நாகரீகம் மறுக்கப்பட்டவர்கள் தாழ்ந்தவர்களாகவும், ஏனையவர்கள் நாகரீகஸ்தவர்களாகவும், கல்வி மறுக்கப்பட்டவர்கள் இழிகுடிகளாகவும் கற்றவர்கள் உயர்ந்தவர்களாகவும் பாவிக்கப்பட்டார்களே தவிர, ஆரம்ப காலம் தொட்டே சம வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்களும் சமகுடிகளாகவே இருந்திருப்பார்கள். இந்த உலகத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர்த்து இந்த சாதிய கொடுமைகள் பெரும்பான்மை பெறவில்லையே ஏன்? கடவுள் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் சாதியை அறிமுகப்படுத்தினாரா?
பின் எதற்காக சாதி என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்ற கட்டுக்கதை இங்கே விளம்பப்பட்டிருக்கிறது. வேதங்களையும் அவ்வாறே மரபுக்கோட்பாடாக இந்த சாதியத்தை வடிவமைத்ததன் உள்நோக்கம் என்ன? ஒருவர் பிழைப்பதற்காக மற்றவரை தாழ்த்துதல் என்பதுதானே இதன் ஆணிவேராக இருக்கக்கூடும். இதைத்தானே விவேகானந்தர் சுட்டிக்காட்டினார். மதங்களுக்கும் சாதிகளுக்கும் சம்பந்தமே இல்லை… சமுதாய அமைப்பே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்று உரக்கச் செப்பினார்.
ஆக வந்தேறிய கூட்டம் தங்களுக்கான சலுகைகளையும் அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உயர்ந்த சாதி என்ற இல்லாத ஒன்றை உருவாக்கி, அந்த கட்டமைப்பின் கீழ் குறிப்பிட்ட தொழில் செய்யும் மண்ணின் மக்களை அகப்படுத்தினார்கள் என்பதுதானே உண்மை. இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்த மக்களை செயற்கை தெய்வ வழிபாட்டிற்குள் புகுத்தி மதத்தின் பெயரால் சாதிகளை பிரித்து ஆட்சிக் கோலோச்சினார்கள். உழைக்காமல் உண்ணும் வழிமுறைகளையும் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்டார்கள்.
மதத்தின் பெயரால் யாரையெல்லாம் தீட்டுப்பட்டவர்கள் என வகைப்படுத்தினார்களோ, அவர்கள் கையால் விளைவித்த உணவுப் பொருட்களை உண்டு கொழுத்து அந்த மக்களை காலம் காலமாக அடிமைத்தளையில் இருந்து விடுவிக்காமல் பார்த்துக் கொண்டனர். பரம்பரைத் தொழில்கள் நிமித்தமாக இனக்குழுக்களாக வசித்த மக்களை பிறப்பின் அடிப்படையில் சமூக அமைப்பாய் மாற்றி, மெல்ல மெல்ல சாதி என்ற வக்கிரத்தை உட்புகுத்திய கொடூரங்கள் இலைமறை காயாய் நடந்தேறியதை மக்கள் அறியாமற்போனார்கள்.
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணனும், தோளில் இருந்து சத்திரியனும், தொடையில் இருந்து வைசியனும், பாதத்தில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்ற கட்டுக்கதையை புராணங்களில் இருந்து திரித்து வழங்கி பிறரை முன்னேற விடாமல் ஆட்சி பீடத்தின் அருகிலேயே அந்த(ண)க் கூட்டம் ஜபர்தஸ்த்தாக அமர்ந்து கொண்டது. மற்ற மூன்று வர்ணங்களை பிரித்தாளும் சூழ்ச்சி வாயிலாக கட்டமைத்து தங்களுடைய வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். உண்மையில் தொடை இடுக்கி்ல் பிறந்தவர்கள் மட்டுமே மனிதர்களாக இருக்க முடியும் என்ற எதார்த்தத்தை போதிக்க மனமும் இல்லை…
அப்படியானால் மனிதர்களையே நான்கு வருணங்களில் உள்ளடக்கிய பின்னர் சாதிகள் எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு வருணங்களுக்குள்ளும் எதன் அடிப்படையில் எந்தெந்த சாதிகள் சேர்க்கப்பட்டன? ஏன் பிராமண வருணத்தில் மட்டும் எவருமே சேர்க்கப்படவில்லை? இப்படியெல்லாம் மனித இனங்களை பிரித்தாள எங்கிருந்து இவர்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இனக்குழுக்களாக வாழ்ந்த மக்களுக்கு சாதி என்ற ஒன்று தேவைப்படாமல்தானே வாழ்ந்திருந்திருந்தனர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றளவும் விடைகள் இல்லை… விடைகளும் கொடுக்க முடியாது. அத்தனையும் பிரிவினை சூழ்ச்சி.
அந்தப்படியே நோக்கின் யார் சத்திரியர்? சத்திரிய பிரிவில் எந்தெந்த சாதிகள் உள்ளடக்கம்? நாட்டுக்காக வீரமாக போரிடக்கூடிய யாவருமே சத்திரியர் தானே! வீரமும் கோபமும் எப்படி ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமாகும்? உழைக்காமல் திண்பவனை விட, நிலத்தில் வியர்வை சிந்த பாடுபட்டு உழைப்பவனுக்குத்தானே உரம்பாய்ந்த தேகமும், வீரமும் சொந்தமாகக் கூடும். அப்படியானால் உண்மையான சத்திரியர்கள் அவர்கள்தானே? விளைவித்தவனை தீட்டுப்படுத்தி அவனை வியாபாரத்தில் புறக்கணித்தார்கள். வியாபாரத்திற்கென வைசியக்கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். வைசியக் கூட்டத்தில் யாரெல்லாம் உண்டு? இவர்கள் நிலைமை கீழிறங்கியும் பழக முடியாது… மேல்தட்டு என சொல்லிக் கொண்டவர்களுடனும் கலக்க முடியாது.
இந்த ஊரில் இருப்பவன் அடுத்த ஊரில் மேல் சாதி, அடுத்த ஊரில் மேல் சாதியாக இருப்பவன் இந்த ஊரில் கீழ் சாதி. ஆனால் எந்த ஊரானாலும் அந்த(ண)க்கூட்டம் மட்டுமே மேல் சாதி. அது எப்படி சாத்தியமானது? மதத்தால், சாதியால், மந்திரத்தால் தந்திரங்கள் செய்து செய்து மக்களின் சுதந்திரத்தை பறித்து வைத்திருந்தார்கள்… கேள்வி கேட்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வியல் சுதந்திரம் நசுக்கப்பட்டு எதிர்ப்பவர்கள் தேச துரோகிகளாகவும், மறுப்பவர்கள் சிறைப்பட்டும் மாண்டார்கள். காதலும் காமமும், உடையும் கூட மறுக்கப்பட்ட வரலாறுகள் மறக்க முடியாத சுவடுகளாக சோகங்களாக இருக்கத்தானே செய்தது. இதுதானே இன்றளவுமே நடக்கிறது.
உரிமைகளைக் கேட்கும் போராளிகளின் குரல்வளை நசுக்கப்பட்டுக் கொண்டேதான் சமகாலத்திலும் சட்டம் என்ற பெயரில் சித்ரவதைகள் தொடர்கின்றன.
இந்த நிலைமைக்கு மக்களும் ஒரு காரணம்… மக்களும் குற்றவாளிகளே… ஏன்?
==========================
சாதிக்காரன் வலிய பின்தொடருவான்
=========================
இதழாளர் ஜே.பி.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.