9/07/2018

மாணவி பிரச்னையை வைத்து மலிவு அரசியல்; வன்முறைக்கு வழிதேடித்திரியும் சுயநல அமைப்புகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்பது அந்த ஆலைக்கு எதிரானவர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஏதோ ஒரு பெரிய வெற்றியை பெற்றதாற்போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து அந்த அமைப்புகளை மெனக்கெட வைத்துள்ளது. இதற்காக பெருந்தொகை களப்பணிக்காக வாரிக் கொட்டப்படுகிறது. இந்த நிதி முழுவதும் எங்கிருந்து வருகிறது? யாரால்  இவர்களுக்கு அனுப்பப்படுகிறது? என்பது மட்டும் இன்றளவும் புரியாத புதிராக காவல்துறையை குழப்பி வருகிறது.
தினம் தினம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பகுதி வாரியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு சமுதாய ரீதியாக துணை நிற்பதைப் போன்ற மாய பிம்பத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்தி தவறான பிரசாரங்களை உட்புகுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மக்கள் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு தூத்துக்குடியின் தொழில்வளர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு எல்லாம் கட்டுக்கட்டாக பணம் கொட்டுவது வெளிநாடுகளில் இருந்துதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உறுதியாகிவிட்டது.
இல்லையென்றால் தனிப்பட்ட தொழிற்சாலைக்காக இத்தனை பெரிய போராட்டத்தை  கையில் எடுக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. தமிழகம் முழுவதும் கொடிய விஷக்காரணிகளை கையாளும் எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு மத்தியில் ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் எதிர்க்க வேண்டிய நிலைப்பாடு என்பது ஏதோ உள்நோக்கம் கொண்டது என்பதை ஊர்ஜிதமாக்கிவிட்டது. பத்தாம் பசலித்தனமாக சில அரசியல் கட்சிகளும் கூக்குரலிடுவது வளர்ச்சி நிதிக்கும், தேர்தல் நிதிக்குமாகத்தான் என்பதை மக்கள் உணரத்தவறவில்லை.
தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பாவித்து கேரளாவில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் என கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை பரப்பும் நிகழ்வுகள் அப்பட்டமாக நடந்து  கொண்டிருக்கையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோரின் பார்வையில் இவையெல்லாம் தெரியாமல் ஒரு ஆலையை மூடுவதற்கு மட்டும் தனி அக்கறை எடுத்துக் கொண்டு அபயக்குரல் எழுப்புவது ஏனோ? என்ற என்ற சாமானியர்களின் கேள்விகளுக்கு ஒரு போதும் இவர்கள் வாய்திறப்பது இல்லை. மேடைப் பேச்சுக்காக அடுக்கடுக்காக அலங்கார வார்த்தைகளைக் கொண்டு நச்சுக்கார ஆலை, நாசகார ஆலை என்று கூவி கூவி கூட்டத்தை சேர்த்து வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடையைக் கட்டி விடுகிறார்கள்.
தமிழகத்தில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் தங்கள் பாதங்களை பதித்து  சுற்றுச்சூழல் பாதக ஆலைகளுக்காக தொடர்ந்து போராடியதாக பதிவுகள் இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. அங்கெல்லாம் போராடினால் சல்லிக்காசு கைத்தேறாது என்பது ஒருபக்கமும், வாழ்வாதாரத்தை நம்பிய மக்கள் கூட்டத்தின் வாக்குகளை தேர்தலில் பெற முடியாது என்ற மறுபக்கமும் இவர்களது சுயநல, சுய ஆதாய அரசியலை தோலுரித்துக் காட்டுகிறது.
பணத்திற்காக மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு என தொழிற்சாலைகளின் வாசல்களில் மட்டுமே நின்று கொண்டு கூவித்திரியும் நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் போன்ற போலி போராளிகளும் தங்களது பகட்டான ஆடம்பர வாழ்க்கை தேவைக்காக போராட்டக்களங்களில் மக்களை அடமானம் வைப்பதையே முழுநேர பணியாக கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜென்டுகள் போல செய்து வருகிறார்கள். உழைத்துவாழ விருப்பம் இல்லாமல் ஊர்ப்பணத்தில் உல்லாசமாக வாழ்வது எப்படி? என்ற கலையை  கணக்கச்சிதமாக ஈடேற்றி வருகிறார்கள்.
வருமானம் ஒருபக்கத் தேவை என்றாலும், தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெயரும் புகழும் பெற வேண்டும் என மெத்தப்படித்த சிலரும், சட்ட வல்லுநர்கள் சிலருமாக  வாரிச்சுருட்டிக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு சோரம்போய் விட்ட இவர்கள் மக்கள் மத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையும் தரமற்ற ஆதாயத்துக்காக தாரைவார்த்து வருகிறார்கள். தூத்துக்குடி மக்களை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்வது ஒன்றே இவர்களது நோக்கமும் இவர்களுக்கு  கொடுக்கப்பட்ட இயக்க கட்டளையுமாகும்.
மலிவு அரசியலுக்காக இவர்களது தற்போதைய புதிய டிரெண்ட் மாணவி சோபியா. விமானப்பயணத்தில் தமிழக பா.ஜ.தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில் ஹேஷ்டேக்-ஆக மாறியுள்ளது இந்த விவகாரம். பாசிச பாஜக ஒழிக என்பதுதான் சமூக ஊடகங்கள் தொடங்கி அனைத்து வலைதளங்களிலும் வலம் வரும் புதிய ஸ்லோகன். கருத்துச்சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற முழக்கம் உத்வேகம் பெற்றிருந்தாலும், மலிவு ஆதாய அரசியல்வாதிகளும், அமைப்புகளும் மாணவி சோபியாவை வைத்து மேற்கொள்ளும் பிரசார யுக்தி  என்னவோ தவறான நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இதன்மூலம் மீண்டும் தூத்துக்குடியை நோக்கி அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளனர் போலி போராளிகள். இலவு காத்த கிளியாக போலி போராளிகள் வன்முறைக்கு வழிதேடி காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாணவி விவகாரத்தை இவ்வளவு பெரிதாக தமிழிசை கையாண்டிருக்க வேண்டாம் என்பதே நடுநிலையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்து. ஜல்லிக்கட்டு புரட்சி தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஓவர்நைட்டில் உலகப்புகழ் பெற்ற பிக்பாஸ் ஜூலி தொடங்கி கேரள வெள்ளத்தில் தனது முதுகில் ஏற இடமளித்த இளைஞர் வரை அனைவரும் ஒரு புதிய சிந்தனையை மாணவ, இளைய சமுதாயத்தினர் மத்தியில் தங்களுக்கே தெரியாமல் விதைத்துள்ளார்கள். அப்படித்தான் இந்த மாணவி விவகாரத்தையும் பார்க்க  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் சமூகநல நோக்கர்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தை எவ்வாறெல்லாம் தினம் தினம் செய்தியாக பல வகைகளில் கொண்டு செல்லலாம் என்பதே போலி போராளிகளின் தினப்பணிகளில் ஒன்றாகி விட்டது. அதற்கான காரணத்தை அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்பதை நாளேடுகளின் தினப்பதிவில் இருந்து அறிந்து கொள்ள முடியும். மாணவி சோபியா மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலைநிற்கப் போவதில்லை என சட்ட வல்லுநர்கள் பலர் தெரிவிக்கையில், இதில் முழுக்கவனத்தை செலுத்தி தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் அமைப்புகளை சேர்ந்த வக்கீல்கள் சிலர் அந்த மாணவியை வழக்கில் இருந்து விடுவிப்பது எப்படி என்ற கோணத்தில் வலைதளத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தை மறைமுகமாக வைரலாக்கி வருகிறார்கள்.
விரைவில் தூத்துக்குடியில் மீண்டும் ஏதோவொரு வன்முறையை கட்டவிழ்க்க வேண்டும் என்ற நோக்கம் பலவாறான இவர்களது நடவடிக்கைகளால் பளிச்சிட தொடங்கியுள்ளது. இந்த சிகப்பு அலார செயல்பாடுகள் காவல்துறையை உஷார் படுத்தியுள்ளது. இதனால் இரவு பகலாக காவல்துறையின் உளவுப் பிரிவினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர். குறிப்பாக கடலோரப்பகுதிகளில், தூத்துக்குடி நகரப் பகுதி, போராட்டக்காரர்கள் சார்ந்த கிராமங்கள் என பல பகுதிகளில் இரவு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு விவகாரத்தை வாட்சப்பில் பரப்ப காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இதனை மீறிய சிலர் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களைப் பற்றிய விசாரணையை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். மக்களை உசுப்பேற்றி மலிவான ஆதாயத்தில் குளிர்காய எத்தனிக்கும் சமூக விரோத சக்திகளை ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். வளர்ச்சித்திட்டங்களை எல்லாம் முடக்குவதற்காக பொய் பரப்புரைகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை அடையாளம் கண்டு ஒடுக்க தமிழக அரசும் காவல்துறைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளது.
----------------------



No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending