4/12/2018

இதைவிட அவமானம் தேவையில்லை!

இதைவிட அவமானம் தேவையில்லை!

உலகின் பல நாடுகளை சர்வ சாதாரணமாக கடந்தவர். அங்குள்ள கலாச்சாரம் பண்பாடுகளை பார்வையிட்டு வர அரசாங்க செலவில் உலக  நாடுகளுக்கு அனுதினமும் பயணம் மேற்கொள்ளும் தலைவர். தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் நாடுகளில் கூட இவரது பாதம் சர்வசாதாரணமாக பதிந்துள்ளது. அவருக்குத்தான் இன்று சொந்தநாட்டில், அவர் மத்திய அரசின் தலைமையாக இருந்து ஆளும் பாரத நாட்டின் ஒரு கடைக்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்பட்ட தலைக்குனிவு.

தரணிக்கே உணவு உற்பத்தி செய்யும் தஞ்சைக்கு தண்ணீர் தேவை என்ற பரந்த மனப்பான்மையை பாரத பிரதமராக இருந்து கூட உணரமுடியாத அளவிற்கு பதவிப்பாசம் கண்ணை மறைத்துவிட்டது. தஞ்சை வறண்டால் பாரதம் பஞ்சமாகும் என்ற மந்திரத்தை மறந்தவர். எதையோ நினைத்து மக்கள் தந்த பதவி வாய்ப்பை மக்களுக்கு எதிராகவே, மக்களாட்சிக்கு எதிராகவே ஆயுதமாக தரித்து இன்று ஒட்டுமொத்த மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார்.

மக்கள் கேட்பதெல்லாம் சிறந்த ஆட்சி, சிறந்த பொருளாதாரம், சிறந்த வாழ்வாதாரம், வெளிப்படையான நிர்வாகம் போன்ற மக்களாட்சி தத்துவத்தின் சாராம்சத்தைத்தான். அதையெல்லாம் தருவேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியவர் அடுத்தடுத்து செய்ததெல்லாம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மக்கள் தங்களுக்கென கேட்ட அனைத்தையும் வாரிக்கொடுத்துவிட்டார்.

விவசாயக்கடன் தள்ளுபடி கேட்டவர்களையெல்லாம் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டு, மல்லையா, நீரவ்மோடி, கனிஷ்க் நிறுவனம் எல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகளை, மக்களின் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்ட போதிலும் வாய்திறவாமல் மேலும் மேலும் மக்களை  பல்வேறு ஒவ்வாத பொருளாதாரக் கொள்கைகளால் வாட்டி வதைத்து வஞ்சிக்கும் போக்கு இன்று ஆங்காங்கே மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக சுலபமாக தீர்க்க வேண்டிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை கொள்கை அளவில் வைத்துக் கொண்டு தேர்தலுக்கு தேர்தல் பதவியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற சூட்சுமம் மக்களிடம் நாளடைவில் எடுபடாமல் போய்விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கூட அரசியல் சாயம் மட்டுமே எஞ்சியுள்ளது. மாநில மக்களை மோதவிட்டுவிட்டு ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்று வியூகம் வகுத்து வருகிறார்கள் ஆளும் மத்திய அரசினர்.

இவை அனைத்திற்கு சரியான பதிலடியாகத்தான் இன்று தமிழகத்தில் போராட்டம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டில் “கோ பேக் மோடி” ஹாஷ்டாக் முதலிடத்தை பிடித்து அவருக்கு அவமானத்தை தேடித்தந்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமருக்கு இதைவிட மோசமான வரவேற்பை யாரால் கொடுக்க முடியும். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை விட அதிகமான எதிர்ப்பை தமிழர்கள் மத்தியில் சம்பாதித்துக் கொண்டார்.

எங்குபார்த்தாலும் அவரது வருகைக்கு எதிரான கருஞ்சட்டை ஊர்வலம், கருப்புக்கொடி போராட்டம், கருப்பு பலூன்கள் பறக்கவிடுவது என தமிழகமே ஒட்டுமொத்தமாக கிளர்ச்சியடைந்துள்ளது. காரணம் தாகத்திற்கு தண்ணீர் இல்லை என்ற தமிழகத்தின் ஆதங்கம். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற அங்கலாய்ப்பு. மண்ணை பாலைவனமாக்கும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டியதின் பின்விளைவுகள்.

மக்களாட்சித் தத்துவம் என்பது என்னவென்றே தெரியாமல் சர்வாதிகார நாடு போல தான்தோன்றித்தனமாக மக்களின் கருத்துக்களை கேட்காமலேயே எடுத்த முடிவுகளின் பிரதிபலிப்பு. வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில் ராணுவக்கண்காட்சிக்கு அவசியம் என்ன? என்ற கேள்விகளின் எதிரொலி. எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை பதவியில் ஏற்றி வைக்கவில்லை என்று அனுதினமும் பலமுறை உணர வைக்கும் செயல்பாடுகள்.

மேல்தட்டு மக்களை வாழவைத்துவிட்டு, அடிப்படை மக்களின் வயிற்றில் அடிக்கும் எதிர்மறைச் சிந்தனைகள் இவையெல்லாம் மக்கள் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்னவென்பதை ஆராயமலேயே வெறும் பதவி பணத்திற்காக மக்களை காவு கொடுக்கும் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பும் கைகோர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட அதீத வெறுப்பின் உச்சம்.

இத்தனை அவமானத்தை எந்த மக்களாட்சி நாட்டிலும் எந்த பிரதமரும், ஆட்சியாளர்களும் சந்தித்திருக்க மாட்டார்கள். கனடாவின் எந்த மூலை முடுக்குகளுக்கு சென்றாலும் அந்நாட்டு பிரதமரை வரவேற்பதும், அகமகிழ்வதும் அடிப்படை மக்களைக்கூட ஒப்பீடு செய்ய வைக்கிறது. இதற்குப் பிறகாவது மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சி தத்துவத்தின் சத்துவம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் மன்னிக்க மக்கள் கூட உயிருடன் இருக்கமாட்டார்கள். பாரதம் புல் பூண்டுகளற்ற வெறும் பாலைவனமாகத்தான் இருக்கும்.

இதுவே தமிழகம் உணர்த்திய எச்சரிக்கை சமிக்ஞை. இது தமிழர்களுக்கான போராட்டம் அல்ல. பாரதத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கான போராட்டம்.
-------------------
(கடையத்தான்)


No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending