4/11/2018

இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்!

இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்!

தமிழர் நாகரீகம் என்பது தொன்றுதொட்டது. இதன் வரலாற்றுப்பயணம் பல்லாயிரம் ஆண்டுகளை பின்னோக்கியது. ஆற்றுப்படுகைகளிலும், நீர்நிலைப்பகுதிகளிலும் தமிழர் நாகரீக, சமயோஜித வாழ்வியல் அமைந்திருந்தது என்பதற்கு சான்றுகள் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முதலாகவே நமக்கு சரியான முகாந்திரத்தை ஆதாரமாக அளிக்கின்றன.

பொதிகையில் தோன்றி வழிநெடுக வயல்வெளிகளை பசுமையாக்கி, தாகத்திற்கு தண்ணீரையும் வழங்கி 120 கி.மீ. தூர மொத்த பயணத்தில் தனது மண்ணின் மைந்தர்களுக்கெல்லாம் தாய்ப்பாலாய் தண்ணீரை தாரை வார்த்து தனது கடமையை புன்னைக்காயலில் கடலில் நிறைவு செய்து விடுகிறாள் தாயாக பாவிக்கப்படும் தாமிரபரணி.

வற்றாத ஜீவநதி, பொருநை நதி என்றெல்லாம் பெருமைபெற்ற தாமிரபரணியின் தற்போதைய நிலை என்ன? கிட்டத்தட்ட கூவாகம் நதியாய் மாறிவிட்டது. நூறு சதவீதம் சாக்கடையாய் மாறுவதற்குள் என்ன செய்ய வேண்டும். தாகத்தையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்த அந்த புண்ணிய நதிக்கு புரிய வேண்டிய உபகாரம்தான் என்ன? சிந்திப்பார் இல்லாத ஆட்சியாளர்களால் அனுதினமும் சிதைந்து கொண்டு இருக்கிறது அந்த நதி.

மேற்குத்தொடர்ச்சி மலையைத் தவிர்த்து தரைவழியில் பயணிக்கும் அந்த 84 கி.மீ. தூரத்தில் இந்த நதி படும் இன்னல்களை சொன்னால் நெஞ்சே வெடித்து விடும். பயணத்தை தொடங்கும் பாபநாசத்தில் தொடங்குகிறது அத்துமீறல். அங்குள்ள மதுரா கோட்ஸ் கழிவுகள் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தொடர்ச்சியாக வழிநெடுக அமைந்திருக்கும் காகித ஆலைகள் வெளிவிடும் அபாயகரமான கழிவுகள். ஆலைகள் உறிஞ்சிக்கொள்ளும் காலன் கணக்கிலான மக்களின் உரிமைக்கு பாத்தியப்பட்ட தண்ணீர். திருநெல்வேலி நகர எல்லைக்குள் மலக்கழிவுகள், சாக்கடைக்கழிவுகள், அரசு போக்குவரத்துக்கழக டீசல் கழிவுகள் எல்லாமே இதே நதியில்தான் சங்கமமாகின்றன.

மண்மீது பேராவல் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் தாயின் வயிற்றில் கருவுண்ட குழந்தையை கருவறுப்பது போன்ற மணல் கொள்ளையை தெரிந்தும், தெரியாதவாறும் தாறுமாறாக நடத்தி வருகிறார்கள்.  அவர்களுக்குத் தேவை பணம் அவ்வளவே. உணர்வெல்லாம் குப்பையில்தான். அண்டை மாநிலமான கேரளாவில் அரசுக்கு இருக்கும் இயற்கை மீதான கரிசனையில் ஒரு சதவீதம் கூட இவர்களிடம் இல்லாதது தாயை பழிக்கும் தனயர்களுக்கு ஒப்பானது.

தண்ணீரின் தேவை என்பது ஒவ்வொருவரின் தேவைக்குமான தண்ணீரை எங்காவது சென்று சுமந்து வரும்போதுதான் தெரியும். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் ஒரு ரத்த வியர்வைக்கு சமமானது என்பது புலப்படும். அதனால்தானே காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்கு இந்த அளவிற்கு போராடுகிறோம். தமிழனின் உரிமை நிலைநாட்டுதல் என்பது ஒருபுறம் இருந்தாலும், தண்ணீரின் தேவை என்பது விவசாயியின் தேவை என்பது அவனைச் சார்ந்தது அல்ல... உன் சந்ததிகளுக்கான தேவை என்பதை உணர்த்தத்தான்.

தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கிட்டத்தட்ட பிச்சை கேட்பதைப் போலத்தானே இருக்கிறது தமிழர்களின் நிலை. அப்படியிருக்கு நம்மிடமே தோன்றி நம்மிடமே விசர்ஜனமாகும் ஒரு நதியை எப்படி பேணிப்பாதுகாக்க  வேண்டும். எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் ஆற்றலும், வல்லமையும் தாமிரபரணி நதிக்கு உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்காக ஆட்சியாளர்கள் என்ற முறையில் பதவிக்காக அலைபவர்களாக மட்டுமல்லாமல் எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் அடிப்படையில் தாமிரபரணி நதிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதே என்போன்றோரின் கேள்வி.

வெளிநாட்டினர் தங்களது நாட்டில் ஓடும் நதிக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் அளிக்கிறார்கள் என்பதை நாடு நாடாக சுற்றும் ஆட்சியாளர்கள் கவனிக்க தவறி விடுகிறார்கள். நதியின் இருபுறமும் வழிநெடுக சுவர் ஏற்படுத்தி நதியை மாசுபடுத்தாமல் தடுக்க கோடிகளை கொட்டிக் கொடுத்து செப்பனிட்டுள்ளார்கள். நதி மாசு என்பது தண்டனைக்குரிய செயலாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இங்கோ ஏதோ நமக்கு அந்த ஆறு செய்ய வேண்டிய கடமையை கடனுக்காக செய்துவிட்டு போகட்டும் என்பதைப்போல மனோபாவம்தான் மேலோங்கி இருக்கிறது. கோலா, ஏடிசி டயர் கம்பெனி என எத்தனை  எத்தனை தொழிற்சாலைகளிடம் இந்த ஆற்றுத்தண்ணீரை விற்பதற்காக பணத்தை வாரிக்கொட்டிக் கொள்கிறீர்கள். கனிமவளத்தை கொள்ளையடித்து கல்லாவை நிரப்பிக் கொள்கிறீர்கள். அதில் ஒற்றைப்பணத்தையாவது இந்த நதிக்காக கிள்ளிக்கொடுத்தீர்களா? அறவே இல்லை. இது அறமும் இல்லை.

நதிகள் பாழாகி ஒரு சொட்டு தண்ணீருக்காக வானத்தை நோக்கி தவமிருக்கும் எதிர்கால ஆபத்தை கணக்கில் கொண்டு இன்றாவது ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் பாலைவனமாகும் நாள் வெகுதூரம் இல்லை. பெரிய பெரிய சாதனைகளையும், சாகசங்களையும் உங்களைச் செய்யச்சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை.

முடிந்தவரை 120 கி.மீ. பயணதூரத்தில் 84 கி.மீ. மட்டுமே தரைவழிப்பயணம் கொண்ட தாமிரபரணி நதியில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமியுங்கள். மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் 15 டி.எம்.சி. வரையிலான தண்ணீர் எல்லாம் தென்மாவட்டங்களின் தாகத்தை கூட்டுக்குடிநீர் விஸ்தரிப்பின் மூலம் கண்டிப்பாக பூர்த்தி செய்வாள் இந்த புண்ணியவதி. விவசாயமும் செழிக்கும். மக்களும் செழிப்பாளர்கள்.

வரப்புயர நீர் உயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்- இதுதான் ஔவையின் வாக்கு. இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.. இல்லையேல் உணர்வும் செத்துப்போகும்... உணவும் அற்றுப் போகும்! உலகும் மாய்ந்து போகும்!
---------------------
(கடையத்தான்)
---------------------










No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending