ஒன்றுமே இல்லாத விவகாரத்தை ஊதிப்பெரிதாக்கி உலகத்தையே
தூத்துக்குடியின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது ஒரு சர்வதேச சதி
அரங்கேற்றம். அறிவியல் உண்மைக்கு புறம்பான வதந்திகள் ஒரு மாவட்டத்தின் தொழில்
வளர்ச்சியை அடியோடு ஒழிக்க தொடங்கியுள்ளது. பன்னாட்டு சதிகளுக்கு பலியாகி
உள்நாட்டு தொழில் வளங்களை அழித்தொழிக்கும் நோக்கத்தை பிரதானமாக கொண்ட சமூக விரோத சக்திகளின்
நடமாட்டம் அதிகரித்துள்ளதை மத்திய அரசே அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தொழில்
வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும்
முக்கிய தொழில் சத்துவங்களை அசைத்துப் பார்க்க சீனா உள்ளிட்ட பன்னாட்டு சக்திகள்
கோடிகளை கொட்டி பணத்திற்கு விலைபோகும் பல்வேறு போராட்ட அமைப்புகள் மூலம் இதற்கான
சதித்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட சதிக்கு இரையானதுதான்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள் முடக்கம்.
உலக அரங்கில் தாமிரப்பயன்பாட்டின் தேவையில் பெரும்பங்கை ஈடுசெய்து
வந்த உற்பத்தி அலகான ஸ்டெர்லைட் ஆலையை முடக்கிவிட்டால், பல நாடுகளின் தாமிர
தட்டுப்பாட்டிற்கான தேவையையும் ஈடு செய்ய தன்பால் ஈர்ப்பதே சீனாவின் வியாபார
தந்திரம். அதுமட்டுமல்ல இந்தியாவில் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது உற்பத்தி அலகை
அடுத்தகட்டத்திற்கு விரிவாக்கம் செய்து விட்டால் இந்தியாவின் உற்பத்தி மற்றும்
பொருளாதார வளர்ச்சி என்பது உலகச்சந்தையில் அபரிமிதமாகி தொழிற்போட்டியில் அனைத்து
நாடுகளுக்கும் சவால் விடும் நாடாக மாறிவிடும் என்பதில்தான் சீனாவிற்கான கலக்கம்
அதிகமாகிப்போனது.
ஏற்கனவே காசுக்காக இந்த ஆலையை எதிர்த்து போராடி வந்த சில அரசியல்
கட்சிகளையும், கூலிக்கு மாரடிக்கும் சில போலி போராளி கும்பல்களையும் தங்களது சதி
வலையத்திற்குள் சிக்க வைத்து இதற்கான செயல்திட்டப் பணிகளை முன்னெடுத்தது சீனாவின்
உளவுப்பிரிவான எம்எஸ்எஸ் (மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட் செக்யூரிட்டி). ஏற்கனவே பாயில்
வேதாந்தா அமைப்பின் மூலம் ஆப்பிரிக்காவின் ஸாம்பியாவில் தாது சுரங்கப்பணியை
இதுபோன்ற போராட்டங்கள், கலவரம் மூலம் முடக்கி வெற்றி கண்டதால் ஏற்பட்ட உத்வேகத்தை
தூத்துக்குடியிலும் அமல்படுத்தினர். ஸாம்பியாவில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில்
சுமார் 28 பேர் பலியானார்கள். அதே போன்றவொரு கலவர வெறியாட்டத்தை வெற்றிகரமாக
தூத்துக்குடியிலும் நடத்தி விட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள்
பாழ்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது, மூச்சுத்திணறல், தோல் அரிப்பு
என்றெல்லாம் பலவாறாக வதந்தியைக் கிளப்பியும் போராட்டத்தில் வெற்றி காண
முடியாததால், கடைசி அஸ்திரமாக கேன்சர் என்ற உயிர்க்கொல்லி நோய் பரப்புரையை கையில்
எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தினர். காலம் காலமாக இயங்கும் உப்பளங்களால்
நீர்மாசுபட்டு உபயோகத்திற்கு பயனற்ற நிலையில் இருந்ததை ஸ்டெர்லைட்டை காரணம் காட்டி
பொதுமக்களை நம்ப வைத்தனர். எண்ணற்ற தொழிற்சாலைகளி்ன் கழிவுகள் மண்ணில் மாசு
ஏற்படுத்திக் கொண்டிருக்க, இதற்கு மூலக்காரணமே ஸ்டெர்லைட்தான் என்ற மாயையை மக்கள்
மனதில் விதைத்தனர். அனல் மின் நிலையங்கள் மூலமாகவே கந்தக டை ஆக்சைடு வாயு 99
சதவீதத்துக்கும் மேலாக வெளியில் வரும் நிலையில், மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு
வாரியங்கள் விதித்த அளவை விட ஒரு சதவீதத்துக்கும் குறைவாக கந்தக டை ஆக்சைடை
வெளியிடும் ஸ்டெர்லைட்டை நச்சுகார, நாசகார ஆலை என்ற அளவிற்கு மிகைப்படுத்தி காற்று
மாசுக்கு காரணகர்த்தாவாக சித்தரித்தனர்.
மாறி மாறி சொல்லப்படும் பொய்கள் ஒரு கட்டத்தில் உண்மையாகி விடும்
என்ற தந்திரமே இங்கு அதிகமாக பிரயோகிக்கப்பட்டது. அறிவியல் உண்மைகளை உணராமல்
பொதுமக்களும் போலி போராளிகள் பரப்புரைக்கு செவிமடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக
போர்க்கொடி பிடிக்கத் தொடங்கினர். பொதுமக்களை பலிகடாவாக்கி விட்டு போலி போராளிகள்
கோடிகளிலும், ஆடம்பர சொகுசு வாழ்க்கையில்
திளைத்தனர். சொத்துக்களை வாங்கிக் குவித்தனர். தொடர்ந்து ஆலையை இயக்க விடாமல்
செய்வதற்காக தாங்கள் செய்த பொய் பரப்புரைகளை விடாமல் கடும் பிரயத்தனத்துடன் மக்கள்
சந்திப்பு என்ற பெயரில் தற்போதும் கிராமம் கிராமமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ஒருவர் தூத்துக்குடியில் நீர்மாசுக்கு
ஸ்டெர்லைட்தான் காரணம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட போலி போராளிகளுக்கு அவரது
கூற்று வலுசேர்த்தது. ஆனால் மத்திய நீர் வளத்துறை அதிரடியாக தனிப்பட்ட முறையில்
தூத்துக்குடியில் நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியின் நீர்
மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் அல்ல என்ற ஆய்வு முடிவை உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்தது. இதுபோக சில தன்னார்வ ஆய்வு அமைப்புகள் தூத்துக்குடியில் காற்று
மாசுத்தன்மையை ஆய்வு செய்ததில் ஸ்டெர்லைட் மூலமாக காற்று மாசு என்பது நம்பத்தகுந்த
ஒன்றாக இல்லை என கண்டறிந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் புகைபோக்கியின் அளவு உற்பத்தி அளவுக்கு
தகுந்தாற்போல் இல்லை என போராட்டக்காரர்கள் வாதிடும் நிலையில், அந்த ஆலையில்
மண்ணிலோ, காற்றிலோ எந்தக்கழிவுகளும் வெளியேறாத வகையில் ஸீரோ லிக்விட் மேனேஜ்மென்ட்
என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த கழிவுகளை மறுசுழற்சி மூலம்
சல்ப்யூரிக் அமிலமாகவும், பாஸ்போரிக் அமிலமாகவும் மாற்றி விற்பனை செய்து
வருகின்றனர். அதே சமயம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள அளவிற்கும் கீழாக
கந்தக டை ஆச்சைடை வெளியேற்றும் தருணத்திலும், ஏற்கனவே அதிக கொதிநிலையில் இருக்கும்து
அந்த வாயுவை கீழிருந்து அதிபயங்கர வேகத்துடன் புகைபோக்கியில் அதிகப்படியான
உயரத்திற்கு செலுத்தி வானில் பரவும்
வெப்பநிலையுடன் கலக்கச் செய்து பூமிக்கு வராத வகையில் கரைந்து விடச்
செய்யும் தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கும் காற்று மாசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்பதற்கு சமீபத்தில் கூட தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு முடக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இந்த
நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் கடுமையான நாற்றத்துடன் ஒரு வித புகை மண்டலம் சூழ்ந்து மக்களுக்கு எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் திடீரென மக்களுக்கு எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரின் தென்பகுதிகளான 3வது மைல், புதுக்கிராமம், சண்முகபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் இதை உணர்ந்தனர். பெட்ரோல் வாடை கலந்த புகை நாற்றம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது எதனால் வந்தது என பொதுமக்கள் தங்களுக்குள் விவாதித்ததை காண முடிந்தது. இந்த புகை மண்டலம் சுமார் 20 நிமிடம் நீடித்தது.
அன்று மாலை தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் இருந்து அதிகமான அளவில் புகை வெளியானது தெரிய வந்தது. காற்று வீசும் திசைகளில் இந்த புகை மண்டலம் பரவியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இரவு வரை இந்த புகை மண்டலம் நீடித்தது. இதற்கு முன்பும் இதேபோன்றுதான் அடிக்கடி புகை மண்டலம் சூழ்வதும்,
மூச்சுத்திணறல் ஏற்படுவதுமாக இருந்துள்ளது. இதற்கு காரணம் ஸ்டெர்லைட்தான் என்று
போலி போராளிகள் வாதிட்டனர். தற்போது பொதுமக்களே அந்த கூற்றில் உண்மையில்லை என
உணரத்தொடங்கி விட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனநிலையில் பொதுமக்களிடம்
மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்கள் வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பு
என்ற கோணத்தில் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மூடலை பார்த்த பொதுமக்கள் தற்போது அந்த ஆலை
மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது என்பதையும் உணர்ந்து
கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல் நிலத்தடி நீரோட்டம் என்பதும் ஒரே இடத்தில்
நிலைகொள்வதில்லை. பூமிக்கு அடியில் பல கி.மீ. தூரத்திற்கு நீரானது ஓடையாக
ஓடக்கூடியது. அப்படியிருக்க ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதோவொரு இடத்தில்
நீர்மாதிரியை எடுத்து வைத்துக் கொண்டு அந்த மாசு இந்த ஆலையால்தான் ஏற்பட்டது
என்பதில் எந்தவித அறிவியல் உண்மையும் இல்லை என்பதை ஆய்வறிஞர்கள்
ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி பகுதி முழுவதும் ஏராளமான தொழிற்சாலைகள்
பரவிக்கிடக்கின்றன. அப்படியிருக்க நிலத்தடி நீரோட்டத்தில் மற்ற தொழிற்சாலைகளின்
கழிவுகள் கலந்து கடல் பகுதி வரை அதன் மாசுக்கள் சென்றடைய வாய்ப்புகள் அதிகமுள்ளன.
அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மண்ணில் கழிவுகளை கலப்பதற்கான தேவையும்
ஏற்படவில்லை என்பதே ஆலை நிர்வாகத்தினரின் வாதம்.
நாளுக்கு நாள் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட்
ஆலைக்கான ஆதரவு நிலை பொதுமக்களிடமும், பல்வேறு சமூக அமைப்புகளிடமும் பெருகி
வருகிறது. மத்திய மாநில அரசுகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திடமும் மீண்டும் ஆலையை திறந்து
பறிபோன வேலைவாய்ப்புகளை மீட்டுத்தர கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இதனால்
போலி போராளிகள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் செய்ய சரியான முகாந்திரம்
கிடைக்காமல் விழிபிதுங்கி கலக்கத்தில் உறைந்துள்ளனர்.
--------------------------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.