பனை-
மரமல்ல, மானுட வரம்!
பனையின்
மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி ஏன்? தாறுமாறாய் தறிக்கப்படுவதன் பின்னணி அரசியல்தான்
என்ன? ஆதி முதலாய் தமிழனின் சரித்திரத்தை அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்க்கு சுமந்துவந்து
இன்று வாழும் சந்ததிகளுக்கு அறிவித்த இந்த பனையின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? தற்சார்பு
பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்த பனையின் வீழ்ச்சியால் இந்த பூவுலகு எதை சந்திக்க தயாராகிறது?
என்ற பலவாறான கேள்விகளுக்கு விடை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது பனைப்பயணம்.
1970களில் கதர் மற்றும் சிற்றூர்த் தொழில்குழுமம் மூலமாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் 10.2 கோடி பனை. தமிழகத்தில் மட்டும் 5 கோடி. அதிலும் குறிப்பாக தென்தமிழகத்தில் மட்டும் 2.5 கோடிக்கும் அதிகமான பனை இருந்ததாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். ஆனால் இன்றைய நிலை பனைமரத்தைக் கண்டாலே அடிமாட்டு விலைக்கு செங்கல் சூளைகளுக்கு விறகாக தறிக்கப்படும் அவலம். காரணம்?
1985-86ம்
ஆண்டு நிலவரப்படி தேசிய அளவில் சுமார் 7 லட்சம் பேருக்கும், தமிழக அளவில் 5.87 லட்சம்
பேருக்கும் வேலைவாய்ப்புகளை இந்த பனைத் தொழில் அளித்து வந்துள்ளது. அதன்பின்னர் பனைக்கு
நேர்ந்த சோகம் நாடறியும். கள் இறக்க தடை, பனை ஏறிகளுக்கு போலீசாரின் நெருக்கடிகள்,
தொந்தரவுகள், அரசின் ஒத்துழைப்பு குறைந்து போனது ஆகிய இன்னபிற இடையூறுகள் பனை வாழ்வியலை
அடியோடு முடக்கிப் போட்டது. பனையை பராமரிக்கக் கூட விதியற்றுப் போய் விறகுக்கு விற்கலாகினர்.
செங்கல் சூளைகளின் எரிபொருள் மூலதனமே பனைகள்தான் என்றாயிற்று.
வருடம்
முழுவதும் பலன்தரும் தென்னை மரங்களையும், தென்னை விவசாயிகளையும் காப்பாற்ற கோடிக்கணக்கில்
செலவிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக பல்வேறு ஆராய்ச்சிகளையும், தொழில்
அபிவிருத்தி சாத்தியக்கூறுகளையும் கண்டறியும் இந்த அரசு, பனைக்கு மட்டும் பாராமுகம்
காட்டிவிட்டது. தென்னை விவசாயிகள் நலன்காக்க நீராபானத்துக்கு அனுமதி வழங்கிய அரசு,
பனையில் இருந்து ”கள்” இறக்க இன்றளவும் மனமிறங்காமல் பனைத்தொழிலாளர்களின் வாழ்வை புறந்தள்ளி
விட்டது.
இத்தனைக்கும்
பனை விவகாரத்தில் கொடிய வேதனை என்னவெனில் பனைதான் தமிழ்நாட்டின் மாநில மரம். தேசிய
கொடிக்கு அளிக்கும் மரியாதைக்கு நிகரான மதிப்பை பெற வேண்டிய மரம். தேசிய சின்னங்களை
பழிப்பது குற்றம், அழிப்பது குற்றம், அவமதிப்பதும் குற்றம். ஆனால் மாநில சின்னம் என்ற
அந்தஸ்தைப் பெற்ற பனையை வதம் செய்வது குற்றத்தின் பட்டியலில் கூட இடம்பெறாதது வேதனையின்
உச்சம்.
இன்றைய
சூழலில் சென்னை சொல்லொண்ணா தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கிறது. பாக்கம் என இறுதிப்பெயரிட்டு
அழைக்கப்படும் ஏரிகளையெல்லாம் வீட்டு மனைகளாக்கி, அதில் முன்னோர்கள் நீர்நிலைகளை பாதுகாத்து
எதிர்கால சந்ததியினருக்காக நட்டுவைத்த பனைகளையெல்லாம் வேறோடும் வேறடி மண்ணோடும் பிடுங்கி
வீசியதின் விளைவு குடிப்பதற்கு, கழுவுவதற்கு என எதற்குமே தண்ணீர் இல்லாத பொட்டல்காடாகிப்
போய்விட்டது. ஊரைச்சுற்றி தண்ணீர் (கடல்நீர்) நின்றாலும் சென்னைவாசிகளின் தாகம் தீர்க்க
முடியவில்லை.
இத்தனை
ஆண்டுகாலமாய் தண்ணீர் அரசியல் மூலமாக தமிழக மக்களை பிரித்தாண்ட தலைநகர அரசியலின் ஜம்பம்
இப்போது பலிக்காமல் போய்விட்டது. ஆண்டாண்டு காலமாய் கொடிய தண்ணீர் பஞ்சத்தோடு போராடிய
பிற மாவட்டத்து மக்களின் நிலைமையை சென்னை மக்கள் கடந்த சில நாட்களுக்குள் கண்டுணர்ந்து
விட்டார்கள். ஏட்டளவில் படித்த ”நீரின்றி அமையாது உலகு” என்ற பழமொழியை நேரில் ருசித்து
விட்டார்கள்.
நீர்
ஆதாரத்தைப் பாதுகாக்க நீர்நிலைகளைச்சுற்றி பனை, இடிதாக்காமல் இருக்க குடியிருப்புகளின்
அருகே இடிதாங்கிகளாய் பனை, மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஓலைகளின் தேவைக்காக பனை,
விறகுத்தும்புகளுக்காக பனை, நுங்கு, பதநீர், கள்ளு, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு,
பனங்கூழ், பனங்கிழங்கு என உணவுக்கும், தும்பு, தூரிகை, கழிகள், வரிச்சல், பனையோலைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், சமையல் கருவிகள்
உள்ளிட்ட பயன்பாட்டு பொருட்களுக்கும் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளுக்காக
தற்சார்பு பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்ததே இந்த பனைதான்.
யானை
இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி யானைக்கு பொருந்துகிறதோ
இல்லையோ பனைக்கு சாலப்பொருந்தும். அடி முதல் நுனி வரை எண்ணற்ற பயன்களை மானுடத்திற்கு
வாரி வழங்குகிறது என்றால் இதனை தாவரம் என்பதை விட மானுடவரம் என்றுதான் ஒப்பிட முடியும்.
இத்தனை மகத்துவமும் தொன்றுதொட்டு இலக்கியங்கள் வாயிலாகவும், நேரடி அனுபவங்களின் மூலமாகவும்
தெரிந்தும், அரசு தரப்பில் தெரியாதது போல காட்டிக் கொள்வதும், பனைத் தொழிலின் வளர்ச்சியை
புறந்தள்ளுவதும் புதிராக உள்ளது.
பனையேற்றம்
என்பது பருவ காலத்தொழில்தான். நெல்லை, தூத்துக்குடி தொடங்கி ராமநாதபுரம் வரை தென்மாவட்டங்களில்
ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலும், சேலம், தர்மபுரி போன்ற வடமாவட்டங்களில் ஏப்ரல்
முதல் அக்டோபர் வரையிலும், கேரளமாநில எல்லையை ஒட்டிய குமரி மாவட்டத்தில் ஆகஸ்டு தொடங்கி
மார்ச் மாதம் வரையிலுமாக இந்த பருவக்கால தொழில் நடக்கிறது. பிற மாதங்களில் இந்த தொழிலாளர்களின்
நிலைமை சொல்வதற்கில்லை. 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத்தொழிலாளர்கள் வறுமைக்கோட்டிற்கு
கீழ்தான் வசிக்கிறார்கள்.
உணவுப்பொருட்கள்
அல்லாத பனைப்பொருட்கள் உற்பத்தி செய்தல், நேரடி சந்தை வாய்ப்புகள், போதிய முதலீடு இல்லாமை,
தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவது போன்றவை பனைத் தொழிலை அழிவைநோக்கி இட்டுச் செல்கின்றன.
புதிய தொழிலாளர்களை ஈர்க்க முடியாமல் மெல்ல மெல்ல பனைத்தொழில் நலிந்து கொண்டே செல்கிறது.
பனையை வைத்து அரசியல் செய்தவர்கள் எல்லாம் பதவிகளை வைத்து வளர்ந்து விட்டனர். பனைத்
தொழிலாளர்கள் மட்டும் அதலபாதாளத்தில் தத்தளிக்கிறார்கள். அடுத்த சந்ததிக்கு இந்த தொழிலே
தெரியாமல் மாற்றுத் தொழில்களுக்கு தடம்மாற்றி விடப்படுகிறார்கள்.
பனையின்
அழிவு என்பது மக்களின் அழிவு என்பதை அரசு நிர்வாகம் உணரும் வகையில் தண்ணீர் பஞ்சத்துக்கு
தீர்வு என்பது கானல் நீர்தான். இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளில்
பனையின் உணவுப் பொருட்கள், உணவிலிப்பொருட்கள் என பலவற்றின் வாயிலாகவும் உடல்நலத்திற்கோ,
மனித சமுதாயத்திற்கோ கேடுவிளைவிக்காமல் பொருளாதார ஏற்றத்திற்கு வழிவகை செய்யும் நிலையில்,
பனையோடு ஒன்றித்து ஆதிகாலம் தொட்டு பயணிக்கும் தமிழர் வாழ்வியல் இன்று அதனை புறக்கணிப்பது
வருத்தத்திற்குரியது.
பனை
செழிக்க மழை செழிக்கும், மழை செழிக்க நிலம் செழிக்கும், நிலம் செழிக்க ஊர் செழிக்கும்,
ஊர் செழிக்க மனை செழிக்கும். இதனை உணருங்கால் நாடே செழிக்கும். எனவே, பனைத் தொழில்
அழியாமல் பாதுகாக்க அரசு முனைப்பு காட்டி மாநிலச்சின்னமான பனைமரங்களை தறிப்பதற்கு தடையிடும்
சட்டத்தை அமல்படுத்த வேண்டும். செங்கல்சூளைகளுக்காகவும், பிற எரிபொருள் தேவைகளுக்காகவும்
பனையை தறிப்பவர்களுக்கு தண்டனை வழங்க வழிசெய்யும் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
எந்தவித
செயல்பாடுமின்றி வாரியத்தலைவர் என்ற அடைமொழியுடனான வெறும் பதவிக்காக உருவாக்கப்பட்டு செயல்படாத நிலையில்
உள்ள பனைத்தொழிலாளர் நல வாரியத்தை புணரமைத்து தொழில் மேம்பாட்டிற்கான புதிய வாரியம்
அமைக்க வேண்டும். பனைத் தொழிலாளர்கள் ஏற்றம் பெற திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக உடல்நலனிற்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத
பனங்கள்ளு இறக்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும். பனைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க
அரசு கொள்முதல் நிலையங்கள், அங்காடிகள் அமைத்து தொழில் அபிவிருத்திக்கு வழிவகை செய்ய
வேண்டும். பனைப்பொருட்களில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் நீண்டகாலம் கெடாமல் பாதுகாப்பாக
இருக்கும். எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர மாற்றாக பனைப் பொருட்களை பயன்படுத்த
உணவகம் உள்ளிட்ட அனைத்து தொழில் நிலையங்களுக்கும் உத்தரவிட வேண்டும்.
இது
போன்ற நோக்கங்களுக்காக பன்னெடுங்காலமாக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. கள் இயக்க
ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இதற்காகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறைவாசமே அனுபவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக, எதிர்கால சந்ததிக்காக பனைத் தொழிலை பாதுகாக்க நடத்தப்படும் இந்த
போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் அரசு செவி மடுத்து மாநில சின்னத்திற்கு மதிப்பளிக்க,
உயிரூட்ட ஆவண செய்ய வேண்டும்.
பா.ஜான்பீட்டர்,
பனை
ஆர்வலர்/ எழுத்தாளர்


No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.