8/11/2018

தமிழகத்தை அச்சத்தோடு பார்க்கும் முதலீட்டாளர்கள் அனில் அகர்வாலுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஆந்திரா

இந்தியாவை தொழில் வளத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உலக அரங்கில் வல்லரசு நாடாக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதையும் தாண்டி இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கவும் பல்வேறு முத்தாய்ப்பான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொழில்வாய்ப்புள்ள மாநிலங்களை தேர்வு செய்து முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழில்களை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு, இதன் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதற்காக சர்வதேச அளவிலான தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அவர்களுக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளை மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் மூலம் திட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெரு முதலீட்டில் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உற்பத்தி திறன் குறியீடு, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்த தேவையான யுக்திகள், வாய்ப்பு வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் இரண்டாம் கட்ட ஆலைப்பணி தொடங்குவதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்தியாவின் தாமிர தேவையை 40 சதவீதம் அளவிற்கு தாங்கி நின்ற இந்த நிறுவனம், தனது உற்பத்தியை பெருக்கினால் உலக அரங்கில் தரமான தாமிர தயாரிப்பில் நம் நாடு தன்னிறைவு பெறுவதோடு, உலகச்சந்தையில் நம்பர்.1 இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை விதைத்திருந்தது. தொழிற்போட்டி காரணமாக பன்னாட்டு சதிவலையை உருவாக்கிய போட்டி நாடான சீனா தனது கைங்கர்யத்தை இங்குள்ள போலி போராளிகளின் நாசவேலைகளோடு திட்டமிட்டு மக்களை திரட்டி போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை நடத்தி ஆலையின் செயல்பாட்டை முடக்கி விட்டனர்.

இந்த ஆலையின் முடக்கம் என்பது அந்த நிறுவனத்தினருக்கு இழப்பு என்பதை விட, இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்பட்ட இழப்பு என்பதை மக்கள் உணர வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கேன்சர் என்ற கொடி நோயின் பெயரைச் சொல்லி மக்களை ஆலைக்கு எதிராக திசை திருப்பி இந்த பாதகத்தை போலி போராளிகள் அரங்கேற்றியுள்ளனர். இந்த  ஒற்றைக் கலவரமானது உலக அளவிலான முதலீட்டாளர்களை இந்தியாவின் பக்கம், குறிப்பாக தென்தமிழகத்தை அச்சத்துடன் பார்க்க வேண்டிய நிலைக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. ஒற்றை வரியில்  சொல்லப்போனால் பெரிய முதலீட்டு தொழிற்சாலைகள் தொடங்க தமிழகம் லாயக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவே முதலீட்டாளர்கள் பார்வையில் பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடாக முடக்கியவர்கள் அந்த தொழிலை சரிவர செய்ய முடியாமல், சாதக பாதகம் தெரியாமல் மக்களை தூண்டி விட்டு சுயநலத்திற்காக பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள், சமூக போராளிகள் என்ற பெயரில் போலியாக செயல்படும் சுயநலவாதிகளால் தொழிற்சாலை அலகுகள் சிதைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சியானது நசுக்கப்படுகிறது. இதனால் தமிழத்தை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் வாய்ப்புவசதிகளை தங்கு தடையின்றி வழங்கும் மாநிலங்களுக்கு பன்னாட்டு முதலீட்டாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தொழில் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் தங்களது தொழில் அலகுகளின் கிளைகளை எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாற்று மாநிலங்களில் நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையில் வேதாந்தா குழுமமும் கால்பதித்துள்ளது என்பது ரகசிய செய்தி. ஏற்கனவே தூத்துக்குடியில் கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் முடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டை கொண்டுள்ள இந்த நிறுவனம் முடங்கியுள்ளதால் 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட நேர்முக, மறைமுக ஊழியர்களும், இதன் மூலப்பொருட்களை நம்பிய உபரி தொழிற்சாலைகள், அவற்றில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக, தூத்துக்குடியில் நிறுத்தப்பட்ட இரண்டாம் அலகு நிறுவதலை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை உறுதி செய்யும் விதமாக வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஸ்டெர்லைட் நிறுவனத்தை அமைக்க ஆந்திராவில் இடம் ஒதுக்கித்தரப்படும் என சந்திரபாபு நாயுடு வாய்மொழி தகவலை அளித்திருந்த நிலையில், இவர்களது  சந்திப்பு அதனை உறுதி செய்யும்  விதமாக அமைந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஆந்திராவிற்கு திடீரென தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்த அனில்அகர்வால் நேரடியாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகல வித ஏற்பாடுகளுடன் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு தரிசனத்தை மேற்கொண்டு சூசகமாக தனது பேட்டியில் இந்த  தகவலை உறுதிப் படுத்திச் சென்றுள்ளார். பெரிய அளவில் ஆந்திராவில் முதலீட்டை மூலதனப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆந்திராவில் ஸ்டெர்லைட் ஆலையின் கிளையை பரப்பி இந்தியாவிற்கான தாமிரத்தட்டுப்பாட்டை ஈடுசெய்யும்  நோக்கிலேயே செயல்படுவதாகவும், உலகச் சந்தையில் முதல்இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்து ஒரு போதும் இந்தியாவை பின்வாங்க செய்யப்போவதில்லை எனவும் அந்நிறுவனம் தெளிவுபட தெரிவித்துள்ளது. இது ஒருவிதத்தில் பார்க்கப்போனால் தமிழகத்திற்கு ஏற்பட போகும் தொழில் சார்ந்த மிகப்பெரும் பாதிப்புகளில் ஒன்றாகவே எதிர்காலத்தில் தோன்றச் செய்யும் என்பது மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே தமிழகத்தில் காலூன்ற முயற்சியெடுத்த பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட் (பிசிபிஎல்) உள்ளிட்ட கம்பெனிகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் முடக்கத்திற்கு பிறகு இங்குள்ள இக்கட்டான சூழ்நிலைகளை கருத்தில் எடுத்து பின்வாங்கி விட்டது. இதுதொடர்பான பேட்டி ஒன்றில் பிசிபிஎல் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவிக்கையில், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிசிபிஎல் நிறுவனமாது தமிழ்நாட்டில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன் கருப்பு கார்பன் தயாரிக்கும் தொழில் அலகை நிறுவ திட்டமிட்டது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தற்போது அந்த முடிவை பின்வாங்கச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தொழிற்சாலையை ஆந்திரா அல்லது தெலங்கானாவில் அமைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பன்னாட்டு தொழில்களை தொடங்க எண்ணம்  கொண்ட முதலீட்டாளர்கள் அனைவருமே தமிழகத்தை ஒருவித அச்சமான கண்ணோட்டத்துடன் பார்க்க தொடங்கியிருப்பது உள்ளபடியே மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாது தேசத்தின் நலனுக்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நிலைமை இப்படியே போனால் தொழில் தொடங்க 100 சதவீதம் தமிழகம் உபயோகமற்ற மாநிலமாக கருத்தில் கொள்ளப்படும் அபாயம் உருவாகலாம் என தொழில் ஆர்வலர்கள் எச்சரிக்கையும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending