நெல்லை
மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள 23 பஞ்சாயத்துக்களுக்களின் குடிநீர் தேவையையும், சுற்றுவட்டாரத்தில்
உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன நீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது
ராமநதி அணைக்கட்டு. 84 அடி கொள்ளளவுடன் அமைக்கப்பட்ட ராமநதி அணையின் தற்போதைய மொத்த
கொள்ளளவு 54 அடி மட்டுமே. 1992ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மலையில் இருந்து மரங்களும்,
மண்ணும் அடித்து வரப்பட்டு 30 அடிக்குமேல் அணை மதகையொட்டி தேங்கி இன்றளவு வரை அகற்றப்படாமல்
நிரந்தர மண்மேடாக மாறியுள்ளது.
அணை
முழுவதும் மண் பரவி தூர்ந்து போய் சமதளமாகவே காட்சியளிக்கிறது. அணைக்குரிய எந்த தகுதியும்
இல்லாமல் ஒரு பெருமழைக்கே நிரம்பிவிடும் குளத்திற்கு ஈடாகிவிட்டதுதான் இன்றைய ராமநதியின்
நிலைமை. பெருமைக்காக மழைக்காலங்களில் ராமநதி அணையில் நீர் இருப்பை பொதுப்பணித்துறையினர்
பதிவு செய்கின்றனர். மற்றபடி அவர்கள் சொல்லும் அளவீட்டின்படி நீர் இருப்பு இருக்காது.
அணையில் நிறுவப்பட்டுள்ள அளவீட்டு உபகரணம் 30 அடிக்கு மண்ணில் புதைந்துள்ளது. கோடையில்
சுத்தமாக தண்ணீர் வறண்டு பாலைவனமாகி விட்டாலும்கூட அணையின் நீர் இருப்பு 30 அடியாகத்தான்
காட்டும்.
அடுத்ததாக
மணல் கொள்ளையர்களும், வனக்கொள்ளையர்களும் இந்த அணையை படுத்தும்பாடு சொல்லி மாளாது.
அணைப்பகுதிக்குள் சேகரமாகும் மணலை பால்கொடுக்கும் மாட்டின் மடுவறுத்த கதையாகத்தான்
கொள்ளையடிக்கிறார்கள். அணைக்குள் இருக்கும் பாறையை துடைத்து கழுவி மணலை திருடுகிறார்கள்.
தர்மத்திற்காக கூட மண் மேடுகளை தூர்வாருவது கிடையாது. காப்புக்காடு, புலிகள் சரணாலயம்,
பல்லுயிர்ப் பெருக்கத்தின் மாட்சி என்றெல்லாம் புகழும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்குள்
எப்படித்தான் மணல் குவாரி அமைக்க வனத்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் அனுமதி கொடுக்கிறார்கள்
என்பது வியப்பின் குறியீடாகத்தான் உள்ளது. அதிமுக, திமுக பாகுபாடின்றி மாறி மாறி ஆட்சிக்கு
வந்தாலும் இங்கு இரு கட்சிகளும் கூட்டணி வைத்துத்தான் மணல் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர்.
இதற்கெல்லாம்
ஒருபடி மேலாக அணையை ஒட்டியபடி மிகக்குறைந்த தூரத்தில் கல்குவாரிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்
கனிமவளத்துறையினர். அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு இந்த கல்குவாரிக்கு உரிமம்
கொடுத்திருப்பது ஆச்சர்யத்தையே அளிக்கிறது. உரிமக்காலக்கெடு முடிந்த பின்னரும் கல்குவாரி
தொடர்ந்து இன்றளவும் செயல்படுவது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கப்போகிறது. எல்லாம்
பணம் படுத்தும்பாடு. மேல்மட்டம் தொடங்கி கீழ்மட்டம் வரை அதிகாரிகள் கல்லா கட்டுவதின்
வெளிப்பாடுதான் இது. சரமாரியாக வெடிகள் வைத்து பாறைகளை தகர்க்கின்றனர். 24 மணி நேரமும்
இடைவிடாமல் மும்முரமாக இயங்குகிறது இந்த கல்குவாரி.
இது
குறித்து அதிகாரிகளுக்கு பல முறை சமூக ஆர்வலர்களும், பிற அமைப்பினரும் புகார்கள் அளித்தும்
செவிடன் காதில் ஊதிய சங்கை போலத்தான் இருக்கிறது இதன்மீதான நடவடிக்கை. இந்த கல்குவாரியால்
அணையின் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதே அதிகாரிகள் கொடுக்கும் பதில்.
ஆனால் கல்குவாரியின் வெடிவைப்பதன் அதிர்வுகளை ராமநதி அணை தாங்கி நிற்பது உண்மை. அதேபோல
ஆபத்தின் விளிம்பில் அணை இருப்பதும் மறுக்கமுடியாத நிதர்சனம். சிறுசிறு விரிசல்களை
வெளிக்காட்டிக்கொள்ளாமல் பலமாய் இருப்பதைப்போல அணை காட்சியளித்தாலும் வெள்ளப்பெருக்கு
காலங்களில் அணை உடைந்து விளைநிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படும் அபாயமும்
அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அணைக்குள் மட்டுமல்ல அணையில் இருந்து வெளிவரும்
வடகால், தென்கால் என இருகால்வாய்களின் ஓட்டப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மணல் கொள்ளையை
விட்டபாடில்லை இந்த மணல் மாபியாக்கள்.
இது
குறித்து பசுமை ஆர்வலரும், எழுத்தாளருமான பா.ஜான்பீட்டரிடம் கேட்ட போது, ”ராமநதி அணையின்
மூலமாக கார் பருவத்தில் 6 ஆயிரம் ஏக்கரும், பிசான பருவத்தில் 17 ஆயிரம் ஏக்கரும் விவசாய
பாசன நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அணை தூர்ந்து போனதால் மூன்று
போகம் விளைந்த நிலங்களெல்லாம் ஒரு போகத்திற்கே வழியின்றி வறட்சியின் பிடியில் சிக்கி
கட்டாந்தரைகளாக காட்சியளிக்கின்றன. நீர்வளத்திற்கான சாத்தியக் கூறுகள் மிகுந்திருப்பினும்
இதுபோன்ற அணைக்கு எதிரான சமூக விரோத செயல்பாடுகளால் மக்களுக்கான அத்தியாவசிய குடிநீர்த்
தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. ராமநதி-கடனாநதி அணைகள் இணைப்புத்திட்டமும்
கானல்நீராகத்தான் காட்சியளிக்கிறது.
இந்த
வருடம் மழையும் சரிவர பெய்யாமல் போக்கு காட்டி வருவதால் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில்
கார் பருவ சாகுபடியே முற்றிலும் இல்லாமல் போய் விவசாயிகள் கடனுக்கு மேல் கடனாக வாங்கி
அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். அணையில்
இருந்து அற்பசொற்பமாக திறந்து விடப்படும் தண்ணீரையும் வழிநெடுக நூற்றுக்கணக்கில் இயங்கி
வரும் செங்கல் சூளைகள் உறிஞ்சி கொள்ளையடித்து கொள்ளை லாபம் அடைகின்றனர். மணல் கொள்ளை,
கனிமவளக்கொள்ளை, நீர்க்கொள்ளை ஆகியவற்றால் அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படுவதோடு
இயற்கையும் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாகி வருகிறது.
இப்படி
ஒரு இயற்கை வளத்தை யார் நினைத்தாலும் புதிதாக உருவாக்க முடியாது. இதை அழிக்கும் உரிமையும்
யாருக்கும் கிடையாது என்பதை முதலில் மக்களும் விவசாயிகளும் உணர வேண்டும். மாபியாக்களுக்கும்
இந்த விஷயம் உரைக்க வேண்டும். நமக்கு கிடைத்த இயற்கையின் அருங்கொடைகளை வருங்கால சந்ததிகளுக்கு
விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆழப்பதிய வேண்டும். அணை பாதுகாப்பு மற்றும் இயற்கை
பாதுகாப்பு என்பது இந்த பகுதியை பொறுத்தவரை மக்கள் இயக்கமாக மாறினால்தான் சாத்தியமாகும்.
அரசும் ஆட்சியாளர்களும் இதனை உணர வேண்டும். காசு கிடைத்தால் போதும் எதற்கு வேண்டுமானாலும்
அனுமதியும், உரிமமும் வழங்கலாம் என்ற கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும்“ என்றார்.
“நீரின்றி
அமையாது உலகு”. சென்னையில் நீர்ப்பஞ்சம் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் மறந்திருக்க
வாய்ப்பில்லை. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் தமிழகம் முழுவதும் வரலாம் என்பதன்
எச்சரிக்கை சமிக்ஞைதான் அது. இயற்கைக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரமாவது
செய்யாமல் இருப்பதே அதற்கு செய்யும் பெரிய கைம்மாறு. எனவே நீர்நிலைகளையும், அணைகளையும்,
ஆறுகளையும் எந்தவிதத்திலும் ஊனமாக்காமல் அடுத்த சந்ததிகளுக்கு அதன் கொடைகளை வாரிக்
கொடுப்பதே சாலச்சிறந்த மனுதர்மம். இதனை ஆட்சியாளர்கள் உணருவார்களா?
---------------------------------------------



No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.