உலகப்போருக்கான எச்சரிக்கை அறைகூவல்- “தண்ணீர் பஞ்சம்”
தினமும் ஒரு தினத்தை ஐ.நா. அறிவுறுத்தலின் பேரில் கொண்டாட வேண்டிய துர்பாக்கிய நிலை. உணர்வுகளே இல்லாத உந்துதல் நிலை. உரிமைகளுக்காக போராட வேண்டிய அவல நிலை. சொட்டு தண்ணீர் கிடைக்காதவனின் கூக்குரலை, அபயக்குரலை, அழுகுறலை, குமுறலை, கதறுதலை உடனிருப்பவனே கண்டுகொள்ளாத நிலை. நாவின் வறட்சிக்கு வான்மழை ஈகுமா? பூமி பிளந்து கொப்பளிக்குமா? என ஏங்கி ஏங்கி தண்ணீருக்காக தினம் தினம் தவிக்கும் உயிர்களின் பரிதாப நிலை.
எழுதத்தெரிந்த எல்லாருமே எழுதிவிட்டார்கள் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் என்று. அதனை விஞ்ஞானிகளும் உறுதி செய்துவிட்டார்கள். அதற்குப்பிறகும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் அரசாளுபவர்கள் எது எதற்கோ நாட்டை பங்கிட்டு வீட்டை நிரப்பிக் கொள்கிறார்களே தவிர நதிநீரை பங்கிட்டு தவித்தவனின் வாய்க்கு தண்ணீர் தருவதாக இல்லை. தண்ணீரை சேமிக்கவும் உரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.
வடமாநிலங்களின் தண்ணீர் பஞ்சத்தையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார்கள். அதிலும் தமிழ்நாடு தனிதீவாகத்தான் இருக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தில் கூட அபாயகட்டத்தில் இருக்கிற பகுதியில் தமிழ்நாடு முதல் 10 இடங்களுக்குள் வந்துவிட்டது. காரணம் கணக்கு வழக்கின்றி கண்டபடி போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள். சுரண்டப்பட்ட மணல் வளம். அழிக்கப்பட்ட கானக வளம். ஆறுகளை கூறுபோட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்த்த அரசுகளின் தாராள குணம்.
உள்நாட்டிலேயே அகதிகளை விட மிக மோசமான நிலையில் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடமும், மத்திய அரசிடமும் யாசகம் கேட்க வேண்டிய கொடூரத்தின் உச்சபட்சம். மன்னராட்சி ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் மூன்றாம் உலகப் போர் என்ன? அதையும் தாண்டிய எண்ணிக்கையில் ஒட்டு மொத்த தேசமும் சுடுகாடாய் மாறியிருக்கும். நல்ல வேளை தமிழகத்தை அன்றைய மன்னன் கரிகால சோழனும், சுதந்திரத்துக்கு பின்னர் கலிகால கரிகாலன் காமராஜரும் காப்பாற்றி வைத்தார்கள்.
சற்றே யோசித்துப்பாருங்கள் நீதிநீர் பங்கீட்டைக் கூட பெற்றுத்தர முடியாத இன்றைய ஆட்சியாளர்கள் புதிய அணைத்திட்டங்களுக்கு அஸ்திவாரம் போட்டு விடுவார்களா? அப்படிப் போட்டால் ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் இருக்கின்ற இருநூறுக்கும் மேற்பட்ட கட்சிகளும் தங்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறிக் கொண்டு ஆளாளுக்கு தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற கதையாக அணை கட்டினால் இது பாதிக்கும், அது பாதிக்கும் என கமிஷனுக்கு அடிபோட்டு ஆணியே பிடுங்க வேண்டாம் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். இதுதான் உண்மை.
தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நதிநீர் உரிமையை பெற காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நீதியை நிலைநாட்ட வேண்டிய மனுநீதிச் சோழனின் மக்கள் நாம். வீணாக கடலில் கலந்தாலும் பரவாயில்லை கங்கை நீரை மற்ற நதிகளோடு இணைக்க மாட்டோம் என்ற மறைமுக உறுதியோடு யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு அரசியல் சூட்சுமத்தை கையாளும் விந்தை. நதிகள் இணைப்புத்திட்டம் என்பது இந்திய அளவில் தேர்தல் சமயங்களில் மாநிலங்களுக்குத் தக்கவாறு பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வியாபார அரசியல் கொள்கை அவ்வளவுதான்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் சுணக்கம் ஏன்? கர்நாடகா பாதிக்கப்படும் என அம்மாநிலத்தவரே முடிவு செய்து கொண்டதன் தீர்வு எதிரொலி. மத்திய அரசை ஆள்பவர்களுக்கு அம்மாநிலத்தில் தேர்தலை வெற்றிக்காக எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம். காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் அளித்த பொறுப்பற்ற பதிலை உற்று நோக்குங்கால் தமிழக ஆட்சியாளர்களுக்கு கோபமும், கொந்தளிப்பும் இருக்கிறதா? தமிழகத்தின் ரத்தத்தில் ஊறிய ரௌத்திரம் என்னாயிற்று? என சாமானியர்களுக்கும் ரத்தம் சூடேறிவிடும்.
“காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது”- இதுதான் அவரது பதில். குழந்தைகள் அடம்பிடித்தால் குச்சிமிட்டாய், குருவிரொட்டி வாங்கித்தருகிறேன் என்பது போன்றதான சல்ஜாப்பு சமாளிப்புகள்.
சர்வதேச அளவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. அப்படிப் பார்த்தால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத அபாயகரமான நிலைமையில் தமிழ்நாடு முதலிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை. அதற்காக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று அறுதியிட்டு கூறும் அளவுக்கு தமிழர்கள் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல. நாங்களும் பிழைக்க தண்ணீரை பங்கிட்டுத்தாருங்கள் என்பதுதானே கோரிக்கை. இதைக்கூட நிறைவேற்ற முடியாத மத்திய அரசுக்கு மாநில அரசு முழு முனைப்புடன் அனைத்து திட்டங்களிலும் கப்பம் கட்டுவது ஏன்?
உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியாவில் 4 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறதாம். யார் செய்த பிழை. இயற்கையின் பிழை இதில் பாதி என்றால் மீதி? அணைகளில் மணல் அள்ள அனுமதி... தூர்வார நிதியில்லை... ஆற்றுநீரை பயன்படுத்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி... ஆற்றை தூய்மைப்படுத்த நிதிவசதியில்லை... விவசாயத்திற்கு முக்கியத்துவம் என்ற அறிவிப்புகள்... ஆனால் விவசாய நிலத்திற்கு ஏரி குளங்களில் இருந்து கரம்பை அள்ளக்கூட அனுமதியில்லை...
மேக் இன் இந்தியா, புதிய இந்தியா என்பன போன்ற திட்டங்கள் மூலமாக இந்தியாவின் தண்ணீர் வளம் சுரண்டப்படுகிறதே தவிர, இதனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை எப்போது உணரப்போகிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் 95 சதவீத கிணறுகள் வறண்டுவிட்டன. 70 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் காலி என புள்ளி விவரங்கள் தெரிவித்துவிட்டன. புள்ளி விவரமே இப்படியென்றால் உண்மை நிலவரத்தை யோசித்துப் பாருங்கள்.
2020 என்றாலும் சரி... 2050 என்றாலும் சரி... இந்தியா வல்லரசாக வேண்டுமானால் முதலில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் வீடுகளுக்கும், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும், அரசு பொறுப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைத்து விட்டால் இந்தியா வல்லரசாகி விட முடியாது. அடித்தட்டு மக்களின் தாகம் தணிந்து வயிறு நிரம்ப வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். அதற்கு நீர் வேண்டும். நீர்த்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதவரை நாடு முன்னேற வாய்ப்பில்லை.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்பதுதான் வள்ளுவன் வகுத்த உலகப்பொதுமறை நீதி. உலக தண்ணீர் தினம் என்பது கொண்டாட்டம் அல்ல. தண்ணீரை சேமிப்பதற்கும், தண்ணீருக்கான தன்னிறைவு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றவும், தண்ணீருக்காக அடுத்த உலகப்போர் நடக்காமல் இருப்பதற்காகவும் விடுக்கப்படும் எச்சரிக்கை அறைகூவல்.
---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.