9/17/2018

ஸ்டெர்லைட் ஆதரவு நிலை வலுக்கிறது: ஆலை எதிர்ப்பு மனநிலையை புறந்தள்ளிய பொதுமக்கள்




தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் மக்கள் மத்தியில் ஆதரவு மனநிலையை உருவாக்க தொடங்கியுள்ளது. பத்தாம்பசலித்தனமான பொய் பரப்புரைகளில் இருந்து விடுபட்டு படிப்படியாக வெளிவரும் அறிவியல் உண்மைகளால் பொது மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். மூச்சுத்திணறல், தோல் நோய்கள், கண் எரிச்சல் என ஆலை மீது குற்றம்சாட்டியும் எடுபடாததால் கேன்சர் அஸ்திரத்தை கையில் எடுத்து பொது மக்களை நம்பவைத்தனர். அவர்களை பலிகடாவாக்கி கலவரத்தையும் நடத்தி முடித்து ஆலைக்கும் சீல் வைக்கச் செய்தனர்.

இதுநாள் வரை மக்களோடு மக்களாக 22 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமானது விதிமுறைப்படி ஒவ்வொரு அசைவையும் மேற்கொண்டு வருவதால் இத்தனை பெரிய கலவரத்தை எதிர்பார்க்கவில்லை. மக்களின் உணர்வுகளை போலி போராளிகள் இந்த அளவிற்கு கொந்தளிக்க விடுவார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவில்லை. ஆலையின் செயல்பாட்டில் மக்களுக்கு போதுமான நம்பிக்கை இருப்பதாக எண்ணித்தான் தங்களது தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோன்றல் இல்லாமல் செய்து விட்டது. அதன் விளைவுகள் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரியாமல் போய்விட்டது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான பொய் பரப்புகளை தங்களது அறிவுக்கு எட்டிய தொழில்நுட்ப கற்பனைகளோடு மக்களிடம் சேர்த்தனர். ஆலைக்கழிவுகள் கடலில் கலக்கப்படுகிறது. மண்ணில் புதைக்கப்படுகிறது. காற்றில் கலக்கப்படுகிறது என்றெல்லாம் கதைவிட்டார்கள். கேன்சர் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவுகிறது என்றார்கள். கர்ப்பப்பை கோளாறு ஏற்படுவதாக புதிது புதிதாக வதந்தியை பரப்பினார்கள். ஆனால் இந்த பரப்புரைகளில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது மக்களுக்குப் புரிய இத்தனை நாட்களாகி விட்டது. கலவரத்துக்கு பின்னரே காட்சிகள் மாறி வருகிறது. மக்களை காப்பதாக கூறிய அவதார புருஷர்கள் எல்லாம் கலவரத்துக்கு பின்னர் போலிகள் என  தெரிய வந்தது.
ஆலைக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்த அரசியல் கட்சிகள் பல தங்களது  சுய ஆதாயத்திற்காகவும், கட்சி வளர்ப்பிற்காகவுமே காரண காரியமின்றி ஆலையின் செயல்பாடுகளை தவறாக சித்தரித்து விமர்சித்தனர். போலி போராளிகளும், ஆதாய அரசியல்வாதிகளும் இறுதியில் ஒன்று சேர்ந்து கலவரத்தை நடத்தி  முடித்து விட்டனர். ஆலை முடக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார, வேலைவாய்ப்பின்மை தாக்கங்கள் பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அசைத்து பார்த்து விட்டது. கிராமம் கிராமமாக பொதுமக்களும், லாரி தொழிலாளர்களும் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை சரமாரியாக அளித்து வருகின்றனர்.
தற்போது விவசாயிகளும் தங்களது பகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த நலப்பணிகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஆலையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நடமாடும் மருந்தகம், குளங்கள் சீரமைப்பு என ஆலை நிர்வாகம் செய்த நலப்பணிகளை மக்கள் மறந்து விடவில்லை. மக்களின் மனதில் மாயையை புகுத்து மறைத்து விட்டார்கள் என்பதை இந்த காட்சிகள் நினைவூட்டுகின்றன.
இதற்கும் மேலாக ஆலையின் செயல்பாடுகளில் நம்பிக்கை கொண்ட சில அறிவியல் ஆய்வு அமைப்புகள் தன்னார்வமாக தூத்துக்குடி பகுதிகளில் நிலத்தடி நீர், காற்று, மண் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து தொழில்நுட்ப ரீதியான பேருண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்கள் வாயிலாகவும் பரவி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலை மீதான போலி போராளிகள் முக்கிய குற்றச்சாட்டு, அங்குள்ள புகைப் போக்கியின் உயரம் தாமிர உற்பத்திற்கு நிகரான உயரத்திற்கு அமைக்கப்படவில்லை என்பது.

முதலாவதாக புரிந்து கொள்ள வேண்டியது, ஸ்டெர்லைட் ஆலையில் ஸீரோ லிக்விட் மேனேஜ்மென்ட் என்ற கழிவில்லா தொழில்நுட்பம் கையாளப்படுவது. எந்த நிலையிலும் மண்ணிலோ, நிலத்தடிநீருக்கு பங்கம் விளைவிப்பதையோ இந்த தொழில்நுட்பம் அனுமதிக்காது. அத்தனை கழிவுகளை மறுசுழற்சி செய்து மதிப்பு கூட்டப்பட்ட உபரி பொருட்களாக கந்தக அமிலமாகவும், பாஸ்போரிக் அமிலமாகவும் மாற்றி விற்பனைக்கு தயார்படுத்துகிறது. இதனால் கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாகவோ, மண்ணில் புதைக்கப்படுவதாகவோ கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை என அறியலாம்.
புகைபோக்கி வாயிலாக அதிகப்படியாக கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதாக அடுத்த குற்றச்சாட்டு. மாசுக்கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள அளவிற்கும் மிக மிகக்குறைவாகவே ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியாகிறது. அதாவது தூத்துக்குடியில் நிலைகொண்டுள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் கந்தக டை ஆக்சைடு அளவில் இருந்து 100க்கு ஒரு சதவீதம் கூட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவருவது கிடையாது. புகை வெளியேற்றத்தில் மற்றுமொரு தொழில்நுட்பத்தை ஆலை நிர்வாகம் கையாண்டு வருகிறது. ஏற்கனவே அதிக கொதிநிலையில் உள்ள அந்த வாயுவை ராக்கெட் வேகத்தில் கீழிருந்து வான்நோக்கி செலுத்துகின்றனர். பின்னர் அந்த வாயுவானது வானில் உள்ள வெப்பநிலையுடன் உடனடியாக கலந்து பூமிக்கு வராத வகையில் அந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அடுத்ததாக, நிலத்தடி நீர் இந்த ஆலையால் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு. தூத்துக்குடி ஏற்கனவே கடலை ஒட்டிய பகுதி. ஆண்டாண்டு காலமாக உப்பளத் தொழில் செழிப்புற்ற பகுதி. இந்த நிலையில் உப்பின் சாரம் மண்ணில் ஊடுருவி நிலத்தடி நீரின் தன்மையை சிறிய பயன்பாட்டிற்கு கூட தகுதியில்லாத அளவிற்கு பாழ்படுத்தி வருகிறது. போலி போராளிகளும் ஸ்டெர்லைட்டுக்கு அருகாமையிலேயே சில பகுப்பாய்வுகளை தங்களுக்கு சாதகமாக நடத்திக் கொண்டு அனைத்து மாசுகளுக்கும் இந்த ஆலையே காரணம் என கொக்கரிக்கின்றனர்.
நிலத்தடி நீரோட்டம் என்பது ஒரு இடத்தில் மட்டும் நிலைகொள்வது கிடையாது. மாறாக அது பல கி.மீ. தூரத்திற்கு ஓடையாக பயணிக்கும். இது பாமரர்களும் அறிந்த ஒன்று. இவ்வாறிருக்க தொழிற்சாலைகள் மிகுந்த நகரமான தூத்துக்குடியில் எந்த தொழிற்சாலையால் நிலத்தடிநீர் மாசு ஏற்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக உறுதிசெய்து விட முடியாது. குறைந்த பட்சம் 20 இடங்களில் நீர்மாதிரி எடுத்து மட்டுமே அதனை உறுதி செய்ய முடியும். அறிவிழித்தனமாக போலி போராளிகள் முன்வைக்கும் வாதம் பொய்யென இதன் மூலமாகவும் உணர்ந்து கொள்ள முடியும்.
கேன்சர் சதவீதத்தில் தமிழக அளவில் ஆண்களுக்கு 14, பெண்களுக்கு 25வது இடம் தூத்துக்குடியானது புள்ளிவிவரத்தில் பின்னிலைமையில் இருக்க, போலி போராளிகள் உரத்த சுதியில் நரம்புகள் புடைக்க தூத்துக்குடி முன்னிலை முன்னிலை என்று கூறுவது வெற்று கோஷங்கள். அப்படிப்பார்த்தால் சென்னைதான் ஆண், பெண் பாகுபாடின்றி முதலிடத்தில் இருக்கிறது. மாசு குறைந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் தான் கேன்சர் அதிகமாக இருக்கிறது. கந்தக டை ஆக்சைடு பரவலும் சென்னையிலும், கோவையிலும், ஈரோட்டிலும், வாணியம்பாடி ஆம்பூரிலும்தான் அதிகமுள்ளது. 
பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் டன் டன்னாக கேரளாவில் இருந்து தென்தமிழகத்தின் எல்லைகள் வழியாக கொண்டு வந்து கொட்டப்படுவதால் கேன்சர் பரவுவதாக உண்மையான சமூக ஆர்வலர்களும், மருத்துவ ஆய்வாளர்களும் எச்சரித்தும் அவற்றுக்கு எதிராக இந்த போலி போராளிகளோ, ஆதாயத்திற்காக அரசியல் கட்சி நடத்துபவர்களோ இதுவரை வாய்திறக்கவில்லை. அப்படி வாய் திறந்தாலும் இதற்காக அவர்களுக்கு எந்த நிதி ஆதாரமும், ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆதாயத்தை எதிர்நோக்கி மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மீது வதந்தி தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது ஆனித்தரமான உண்மை. 
இந்த அறிவியல் உண்மைகள் படிப்படியாக மக்களை சென்றடைந்து வருவதால் ஆலைக்கு எதிரான மனநிலை மறைந்து ஆதரவு நிலை வலுத்து வருகிறது. இதனால் போராளிகள் தங்களது பொய்யை நிலைநிறுத்திக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மீண்டும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உளவுத்துறையினரும் கண்காணித்து அவ்வப்போது மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறையானது தூத்துக்குடி விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி நிலத்தடி நீர் பகுப்பாய்வை நடத்தில் நிலத்தடிநீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்ற அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையானது போலி போராளிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களை நம்ப வைக்க போலி புள்ளி விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கேட்ட போது, தூத்துக்குடி மாநகருக்கு சம்பந்தம் இல்லாத பல நபர்கள், அந்நிய சக்திகள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து பொதுமக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். வானம் பார்த்த பூமியான தூத்துக்குடி மண்ணில் மேலும் பல தொழில்கள் வருவதை கெடுக்கும்  தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பெரிய ஆலைகள் மூடப்பட்டு வருவதால், 15 வருடங்களுக்கு முன்பு எந்த நிலையில் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கி இருந்ததோ அந்த நிலையை மீண்டும் உருவாக்கி வருகிறார்கள். பல்லாண்டுகளாக ஆலையில் பணிபுரிந்து வருபர்களே நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக பணிபுரிந்து வரும் சூழ்நிலையில் கேன்சர் உள்ளிட்ட தேவையற்ற வதந்திகளை கிளப்பி பல்லாயிரக்கணக்கான நபர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளனர் என தெரிவித்தனர்.
-------------------------------


No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending