8/11/2018

கிராமங்களை குறிவைத்து வதந்திகளை பரப்பும் போலி போராளிகள்; கண்காணிப்பை தீவிரப்படுத்தும் உளவுத்துறை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் படிப்படியாக அங்கு நடந்து முடிந்த கலவரத்தின் பின்னணிகள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெல்லாம் மக்கள் திசை திருப்பப்பட்டார்கள்? போராளிகள் என்று களமிறங்கியவர்கள் எதற்காக இந்த போராட்டத்தை கையில் எடுத்தார்கள்? இதனால் அவர்கள் பெற்ற லாபம் என்ன? இதன் மூலம் மக்களுக்கு நடந்தது என்ன? என்பதையெல்லாம் மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

உழைத்து வாழ எண்ணம் இல்லாத சில நபர்கள் போராளிகள் என்ற பெயரில் ஊர்ப்பணத்தில் உடம்பை வளர்க்கும் தந்திரத்தை கற்றுக் கொண்டு மக்களுக்குள் மக்களாக புகுந்து, மக்களுக்கான இயக்கம் என்றெல்லாம் பெயர்களை தங்களது அமைப்புகளுக்கு சூட்டி, மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களையெல்லாம் அந்த திட்டத்திற்கு எதிரானவர்களிடம் கையூட்டுக்களை பெற்றுக்கொண்டு போராட்டம் என்ற பெயரில் அப்பாவி பொது ஜனங்களை அடகு வைத்து சுயலாபம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதே இவர்களின் அடிப்படை தொழில்.

அறிவியல் என்ற பெயரில் அடுக்கடுக்காக பொய்யான புள்ளிவிவரங்களை தயாரித்து பொதுமக்களிடம் ஒரு வித அச்ச உணர்வையும், உயிர்க்கொல்லி நோய் பரவுவதை போன்ற பாவனையையும் ஏற்படுத்தி, பொதுமக்களின் அச்சத்தை தொழிற்சாலைகளிடம் உணர்த்தி தங்களது கோடிக்கணக்கான ரூபாய் பண பேரத்திற்கு நிர்வாகத்தை பணிய வைப்பதுதான் இவர்களது தொழில் யுக்தி. இதற்காக இந்த போலி போராளிகளுக்கு அடியாட்களோ, கூலிப் படையினரோ தேவைப்படுவதில்லை. மூளைச்சலவை மூலம் பொது மக்களையே சமூக விரோதிகள் போல சித்தரித்துக் காட்டும் வித்தை இவர்களிடம் நிறைந்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு பிரசார தந்திரம்தான் தூத்துக்குடியிலும் கட்டவிழ்க்கப்பட்டது. இந்த சதிவலை தெரியாமல்தான் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த வலையில் மாட்டிக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். சிறு குறு தொழில்களை இழந்து நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நம்பி இயங்கிய தொழிற்சாலைகளும், அதன் தொழிலாளர்களும் பரிதாபத்துக்குரியவர்களாய் வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். மக்களின் பசி, உணர்வுகளைப்பற்றி இந்த போலி நபர்களுக்கு கொஞ்சமும் கவலை கிடையாது. அவர்களுக்குத் தேவையெல்லாம் உல்லாச வாழ்க்கையும், கோடிகளில் சொத்துக்களை குவிப்பதும்தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக போராளி என எப்போதும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நித்யானந்த் ஜெயராம் என்ற நபர் செய்தியாளர்களை சந்தித்து தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளை மீறி அத்தொழிற்சாலை இயங்கியதாகவும், அங்கிருந்து வெளியாகும் கழிவுகளால் மண்வளம் கெடுவதாகவும், நிலத்தடி நீர் பாழ்படுவதாகவும், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தக டை ஆக்சைடு (எஸ்ஓ2) என்ற வாயுவால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் பரவுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

இதனை உண்மை என நம்பும் வகையில் கம்ப்யூட்டரில் பவர்பாயிண்ட் செயலி வாயிலாக புள்ளிவிவரங்கள் அடங்கிய போலியான வரைபடங்களை தயாரித்து செய்தியாளர்கள் முன்பு காட்டினார். அறிவியல் தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எதிர்க்கேள்விகளை முன் வைக்க தொடங்கிய போது நித்யானந்த் ஜெயராமுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கி விட்டது.

பத்திரிக்கையாளர்கள் தரப்பில் இருந்து, மத்திய மாநில அரசுகள் அனுமதியின்றி ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு தொழிற்சாலை எப்படி இயங்க முடியும்? அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி உரிய சான்றிதழ்களை வழங்கி வரும் நிலையில் அது எப்படி விதிமுறை மீறல் ஆகும்? ஆலை தரப்பில் ஸீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கழிவுகளை கையாண்டு மறுசுழற்சி அடிப்படையில் மதிப்பு கூட்டப்பட்ட சல்ப்யூரிக், பாஸ்போரிக் அமிலங்களாக மாற்றி மற்ற தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வரும் நிலையில் மண்வளம், நீர்வளம் எப்படி கெடுகிறது?  

மாசு கட்டுப்பாட்டுத்துறையை பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தூத்துக்குடி நகரத்தில் தொழிற்சாலை வாயுக்களை அளவீடு செய்து வரும் நிலையில் அளவுக்கு அதிகமாக இதுபோன்ற வாயுக்கள் வெளியாகி வருவதாக நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்? அதற்கான அளவீட்டுக் கருவி பயன்பாட்டில் நீங்கள் கைதேர்ந்தவரா? உங்களது கல்வித் தகுதி என்ன? அறிவியல் அறிவு எப்படிப்பட்டது? தொழிற்சாலை சார்ந்த மேலாண்மையில் சிறந்த அதிகாரிகளே அதனதன் துறைகளில் பணியில் இருக்கும் பட்சத்தில் அதையும் தாண்டிய வல்லுநராக இருப்பதற்கு சிறப்புக் கல்வித்தகுதி உங்களிடத்தில் என்ன இருக்கிறது?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் அளவுக்கு அதிகமாக எஸ்ஓ2 வெளியாவதாகவும், அதற்கு ஆலையின் புகைபோக்கியின் அளவு குறைவான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுவதில் அடிப்படை அறிவியல் ஆதாரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே? ஸீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற மேலாண்மையை கையாளும் தொழிற்சாலைக்கு புகைபோக்கி அளவீடு ஒரு காரணமாக இருக்க முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் முடக்கத்திற்கு முன்பு இருந்து எஸ்ஓ2 அளவே, ஆலை முடக்கப்பட்ட பின்னரும் தொடர்கிறது என்றால் அந்த வாயு எங்கிருந்து வருகிறது?

ஸ்டெர்லைட்டை விட அதிபயங்கரமாக பன்மடங்கு வாயுக்களை வெளியிடும் ஆலைகள் அதிகளவில் தூத்துக்குடியில் செயல்படும் பட்சத்தில் இந்த ஆலையை எதிர்த்து மட்டும் போராடிய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? உங்களுக்கு அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்ன? என்றெல்லாம் சரமாரியாக கேள்விகளை கேட்டு நித்யானந்த் ஜெயராமை நிலைகுலைய  வைத்து விட்டார்கள். ஆளை விட்டால் போதும் என்ற கதியாக அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். பத்திரிக்கையாளர்களில் அறிவியல் அறிவுச்செறிவு மிகுந்தவர்கள் இருப்பார்கள் என்று அவர் எதிர்பாராததின் விளைவு இது.

இது ஒரு புறம் இருக்க சேலத்தில் இருந்து கொண்டு தொழிற்சாலைகளையும், வணிக நிறுவனங்களையும் பசுமைப்போராளி என்ற அடைமொழியோடு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறிக்கும் மாபியா தொழிலை சத்தமில்லாமல் நடத்தும் பியூஷ்மானூஷ் என்ற சமூக விரோதி மக்களை பகடைக் காயாய் பயன்படுத்திக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன. சமீபத்தில் கூட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இந்த சமூக விரோதியைப் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதில் தொழிற்சாலைகளை மிரட்டி பணிய வைக்க இந்த போலி நபர் கையாளும் யுக்தி, அதற்காக கிராம மக்களை மூளைச்சலவை செய்ய ஆட்கள் தேவை என்ற விளம்பரமும், அதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமும் தருவதாக அவரது முகநூலிலேயெ வெளியிட்ட அறிவிப்புகளை வைத்து அவரது முகத்திரையை கிழித்தெறிந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு சேலத்தில் புதிய கிளையைத் திறந்த போத்தீஸ் நிறுவனத்திடம் ரூ.7 லட்சத்தை மிரட்டி பறித்தது உள்ளிட்ட மேலும் சில விவரங்களையும் பகிரங்கப்படுத்தினர். இப்படியெல்லாம் ஆட்களுக்கு சம்பளத்தை கொடுத்து மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது? போராட்ட களத்தில் செலவுகளை மேற்கொள்ள தேவைப்படும் கோடிக்கணக்கான பணத்திற்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்களது சொத்து விவரங்கள் என்ன? முழு நேர பணி என்ன? அதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன? இதெல்லாம் பத்திரிக்கைகள் முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விகளுக்கெல்லாம் இவர்களிடம் எந்த காலத்திலும் பதில் கிடைக்காது என்பது உறுதி.

சரியான நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் துப்பறிந்து வெளியிடும் இதுபோன்ற செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, போராட்டங்களின் பின்னணியில் இந்த சமூக விரோதிகள் சுயலாபத்திற்காக செய்யும் அட்டூழியங்களையும் புரிந்து கொள்ள பத்திரிக்கைகளின் செய்தி எத்தனை உபயோகமாக இருப்பதையும் உணர்ந்து கொள்ள வாய்ப்பாகி விட்டது. இனிமேலும் இதுபோன்ற போலி போராளிகளின் கைங்கர்யம் மக்கள் மத்தியில் எடுபடவாய்ப்பில்லை. இவர்களைப் போன்றவர்களை அரசு கண்டுபிடித்து அரசையும், மக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் இவர்களை களையெடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு பெரிய அளவிலான போராட்டத்தின் பின்னணியிலும் இதுபோன்ற கருப்பு ஆடுகளின் திரைமறைவு திருவிளையாடல்கள் இருப்பது உளவுத் துறையினருக்கு தெரியாமல் இருக்கப் போவதில்லை. தூத்துக்குடி விவகாரத்திற்கு பிறகு உளவுத்துறையின் கண்காணிப்பு தமிழகம் முழுவதுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் போராளிகள் என்ற பெயரில் நடமாடும் நபர்களை குறித்து உள்ளூர் நபர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி விட்டனர்.

நித்யானந்த் ஜெயராம், பியூஷ்மானூஷ் மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக போராளிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள், தூத்துக்குடி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய பின்னணிகள், சொத்து விவரங்கள், வருமான இனங்கள், இவர்களின் செயல்பாடுகளுக்கு துணை போனவர்கள், கூலிக்கு வேலை செய்தவர்கள் என ஒவ்வொன்றாக தோண்டித்துருவ ஆரம்பித்து விட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மக்கள் அதிகாரம், மக்கள் கண்காணிப்பகம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை இயக்கம் என பல்வேறு அமைப்புகளை வைத்துக் கொண்டு செயல்படுபவர்கள், இவர்களுக்கு எங்கிருந்து நிதியுதவிகள் பெறப்படுகிறது? இவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தகவல்கள் என்ன? என்றெல்லாம் கண்காணிக்க மாறுவேடத்தில் சென்று காவல்துறையினர் ஆராயத்தொடங்கி விட்டார்கள். விரைவில் சட்டத்தின் அடிப்படையில் இவர்களது கொட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என மத்திய மாநில அரசுகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆரம்பத்திலேயே இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் ஆடுபுலி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் விவகாரம் முற்றும் சமயங்களில் காவல்துறைக்கும், அரசுக்கும் ஏற்படும் களங்கத்தையும், அவப்பெயரையும் தவிர்த்து விடலாம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

----------------------

 

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending