தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டக்களங்களின் மூலம்தான் கோரிக்கைகளை பெறவேண்டிய நிலைமை. இந்த நிலைமைக்கு காரணம் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஆட்சியும், ஆட்சியாளர்களும் இல்லாததுவே. நிர்வாகத்திறமை அற்றுப்போன, செத்துப்போன ஆட்சியாளர்களின் கீழ் எத்தனை திறமையான அதிகாரிகள் இருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போலாகி விடுகிறது தீட்டப்படும் திட்டங்களும், செயல்பாடுகளும்.
எந்தவொரு விவகாரத்திலும் உண்மைத் தன்மையை, புள்ளி விவரங்களை விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாத அறியாத தெரியாத நிலைமைக்குத்தான் ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களின் அறிவும் ஆற்றலும். பத்தாம்பசலித்தனமான நடவடிக்கைகளால் நாள்தோறும் மக்கள் பலிகடாவாவது தமிழகத்தில் நடைபெறும் நிதர்சனங்களில் ஒன்று.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நமது கண்முன்னே மே.22ல் நடந்தேறியது. உலகத்தை உற்றுப்பார்க்க வைத்த ஒரு துயர சம்பவம். இந்த சம்பவத்தில் யார் மீது பழி போடுவது? ஆட்சியாளர்கள் மீதா? காவல் துறையினர் மீதா? போராட்டக்காரர்கள் மீதா? அல்லது பொதுமக்கள் மீதா? கண்மூடி கண் திறப்பதற்குள் அப்படி ஒரு அசம்பாவித சம்பவம்.
காரணம்... அந்த விவகாரத்தின் வீரியமும், உண்மைத்தன்மையும் அடிப்படை மக்களை, சாமானியர்களை சென்றடையவில்லை என்பதுதான். இந்த விஷயத்தை எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒரு தனிப்பட்ட தொழிற்சாலையின் மீது எதற்கு இத்தனை காழ்ப்புணர்ச்சி? இந்த தொழிற்சாலையை காட்டிலும் அந்த பகுதியில் வேறு தொழிற்சாலைகளே இல்லை என்பதை இந்த போராட்டம் சுட்டிக்காட்ட முயலுகிறதா?
மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு துறையும் இந்த தொழிற்சாலைகளுக்கு அனுமதிகளை மறுத்திருந்ததா? அவ்வப்போது அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த தொழிற்சாலையில் ஆய்வுகளை நடத்தவில்லையா? மாசுக்கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் மற்றும் தடையில்லா சான்றிதழை வழங்கவில்லையா? அவர்களைக்காட்டிலும் போராட்டத்தை வழிநடத்தியவர்களில் விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் இருக்கிறார்களா? என்பதெல்லாம் அடுத்தடுத்து எவர் மனதிலும் எளிதாக தோன்றக் கூடிய கேள்விகள் தான்.
சரி இவ்வாறாக வைத்துக் கொள்வோம்... கந்தக டை ஆக்சைடு அதிகமாக வெளியாகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் என்றால், மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் என்டிபிஎல், டிடிபிஎல் அனல் மின் தயாரிப்பு அலகுகள் எந்தவகையான நச்சை வெளியிடுகின்றன. புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவைகளும் இதே கந்தக டை ஆக்சைடை நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகமாக வெளியிடுவதை போராட்ட வழிகாட்டிகள் உணரவில்லையா? அரசின் அலகுகள் என்பதால் அவைகளுக்கு மட்டும் விதிவிலக்கா?
இன்னும் பலப்பல விதிமுறை மீறல்களுடன் இந்த பகுதியில் கணக்கு வழக்கில்லா தொழிற்சாலைகள் இன்னமும் நச்சை கக்கிக் கொண்டு இயங்கத் தான் செய்கின்றன. நடுநிலைமையோடு பார்க்கப்போனால் ஸ்டெர்லைட் என்ற ஒற்றைப்பெயரை உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அவர்களும் தங்களது தரப்பு நியாயத்தை, மாசு வீதத்தை வெளிப்படுத்த கால அவகாசம் கொடுத்திருக்கலாம்.
அதே தொழிற்சாலையில் சொந்த மண்ணுக்கு உரியவர்களும், வெளி மாவட்ட மாநிலத்தவரும் ஒன்றிணைந்து அதே பகுதியில் வசித்திருக்க அவர்களுக்கு மட்டும் ஏன் எந்தவித உயிர்க்கொல்லி நோய்களும் தொற்றவில்லை. அவர்கள் என்ன பிரத்யேக கவச உடை அணிந்தா வேலைபார்க்கிறார்கள். இந்த உண்மைகளை உணருவதற்கும் யாருக்கும் மனமில்லை அவ்வளவே. போராட்டக்காரர்கள் இந்த போராட்டக்களத்தில் பொதுமக்களை பகடைக்காயாக்கிக் கொண்டார்கள்.
அநியாயமாக உயிர்நீத்தவர்களில் போராட்டத்தை வழிநடத்தியவர்களில் ஒருவர் கூட இல்லை என்பது வியத்தகு உண்மை. அச்சமயத்தில் எங்கு சென்றார்கள்? வீராவேசமாக உரையாற்ற மட்டும்தான் செய்வார்களா? களத்தில் இறங்குவது மட்டும் பொதுமக்களா? என்றெல்லாம் ரௌத்திரத்துடன் கூடிய கேள்விகள் நடுநிலையாளர்களை துவம்சிக்கிறது.
மிகக்குறுகிய காலக்கட்டத்தில் கேன்சர் என்றவொரு நோயை முன்னிறுத்தி இந்த போராட்ட வடிவம் எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது வியப்பின் விளிம்பில் அனைவரையும் நிறுத்துகிறது. அடிமட்டத்தில் எத்தனை மும்முரமாக இதற்கான காய் நகர்த்தப்பட்டது என்றெல்லாம் பார்க்கும் போது 100 நாள் போராட்டத்தை கொச்சைப்படுத்த மனமின்றி, போராட்ட தலைவர்கள் மீது தாறுமாறாக கோபம் கொப்பளிக்கிறது.
தங்களது சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக பொதுமக்களை அடமானம் வைப்பதை எந்த தர்மமும் ஏற்றுக் கொள்ளாது. புகைப்பழக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு என கேன்சருக்கு 100 சதவீதம் உத்திரவாதம் அளிக்கும் தொழில்களையும், தொழிற்சாலைகளையும், பயன்பாடுகளையும் முற்றிலும் நிறுத்திவிட்டு அடுத்தக்கட்டமாக இவையெல்லாம் நோய்களுக்கு சாத்தியம் என்றெண்ணும் காரணிகளை அப்புறப்படுத்த முயற்சிகளை எடுக்கலாம். இதுவே சமுதாயத்தின் ஆரோக்கியத்தை பேணும் ஆரோக்கியமான நடைமுறை... உணர வேண்டியது மக்கள்தான்.... இல்லையென்றால் இன்னும் காலாகாலத்திற்கு போராட்டத்தலைவர்கள் என்ற பெயரில் பதவிக்காகவும், காசுக்காகவும் மக்களை அடமானம் வைக்கத்தயங்க மாட்டார்கள்..!
------------------------
கடையத்தான்
-----------------------
------------------------
கடையத்தான்
-----------------------



No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.