11/19/2021

நமக்குள் ஒரு “கலாரசிகன்”

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரசிகன் ஒளிந்திருக்கிறான்... பிறப்பில் இருந்து இறப்புவரை வயதுக்கேற்ற ரசனைகள் இருக்கின்றன. வாலிப காலத்தில் இருக்கும் ரசனை வயோதிக காலத்தில் வேறுதிசையில் திரும்புமே தவிர நின்றுவிடுவதில்லை. பொதுவெளியில் அதனை காட்டிக் கொள்வதில்தான் சற்றே யாவருக்கும் தயக்கம். கவிதைகளில் புலம்மிகு கவிஞர்கள் என்று பெயரெடுத்தவர்கள் எதையும் எந்நேரத்தும் வார்த்தைகளால் வர்ணித்து கைதட்டல் பெற்று விடுகிறார்கள். சமூகம், மரியாதை, பதவி என்ற பலவற்றிற்கும் அச்சப்பட்டு ரசனைகளை மனதில் புதைத்துக் கொள்பவர்களே இதில் அதிகம். 

தியேட்டரோ, திருவிழாவோ, காதுகுத்தோ, திருமணமோ, வெற்றி விழாவோ, சாவு வீடோ உணர்வுகளுக்கு தக்கவாறு சத்தம்போட்டு விசிலடிக்க உணர்வுகள் பரபரக்கும், நடுரோட்டில் நடனமாட மனம் எத்தனிக்கும், சத்தமிட்டு பாட்டு பாட மனம் ஆர்ப்பரிக்கும்.. சந்தோஷத்தின் உச்சத்தில் ஓ“வென கத்தி கூப்பாடு போட மனம் துடிக்கும், இஷ்டத்துக்குரியவர்களை கட்டிப்பிடித்து கொண்டாட கற்பனைக் குதிரைகள் கட்டுக்கடங்கா வேகத்தில் அடம்பிடிக்கும்.... ஆனால் ஏனோ செய்வதில்லை.

தன்னிலை மறந்து இதையெல்லாம் செய்பவர்களோ யாரைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. யாருக்காகவும் நான் வாழவில்லை... மற்றவர்களின் விமர்சனங்களும் என்னை பாதிப்பதில்லை... தான் இப்படித்தான் என இந்த சமுதாயத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து விட்டார்கள்.

நல்லவன், பண்புள்ளவன், மரியாதைக்குரியவன் என ஆரம்பம் முதலே மக்களிடத்தில் பதிவு செய்ய முயற்சித்தவர்கள் அந்த பக்கமும் இருக்க முடியாமல், இந்த பக்கத்திற்கும் வர முடியாமல் இருதலைக்கொள்ளியாக தத்தளிக்கிறார்கள். சந்தோஷத்தைக் கூட தங்களது மனவிருப்பத்தின்படி கொண்டாட முடியாமல் மனதிற்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.

பார்த்தவுடன் வசீகரிக்கும் அழகுடன் கண்ணில் படும் பெண்களையோ, ஆண்களையோ அதனதன் எதிர்பாலினத்தவரை ரசிப்பதில் கூட இதுமாதிரியான உள்ளே, வெளியே ஆட்டங்களும் தடுமாற்றங்களும் மனதை ஆட்டிப்படைப்பதுண்டு... ரசனையை குடும்பத்தினரிடமே பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு... பார்வைகளை மட்டுமே திருப்பி மனதை அடக்கி ஒடுக்குபவர்களும் உண்டு... அதற்காக யாரைப்பார்த்தாலும் வழிந்து தீர்ப்பவர்களையும், ஜொள்ளு பார்ட்டிகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டாம். அவர்களது உலகமே இச்சையும், மனம்போன போக்கில் சல்லாபமும் நிறைந்ததுதான்...

ரசிக்கத்தான் கண்கள், அடையத்துடிப்பதில்தான் இருக்கிறது வக்கிரம் என்ற சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வாரும் உண்டு.... எதிர்ப்பாரும் உண்டு... அப்படியானால் இதில் எதை தேர்வு செய்வது என்பதுதான் தடுமாற்றவாதிகளுக்கு குழப்பம் மேலிடுகிறது.

ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோவில்களில் உள்ள சிலைகளில் தங்களது திறமைகளையெல்லாம் கொட்டி தத்ரூபமாக, தத்ரூபத்தையும் மிஞ்சிய கற்பனையைக் கொட்டித் தீர்த்திருந்தார்கள். ரசிக்கத் தெரிந்த சிற்பியால்தானே அப்படியொரு சிலைகளை வடிக்க முடியும். அப்படியானால் பெண் சிலைகளை அழகு முகத்தோடும், காலடி தொடும் நீண்ட கூந்தலோடும், தேகங்களை வருடி நிற்கும் நகைகளோடும், வாளிப்பான உடலோடும், பெரிய மார்பகங்களோடும், மெல்லிய இடையோடும், பருத்த தொடையோடும், விரல்களைத் தாண்டிய நகங்களோடும் ரசித்தது சிற்பியின் தவறா? அவரது வக்கிர எண்ணங்களா? அல்லது கலைவடிவமா?

ஒரு பெண்ணின் அழகு எப்படி இருக்க வேண்டும்? அங்க லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற அவரது கற்பனைகளாகக் கூட இருக்கலாம், அல்லது அக்காலத்துப் பெண்டிர் அத்தனை அழகோடும் ஆரோக்கியத்தோடும், உடலைப் பேணுபவர்களாக இருந்திருக்கலாம். அடுத்தடுத்த சந்ததிகள் இப்படி தங்களது உடல்நலணை பேண வேண்டும் என்பதற்காகக் கூட அர்த்தம் கொள்ளலாம்.

ஆண் சிலைகளையும் அவ்வாறேதானே வடித்தார்கள். அகண்ட மார்பும், வீரம் புடைத்த அங்கங்களும், முகத்தில் கிடா மீசைகளும், உயர்த்திய புருவங்களும், வெறிப்பார்வையும், வீரத்தின் அடையாளங்களும், விலங்குகளோடு போரிடுதலுமாக ஆண்களுக்குரிய லட்சணங்களையும் அங்குலம் அங்குலமாக சிலைகளிலே தீட்டியிருக்கிறார்கள். இப்படித்தான் ஆண்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் லயிக்கும் விதமாகத்தானே அந்த சிலைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளைத்தாண்டி சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.

முழுக்கவும் ஃபாஸ்ட்புட் காலத்தில் ஒபிசிட்டி என்ற பிரச்னையோடு உடற்பயிற்சி நிலையங்களுக்கும், எடை குறைப்பு நிலையங்களுக்கும் படையெடுப்பதை முன்கூட்டியே கணித்திருந்தார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். கணவன் மனைவி தங்களை பரஸ்பரம் ரசிக்கவும், ரசித்ததை சொல்ல தயங்குவதும் மறுப்பதுமே வாழ்க்கையை கசக்கச் செய்கிறது. இன்னும் பலருக்கு காதலியாக, காதலனாக இருக்கும் போது இருந்த ரசனை மணவாழ்க்கைக்குள் புகுந்த பின் இருப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்த ரசனை பிற்பாடு மாயமாவதின் விளைவு அது.  நம்மை ரசிப்பதற்கான ஈர்ப்பதற்கான களத்தையும் நாம்தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.

ஆக... ரசனை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வரைதான் வாழ்க்கை என்பதுவும் வாழும் காலம் வரை ரசிப்பதற்கான சுவாரஸ்யத்தின் களமாக இருக்கும். ஆயுள்கால அடுத்த நாட்களின் தேடலாகவும் இருக்கும்.  ரசனை இல்லா மனமும், வாசனை நுகரா நாசியும் நோயுற்றதுதான். ரசித்து வாழுங்கள்... ரசனையோடு வாழுங்கள்..!

-கடையத்தான்

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending