4/10/2018

எதற்கெடுத்தாலும் போராடித்தான் நியாயத்தை பெற வேண்டுமா?

எதற்கெடுத்தாலும் போராடித்தான் நியாயத்தை பெற வேண்டுமா?

தமிழகம் எப்போதுமே பரபரப்பாக பதற்றமாகவே காணப்படுகிறது. இந்தியாவின் படிப்பறிவு குறைந்த மாநிலங்கள் கூட அறிவுப்பூர்வமாக புறந்தள்ளிய ஒட்டுமொத்த அபாயமிக்க திட்டங்களை குப்பைத்தொட்டியாக பாவித்து தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கூடங்குளம் அணுஉலை அமையக்கூடாது என்பதற்காக போராடிய களங்கள் ரத்தக்கண்ணீரை காணிக்கையாக கொடுத்தும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை.
ஒட்டுமொத்த தமிழகத்தின் விவசாய நிலங்களையும் பாழாக்கி பாலைவனமாக்கிவிடும் என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கெயில் திட்டம் அமல். தற்போது எதிர்கால சந்ததிகளுக்கு புல் பூண்டைக்கூட மிச்சம் வைக்காத நியூட்ரினோ ஆய்வு மையத்திட்டம் அச்சுறுத்துகிறது. ஏற்கனவே 1992க்கு பிறகு எவ்வளவோ போராட்டங்களை கண்டுகொள்ளாமல் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் இன்று மக்களின் உயிர்களை புற்றுநோய் என்ற மூலதனத்தால் காவு வாங்கி வருகின்றன.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே எந்தவித அடிப்படை அறிவியல் ஞானமும் இல்லாமல் இந்த திட்டத்தால் பாதிப்பு இல்லை, அந்த திட்டத்தால் பக்க விளைவுகள் இல்லை என குருட்டுத்தனமான முரட்டாட்டத்தனமான அறிக்கைகளை ஆட்சியாளர்கள் விட்டுக் கொண்டிருப்பது உள்ளபடியே வேதனையின் உச்சம்.
எதற்கெடுத்தாலும், எந்த தேவையென்றாலும், தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்த வேண்டுமானாலும் போராட்டம் ஒன்றே தீர்வு என்ற துர்பாக்கிய நிலைமைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மக்கள் ஆட்சி என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சிக்கும் கேவலமான ஆட்சியை மக்கள் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவலம் இந்த நாட்டைத்தவிர வேறெங்கும் இருக்க முடியாது.
சர்வாதிகார ஆட்சிகள் நடக்கும் நாடுகளில் கூட அறிவியல்பூர்வமாக சிந்தித்துத் தான் எந்தமாதிரியான திட்டங்கள் தங்களது நாட்டுக்கு உகந்தவை என்று ஆய்ந்தறிந்து செயல்படுத்துவார்கள். பணம், பதவிக்காக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் கொடூர முடிவுகளை தமிழக ஆட்சியாளர்களைத்தவிர வேறு யாராலும் கையாள முடியாது.
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நிகழ்வையே ஒட்டு மொத்த உலகத்தமிழர்களையும் போராட்டக்களத்தில் புரட்சியாக ஒருங்கிணைத்துத்தான் மீட்க முடிந்தது.
மக்கள் ஆட்சி என்ற பெயரில் மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களுக்காக மட்டுமே நடைபெறும் ஆட்சியில் குடிப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு கூட அண்டை மாநிலங்களிடம் கையேந்தி யாசகம் கேட்கும் நிலை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திற்கும் வரக்கூடாது என்பது அனைத்து தட்டு மக்களின் மனப்பூர்வ பிரார்த்தனை.
ஊருக்கு பொதுவான காவிரித்தண்ணீரை தரமுடியாது என மறுப்பது எத்தகையை பிடிவாதம் என மனித உயிர் என்ற அடிப்படையில் யோசித்தால் சாத்தியமில்லாத வாதம் என்றே உணர வேண்டும். ஐநா சபையில் நீதி கேட்டு போனால் கூட இதற்கு நீதி கிடைத்துவிடும் போல... மத்திய அரசிடம் கேட்பது என்பது ஆட்சியாளர்களுக்கு குதிரைக்கொம்பாக இருக்கிறது.
வல்லரசு நாடுகளில் அதிபர்களிடம் பேசுவதே எளிமையான காரியமாக இருக்கும் சூழலில் இந்தியாவில் பிரதமர் என்றால் கூட கடவுளை பார்ப்பது போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் என்பது எவ்வளவு அத்தியாவசியம் வாய்ந்தது என்பதை நமது மாநிலத்தை சேர்ந்த ஆட்சியாளர்களே உணராமல் இருப்பது அருவெறுப்பின் உச்சமாகவே சமூக ஆர்வலர்களின் பார்வையில் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசிடம் ஆட்சியாளர்கள் போராட வேண்டிய போராட்டத்தை இன்று மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்கள் அமைதி காக்கும் வரைதான் இந்த மக்களாட்சிக்கு மதிப்பு... மக்கள் கொந்தளித்தால் மக்களாட்சி மண்ணோடு மண்ணாகிவிடும் என்பதே திண்ணம். தகுதியும் திறமையும் நிறைந்த ஆட்சியாளர்கள் அமைந்திருந்தால் இந்த போராட்டங்களுக்கு தேவையிருந்திருக்காது. விதி நாட்டை ஆள்கிறது! போகிறவரை போகட்டும்!
---------------------
(கடையத்தான்)
---------------------





No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending