4/10/2018

உள்ளது உள்ளபடியே!

உள்ளது உள்ளபடியே!

மனதிற்கு பிடித்ததை அப்பட்டமாக வெளிப்படுத்துவதை வெள்ளந்தியாகவும், சில நேரங்களில் காரிய நோக்கர்களாகவும் பார்க்கப்படுவதுண்டு. ஆனால் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவதற்கு தனியாக துணிச்சல் வேண்டும். இடம் பொருள் ஏவல் இவற்றை கருத்தில் கொண்டு சிலர் தங்களது எண்ணக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதுண்டு. சிலர் அவ்வாறு நோக்குவதில்லை. நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எடுத்துக்கூறி நல்லவர், கெட்டவர் என்ற குணாதிசய வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்வார்கள்.

அதுவும் குறிப்பாக எதிர்பாலினங்களிடத்தில் உரையாடும் போது உள்ளது உள்ளபடி என்ற நிலைப்பாடு சற்றே எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் தங்களது எதிர்பாலினத்தை பலவீனர்களாக பாவிப்பதே அதிமுக்கிய காரணம். அதிகப்படியான கருத்து பரிமாற்றங்கள், அளவு கடந்து அன்பு செய்தல், எல்லை தாண்டிய பேச்சுக்கள், காலநேர வரைமுறையற்ற தொலைபேசி அழைப்புகள், தொழில்நுட்ப செயலிகள் பயன்பாடு போன்றவை  தூபக்காலாக அமைந்து விடுகின்றன.

 இதனாலேயே வெள்ளந்திகள் என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்த மனிதர்களை கலிகாலத்தில் பார்ப்பது அரிதாகிப்போய்விட்டது. பார்க்கும் எல்லாரையுமே அவர்கள் பயன்படுத்தும் உடை, தொழிநுட்ப உபகரணங்கள் மற்றும் இன்னபிற நடவடிக்கைகளை கொண்டு நல்லவர் அல்லது கெட்டவர் என்ற அடைமொழி வட்டத்திற்குள் அடைத்தாக வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரது நடவடிக்கைகள் அதற்கேற்றாற்போல் அமைந்துவிடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டத்தவறுதல் கூடாது.

நான் நானாக இருப்பதில் தவறில்லை என்ற மனப்பக்குவம் கொண்டவர்கள் சமுதாயத்தில் எந்தகட்டத்தையும் நீந்தி கடந்து விடுகிறார்கள். சமுதாய வட்டத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அந்த நிலையை கடந்துவர துணிச்சல் கொள்வதில்லை. மற்றவர்களின் ஏச்சுபேச்சுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாவதை தவிர்க்கவே தங்களை இதுபோன்ற சூழல்களில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்கள்.

மனதிற்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் விமர்சனங்களுக்கு பயந்து தாங்கள் விரும்பியபடி வாழவும், விரும்பியதை பேசவும், விரும்பியவர்களுடன் பழகவும் தனக்குத்தானே தடைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒரு வட்டத்திற்குள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறார்கள். கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் இதில் தவறேதும் இல்லை என்று வாதிடுவாரும் உண்டு.

நகர வாழ்க்கையில் சாத்தியமான விஷயங்கள் பல கிராம வாழ்வியலில் கிடைப்பது அரிதாகிப்போகின்றது. கிராமத்தார் அதிசயத்தோடு நகரவாசிகளை உற்றுநோக்குவதும், நகரவாசிகள் நாகரீகத்தில் வளராதவர்களாக கிராமவாசிகளை பாவிப்பதுமான முரண்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது. நாகரீகக்கோளாறுகள் பல இடங்களில் பண்பாட்டுச் சிதைவுகளை ஏற்படுத்துகின்றன என ஆணித்தரமாக உரைத்தாலும், கிராமத்து வாழ்க்கை முறைகளிலும் சிற்சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற நேர் எதிர் வாதங்களுக்குள் சென்றுவிடுகிறது.

உள்ளது உள்ளபடியே என்ற நிலைப்பாடு பல இடங்களில் வரவேற்பை பெற்றாலும், காலச்சூழலின் கோலமாற்றங்களால் அசாத்தியம் என்ற அதிசயத்திற்குள் சென்றுவிடுகிறது என்பதே பேருண்மை.
---------------------
(கடையத்தான்)
---------------------






No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending