12/17/2021

சாதிக்காரன் - பகுதி 4 (இதழாளர் ஜே.பி.)

வந்தாரை வரவேற்று உபசரிப்பதை பண்பாடாகக் கொண்ட இம்மண்ணில் வந்தேறிகளாய் வந்த கூட்டம் அந்நிய மண்ணில் அடிமைகளாகவும், அகதிகளாகவும் இருந்த போது தங்களை மேற்கொண்ட ஆளுமையை பார்த்து பாடனுபவித்து கற்றுக் கொண்டு இங்கே இறக்குமதி செய்தார்கள். ஆரம்பத்தில் நட்புறவாடிய சொற்ப கூட்டம் பின்னாளில் மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கிய போது அவர்களின் டாம்பீக ஆளுமைக்குள் இம்மண்ணின் மக்கள் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.

வந்தேறிகள் உரைக்கும் தர்மப்படி எடுத்துக் கொண்டால் கூட சத்திரிய வருணத்தில் கோபமும், வீரமும், ஆளுமையும்தான் பிறவிக்குணம் என்றால் இந்திய நிலப்பரப்பு முழுவதுமே சத்திரிய குடிகளால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பதை தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டிருக்கும் கல்வெட்டுக்கள், புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல், புதைந்து போன நாகரீகங்களின் அகழாய்வு மீட்பு ஆகியவை பறைசாற்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

ஒவ்வொரு இனக்குழுவிலும் தங்களது இனத்தை அந்நிய படையெடுப்பில் இருந்தும், விலங்குகளின் தாக்குதல்களிலும் இருந்து காப்பதற்காக போராளிகளும், போர் வீரர்களும், காவலாளிகளும் இருந்தார்கள் என்பதை இன்றளவும் மக்கள் கொண்டாடும் முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடுகள் சான்று பகிர்கின்றனவே. குடி, படை, காவல் இதுதானே இம்மண்ணின் பண்பாடாக பாராம்பரியமாக போற்றப்பட்டிருக்கிறது.

அப்படித்தானே சாதிகள் பாகுபாடின்றி மாடனும், இசக்கியும், சுடலையும் ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் சாமிகளாக்கப்பட்டு பீடங்களாக நிற்கிறார்கள். ஆண்டு தோறும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நினைவு நிகழ்வாக கொடை விழாக்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையல்களாக படைத்து வணங்கி வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்திய பரப்பு முழுவதுமே இயற்கை வழிபாடு மட்டும் இருந்த காலத்தில் எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டது சாதி? வந்தேறிகள் வந்திறங்கிய பின்பு தோன்றியதுதானே?

இனக்குழுக்களாக மண்ணின் குடிகள் வாழும் காலம் தொட்டே தத்தம் இனக்குழுவினருக்கிடையே ஒழுக்க விழுமியங்களில் ஒரே குடையின் கீழ் இருந்தாலும் அவர்கள் பேசிய மொழிகளாலும், அன்றாட புழக்க மற்றும் பழக்க வழக்கங்களிலும், பண்பாடுகளிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தன. விருந்துசரிப்பில் கூட வந்தோருக்கு தண்ணீர் வழங்குவது, நீராகாரம் வழங்குவது, மோர் வழங்குவது, பானகம் வழங்குவது என தங்களிடையே இருந்த வசதிகளைக் கொண்டு பரிமாறினர். அன்ன ஆகாரங்களிலும் நடை உடை பாவனைகளிலும் இனக்குழுவுக்கு தக்கவாறு, அவர்கள் செய்யும் தொழில்களுக்கு தக்கவாறு பண்பாடுகள் மாறுபட்டிருந்தன.

இதன் காரணமாக பெண் கொடுக்கல் வாங்கலைக் கூட இனக் குழுவுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டனர். இதற்கும் பலவாறான காரணங்கள் இருக்கத்தான் செய்தன. தங்களது வீட்டுப் பெண் மாற்று இனக் குழுவிற்கு செல்கையில் அவர்களது பழக்க வழக்கத்திற்கு தக்கவாறு மாறுவதற்குள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததும் ஒரு காரணம். இதனால் பெரும்பாலும் அடுத்த இனக்குழுக்களை நாடிச் செல்லாமல் இருந்தனர். இந்த இடைவெளியைத்தான் வந்தேறிகள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு படையலாக்கிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி வீர தீர சாகச செயல்களில் துணிவோருக்கு பெண்களை மனையாட்டிகளாகக் கொடுக்கும் நடைமுறையில் இருந்தே இந்திய நிலப்பரப்பு முழுமையுமே சத்திரிய இனமாக இருந்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.  பின்னாளில்தான் வருண பேதங்களால் பிரிக்கப்பட்டு சாதி அரசியலுக்குள் மக்கள் பிணை வைக்கப்பட்டனர் என்பதுவும் இறந்தகாலம் பகிரும் வரலாறு.  

இதைத்தானே திட்டாந்தரமாக “ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம்” என்று அம்பேத்கார் கூறியிருந்தார். எப்படியெல்லாம் மக்கள் துண்டாடப்பட்டனர், சாதியால் பிளவுபடுத்தப்பட்டனர் என்பதனை பக்தவச்சலபாரதி என்பவர் தனது “மானிடவியல் கோட்பாடு” என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். மனித இனமானது மரபுக் கோட்பாடு (traditional theory), தொழிற் கோட்பாடு (occupational theory), சமயக் கோட்பாடு (religious theory), அரசியற் கோட்பாடு (political theory), இனக் கோட்பாடு (racial theory), படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory) என ஆறுவகையான கோட்பாடுகளால் பிரிக்கப்பட்டனர் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆக சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல என்பது நிரூபணமாகிறது.

அப்படியானால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எங்கிருந்து பிறந்தன? என்பதை அடுத்த கட்டுரையில் விவரிப்போம்….

===============================

சாதிக்காரன் வலிய பின்தொடருவான்

===============================

இதழாளர் ஜே.பி.


 

 

 

 


No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending