8/04/2018

ஸ்டெர்லைட் ஆலையைப்பற்றிய மக்களின் புரிதலும் அறியாமையும்!



தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையைப்பற்றி பலவாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உலாவருகின்றன. தாமிரம் தயாரிப்பில் உலகச்சந்தையில் பல நாடுகளுக்கு சவால் விடும் இந்த ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய தயாரிப்பு தாமிரம் தயாரிப்பு. உபரி தயாரிப்புகள் என்று பார்த்தால் கந்தக அமிலம், பாஸ்போரிக் அமிலம் உள்ளிட்டவை. இந்த ஆலையின் மூலம் 300க்கும் மேற்பட்ட தாமிர மூலப்பொருட்களை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளும், 200க்கும் மேற்பட்ட உரத் தொழிற்சாலைகளும், தமிழ்நாட்டில் மட்டும் 29 கெமிக்கல் தொழிற்சாலைகளும், 150 உபரி தொழிற்சாலைகளும், இவற்றை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் தொழில்நகரங்கள் பட்டியலில் முன்னணி இடத்தில் தூத்துக்குடி இடம்பெற்றதற்கும் ஸ்டெர்லைட் ஆலை முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்குள்ள துறைமுகம், இன்னபிற தொழிற்சாலைகளும் தூத்துக்குடி நகரின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும், ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கின்றன.
22 வருடங்களுக்கு மேலாக தூத்துக்குடி நகரத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை முடக்க கடந்த மே.22ல் முற்றுகை போராட்டம் என்ற பெயரில் ஒரு கலவரம் அரங்கேற்றப்பட்டு அந்த ஆலை சீல் வைக்கப்பட்டு தற்போது உற்பத்தி நின்றுவிட்டது. இதனால் இந்த ஆலையை நம்பிய பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த ஆலையைப்பற்றிய மக்களின் புரிதலும், அறியாமையுமே இந்த ஆலையின் சீல் வைப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
ஆலையப்பற்றிய தவறான கருத்துக்களை மக்களின் மனதில் திசைக்கு ஒன்றாக அவர்களின் தேவைகளின், பாதிப்புகளின், எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தன்மைக்கு ஏற்றவாறு விதைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆலையப்பற்றிய கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் தப்பும் தவறுமாக போலி போராளிகள் வாயிலாக பரப்புரை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரத்தை ஒட்டிய மடத்தூர், தெற்கு வீரபாண்டிய புரம், கோரம்பள்ளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கெட்டுப்போனதற்கு காரணம் இந்த ஆலைதான் என்ற கருத்தை வேரூன்றி உள்ளனர்.
இந்த ஆலை தொடங்குவதற்கு முன்பே, கடல்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தூத்துக்குடியில் நிலத்தடி நீர் இப்படித்தான் இருந்ததை ஒப்பிடாமலும், பல நூறு ஆண்டுகளாக உப்பளங்களின் செயல்பாடுகள் அதிகமுள்ள இப்பகுதிகளில் அதன் சாரத்தால் நிலத்தடி நீர் படிப்படியாக கெட்டுப்போனதை சுட்டிக் காட்டாமல் ஆலைக்கு எதிரான போலி போராளிகள் அறிவியல் ஆய்வு செய்ததை போல பாவனை காட்டி மக்களிடம் வதந்தியை பரப்பியுள்ளனர்.
கடற்கரை பகுதிகளான திரேஸ்புரம், மாதாகோவில் பகுதி, குரூஸ்புரம், முத்தையாநகர், தாளமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலைக்கழிவுகள் கடலில் நேரடியாக கலப்பதால் மீன்வளம் கெட்டுப்போவதாகவும், மீன்பிடி தொழில் அழிக்கப்படுவதாகவும் பரப்புரை செய்து மீனவ மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளனர். தூத்துக்குடி நகரை ஒட்டிய பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருந்தாலும், எந்த வித ஆலைக்கழிவுகளும் ஆலையை விட்டு வெளியேறாத படிக்கு பூஜ்ஜிய கழிவு மேலாண்மை (ஸீரோ வேஜ்ட் மேனேஜ்மென்ட்) திட்டத்தை செயல்படுத்தி வரும் டிஜிட்டல் ஆலை என்பதை மக்களுக்கு ஆலை நிர்வாகம் உணர்த்தாததை தங்களுக்கு சாதகமாக போலி போராளிகள் பயன்படுத்திக் கொண்டு மீனவ மக்களை ஆலைக்கு எதிராக மூளைச்சலவை செய்துள்ளது உறுதியாகி உள்ளது. இதனை மீனவ மக்களே ஒப்புக்கொண்டு போலீசாரிடமும், அதிகாரிகளிடமும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த ஆலையில் சேகரமாகும் கழிவுகளை கந்தக அமிலமாகவும், பாஸ்போரிக் அமிலமாகவும் மாற்றி அவற்றை கெமிக்கல் ஆலைகளுக்கும், உரத் தொழிற்சாலைகளுக்கும் ஆலை நிர்வாகம் விநியோகித்து வருகிறது. தற்போது இந்த தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டு மக்களுக்கு தேவையான பல அத்தியாவசியப் பொருட்கள், விவசாய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு விலையேற்றத்தை சந்திக்கும் அபாய சூழ்நிலை உருவாகி வருவதை மக்கள் உணரவில்லை. இதன் தீவிரத்தைப்பற்றி போலி போராளிகளுக்கு எந்தவித கவலையும் இல்லை.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் எஸ்ஓ2 (சல்பர் டை ஆக்சைடு) மக்களுக்கு கேன்சர் நோயை உருவாக்குவதாக அச்சத்தையும், பீதியையும் கிளப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆலையில் இருந்து மட்டுமே எஸ்ஓ2 வெளியாகி வருவதாக கதை கட்டியுள்ளனர். இங்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே எஸ்ஓ2 வெளியிடப்படுகிறது என்கிறது ஆலை தரப்பு. அறிவியல் தரப்பில் வெளியான தகவல் என்னவென்றால் கடலில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடலை நோக்கிய பகுதிகளுக்கு எஸ்ஓ2 செல்லவே வாய்ப்பில்லை. காற்றின் திசைவேகத்தில் வின்ட்ரோஸ் எனப்படும் அளவீட்டின் படி தூத்துக்குடி பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதுதான் அந்த குறிப்பு.
இன்னொரு உண்மையையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய தருணங்களில் எந்தளவிற்கு எஸ்ஓ2 தூத்துக்குடியில் பரவியிருந்ததாக கூறப்பட்டதோ, ஆலையின் இயக்கத்தை நிறுத்திய பின்னரும் தற்போது அதே அளவிலேயே எஸ்ஓ2 பரவல் இருப்பதாக தெரிவிக்கிறது மற்றொரு புள்ளி விவரம். ஆகவே தூத்துக்குடியில் சுட்டிக்காட்டப்பட்ட எஸ்ஓ2 பரவல் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மட்டுமே சார்ந்தது அல்ல என்பது அறிவியலாளர்கள் உரைக்கும் செய்தி.
அதே போல் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட போது 4000 டன் தாமிர உற்பத்தி நடந்த சமயத்தில் 60 அடி உயர புகைபோக்கி வைக்கப்பட்டதாகவும், தற்போது 4 லட்சம் டன் தயாரிக்கும் பட்சத்திலும் புகை போக்கி உயரம் கூட்டப்படவில்லை எனவும் அறிவியல் விஞ்ஞானியையே மிஞ்சும் அளவிற்கு மெத்தப்படித்ததாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் நித்யானந்த் ஜெயராம் என்ற போலி போராளி ஒரு உண்மையை உணர்ந்திருக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட போதே உற்பத்தியை விட பன்மடங்கு செயலாற்றக்கூடிய புகை போக்கியை தொலை நோக்குத்திட்டமாகவே வடிவமைத்தனர் என்பது. தேவைக்கு அதிகமாகவே புகைப்போக்கியின் உயரம் இருப்பதாகத்தான் ஆலை நிர்வாகம் சுட்டிக்காட்டுகிறது. அதற்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சட்டதிட்டங்களையும் மேற்கோடிட்டு காட்டுகிறது.
இன்னும் ஒரு படி மேலாக எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையால் தான் மழை பெய்யாமல் இருக்கிறது என விவசாயத்தை நம்பிய அம்மக்களிடம் புதுக்கதையை புனைந்துள்ளனர். அங்குள்ள அனைவருமே சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால், மழை மேகங்களை ஸ்டெர்லைட் கலைத்து விடுவதாகவும், மேகங்களை திருடிவிடுவதாகவும் ஆளுக்கொன்றாக பேசிக் கொள்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நாளன்றே மழை பெய்ததாகவும் அப்பாவித்தனமாக தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் போலி போராளிகளின் விஷமத்தனம் ஒளிந்திருப்பது அந்த மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டதுதான் துரதிர்ஷ்டம்.
விளைவு, தூத்துக்குடி மாநகரை மட்டுமல்லாது தமிழகத்தை, இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளின் செயல்பாடு முற்றிலுமாக முடக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி திறன் என அனைத்துமே முடக்கப்பட்டு, தமிழகத்தில் யார் தொழில் தொடங்க உத்தேசித்தாலும் சற்றே தயக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது போலி போராளிகளின் கொட்டத்துக்கு கிடைத்த தற்காலிக வெற்றியாகவே பார்க்கப் படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வல்லரசு கனவு காற்றில் கரைந்த கற்பூரமாகி விடும் என்பது திண்ணம். இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். போலி போராளிகள் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும். மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அத்தியாவசிய எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களிலும் தாமிரத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தால், இது போன்ற தொழிற்சாலைகளின் தேவையையும் தவிர்க்க முடியாது என்பது தெளிவாகும். அந்த தெளிவை மக்களிடம் அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.



No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending