தடுமாறும் சிந்தனைகள்!
காலையில் எழும்போதே எதற்காக எழுகிறோம் என்பதில் தொடங்குகிறது ஒவ்வொருவரின் சிந்தனையும்..! அவர்களின் வாழ்க்கை நெறிகளை பொறுத்து ஏதோவொரு தேடுதலுடன்தான் அவர்களது விடியலும் அமைகிறது. அன்றைய ஒட்டுமொத்த சிந்தனைகளும் அதைநோக்கியே பயணிக்கின்றன.
சில சிந்தனைகள் செயல்வடிவம் பெறுகின்றன. சில சிந்தனைகள் வந்த தடம் தெரியாமல் மாயமாகிவிடுகின்றன. ஏனெனில் அவை தேவையற்ற சிந்தனைகளாகக் கூட இருக்கலாம். வாழ்க்கை முறைகளுக்கு ஒவ்வாத, ஒத்துப்போகாத சிந்தனைகளாகக் கூட இருந்திருக்கலாம்.
மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்று சொல்வது யாருக்கும் எளியதாகத் தோன்றலாம். ஆனால் செய்பவர்களுக்கு அத்தனை எளிதான காரியம் கிடையாது. பயண நேரத்தில் கூட நமது பயணம், இறங்க வேண்டிய இடம், செல்ல வேண்டிய நோக்கம் என செயல்கள் பல இருந்தாலும், பயண நேரத்தில் மனம் எதையோ தனக்கு விரும்பியவற்றையோ, அல்லது வெறுப்பதையோ, எதிர்பார்ப்பையோ நோக்கி பயணப்படுகிறது. மலரும் நினைவுகளில் கூட சில நேரங்களில் மனம் லயித்து விடுகிறது.
வெப்பக்காற்றின் வீசுதலில் வெறுப்பான சம்பவங்களையும், தென்றலின் வருடதலில் நாம், நம்மை தொலைத்துப்போன உறவுகளையும், நாம் விரும்பிய தீண்டுதல்களையும் நினைத்தவாறே மனமானது தனது சிந்தனைகளை பிறப்பிக்கிறது. இடையிடையே அறிவுசார்ந்த சிந்தனைகள், ஆன்மீக சிந்தனைகள் நம்மை ஆறுதல் படுத்தவும் தவறுவதில்லை. அவையே நம்மை பல தோல்விகளில் இருந்து தேற்றி மீட்டெடுக்கின்றன.
உள்ளார்ந்த மனிதனின் புதுப்பித்தல் என்பது நமக்குள் எழும் சிந்தனைகளின் வடிவமே! ஆக தடுமாறும் சிந்தனைகள் என்பது சமுதாயத்தில் வாழும் மனிதனை எவ்வாறாக சித்தரிக்கின்றன? நம்மை எப்படி வழிநடத்துகின்றன? சாதக பாதகங்கள் என்ன? என்ற புரிதலை நமக்கு உணர்த்துகின்றன. புதிரான வாழ்க்கைக்கு புரிதலை ஏற்படுத்துபவையே சிந்தனை என்ற ஆகச்சிறந்த வழிக்காட்டி!
---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.