எப்படி அண்டை மாநிலத்தவரிடம் உரிமையை கோர முடியும்?
தாமிரபரணியின் மொத்த ஓட்டதூரமே 121 கிலோமீட்டர்தான். அதிலும் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் மட்டுமே சமதளத்தில் ஓடுகிறது. 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினாலே மழைக்கால உபரிநீர் வீணாகாமல் காத்து முப்போகமும் விளையவைத்து விடுவார்கள். நீங்கள் மானியமும் கொடுக்க வேண்டாம். உதவித்தொகையோ இலவசங்களோ வேண்டாம். இருக்கின்ற அணைக் கட்டுக்களைகூட தூர்வார ஆள் இல்லை. அப்படியே தூர்வார விட்டாலும் மணல் கொள்ளையர்கள் கைகளில்தான். பால்மாட்டின் மடுவறுத்த கதைதான் அவர்கள் அணைகளை தூர்வாரும் லட்சணம். அன்னப்பறவை தண்ணீரை விடுத்து பாலை உறிவது போல் சேறுசகதியை விட்டுவிட்டு மணலை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி விடுவார்கள்.
ஏனைய அனைத்து ஆறுகளின் நிலையும் அதுவே. வெற்றி பெற்று முதல்தடவை பாராளுமன்றம் செல்வதற்குள் காவிரியில் மணல் அள்ள அனுமதி கோரி கரூர் எம்பி ஜோதிமணி, கட்சி தாவலில் ஒலிம்பிக் வீரருக்கு ஒப்பான செந்தில்பாலாஜியுடன் சென்று மனு கொடுத்துள்ளார். அணை கட்டவோ, நீர்நிலைகளை தூர்வாரவோ நினைத்துக்கூட பார்க்கவில்லை.
நொய்யல் ஆறு சாயக்கழிவுகளால் நொந்து வெந்து மரணப்படுக்கையில் விழுந்துவிட்டது. சென்னைக்கு ஒருக்காலத்தில் நல்ல நீரை சுமந்து வந்த பாலாறு பாழாய்ப்போய் விட்டது. பெயர் மட்டுமே பாலாறு. 100 சதவீத அக்மார்க் சாக்கடை. காவிரியை மெல்ல மெல்ல கருணைக்கொலை செய்து வருகிறார்கள். மக்களுக்காகத்தான் துன்பங்களை சகித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. சுவையிற் சிறந்த நீரை வழங்கிய சிறுவாணி மணல் களவாணிகளால் கலையிழந்து செயல்மறந்து வற்றிப்போனது.
நீர்வரத்துக்கால்வாய்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகளுக்கு இரையாகி விட்டது. ஏரிகுளங்கள் எல்லாம் வறண்டு பாலைநிலமாய் காட்சியளிக்கின்றன. சிற்றாறுகள் எல்லாம் சின்னாபின்னமாகி விட்டன.
எட்டுவழிச்சாலைக்கும், காண்டிராக்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்புள்ள பாலம் அமைக்கும் பணிகளுக்கும் சாலைப்பணிகளுக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாகுபாடின்றி முக்கியத்துவம் அளிக்கிறார்களே தவிர நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அடிக்கல் கூட அமைப்பதில்லை. இயற்கை வளம் அழிப்பு, வன அழிப்பு, மரங்கள் அழிப்பு இதுதான் ஆட்சியாளர்களின் தினசரி பொழுது போக்கு!
நம் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு கர்நாடகாதண்ணீர் தரவில்லை, கேரளா நீர் தர மறுக்கிறது என மண்டியிட்டு காத்துக் கிடக்கிறோம். மண்ணில் இருந்து மறைந்து அரை நூற்றாண்டுகளை கடந்தும் காமராஜர் ஆட்சி கேட்கிறார்களே? ஏனென்று புரிகிறதா? நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை சேதமின்றிபேணி நீர்ஆதாரங்களை பாதுகாத்தாலே எவனிடமும் மண்டியிட தேவையில்லை.
ஆளும் வர்க்கமும் ஆளத்துடிப்பவர்களுக்கும் தமிழகம் செழிக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நீர் மேலாண்மையும், புதிய நீர்த்திட்டங்களுமே. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைய வேண்டிய அவசியமில்லாத நிலையை தமிழர்களுக்கு ஆட்சியாளர்கள் உருவாக்கித்தர வேண்டும். அப்படி செய்பவர்கள் காமராஜர் போல் என்றென்றும் மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

சந்ததிகளுக்காக எதை விட்டுச்செல்கிறீர்கள்?

என் வீட்டில் கடந்த 3 வருடங்களாக ஜிக்கி என்ற பெயர் கொண்ட பாசமிகு பிராணி வளர்கிறது. என் மீது அளவு கடந்த பாசம் அதற்கு. என்னை பொறுத்தவரை அதற்கு எப்போதுமே சிறப்பு கவனிப்புதான். தற்போது என் வீட்டிற்கு புதிய நாய்க்குட்டி வந்துள்ளது. புதிய வரவை ஜிக்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனுடைய உணவுத்தட்டில் வாய் வைக்க சென்ற குட்டியை ஆக்ரோஷமாக தாக்கத்துடித்தது. ஆனால் நான் ஓடிச்சென்று காப்பாற்றி விட்டேன். ஒருவார காலத்தில் தற்போது தாயும் பிள்ளையும் போல் விளையாட தொடங்கியுள்ளது கண்கொள்ளா காட்சி. இப்போது அதனுடைய தட்டில் சாப்பிட்டாலும் ஜிக்கி விலகி நின்று கொள்கிறது.
நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. பால், டீ என எது கொடுத்தாலும் அசுர வேகத்தில் உட்கொள்ளும் பெரிய நாயின் நடவடிக்கையில் இந்த ஒரு வாரத்தில் பெரும் மாற்றங்கள். கிண்ணத்தில் பால் ஊற்றி வைத்தால் பெரிய நாய் அதனருகில் கூட செல்வதில்லை. குட்டிநாய்க்கு மொத்தமாக விட்டுக்கொடுத்து விலகி விடுகிறது.
ஐந்தறிவு கொண்ட நாய் கூட அடுத்த சந்ததிக்கு தனக்கு கிடைத்ததை அப்படியே அனுபவிக்க விட்டுச்செல்கிறது.
ஆனால் மனிதர்கள் தங்களது அடுத்த சந்ததிகளுக்கு எதை விட்டுச்செல்கிறார்கள்? சுத்தமான காற்று, வற்றாத நீராதாரங்கள், சேதப்படுத்தப்படாத இயற்கை வளங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் தான் அனுபவித்துவிட்டு அடுத்த சந்ததிகளுக்கு ஊனமானவற்றை சேதமானவற்றை விட்டுச் செல்வது நியாயமா? அடுத்தவர்களுக்கு சேரவேண்டியதை சுரண்டுவதில் அப்படி என்ன ஆனந்தம்?
ஐந்தறிவு ஜீவிகளிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் நல்ல விடயங்கள் இருக்கின்றன. கற்றுக்கொள்ளத்தான் ஆறறிவாளர்களுக்கு மனம் வரவேண்டும்!!!

கேள்விக்குறியாகும் ராமநதி அணை பாதுகாப்பு; இயற்கையை கதறவிடும் மாபியாக்கள்


நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள 23 பஞ்சாயத்துக்களுக்களின் குடிநீர் தேவையையும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன நீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது ராமநதி அணைக்கட்டு. 84 அடி கொள்ளளவுடன் அமைக்கப்பட்ட ராமநதி அணையின் தற்போதைய மொத்த கொள்ளளவு 54 அடி மட்டுமே. 1992ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மலையில் இருந்து மரங்களும், மண்ணும் அடித்து வரப்பட்டு 30 அடிக்குமேல் அணை மதகையொட்டி தேங்கி இன்றளவு வரை அகற்றப்படாமல் நிரந்தர மண்மேடாக மாறியுள்ளது.

அணை முழுவதும் மண் பரவி தூர்ந்து போய் சமதளமாகவே காட்சியளிக்கிறது. அணைக்குரிய எந்த தகுதியும் இல்லாமல் ஒரு பெருமழைக்கே நிரம்பிவிடும் குளத்திற்கு ஈடாகிவிட்டதுதான் இன்றைய ராமநதியின் நிலைமை. பெருமைக்காக மழைக்காலங்களில் ராமநதி அணையில் நீர் இருப்பை பொதுப்பணித்துறையினர் பதிவு செய்கின்றனர். மற்றபடி அவர்கள் சொல்லும் அளவீட்டின்படி நீர் இருப்பு இருக்காது. அணையில் நிறுவப்பட்டுள்ள அளவீட்டு உபகரணம் 30 அடிக்கு மண்ணில் புதைந்துள்ளது. கோடையில் சுத்தமாக தண்ணீர் வறண்டு பாலைவனமாகி விட்டாலும்கூட அணையின் நீர் இருப்பு 30 அடியாகத்தான் காட்டும்.
அடுத்ததாக மணல் கொள்ளையர்களும், வனக்கொள்ளையர்களும் இந்த அணையை படுத்தும்பாடு சொல்லி மாளாது. அணைப்பகுதிக்குள் சேகரமாகும் மணலை பால்கொடுக்கும் மாட்டின் மடுவறுத்த கதையாகத்தான் கொள்ளையடிக்கிறார்கள். அணைக்குள் இருக்கும் பாறையை துடைத்து கழுவி மணலை திருடுகிறார்கள். தர்மத்திற்காக கூட மண் மேடுகளை தூர்வாருவது கிடையாது. காப்புக்காடு, புலிகள் சரணாலயம், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மாட்சி என்றெல்லாம் புகழும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் எப்படித்தான் மணல் குவாரி அமைக்க வனத்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் அனுமதி கொடுக்கிறார்கள் என்பது வியப்பின் குறியீடாகத்தான் உள்ளது. அதிமுக, திமுக பாகுபாடின்றி மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இங்கு இரு கட்சிகளும் கூட்டணி வைத்துத்தான் மணல் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக அணையை ஒட்டியபடி மிகக்குறைந்த தூரத்தில் கல்குவாரிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் கனிமவளத்துறையினர். அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு இந்த கல்குவாரிக்கு உரிமம் கொடுத்திருப்பது ஆச்சர்யத்தையே அளிக்கிறது. உரிமக்காலக்கெடு முடிந்த பின்னரும் கல்குவாரி தொடர்ந்து இன்றளவும் செயல்படுவது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கப்போகிறது. எல்லாம் பணம் படுத்தும்பாடு. மேல்மட்டம் தொடங்கி கீழ்மட்டம் வரை அதிகாரிகள் கல்லா கட்டுவதின் வெளிப்பாடுதான் இது. சரமாரியாக வெடிகள் வைத்து பாறைகளை தகர்க்கின்றனர். 24 மணி நேரமும் இடைவிடாமல் மும்முரமாக இயங்குகிறது இந்த கல்குவாரி.

இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை சமூக ஆர்வலர்களும், பிற அமைப்பினரும் புகார்கள் அளித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கை போலத்தான் இருக்கிறது இதன்மீதான நடவடிக்கை. இந்த கல்குவாரியால் அணையின் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதே அதிகாரிகள் கொடுக்கும் பதில். ஆனால் கல்குவாரியின் வெடிவைப்பதன் அதிர்வுகளை ராமநதி அணை தாங்கி நிற்பது உண்மை. அதேபோல ஆபத்தின் விளிம்பில் அணை இருப்பதும் மறுக்கமுடியாத நிதர்சனம். சிறுசிறு விரிசல்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பலமாய் இருப்பதைப்போல அணை காட்சியளித்தாலும் வெள்ளப்பெருக்கு காலங்களில் அணை உடைந்து விளைநிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படும் அபாயமும் அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அணைக்குள் மட்டுமல்ல அணையில் இருந்து வெளிவரும் வடகால், தென்கால் என இருகால்வாய்களின் ஓட்டப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மணல் கொள்ளையை விட்டபாடில்லை இந்த மணல் மாபியாக்கள். 

இது குறித்து பசுமை ஆர்வலரும், எழுத்தாளருமான பா.ஜான்பீட்டரிடம் கேட்ட போது, ”ராமநதி அணையின் மூலமாக கார் பருவத்தில் 6 ஆயிரம் ஏக்கரும், பிசான பருவத்தில் 17 ஆயிரம் ஏக்கரும் விவசாய பாசன நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அணை தூர்ந்து போனதால் மூன்று போகம் விளைந்த நிலங்களெல்லாம் ஒரு போகத்திற்கே வழியின்றி வறட்சியின் பிடியில் சிக்கி கட்டாந்தரைகளாக காட்சியளிக்கின்றன. நீர்வளத்திற்கான சாத்தியக் கூறுகள் மிகுந்திருப்பினும் இதுபோன்ற அணைக்கு எதிரான சமூக விரோத செயல்பாடுகளால் மக்களுக்கான அத்தியாவசிய குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. ராமநதி-கடனாநதி அணைகள் இணைப்புத்திட்டமும் கானல்நீராகத்தான் காட்சியளிக்கிறது.
இந்த வருடம் மழையும் சரிவர பெய்யாமல் போக்கு காட்டி வருவதால் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கார் பருவ சாகுபடியே முற்றிலும் இல்லாமல் போய் விவசாயிகள் கடனுக்கு மேல் கடனாக வாங்கி அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். அணையில் இருந்து அற்பசொற்பமாக திறந்து விடப்படும் தண்ணீரையும் வழிநெடுக நூற்றுக்கணக்கில் இயங்கி வரும் செங்கல் சூளைகள் உறிஞ்சி கொள்ளையடித்து கொள்ளை லாபம் அடைகின்றனர். மணல் கொள்ளை, கனிமவளக்கொள்ளை, நீர்க்கொள்ளை ஆகியவற்றால் அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படுவதோடு இயற்கையும் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாகி வருகிறது.
இப்படி ஒரு இயற்கை வளத்தை யார் நினைத்தாலும் புதிதாக உருவாக்க முடியாது. இதை அழிக்கும் உரிமையும் யாருக்கும் கிடையாது என்பதை முதலில் மக்களும் விவசாயிகளும் உணர வேண்டும். மாபியாக்களுக்கும் இந்த விஷயம் உரைக்க வேண்டும். நமக்கு கிடைத்த இயற்கையின் அருங்கொடைகளை வருங்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆழப்பதிய வேண்டும். அணை பாதுகாப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு என்பது இந்த பகுதியை பொறுத்தவரை மக்கள் இயக்கமாக மாறினால்தான் சாத்தியமாகும். அரசும் ஆட்சியாளர்களும் இதனை உணர வேண்டும். காசு கிடைத்தால் போதும் எதற்கு வேண்டுமானாலும் அனுமதியும், உரிமமும் வழங்கலாம் என்ற கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும்“ என்றார்.
“நீரின்றி அமையாது உலகு”. சென்னையில் நீர்ப்பஞ்சம் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் தமிழகம் முழுவதும் வரலாம் என்பதன் எச்சரிக்கை சமிக்ஞைதான் அது. இயற்கைக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரமாவது செய்யாமல் இருப்பதே அதற்கு செய்யும் பெரிய கைம்மாறு. எனவே நீர்நிலைகளையும், அணைகளையும், ஆறுகளையும் எந்தவிதத்திலும் ஊனமாக்காமல் அடுத்த சந்ததிகளுக்கு அதன் கொடைகளை வாரிக் கொடுப்பதே சாலச்சிறந்த மனுதர்மம். இதனை ஆட்சியாளர்கள் உணருவார்களா?
---------------------------------------------

  

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending