தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகாலமாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதாகவும், நிலத்தடி நீர், விளைநிலங்கள் பாழ்படுவதாகவும், காற்று மாசு ஏற்படுவதாகவும் கண்டபடி வாய்க்கு வந்தபடி அரசியல்வாதிகளும், பல்வேறு அமைப்புகளும் கூக்குரலிட்டன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக இந்த ஆலையால்தான் கேன்சர் பரவுவதாகவும், விதிமுறைகளை மீறி நச்சுவாயு வெளியிடப்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவரே நேரில் ஆஜராகி வாதாடி வருகிறார்.
இந்த விவகாரத்தில் ஏதோ நிதியாதார சூட்சுமம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் பெயரை மையமாக கொண்ட அமைப்புகளும் தாறுமாறாக ஆலையை அணுகி பணபேரமும் நடத்தி தோல்வியுற்றதால் தங்கள் பங்குக்கு கேன்சர் பிரசாரத்தையும், இன்னபிற வதந்திகளையும் கிளப்பி வெளிநாட்டுக் காசுக்காக கதையளந்து கலவரத்தை உண்டுபண்ணி கரையேறி விட்டார்கள். ஆனால் இறுதிவரை எந்த அரசியல்வாதிகளும், அமைப்புகளும் உண்மையான கேன்சர் காரணத்திற்காக போராடவில்லை என்பது அப்பட்டமாக நிரூபணமாகி வருகிறது.
கடந்த ஒரு வாரம் முன்பு நெல்லை சுத்தமல்லியில் 2 லாரிகள் பிடிபட்டன. அதில் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் அந்த லாரியை மடக்கிப்பிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் பிடிபட்ட லாரி டிரைவர்கள் தெரிவிக்கையில், கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து விளைபொருட்களையும், உணவுப்பொருட்களையும் கொண்டு சென்று விட்டு திரும்புகையில் வெற்று வண்டியாக வரும் என்பதால் அங்குள்ள கழிவுகளை ஏற்றி தமிழக எல்லையில் எங்காவது கொட்டி விடுமாறு கூறி வாகனத்திற்கு கூலியும் கொடுத்து விடுவார்கள். இது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் கழிவுகளை எடுத்து வருவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மூலமாகவும் தங்களுக்கு ஏதாவது வருமானம் கிடைக்கும் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இதே போல் கடந்த ஜூலை 28ம் தேதி தினமலர் நாளிதழ் வெளியிட்ட நாளிதழில், தேனியை அடுத்த சின்னமனூர் அருகே குச்சனூர் வனப்பகுதியின் கீழ்புறம் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் அபாயகரமான 20 டன் மருத்துவக்கழிவுகள் குவித்து வைத்திருந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மருத்துவமனையில் இருந்து இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்தது. இதில் காலாவதியான மாத்திரைகள், உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் மோசமான மருத்துவக் கழிவுகள், உணவுகளுக்கான பாலித்தீன் பைகள் என கண்டபடி கழிவுகள் இருந்துள்ளது. இதனை மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கேரளாவில் மருத்துவக்கழிவுகளை மட்டுமல்ல எலக்ட்ரானிக், எலக்ட்ரிக் மற்றும் இறைச்சிக்கழிவுகள் என மண்ணை சீர்கெடுக்கும் எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவதற்கு அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை. இதனால் கேரளா சென்று திரும்பும் தமிழக லாரிகளில் கழிவுகளை ஏற்றி அதற்கான கூலியையும் தாராளமாக கொடுத்து அனுப்பி விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் குப்பைத் தொட்டியாக தமிழகம் மாறுவது தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கூக்குரலிட்டாலும் அரசியல்வாதிகளுக்கும், தேவையில்லாத விவகாரங்களில் தலையிடும் லெட்டர்பேடு அமைப்புகளுக்கும் இதுபோன்ற தீவிரமான விஷயங்களில் அக்கறை தோன்றுவதில்லை. கட்சிக்காக ஒரு கொள்கை, காசுக்காக ஒரு கொள்கை இதுதான் பண ஆதாய அரசியல்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தின் கேரள எல்லை வழியாக 26 டன் மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்ட போது பொது மக்களால் அந்த லாரிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகு 4 நாட்களுக்குப் பிறகு போலீசாரின் உதவியோடு திரும்பவும் கேரளாவிற்கே அந்த கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியரை செக்போஸ்ட், கன்னியாகுமரி செக்போஸ்ட் வழியாகவும் தென்தமிழகத்திற்குள் கேரள கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என பாகுபாடு இல்லாமல் இரவோடு இரவாக ஆங்காங்கே கழிவுகள் கொட்டப்பட்டு விடுகின்றன.
இங்குள்ள சில வியாபாரிகளும் அற்ப சொற்ப பணத்திற்காக கழிவுகளை வரவைத்து அதில் உள்ள உதிரிபாகங்களையும், இதர பொருட்களையும் பிரித்தெடுத்து லாபம் பார்க்கின்றனர். இதனால் பொது ஜனங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை உணருவதில்லை. தங்களுக்கு லாபம் சேர்க்கும் பொருட்களை பிரித்தெடுத்த பிறகு கழிவுப்பொருட்களை குடியிருப்பு பகுதிகளின் அருகில் குப்பைக்கிடங்கில் கொட்டி தீவைத்துச் சென்று விடுகின்றனர். இந்த புகையை தூக்கத்திலேயே சுவாசிக்கும் பொதுமக்களுக்கு கேன்சர், காசநோய், நுரையீரல் அழற்சி, தோல் பாதிப்புகள் உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவுகின்றன. இதையெல்லாம் வைகோ போன்ற அரசியல்வாதிகளும், மணிக்கணக்காக பசுமை, சுற்றுச்சூழல் என வாய்கிழிய பேசும் நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் போன்ற போலி போராளிகளும் கண்டுகொள்ளாமல் தங்களுக்கு ஆதாயம் பயக்கும் போராட்டங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
நச்சு ஆலை, நாசக்கார ஆலை என்றெல்லாம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் மட்டுமே வாதிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுபோன்ற விஷயங்களில் வாய் திறவாமல் இருப்பது ஏன்? ஒரு முறையேனும் இதற்கு எதிராக போராடாதது ஏன்? என்ற கேள்விகள் மக்களின் மனதை துளைத்தெடுக்கின்றன. பணபேரத்திற்கு படியாத தொழிற்சாலைகளுக்கு எதிராக போராட்ட யுக்தியை கையில் எடுக்கும் போலி போராளிகள் எங்கே போனார்கள்? சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய்பரவுகிறது என கூப்பாடு போட்ட பேராசிரியை பாத்திமாபாபு, மக்கள் அதிகாரம், மக்கள் கண்காணிப்பகம், ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு இயக்கம் போன்றவர்கள் உண்மையான கேன்சர் காரணிகளான கேரள கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து ஏன் போராட வில்லை?
ஏனென்றால் இதுபோன்ற விவகாரங்களில் இவர்களுக்கு துளியளவும் ஆதாயம் கிடைக்கப்போவதில்லை. மண்ணை, நிலத்தை, நீரை மாசுபடுத்துவதோடு மக்களின் உயிரைக் காவு வாங்கும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் சல்லிக்காசு பிரயோஜனம் இருக்காது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆகவேதான் பன்னாட்டு சதிக்கு விலைபோய் வெளிநாட்டுக் காசுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் களம் இறங்கினார்கள். கலவரத்தை அரங்கேற்றி காசு பார்த்துக் கொண்டார்கள்.
தற்சமயம் கேரளாவில் கனமழைபெய்து வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதனால் அங்குள்ள கழிவுகளையெல்லாம் அவசர அவசரமாக லாரிகளில் ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பி வருகின்றனர். வெள்ள நிவாரண பொருட்கள் செல்லும் லாரிகள் திரும்பி வருகையில் கழிவுகளுடனே பெரும்பாலும் வருகிறது. வெள்ளச்சமயங்களில் கழிவுகள் தேங்கினால் நோய்களின் தாக்கம் அபரிமிதமாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் மழைக்கு தற்போது பஞ்சமில்லை. நீர் நிலைகள், ஏரி குளம் குட்டை கண்மாய்கள் நிரம்பி விட்டன. இந்த சமயத்தில் இந்த கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டினாலும் மழைக்காற்றில் தொற்றுநோய்களை மேலும் அதிகப்படுத்தவே வாய்ப்புள்ளது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த ஆதாய அரசியல்வாதிகளும், பணத்திற்கு வாய்பிளக்கும் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதுதான் வள்ளுவர்வாக்கு. நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் அதன் தெளிவுரை. இது மருத்துவத்திற்கு மட்டுமான அறிவுரையன்று. சமூகத்தின் அவலங்களையும் இதே கோணத்தில்தான் அணுகவேண்டும். நோய்க்கான காரணிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் தொழில் வாய்ப்புகளை அற்ப லாபத்திற்காக தேவையில்லாமல் முடக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும் சுயலாப அரசியல்வாதிகளும், அமைப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் மக்களுக்கு செய்யும் நன்மைகளில் தலைசிறந்ததாக அமையும் என்பதே நடுநிலையாளர்களும், சமூக நோக்கர்களும் விரும்புகின்றனர்.
----------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.