தமிழ்நாட்டின் சின்னம் அழிந்தொழியும் அபாயம்!
தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை. நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனையை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர். இது மரம் வகையைச் சேர்ந்தது அல்ல என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. இது புல் போன்ற தாவர வகையைச் சேர்ந்தது. தாவரவியல் அடிப்படையில் போரசசு என்ற குடும்ப வகையைச் சார்ந்தது. தொல்காப்பியத்திலேயே இதனை தாவர வகையில் சேர்த்திருப்பது தமிழன் பனையின் பால்கொண்ட முக்கியத்துவத்தை, ஆழமான அறிவை உணர்த்துவதாகவே உள்ளது.
பனைகளில் மட்டும் ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, . வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை ஆகிய 34 வகைகள் உள்ளன.
பனையானது உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை மனித சமுதாயத்திற்கு வழங்க வல்லது. உணவுப் பொருட்கள் பட்டியலில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருட்களின் மூலப்பொருளாக விளங்குகிறது.இதுதவிர உணவிலிப் பொருட்கள் பட்டியலில் பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பெறப்படுகின்றன. ஒரு காலக்கட்டத்தில் பனை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ரூ.200 கோடி வரை அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
எல்லாக்குடிகளிலும் மூத்தக்குடியாக உணரப்படுகிற தமிழ்க்குடிகளின் வாழ்வியலோடு தொன்று தொட்டு பயன்களை தரம் பனைகள் இன்று காரண காரியங்களின்றி அழிப்புக்குள்ளாகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகவும், இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே இருந்ததாகவும் ஒரு காலக்கட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது பனைகளின் எண்ணிக்கை பல பல மடங்கு குறைந்துள்ளது என்பது மறுப்பில்லா உண்மை.
தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரம் அரிதான ஒன்றாக மாறிவருகிறது. பனை சார்ந்த தொழில்கள் முழுமையாக முடங்கியதால் தற்போது தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை அரசு கைவிட்டதால் பனை மரங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. முன்பெல்லாம் முதிர்ச்சி அடைந்த மரங்கள் மட்டும் வீடு கட்டுவதற்காக வெட்டப்பட்டன. ஆனால், தற்போது செங்கல் சூளைகளுக்காக மரம் ரூ.200-க்கு வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது.
பனையானது நிலத்தடி நீர்மட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. பூமிக்கு அடியில் தனது நீளமான ஆணிவேர்தொகுதி மூலம் 200 அடி வரை நீரை கொண்டு சென்று சேமிக்க வல்லது. இதன் காரணமாகவே பண்டை தமிழர்கள் ஊரைச்சுற்றியும், நீர்நிலைகளைச் சுற்றியும் பனைகளை வேலிகளாக நட்டு வளர்த்தனர்.
இந்தியாவின் தேசிய சின்னம் ஆலமரம் என்பது போல், தமிழ்நாட்டின் மாநில சின்னம் என்ற அடைமொழியை மட்டும் ஏட்டளவில் தாங்கி நிற்கும் பனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, நட்டு வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.
யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலத்திலே மேல்நாட்டு மோகம் அதிகரித்து உள்ளூர் உற்பத்திகள் நலிவடைந்து, மரபுவழிப் பழக்க வழக்கங்களும் மதிப்புக் குறைவானவையாகக் கருதப்பட்டன. அக்காலத்தில் பனையின் உற்பத்திகளைப் பிரபலப் படுத்துவதற்காக அவர் பாடிய பின்வரும் பாடலிலே மேற்காட்டிய ஔவையாரின் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார்.
திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஔவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே...
குழந்தைப்பருவத்தில் இருந்தே பள்ளிகளில் பனைவளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்... அனைத்து மரங்களின் தோற்றுவாய் பனையே என்பதை போதிக்க வேண்டும்...
விவசாயம், கைத்தறி தொழிலுக்கு இணையான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பனைவளர்ப்பு என்பது சிறந்த ஒன்று. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். பனைகள் அழிப்பு மற்றும் பராமரிப்பின்மை, தொழிலுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமை, தேவையற்ற தடைகள் போன்றவை காரணமாக பெரும்பாலானோர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர்.
தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மாநில சின்னமான பனையை பாதுகாப்பதில் அக்கறை கொள்ளாதது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. இது மாநில சின்னத்தை அரசே முடக்குவதாகத்தான் பொருள்படும். தென்னை மரங்கள் வளர்ப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் மூலமாக பல்வேறு முயற்சிகளை அரசே மேற்கொள்ளும் நிலையில் பனைகளுக்கென தனியாக ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை.
பனையேறுவது என்பது தென்னை மரம் ஏறுவது போன்ற எளிதான செயல் அல்ல. இதில் இடையூறுகள் அதிகம். தென்னை மரம் ஏறுவதற்காக கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது என்றாலும் இது போன்ற முக்கியத்துவத்தை தமிழக வாழ்வியலோடு தொன்று தொட்டு பயணித்து வரும் பனை வளர்ப்பிற்கும் கொடுக்க வேண்டும். பனை வளர்ப்பை அரசே மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றின் கரைகளில் பனை மரங்களை நடுவதற்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல் காடுகளின் ஓரங்களில் யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி வெட்டுவதைப் போன்று, காடுகளின் எல்லை வேலியாக பனைமரங்களை நட்டுவைத்தால் மிக்க பயன்தரும். யானைகள் போன்ற விலங்குள் பனையை சீண்டுவதில்லை. இது விவசாய நிலங்களுக்கு ஊறுவிளைவிக்காமல் தடுக்கும் நடவடிக்கையாக அமையும். பனை வளர்ப்பை ஊக்குவிக்க பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களில் அவற்றின் முக்கியத்துவத்தை சேர்க்க வேண்டும். கிராமங்கள் வாரியாக பனை வளர்ப்புக்கென குழுக்கள் ஏற்படுத்தி விதைகள் உற்பத்தி செய்து அவற்றை அரசே கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்கு வழங்கி மாநில சின்னம் பனை என்பதை ஏட்டளவில் மட்டுமல்லாது செயல்பாட்டளவிலும் கொண்டு வர வேண்டும்.
துவண்டு கிடக்கும் அரசின் பனை பொருட்கள் விற்பனை நிலையங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க பனை சார்ந்த பொருட்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அரசே ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.