6/15/2018

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டது அப்பாவிகளா? சமூக விரோதிகளா? திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரங்கள் அம்பலம்





தூத்துக்குடி கலவரத்தை பின்னின்று நடத்திய போலி போராளிகளின் வேஷம் மெல்ல மெல்ல கலையத்தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தை வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிலும், இந்தியாவை அந்நிய செலாவணி மற்றும் உலகச்சந்தையில் வளர்ச்சி ஆகியவற்றாலும் வழிநடத்திய ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளின் முடக்கங்கள் நாட்டிற்கு மட்டுமல்லாது, இத்தொழிலையும், அதன் உப தொழில்களையும், அதன்மூலம் வாழ்வாதாரம் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பெரும் பின்னடைவிற்கு கொண்டு சென்றுள்ளது.
இத்தனையும் தாண்டி மனித பயன்பாட்டில் இருந்து சற்றும் பிரிக்க முடியாத தாமிர பயன்பாடு என்பது வீட்டு உபயோக பொருட்களில் தொடங்கி எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், தொழிற்சாலை உபயோகங்கள், ராணுவ தளவாடங்கள் என அனைத்து நிலையிலும் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்ளப்போகும் விலைவாசி அதிகரிப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, அத்தியவாசிய பொருட்களுக்கு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பேராபத்துக்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய சர்வேயில் இந்திய பொருளாதாரம் படுமோசமாகி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதே நிலைமை நீடித்தால் இந்தியர்களின் நிலைமை வாழ்வாதாரத்தில் கவலைக்கிடமாகி விடும் என்பது பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை போலியான வதந்திகளுக்கு செவிமடுத்து பொதுமக்கள் சீல் வைக்கச் செய்துள்ளனர். அந்த போராட்டத்தின் பின்னணி தெரியாமல் பலிகடாவாக தாங்கள் மாற்றப்பட்டதை பொதுமக்கள் தற்போது உணரத் தொடங்கி உள்ளனர்.
அன்றைய தினம் போராட்டத்தில் நடந்த காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி விட்டன. அந்த காட்சிகள் மிகவும் கொடூரமானதாகவும், சாமானியர்கள் செய்ய அஞ்சத்தகுந்ததாகவும் இருப்பதை பொதுமக்கள் கண்டு தங்களை போலி போராளிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று வேதனையில் புலம்பி வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் இருந்தும், ஆலையின் தரப்பில் இருந்தும் வெளியான சிசிடிவி வீடியோக்களை பார்த்தால் கல்நெஞ்சையும் கரைப்பதாக உள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு குடியிருப்புக்கு தீ வைப்பதும், பெட்ரோல், வெண்பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயன பவுடர்களை பயன்படுத்தி கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பதும், பெட்ரோல் குண்டு வீசுவதுமாக பொதுமக்களை அதிர்ச்சியின் விளிம்பிற்கே கொண்டு சென்றுள்ளனர்.
வன்முறைக்கு சற்றும் இடமளிக்காமல் முற்றுகை போராட்டம் மட்டுமே நடக்கப் போகிறது என்ற உறுதிமொழியை ஏற்று கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மக்களுக்கு தங்களது கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்திருப்பது தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளை உற்றுநோக்கிய போது மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிளம்ப தொடங்கின. அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகளே அல்ல என்பதும், வடமாநிலங்களில் பணத்திற்காக வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு வருகை தந்து பேசிய போது, கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் சமூகவிரோதிகள்தான் என்று சொன்ன மாத்திரத்தில் அவருக்கு எதிராக அரசியல்கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், போராட்டக்காரர்களும் கொந்தளித்தனர். ஆனால் அதுதான் உண்மை என இப்போது தெரியவந்துள்ளதால் ரஜினியின் கருத்தை ஆமோதித்து போலி போராளிகள் பற்றியும், சமூக விரோதிகள் பற்றியும் அறியத்தொடங்கி உள்ளனர்.

அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தினாலும், காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்வதற்கு வாய்ப்பில்லை என்ற சூசகத்தையும் நுண்ணறிவு போலீசார் அறிந்தனர். அதன்பின்னர் நடத்திய விசாரணையில் வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர்கள் சத்தீஸ்கர் மாவட்டம் ராய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மர்க்கி மாவோயிஸ்ட்டுக்கள் என்பது தெளிவானது. இவர்களே பிரதமர் நரேந்திரமோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நக்சலைட்டுக்கள் என்பதும் புலனானது. இது தவிர இந்த மாவோயிஸ்டுக்களுக்கு தமிழகத்தில் உள்ள மக்கள் அதிகாரம் என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இந்த தகவலை புகழ்பெற்ற “நியூஸ் எக்ஸ்” என்ற ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் (https://youtu.be/9Mlwe_g3RbQ) தனது நேரலையில் பகிரங்கப்படுத்தியது. அதன்பிறகே விவரம் தெரிந்தவர்களிடம் இந்த சதிவலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
முன்னேற்பாடாக திட்டமிட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இந்த கலவரத்தை நடத்தியுள்ளனர். இதன்பின்னணியில் பன்னாட்டு சதியும், அதற்கு இவர்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சில புல்லுருவிகளின் உதவியோடு மக்களை பகடைக்காயாக்கி முற்றுகைப் போராட்டத்தை சிதைத்து வன்முறையாக்கியதும் தெரியவந்துள்ளது. எந்த வழிகளிலெல்லாம் வன்முறைகளை நடத்த வேண்டும், பெட்ரோல் குண்டுகள் வீச வேண்டும், வீடுகளை கொளுத்த வேண்டும், அதற்கு எந்தவிதமான ரசாயனங்களையெல்லாம் ரகசியமாக வைத்திருந்து உபயோகிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஒத்திகை நடத்தியதைப்போல இந்த கலவரத்தை கனக்கச்சிதமாக நடத்தியுள்ளனர். முகநூல், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக இதற்காக பல வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளதை நுண்ணறிவு போலீசார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
இதனையே தமிழகத்தின் பிரபலமான தி இந்து தமிழ்நாளிதழில் “துப்பாக்கி சூட்டின் பின்னணி” என்ற தலைப்பிட்ட தலையங்கத்தில் ஓய்வு பெற்ற எஸ்.பி. அசோக்குமார் தனது கட்டுரையை விவரமாக வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில்தான் மத்திய காவல்துறை நுண்ணறிவு பிரிவினரும், தமிழக போலீசாரும் தீவிர விசாரணை நடத்திய பின்னரே நாசவேலையில் ஈடுபட்டதாக 6 நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த திட்டமிட்ட சதிவலைப்பின்னல்களுக்குப் பின்னால் லண்டனை தலைமையிடமாக கொண்டு பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைகளை குறிவைத்து போராடி வரும் ஃபாயில் வேதாந்தா அமைப்பிற்கும், உலகச் சந்தையில் தொழிற்போட்டி காரணமாக அந்த அமைப்பிற்கு நிதியுதவி அளித்து இந்தியாவின் தொழில்வளங்களையும், பெரிய முதலீட்டு தொழிற்சாலைகளையும் முடக்குவதையே இலக்காக கொண்ட சீனாவிற்கும் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இவர்கள் அளிக்கும் பணத்திற்கு அடிமையாகி போலி போராளிகளின் உதவியோடு “கேன்சர்” நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தூத்துக்குடியிலும் போராட்டத்தை ஒழுங்கு செய்து அதனை கலவரமாக மாற்றியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இந்த சதிப்பின்னணி குறித்து விரைவில் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். சதியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தீய சக்திகளின் நடமாட்டம் இல்லாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக விரோதிகள் தங்கள் திட்டங்களை வடிவமைக்க பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களை ஒழுங்குபட கட்டமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் நுண்ணறிவுத் துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
-----------------------------------------


  



No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending