11/16/2021

கதைக்களம் என்பது யாதெனின்?

சினிமா என்பது கற்பனைக்கும், கனவுகளுக்கும் வடிவம் கொடுக்கும் தொழிற்சாலை. அவரவர் எண்ணங்களுக்கேற்ப, மனதை பாதித்த சம்பவங்களுக்கேற்ப கதைக்களம் அமையும். பணத்தை முதலீடு செய்பவர்களின் பாதிப்பாக இருக்கலாம், படத்தை இயக்குபவரின் மனத்தோன்றலாக இருக்கலாம், கதாசிரியரின் கற்பனை ஓட்டமாக இருக்கலாம். உண்மைச் சம்பவமாக இருக்கலாம்.

ஆக ஏதோ ஒரு பாதிப்பின் வெளிப்பாட்டை தனது கற்பனைகளின் மீது ஏற்றி காட்சி வடிவம் கொடுக்கப்படுகிறது. புலவர்கள் பாட்டில் ஏற்றிக் கூறுவது போல, மிகைப்படுத்துதல் என்பது இங்கே அவசியமாகிறது. சம்பவத்திற்குரியவர் சாமானியராக இருந்தாலும் கதைக்களத்தில் அவரே கதாநாயகன் என்பதால் அவருக்கான கதாபாத்திரம் சில பல இத்யாதிகளோடு மெருகேற்றப்படுகிறது.

ஆரம்ப கால தமிழ் சினிமாக்களில் நீங்களே கேட்டிருக்க வாய்ப்புண்டு… என்ன செட்டியாரே… முதலியாரே…. என்ன பிள்ளைவாழ் என்றெல்லாம் பல கதாபாத்திரங்களின் குரல்கள் இன்னமும் நமது மனதிற்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எளியவர்களை மட்டப்படுத்தும் சம்பவங்களும் அதில் காட்டப்படத்தான் செய்திருக்கின்றன. கீழ்நிலை மக்களை ஜமீன்தாராக வரும் நம்பியார், வில்லன்களாக தோன்றும் எம்.ஆர்.ராதா, அசோகன், வீரப்பன் ஆகியோர் உங்களுக்கெல்லாம் எதற்கடா படிப்பு? எங்களுக்கு வேலை செய்யத்தானே பிறந்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் வசன உச்சரிப்புகள் இருந்தனவே.

அந்த செட்டியார், முதலியார், பிள்ளைவாழ் கேரக்டர்களையும் சாமானியக் குடியில் பிறந்து சவுக்கால் வெளுத்து வாங்கிய எம்ஜிஆர், சிவாஜி போன்ற கதாநாயகர்கள் அந்த இனத்தவரை அவமதித்து விட்டார்களா? என்றால் இல்லை. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சினிமாவில் தோலுரித்துக் காட்டினார்கள். அதனை தவறு என வாதிட்டார்கள். ஏழை பணக்கார்கள் என்பதையெல்லாம் தாண்டி, சாதி மதங்களை கடந்து அனைவரும் சமம் என காட்டினார்கள்.

பல தலைவர்களின் தியாகங்கள், அரசியல் நகர்வுகள், போராட்டங் களுக்கு இடையில் சினிமாவும் தன் பங்குக்கு ஆற்றிய விழிப்புணர்வு திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்று எல்லோரும் எல்லாம் பெறத் தொடங்கி இருக்கிறார்கள். இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டது. தீண்டாமை தவிர்க்கப்பட்டு வருகிறது. கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை பெற்று முன்னேறி வருகிறார்கள். ஆக முந்தைய காலக்கட்டங்களை விட  கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலப்பல. அதற்கு அமைத்த அடித்தளங்களில் சினிமாத்துறையும் ஒன்று.

எடுக்கின்ற திரைப்படங்களையெல்லாம் குறைகூறியிருந்தால் சமூக மாற்றங்களுக்கான திரைப்படங்கள் பெரும்பாலும் பெட்டியில்தான் உறங்கியிருந்திருக்க கூடும். தேவர் மகன் என்ற படம் வந்திருக்காது. உன்னால் முடியும் தம்பி என்ற படம் ரிலீசாகி இருக்காது. இது நம்ம ஆளு என்ற படம் இதுவரை வெளிவந்திருக்காது.

தேவர் இனத்தை மையப்படுத்துவது போல படம் எடுத்திருந்தாலும் எல்லோரும் கோவிலுக்குள் செல்ல லாம் என்பதுதானே அப்படத்தின் நீதி. அங்கே தேவர் இனம் அவமதிக்கப் பட்டதா? சவரம் செய்யும் சாதியில் முளைத்தவர் என்றாலும் பூநூல் அணிந்து மந்திரம் ஓத முடியும் என்று தானே இது நம்ம ஆளு படத்தில் சொல்லப்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயில் தீட்டு என்பது ஏது என்பதை உரக்கச் சொன்னார்களே? நாயகன் படத்தில் நாயக்கர் கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்த கமலஹாசனை படத்தின் முடிவில் என்ன செய்தார்கள்? அப்படியானால் அந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டதா?

எதற்கெடுத்தாலும் கொடி பிடித்திருந்தால் அந்த கதைக்களங்கள் சொல்ல வந்த உண்மைச் சேதி நம்மை வந்து சேர்ந்திருக்காது. ஒவ்வொரு படத்தயாரிப்பாளரும் கட்சி தலைவர்களுக்கு பதில் சொல்லவும், மான நஷ்ட ஈடு வழங்கவுமே நேரமும், பணமும் சரியாக போய் இருக்கும்.

அதற்காகத்தான் ஒரு படம் எடுக்கும் போது இறுதியில் அதற்கான நீதியையும் தருகிறார்கள். கதைக்களம் எவ்வாறாக நகர்ந்தாலும் நீதி என்ன சொல்லப்படுகிறது என்பதில்தான் கதைக்களத்தின் வெற்றி என்பது அமைந்திருக்கிறதே தவிர, யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவே மெனக்கெட்டால் அந்த திரைப்படம் பேசப்படாமல் போயிருக்கும்.

சாதிய வன்மத்துடன் படம் எடுப்பது தவறுதான். சாதிய வன்மங்களை அழித்தொழிக்கும் படங்கள் என்றால் வரவேற்க வேண்டியதுதானே. ஆட்சிப் பொறுப்பில் ஏற நினைக்கும் அனைத்து கட்சிகளும் செய்ய வேண்டியதும் அதுதானே. இதில் எங்கிருந்து சாதீய ரீதியான பாசம் வருகிறது. ரோசம் வருகிறது. ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்தால் யாரேனும் ஆட்சிப் பொறுப்பில் ஏறிவிடலாகுமா?

சினிமாவில் சாதி அரசியலும், சாதி அரசியல்வாதிகளால் சினிமாவும் சூழப்பட்ட பிறகே இதுபோன்ற வன்மங்கள், வக்கிரங்கள் அதிகமாகிப் போனது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லோரும் தாங்கள் சார்ந்ததாக சொல்லிக் கொள்ளும் சமுதாயத்தை வீரமிக்கதாக, விவேகமிக்கதாக, பணபலம் மிக்கதாக மிகைப்படுத்திக் கொள்ளவே பார்க்கிறார்கள்.

பல் குத்தும் குச்சி தொடங்கி மனிதர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சின்னமாக கொண்ட ஒரு கட்சி இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிப் பெருக்கங்களின் தவறே தவிர, காட்சிப்படுத்துதலில் தவறில்லை. எல்லோரது வீடுகளிலும் எல்லாவிதமான பொருட்களும் இருப்பதற்கான சூழல் வந்து விட்டது. ஒரு காலத்தில் நடுநிலையும், அதற்கு மேல்தட்டில் வசிப்பவர்கள் வீட்டில் மட்டுமே தொங்கிய தினசரி காலண்டர்கள் கூட எல்லோரது வீடுகளிலும் சுவருக்கு ஒன்றாக தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கொண்டைக்கும், மண்டைக்கும் பின்னால் என்ன இருக்கிறது? என்பதை பார்த்து பார்த்து படம் எடுக்க நேரிட்டால் அந்த படம் படமாக இருக்காது. வானத்தில் உள்ள சந்திரனும், நட்சத்திரமும் தான் பல நாடுகளின், பல மதங் களின், பல சாதிகளின் சின்னமாக இருக்கிறது. கசிந்துருகும் காதல் காட்சிகளில் வானமும் சந்திரனும், நட்சத்திரமும் அவமதிக்கப்படுகிறது என்று நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும். சாதிய வன்மங்களை புறந்தள்ளும் அதே வேளையில் படைப்பு சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது திரைத்துறையில் அவசியமானது என்றே கொள்ளப்படுகிறது.

அரசியல் என்பதை மக்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துங்கள். சினிமாவை வைத்து அரசியல் என்பது படைப்பு சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டையாகி விடும். நடிப்பை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பாக மாறிவிடும். சாதீய அரசியல் நடத்த விரும்பினால் ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டும் என்ற கனவை மறந்து விட வேண்டியதாகி விடும். திருந்தி விடுங்கள்..!

பா.ஜான்பீட்டர், இதழாளர்

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending