எந்த சாதிக்காரன் யாரைக் காப்பாற்று கிறான்? கேள்வியின் நோக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்மீகப்படி ஆதிப்பெற்றோர் ஈன்றனரோ, அறிவியல் கூற்றுப்படி டார்வின் கோட்பாட்டின் இணக்கமாக பிறந்தோமோ அதுவல்ல இப்போதைய விவாதம். எப்படி பிறந்திருந்தாலும் ஆதியில் ஒரு குடியாகத்தான் இருந்திருப்போம். குடிகள் பெருகி இனக்குழுக்களாக மாறி திசைக்கொன்றாக சிதறி தெரிந்த வேலைகளை செய்து தேர்ந்து செய்யும் வேலைக்குத்தக்க இனமாக மாறி பின்னாளில் சாதி அடையாளமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டது மனித சமூகம்.
மேலை நாடுகளில் நிறவேற்றுமை தீவிரவாதம் என்றால், தாய் திருநாட்டிலோ சாதீய ரீதியான தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. நிற வேற்றுமை தீவிரவாதம் கூட மெல்ல மெல்ல எடுபட்டு நாகரீகம் தழைத்து விட்டதாக தோன்றினாலும், நமது சாதீய தீவிரவாதமோ நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு செல்கிறதே தவிர எந்த இறுதித் தீர்வையும் எட்டவில்லை.
ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்கிறவன் அறிவியலை வெறுக்கிறான். இறைக் கொள்கையில் இருந்து தடம்புரண்டு மதவாத அரசியலுக்குள் எளிதில் வயப்பட்டு சக மனிதனுக்கு எதிராக நிற்கிறான். அறிவியலை ஏற்றுக் கொண்டவனோ ஆண்டவனையே பகைக்கிறான். சக மனித இனத்தை நடமாடும் பரிசோதனைக் கூடமாக மாற்றி பிரபஞ்சத்தை அச்சுறுத்தும் நோயுற்ற சமுதாயம் படைக்கிறான்.
எது அழிவுக்கானது, எது ஆக்கப்பூர்வ மானது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சாமானியக் கூட்டம் சடிதியில் மாட்டிக் கொண்டதைப் போல பன்னெடுங்காலமாக திணறிக் கொண்டிருக்கிறது. இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்களை செய்யும் தொழிலுக்குத்தக்க பெயர்களை வைத்து பிரித்துக் கொண்ட சாதித்துவம் மனிதத்திற்குள் புரையோடி மனிதக்குடிகளை துண்டாடி அரசியல் லாபம் அடைந்து வருகிறது.
ஆதிக்குடிகளாக இருந்த போது காணக்கிடைத்த ஒற்றுமை, இனக்குழுக்களாக பிரிந்த போது எதிர்காலத்தில் தங்களை சாதி முதலைகள் விழுங்கும் என்ற அறிவு கொண்டிருக்கவில்லை. ஆதிக்க சாதிகள் என்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள், தங்களுக்கு அடிபணிந்தவர்களை தாழ்ந்த சாதிகளாக பாவிக்கத் தொடங்கியதன் வரலாறு நீண்ட நெடியது. துயரங்களும் வலிகளும் மிகுந்தது.
நாம் நடந்து செல்லும் பாதையில் குறுக்கிடும் எறும்புகளை தெரிந்தோ தெரியாமலோ மிதித்துக் கொல்லும் போது யாருக்கும் மனவலியை கொடுப்பதில்லை. சாதாரண எறும்புதானே என்ற எண்ணத்தில் லேசாக மனம் கடந்து சென்று விடுவதைப் போலத்தான் மனிதனும் மனிதனை சாதியப் பசிக்காக இரையாக்கத் தொடங்கினான். விமானத்தில் பறக்கும் போது மனித தலைகளையும் எறும்புகளாக பார்ப்பது போன்ற உணர்வைத்தான் வலியவன் மெலிந்தவனை பார்க்கும் போது அடைந்தான்.
வலுத்தவன் பெருகத் தொடங்கினான்… மெலிந்தவன் ஓடி ஒளியத் தொடங்கினான். காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்தான். புற உலகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டு புறந்தள்ளினான். ஆதிக்குடியின் அதே வாசனையோடு பழங்குடியினனாகவே வாழ்வைத் தொடர்ந்தான். அவனுக்குத் தெரியாது ஆதிக்குடியினான அவன் பழங்குடியினன் என்ற பெயர் பெற்ற வரலாறு. அன்றாட உணவுக்கானது மட்டுமே அவனது போராட்டம்.
பரந்து விரிந்த நிலப்பரப்பை ஆளத் துடித்தவனே சாதிகளை பரப்பி சாதிக்குள் பிரிவுகளை உட்புகுத்தி கலவரங்களை நிலைப்படுத்தி உயிர்களை கொலைப்படுத்தி ஆணவத்தை தலைக்கேற்றி சாதிக் கொரு தலைவனாக தங்களை நிலைநிறுத்தி பரம்பரை பரம்பரையாக தங்களை ஆதிக்கசாதி, ஆண்டசாதி என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்து வருகிறார்கள்.
உயிரைக் கொடுத்து, உழைப்பைக் கொடுத்து, காடு மலைகளைத் திருத்தி, நிலங்களை பண்படுத்தி, பள்ளங்களை மேபடுத்தி, வயல்வெளிகளாக சீர்திருத்தி உழைக்கும் வர்க்கமாக உணவு கொடுப்பவர்களின் உழைப்பைச் சுரண்டி, உரிமைகளைப் பறித்து, உணர்வுகளைச் சிதைத்து அடிமைச் சாதிகளின் பட்டியலில் சேர்த்தது அந்த ஆணவ ஆதிக்கம்.
வலியவனுக்கு எளியவன் அடிமை என்றிருந்ததே தவிர, இந்த சாதிதான் அடிமை என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆளுகைக்கான அந்த மண்ணில் வலுத்தவன் எவனோ அவனே ஆதிக்க சாதியினன் ஆனான். ஒரு நிலப்பரப்பில் எளிய சாதியினனாக இருந்தவன் மற்றொரு நிலப்பரப்பில் மன்னனாக முடி சூடியிருந்தான். இதுதான் உண்மை வரலாறு. ஒரு குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே அடிமைகளாக நடத்தப்படவில்லை. பெரும் பரப்பிலான உண்மை என்னவென்றால் உழைக்கும் சாதி அடிமை சாதியாக்கப்பட்டதுதான். உழைப்பை பிடுங்கித்தின்றவன் உயர்சாதியினன் ஆனான்.
பெருவெடிப்பு கோட்பாட்டின் படி சூரியனில் இருந்து கோள்கள் வெடித்துச்சிதறி பூமி என்ற கோள் உருவான போது கண்டங்களோ, துண்டங்களோ இல்லாமல் நீர்த்திரள் தனியாகவும், நிலப்பரப்பு தனியாகவும் தன்தன் எல்லைகளில் சீராகத்தான் இருந்தன. இயற்கைச் சீற்றங்களும், பெருங்கோள்களுமே கண்டங்களும், துண்டங்களுமாக நாடுகளையும், தீவுக் கூட்டங்களையும் உருவாக்கி பின்னாளில் உருவான மனித இனம் தேவைக்கு தக்கபடியான நிலங்களுக்கு பயணமாகிக் கொண்டனர். தங்களது நிலப்பரப்புக்கும் கண்டம், துண்டம் என பெயர்களையும் வைத்துக் கொண்டனர்.
இப்படித்தான் ஒன்றாய் தோன்றிய மனிதக்குடியில் சாதியப்பிளவுகளும் தோன்றின. தொழில்களுக்குத் தக்கபடி பெயர் சூடி இனக்குழுக்களாக பிரித்து ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தலைவனோடு மற்ற இனக்குழுக்களை ஆளத்துடித்தன. ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து ஓரறிவு கூடுதலாக பெற்ற மனிதனோ தன் சுயநலத்திற்காக சக மனிதனையே வேட்டையாடுவதற்கு எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் சாதியாக மாறிப் போனது.
எந்த சாதிக்காரனும் யாரையும் காப்பாற்ற மாட்டான்... அவனவன் தன்பிழைப்புக்காக போராடுவானே தவிர தன் இனத்துக்காக போராடும் தலைவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. தற்காலத்தில் சாதிப்பெருமை பேசித்திரிபவன் யாவருமே தன் இனத்தின் வளர்ச்சிக்காக பெரிதாக எதையும் செய்திருக்க மாட்டாதவன்தான். ஒரு கூட்டத்தை வைத்து, தலைகளின் எண்ணிக்கையை வைத்து தனக்கான பிழைப்பை, ஆதாயங்களை, வருமானத்தை தேடிக் கொண்டிருப்பவன்தான்.
(*ஆகடியம் - பொல்லாங்கு
*ஆகந்துகம் - இடையில் வந்தேறியது)
====================
சாதிக்காரன் வலிய பின்தொடர்வான்...
===================
இதழாளர் ஜே.பி.
=============
நிதர்சனமான உண்மை. இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது.
ReplyDelete