6/29/2019

கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க என்ன அருகதை இருக்கிறது?

தமிழ்நாட்டிற்குள் ஆறுகள் பாழ்பட்டு, ஓட்டப்பாதையை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாக பரிதாபமாக இருக்கின்றன. சிறுவாணி, தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, அமராவதி இப்படி எந்த நதியையாவது உயிருடன் வைத்திருக்கிறீர்களா ஆட்சியாளர்களே?

ஒரே மாவட்டத்திற்குள் பிறந்து அதே மாவட்டத்திற்குள் (நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம்)தனது ஓட்டப்பயணத்தை முடித்துக் கொள்கிற தாமிரபரணி ஜீவநதியை முறையான கரையமைத்து தடுப்பணைகள் கட்டி நீர் நிர்வாகத்தை கட்டியமைக்க முடியவில்லை. நாம் எப்படி அண்டை மாநிலத்தவரிடம் உரிமையை கோர முடியும்?
தாமிரபரணியின் மொத்த ஓட்டதூரமே 121 கிலோமீட்டர்தான். அதிலும் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் மட்டுமே சமதளத்தில் ஓடுகிறது. 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினாலே மழைக்கால உபரிநீர் வீணாகாமல் காத்து முப்போகமும் விளையவைத்து விடுவார்கள். நீங்கள் மானியமும் கொடுக்க வேண்டாம். உதவித்தொகையோ இலவசங்களோ வேண்டாம். இருக்கின்ற அணைக் கட்டுக்களைகூட தூர்வார ஆள் இல்லை. அப்படியே தூர்வார விட்டாலும் மணல் கொள்ளையர்கள் கைகளில்தான். பால்மாட்டின் மடுவறுத்த கதைதான் அவர்கள் அணைகளை தூர்வாரும் லட்சணம். அன்னப்பறவை தண்ணீரை விடுத்து பாலை உறிவது போல் சேறுசகதியை விட்டுவிட்டு மணலை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி விடுவார்கள்.
ஏனைய அனைத்து ஆறுகளின் நிலையும் அதுவே. வெற்றி பெற்று முதல்தடவை பாராளுமன்றம் செல்வதற்குள் காவிரியில் மணல் அள்ள அனுமதி கோரி கரூர் எம்பி ஜோதிமணி, கட்சி தாவலில் ஒலிம்பிக் வீரருக்கு ஒப்பான செந்தில்பாலாஜியுடன் சென்று மனு கொடுத்துள்ளார். அணை கட்டவோ, நீர்நிலைகளை தூர்வாரவோ நினைத்துக்கூட பார்க்கவில்லை.
நொய்யல் ஆறு சாயக்கழிவுகளால் நொந்து வெந்து மரணப்படுக்கையில் விழுந்துவிட்டது. சென்னைக்கு ஒருக்காலத்தில் நல்ல நீரை சுமந்து வந்த பாலாறு பாழாய்ப்போய் விட்டது. பெயர் மட்டுமே பாலாறு. 100 சதவீத அக்மார்க் சாக்கடை. காவிரியை மெல்ல மெல்ல கருணைக்கொலை செய்து வருகிறார்கள். மக்களுக்காகத்தான் துன்பங்களை சகித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. சுவையிற் சிறந்த நீரை வழங்கிய சிறுவாணி மணல் களவாணிகளால் கலையிழந்து செயல்மறந்து வற்றிப்போனது.
நீர்வரத்துக்கால்வாய்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகளுக்கு இரையாகி விட்டது. ஏரிகுளங்கள் எல்லாம் வறண்டு பாலைநிலமாய் காட்சியளிக்கின்றன. சிற்றாறுகள் எல்லாம் சின்னாபின்னமாகி விட்டன.
எட்டுவழிச்சாலைக்கும், காண்டிராக்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்புள்ள பாலம் அமைக்கும் பணிகளுக்கும் சாலைப்பணிகளுக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாகுபாடின்றி முக்கியத்துவம் அளிக்கிறார்களே தவிர நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அடிக்கல் கூட அமைப்பதில்லை. இயற்கை வளம் அழிப்பு, வன அழிப்பு, மரங்கள் அழிப்பு இதுதான் ஆட்சியாளர்களின் தினசரி பொழுது போக்கு!
நம் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு கர்நாடகாதண்ணீர் தரவில்லை, கேரளா நீர் தர மறுக்கிறது என மண்டியிட்டு காத்துக் கிடக்கிறோம். மண்ணில் இருந்து மறைந்து அரை நூற்றாண்டுகளை கடந்தும் காமராஜர் ஆட்சி கேட்கிறார்களே? ஏனென்று புரிகிறதா? நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை சேதமின்றிபேணி நீர்ஆதாரங்களை பாதுகாத்தாலே எவனிடமும் மண்டியிட தேவையில்லை.
ஆளும் வர்க்கமும் ஆளத்துடிப்பவர்களுக்கும் தமிழகம் செழிக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நீர் மேலாண்மையும், புதிய நீர்த்திட்டங்களுமே. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைய வேண்டிய அவசியமில்லாத நிலையை தமிழர்களுக்கு ஆட்சியாளர்கள் உருவாக்கித்தர வேண்டும். அப்படி செய்பவர்கள் காமராஜர் போல் என்றென்றும் மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending