ஆரம்ப காலத்தில் முகநூல் மட்டுமே முகம் தெரியாத நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள அடிகோலியது. இப்போது வாயில் நுழையாத பேர்களில் எல்லாம் ஆண்டிராய்ட் மொபைல்களின் ப்ளேஸ்டோரிலும், ஆப்பிள் மொபைலின் ஆப்ஸ்டோரிலும் தினுசுக்கு ஒன்றாக செயலிகள் கடைவிரித்து விட்டன. வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டெலிகிராம், ஷேர்சாட், மோஜ், ஹைக், ஐஎம்ஓ, பொட்டிம், வீ-சாட், ஹாங்அவுட், கக்காவுடாக் இன்னும் பலப்பல. யார் எதைப் பயன்படுத்தி யாரோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிவதே பெரும்பாடுதான். போதிய தொழிநுட்ப அறிவு இல்லா பெற்றோர்களின் கண்களில் சுலபமாக மண்ணைத் தூவிவிட்டு கண்டபடி கண்ட செயலிகளை கண்டுபிடித்து இன்றைய தலைமுறையினர் கதைக்க தொடங்கி விடுகிறார்கள்.
சைபர் குற்றங்களின் பெருக்கத்திற்கும் தூபக்கால்கள் இவைகள்தான். கண்முன் திரியும் நண்பர்களையும், உறவுகளையும் கண்டுகொள்ளத்தவறிவிட்டு கண்ணால் காணாத நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள எதற்குத் துடிக்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. நாளாக பேசி பேசி நண்பர்கள் என்ற போர்வையில் நாகரீகத்துடனும், கண்ணியத்துடனும் தங்களைக் காட்டிக் கொண்டு ஊடுருவும் சமூக வக்கிர ஜந்துக்கள் மெதுவாக தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டும் போது அவர்களது மிரட்டல்களுக்கும், மானத்திற்கும் அஞ்சி மாண்ட உயிர்கள் ஏராளம் தாராளம்.
பணத்தை இழந்தால் கூட மீண்டெழுந்து விடலாம் என்று எண்ணினால் மானத்தை தொலைத்து விட்டு சமூக வலைதள வக்கிரக்காரர்களுக்கு அடிமையாக மாறி கூனிக்குறுகி அவர்கள் சொன்னதையெல்லாம் ரிமோட் பொம்மை போல இன்னமும் செய்து கொண்டி ருப்பவர்களின் நிலைமையை அவ்வளவு எளிதான வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
ஆரம்பத்தில் நட்பை பெறத்துடிக்கும் இதுபோன்ற கயவர்கள் Hi Sis, Hi Maam, Hi Thozhi என்றுதான் நுழைவார்கள். நட்பு வட்டத்தை அங்கீகரித்து சில நாட்களில்தான் எதிர்முனையில் இருப்பவர்களின் அழகை வர்ணிக்கத் தொடங்கி தங்களது சில்மிஷத்தை ஆரம்பிப்பார்கள். படிப்படியாக பேச்சில் மாற்றத்தைக் கொண்டு வந்து தங்களது பிடித்தவாறெல்லாம் அவர்களை ஆட்டுவிப்பார்கள். கடைசியில் தங்களுக்கான வக்கிர ஆசைகளுக்கு உடன்பட வைத்து அதனை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ காட்சிப்படுத்திக் கொண்டு மிரட்டி பணத்தை கறக்கவோ, கற்போடும் மானத்தோடும் விளையாடவோ தொடங்குவார்கள்.
இதற்கெல்லாம் உடன்பட்டு போகிறவர்கள் உயிரோடு மட்டுமே இருப்பார்கள். மற்றபடி கிட்டத்தட்ட நடைபிணமாகத்தான் வலம் வருவார்கள், எப்போது என்ன நடக்குமோ? குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எப்போது தெரியுமோ? என்ற மரண பீதியில்தான் நாட்கள் நகரும், அடிவயிற்றில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு நடப்பது போன்றதாகிவிடும் இவர்களது அந்தோ பரிதாப நிலைமை. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் பல குடும்ப பெண்களை பணத்திற்கு ஆசைகாட்டி விபசாரிகளாக வலம் வர வைத்திருப்பது சமீபத்திய நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிர்ச்சி செய்தியாக ஒளிபரப்பாகி இருப்பதுதான்.
சமூக வக்கிர கொடூரர்களைப் பொறுத்தவரை அவர்களது இலக்கு பாலினத்தை பொறுத்து ஆண், பெண், குடும்பப்பெண்கள், பள்ளி-கல்லூரி குழந்தைகள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. யார் சிக்கினாலும் அவர்களது நிலைமை அதோகதிதான். வீட்டில் திருடி இவர்களுக்கு இரையளிப்பதுவும், உடலை இரையாக்கிக் கொள்வதும்தான் அவர்களது அந்திம நிலைமை. உடன்பட மறுத்து உயிரைப் போக்கிக் கொண்ட கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களின் மரணங்கள் பல இன்றளவும் மர்மமான மண்ணிற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. உயிரைப்பறித்த காலன்களோ அடுத்து அடுத்து என யாரை விழுங்கலாம் என சாத்தான் போல வகைதேடிக் கொண்டுதான் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற செயலிகளை ஒரு நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு அந்த நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முழுவதுமாக அதனை அலசி ஆராய்ந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர்தான் அனுமதியை வழங்க வேண்டும். ஆனால் பணம் படுத்தும்பாடு எந்த அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா கிட்டத்தட்ட குப்பைத் தொட்டியாகத்தான் இந்த விஷயத்தில் இருக்கிறது. எந்த கண்காணிப்பும் இல்லை. பாதுகாப்பும் கேள்விக்குறிதான். விபரீதம் முற்றினால்தான் கொஞ்சமாக கண்விழிக்கும் தகவல்தொழில்நுட்பத்துறை. ஒரு செயலியை முடக்கிய பின்னர் வேறு பெயரில் அனுமதியை வாங்கிக் கொண்டு புறவாசல் வழியாக மீண்டும் அட்டூழியத்தை தொடங்கி விடுவார்கள்.
ஆக சமூக பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஒழிய இதற்கான தீர்வை எட்ட முடியாது. தேவைக்கு மீறிய தொழில்நுட்பத்தின் தேடலும், சமூக வலைதளங்களின் மீதான ஈடுபாடும், முகம் அறியாத நட்புக்களின் அவசியத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பதும் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகத்தான் அமைந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கண் முன் இருக்கும் எத்தனையோ குடும்ப உறவுகள் உங்களது ஆறுதலான பேச்சுக்காக காத்திருக்கிறார்கள், எத்தனையோ நாகரீகமான நட்புக்கள் உங்களுடனான நட்பை புதுப்பிக்க தவம் இருக்கிறார்கள். எது உண்மையான நட்பு என்பது தெரியாமல் உங்களை தொலைத்து விடாதீர்கள்! சமூகவலைதள வக்கிரங்களை வீட்டின் வாசல் வரை அனுமதிக்காதீர்கள். அதையும் மீறினால் நீங்கள் தொலைப்பது உங்களை மட்டுமல்ல... உங்கள் சுதந்திரத்தையும் எதிர்காலத்தையும், கனவுகளையும்தான்.
-இதழாளர் ஜே.பி.





No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.