எந்த சாதிக்காரன் அந்த சாதியில் உள்ளவனை, எத்தனை பேர்களை வணிக ரீதியாக முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதனை உற்று நோக்குங்கள்... அந்த எண்ணிக்கை மிக சொற்பமே... அது பெரும்பாலும் நெருங்கிய உறவுக்காரனாக இருந்திருப்பானே தவிர பொத்தாம் பொதுவான சாதிக்காரனாக இருந்திருக்க மாட்டான்.
தனக்கு
இது பாதுகாப்பு, சுற்றும் சூழ இருந்தால் பலம், இறந்தால் புதைக்க இடம் வேண்டும், கோவிலில்
கொண்டாட உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் சாதியத்தை அணுகுகிறார்களே தவிர சுய ஆதாயம்
பேணும் சாதிய தலைவர்களை கொண்டாடுவதற்காக அல்ல.
அப்படி
பார்த்தால் ஒவ்வொரு கட்சியிலுமே அனைத்து சாதியினரும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஒரு
சாதியை குறித்து பேசியதும் சாதிய ரீதியான கட்சியை நடத்துபவர்கள் பொங்கி எழுவார்களே
தவிர, ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் அதே சாதியை சேர்ந்தவர்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்கு
கட்டுப்பட்டு இருப்பார்களே தவிர, கட்சியையும் மீறி சாதிய பாசத்தையோ, உணர்வுகளையோ வெளிக்காட்டுவதில்லையே
ஏன்? அவர்களுக்கு சாதிய உணர்வு இல்லையா? பாசம் இல்லையா?
அப்படி
இல்லை... அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க சாதிய அரசியல் என்று.
தங்களைப் போன்றே அரசியல் நடத்துவதற்கு இதுவும் ஒரு உக்தி என்று.
சரி...
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்... ஆண்டசாதி என்ற பெருமையை பேசுபவர்கள் யார்? எந்த
சாதியை சேர்ந்தவர்கள்? ஏறக்குறைய அனைத்து சாதியினருமே ஆண்டசாதி பெருமை பேசுபவர்கள்தான்.
அதில் ஏதேனும் பாகுபாடு இருக்கிறதா? எல்லாருமே தங்களை மன்னர் வகையறாக்களாகத்தானே வரையறுத்துக்
கொள்கிறார்கள்.
சேர,
சோழ, பாண்டிய மன்னர் வகையறாக்கள் தாங்கள்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால்,
அவர்கள் யாரென்றே முழுமையான வடிவத்தை ஆராய்ச்சியில்தான் வைக்க முடிகிறதே தவிர, இவர்கள்தான்
என்று திட்டாந்தரமான முடிவுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஆராய்ச்சியாளன்
இருக்கிறான். அவன் தன்னை அந்த அடையாளத்திற்குள் பிணைத்துக் கொள்கிறான். அதற்கு ஒரு
வரலாற்றை உதாரணமாக முன்னிறுத்துகிறான். சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என நில எல்லைகளை
பிரித்து ஆட்சி செய்தார்களே ஒழிய இவர்கள் சொல்லும் பெயர்களில் தங்களை நிலைநிறுத்தாமல்
போனது ஏன்? என்பதை எந்த சரித்திர ஆராய்ச்சியாளரும் சொல்லவில்லை.
ஒரே
சாதிக்காரனாக இருந்தாலும் பல வேளைகளில் பெண் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தம் செய்து
கொள்வதில்லையே ஏன்? நல்ல வேலைகளில் வரண்கள் இருந்தாலும் திருமணம் செய்து கொடுக்க மறுப்பது
ஏன்? எதிர்பார்ப்புக்கு ஏற்ற நல்ல குணங்கள் இருந்தாலும் மணமுடித்துக் கொடுப்பதில் தயக்கம்
காட்டுவது ஏன்? அது ஒரு புறம் இருக்கட்டும். வீட்டின் அந்தம் வரையல்ல வீட்டு முற்றத்தில்
கூட சக சாதிக்காரர்களையே ஏற்றுவதில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேர்
அதனை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்கள்?
அப்படியானால்
சாதி எங்கே இருக்கிறது? எதில் ஒளிந்திருக்கிறது? என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பணத்திலும், வசதியிலுமே ஒளிந்திருக்கிறது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும் வெளித்
தோற்றத்தில் மனம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. கீழ் சாதிக்காரன் என்று யாரைக் குறிப்பிடுகிறார்களோ,
அவர்கள் பணம் பதவி என மேலோங்கி நின்றால் உயர்சாதிக்காரன் என்று வெளிஉலகத்தில் பெருமை
பீற்றிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி சேவகம் செய்ய கிளம்பி விடுகிறார்களே? அது எப்படி
சாத்தியம்?
அப்படியானால்
பணம் இல்லாதவன்தானே கீழ்சாதி. பணமிருப்பவன் மேல் சாதி என்பதுதானே இங்கே எதார்த்த சித்தாந்தம்.
கோடிகளில் புரள்பவர்களும், பன்னாட்டு தொழில் செய்யும் அதிபர்களும், அவர்கள் வீட்டுப்
பிள்ளைகளும் சாதி வேற்றுமை பார்க்காமல் திருமண பந்தத்திலும், சம்பந்தத்திலும் அடியெடுத்து
வைக்கிறார்களே? அவர்களை ஏன் இந்த சமூகமோ, அவர்கள் சார்ந்த சாதிகளோ குற்றந்தீர்ப்பதில்லை.
சாதிக்கலப்பில் ஈடுபட்ட அவர்களிடமே சென்று கோவில் விழாக்களுக்கும், இன்ன பிற பொது நிகழ்வுகளுக்கும்
சாதி பேசித்திரியும் தலைவர்களே தங்களது தேவைக்காக நன்கொடை கேட்டு படியேறுகிறார்களே?
நன்கொடை கேட்கச் செல்லும் போது சாதி தடுக்கவில்லையா? இது எத்தகைய உணர்வு?
சாதாரணக்காரன்
வீட்டில் மட்டும் சாதி வாழ்கிறதே? ஆணவக் கொலைகளும் இன்றும் நடந்து கொண்டிருக்கிறதே?
என்றால் சாதிக்குள் ஒரு சதி அரசியல் இருப்பது யாருக்கும் தெரியாமலா இருக்கிறது? அவனுக்கு
மட்டும் சாதிய உணர்வு சோற்றில் உப்பு சேர்க்கப்படுவது போல ஒவ்வொரு நடைமுறையிலும் சாதி
என்பது தவறாமல் ஊட்டப்படுவதும், உசுப்பேற்றுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே ஏன்?
ஆண்ட பரம்பரை, அடிமைப்பரம்பரை என்ற வித்யாசம் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அதன்சாரம் தெரிந்தோ தெரியாமலோ கடத்தப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.
வெள்ளையும், கருப்புமே சாதி வேற்றுமையாக பார்க்கப்படும் வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தால் கூட, சாதி பார்த்து பழகுவதும், சாதிய வட்டத்தை தேடிப்பிடித்து அதற்கு வாழச் சொல்வதுமாக காலில் ஒட்டியிருக்கும் சாதி என்னும் சகதியைக் கழுவாமல்தான் கடல் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கருப்பு, வெள்ளை முதலாளிகளுக்கு சம்பாதிக் கொடுக்க சாதிகள் பாரபட்சமின்றி ஒரே அலுவலகத்தில், ஒரே ஊதிய விகிதத்தில் ஒரேவித வசதிகளோடு ஏசி அறைக்குள் ஒரே சுவாசக் கலப்போடு பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு வேளை நோய்த் தொற்று கிருமிகள் சாதி பார்க்காமல் ஒருவனிடம் இருந்து மற்றொருவனிடம் இருந்து தொற்றிக் கொண்டு உலகையே அவ்வப்போது அச்சுறுத்துகையில், ஏசி அறைக்குள்ளான சகவாசத்தில் சுவாசங்கள் கலப்பதில் சாதி மட்டும் கலக்காதோ என்னவோ?
==========================
சாதிக்காரன் வலிய பின்தொடர்வான்
==========================
இதழாளர் ஜே.பி.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.