தமிழகத்தில்
சமீபகாலமாக நல்ல திட்டம், தீய திட்டங்கள் என பாகுபாடு இல்லாமல் போராட்டம்
நடத்துவது என்பது நாகரீக செயல்பாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒருவிதத்தில்
நடிகர் ரஜினிகாந்த் சொன்னது சரிதானோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.
தூத்துக்குடி கலவர விவகாரத்தில் அவர் குறிப்பிட்டது போலவே சமூகவிரோதிகள்
உள்ளே புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக நாளிதழ்களும்,
தொலைக்காட்சிகளும் சிசிடிவி வீடியோக்கள் வாயிலாகவும், கட்டுரைகள்
வாயிலாகவும் வெளியிட்டு வருகின்றன.
தூத்துக்குடி
துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ற தலைப்பிட்ட தலையங்கத்தில் ஓய்வுபெற்ற
எஸ்பி அசோக்குமார் சமூக விரோதிகளின் சதித்திட்டத்தை புட்டு புட்டு
வைத்தார். இன்னும் ஆழமான விசாரணையோடு இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி
ஊடகமான நியூஸ் எக்ஸ் தனது சிறப்பு செய்தியில் சத்தீஸ்கர் மாநிலத்தின்
ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த மர்க்கி மாவோயிஸ்ட் கும்பலைச்
சேர்ந்தவர்களுக்கும் தூத்துக்குடி கலவரத்திற்கும் இடையிலான தொடர்பை
அம்பலப்படுத்தியது. தனது பங்களிப்புக்கு தந்தி தொலைக்காட்சியும்
தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதா என்ற
விவாதத்தை கையில் எடுத்தது.
நெஞ்சை
பதற வைக்கும் விதமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர சம்பவத்தில்
குடியிருப்புகளுக்கும், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், உடைமைகளுக்கு
தீவைக்கும் சம்பவங்கள் தமிழக அளவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில்
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு என்பது ஒருவிதத்தில்
அனைத்து சாமானியர்கள் மத்தியிலும் ஒருவித கொந்தளிப்பை ஏற்படுத்தியது
நியாயமாகப் பட்டாலும், அதைவிட சமூக விரோதிகள் ஏற்படுத்திய பாதிப்புகள்
அதைவிட பன்மடங்கு உக்கிரத்தை அந்த வீடியோ காட்சிகள் உணர்த்துகின்றன.
யார்
கிடைத்தாலும் உயிரோடு கொளுத்தும் மனநிலையில்தான் அந்த வெறியாட்டம்
நடந்திருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் வன்முறை என்ற வார்த்தைக்கு கூட
முக்கியத்துவத்தை தூத்துக்குடி மக்கள் அளிக்க மாட்டார்கள் என்பதை அறிந்தே
முன்கூட்டியே சமூக விரோத கூலிப்படைகளை ஏவி விட்டுள்ளனர் போலிப்போராளிகள்.
கலவர தினத்தில் அந்த போலிப் போராளிகள் எங்கிருந்தார்கள் என்ற விவரம் கூட
பொதுமக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அவர்களின் விஷம பரப்புரையின்
சூட்சுமம் தெரியாமல் மக்களும் அப்பாவித்தனமாக அவர்களின் பின்னே அணிவகுத்து
விட்டார்கள்.
கோடி
கோடியாய் பன்னாட்டு நிதிகளுக்கும் சதிகளுக்கும் விலைபோய்விட்ட அந்த
கலிகாலத்து உத்தமர்கள் பொதுமக்களை வன்முறைக்கு காவு கொடுத்துவிட்டு உல்லாச
வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணித்து விட்டனர். சென்னை அடையாறு, பெசன்ட் நகர்
உள்ளிட்ட பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் பங்களாக்களையும்,
சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
படிப்படியாக
இந்த போலி போராளிகளைப்பற்றிய உண்மைகள் கசியத் தொடங்கியதில் இருந்தே
பொதுமக்களிடம் ஒரு கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது.
வாயின் வார்த்தைகளில் கூட வருத்தங்கள் கொப்பளிக்கிறது. ஊர் நன்றாக இருக்க
வேண்டும், ஊர் மக்கள் நோய் நொடியின்றி இருக்க வேண்டும் என்ற வாசகம்தான்
உருக்கமான தகவலாக தங்களை வந்தடைந்ததாகவும், இதற்காகத்தான்
போராட்டக்களத்தில் குதித்ததாகவும், இந்த அளவிற்கு மோசமாக பொதுமக்களை பகடைக்
காய்களாக பயன்படுத்துவார்கள் என்பதை கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை
என்று அங்கலாய்க்கிறார்கள்.
இன்னும்
ஒருபடி மேலாக படிப்படியாக இழுத்து மூடப்படும் தொழிற்சாலைகளாலும்,
மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் முடங்கிப் போன உப தொழில்களாலும்
வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான நபர்களின் குடும்பங்களை
பார்க்கும் போது உணர்ச்சி வசப்பட்டு ஏதோ தவறு செய்து விட்டோம் என்ற குற்ற
உணர்வு தலைதூக்குவதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து செல்ல வேண்டிய
தர்ம சங்கடத்தில் போராட்டத்திற்கு துணை போனவர்களும் நெளியத்தொடங்கி
உள்ளனர்.
மக்களின்
உணர்வுகளை உசுப்பேற்றி பணவெறியில் உச்சம் கண்டவர்கள் யாரும்
தூத்துக்குடிவாசிகள் இல்லை என்பது திட்டவட்டம். நாளாவட்டத்தில்
தொழல்நகரங்கள் பட்டியலில் இருந்த தூத்துக்குடி எடுபட்டுப் போனால் நகரத்து
மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதையும் யாரும்
மறுப்பதற்கில்லை. படிப்படியாக நகரத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பினாலும்
மக்களின் முகத்தில் இறுக்கம் குறையவில்லை. திரும்பிய திசையெல்லாம்
காவலர்களின் அணிவகுப்பு ஒருவித அச்ச உணர்வு ஏற்படுத்தியவாறே இருக்கிறது.
ஆனால்
ஒரு விஷயத்தை மக்கள் ஆணித்தரமாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடு அவர்களது
டீக்கடை பேச்சுக்களில் இருந்து புலனாகிறது. இனிமேல் போராட்டக்களத்தின்
முகாந்திரம் தெரியாமல் முன்னுக்கு நிற்கக் கூடாது என்ற மனோபாவத்திற்கு
வந்துவிட்டார்கள். உண்மைத்தன்மை அறியாமல் உணர்வுகளை அடமானம் வைக்கக்கூடாது
என்பதில் ஒரு தெளிவுக்கு வந்துவிட்டனர்.
நடுநிலைமையோடு
இந்த விவகாரத்தை அணுகினால் தங்களது தொழிற்சாலையின் பாதுகாப்பு மேலாண்மை,
கழிவு மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை குறித்த புரிதலை மக்கள் மத்தியில்
ஸ்டெர்லைட் நிர்வாகம் தெளிவுபடுத்த மறந்து போனதின் விபரீதமே இந்த
விவகாரங்களுக்கு தூபக்காலாக அமைந்துபோனது என்பதை நிர்வாகத்தில்
இருப்பவர்கள் தற்போது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பசுமையை
பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மிரட்டி மிரட்டி கோடிகளைக் கறந்த
அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் மக்களை
போராட்டக் களத்தில் இருந்து விடுவிக்க துப்பில்லாமல் சொல்லிக் கொள்ளாமல்
கரையைக் கடந்து காணாமல் போய் விட்டனர். மனச்சாட்சி உள்ள தலைவர்கள் மட்டும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக துக்கவீட்டில் பங்கு கொண்டு பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றனர்.
ஒரு
கட்டத்தில் ரஜினியின் பேச்சு ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஒரு
வெறுப்புணர்வையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது அதில்
உள்ள உண்மைத்தன்மை வீரியம் பெறத்துவங்கியிருக்கிறது. தனது பேச்சை
வெளிப்படுத்தியதில் அரசியல் அனுபமின்மை என்பதை பிரதிபலிப்பதை போன்று
தோன்றினாலும், அதில் இருந்த ஆழமான சிந்தனை அரசியல் நோக்கர்களை பிரமிப்பில்
ஆழ்த்தியுள்ளது. ரஜினியின் மீது ஒருவித நன்மதிப்பையும் உயர்த்தத்
தொடங்கியிருக்கிறது. அதற்கேற்றாற் போல சமூக ஊடகங்களில் வைரலாகும்
வீடியோக்களும், புகைப்படங்களும் கலவரத்தின் மற்றொரு கோரத்தாண்டவ முகத்தை
பறைசாற்ற தொடங்கியுள்ளது. இருபக்கமும் நடந்த தவறுகளை நடுநிலையாளர்களுக்கு
புரியவைத்துள்ளது. விரைவில் தூத்துக்குடி தனது பழைய இயல்பு நிலையை அடையும்
நாள் வெகுதூரம் இல்லை என்பதையும் புலப்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.