9/03/2018

தூத்துக்குடியை மீண்டும் சீர்குலைக்க வியூகம் வகுக்கும் போலி போராளிகள்


தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 100வது நாள் நினைவுகளை கடந்து அமைதியும் திரும்பியுள்ளது. இந்த நினைவேந்தலையும் அமைதிப்பேரணி, கூட்டம் என மக்களை திசைதிருப்பி தங்களுக்கு சாதகமான மனநிலையை மக்களிடம் விதைக்க மக்கள் அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் சுயநலவாதிகளும், ஆதாய நோக்கர்களும் பலவாறாக தீட்டிய திட்டங்கள் அனைத்தும் செயலிழந்து போய்விட்டன. இந்த போலிகளின் நோக்கமறிந்து இனியும் எந்தவித அசம்பாவிதங்களும் தூத்துக்குடி மண்ணில் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு  காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளால் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி நகரம் மட்டுமல்லாது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுத்த பல கிராமத்தினர் அந்த ஆலையின் மூடலால் பறிபோன வேலைவாய்ப்புகள், பொருளாதார இழப்பு, வாழ்வாதார இழப்புகள் ஆகியவற்றை உணர்ந்து மீண்டும் இந்த ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிகப்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் குவிந்து வரும் கோரிக்கைகளும், மனுக்களும்  இதனை உறுதிப்படுத்தி வருகின்றன. அணி அணியாகத் திரண்டு வந்து ஆலையைத் திறக்க வலியுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் ஆளும் கட்சியான அதிமுகவினரே ஆலைக்கு ஆதரவைத் தெரிவித்து போலி போராளிகளின் முகத்தில் கரிபூசினர்.
இதனால் கொதித்துப் போன போலி போராளிகள் அவசர அவசரமாக தங்களது அடுத்தக்கட்ட ஆயுதத்தை பிரயோகிக்க தொடங்கியுள்ளனர். கடற்கரை கிராமங்களில் களமிறங்கி மீண்டும் போராட்டத்திற்கு மக்களை ஆதாயப்படுத்த வீடு வீடாக பணம் கொடுக்கும் வேலையை தொடங்கி உள்ளனர். இளைஞர்களைக்கவரவும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தளவாடங்கள், டி-சர்ட்டுகள் என விநியோகித்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் போராட்டக்களத்திற்கு வரவேண்டிய நிலை வரும் என்ற நிர்ப்பந்தத்தோடு இந்த இலவசங்கள் இறைக்கப்படுகின்றன.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், புதூர்பாண்டியாபுரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை, ராமச்சந்திரபட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சில அமைப்புகள் களமிறங்கி தூத்துக்குடியின் அமைதியை சீர்குலைக்க மீண்டும் பலவாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட பேராசிரியை பாத்திமாபாபு அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பை நடத்தி அரசுக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்ட போது காவல்துறையினரின் உஷார் நடவடிக்கையால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து பேராசிரியை பாத்திமாபாபு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுவும் கொடுத்துள்ளார்.
தங்களுடைய போலி வாதங்களையும், வதந்திகளையும் மெய்யென முன்னிறுத்த சென்னையிலும், தூத்துக்குடியிலும் மாறி மாறி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிட்டு மக்களை குழப்பும் செயல்பாடுகளை அதிப்படுத்தி உள்ளனர். கலவரத்துக்குப் பின்னர் இவர்களது முகத்திரை தூத்துக்குடி மக்கள் மத்தியில் கிழிந்து  விட்டதை உணர்ந்த இவர்கள் சமீப காலமாக தூத்துக்குடி நகரப்பகுதிக்குள் தங்களது நடமாட்டத்தை குறைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி நகரத்தைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக தொழில்கள் முடக்கப்பட்டு அதனால் வரும் பொருளாதார பாதிப்புகளை நேரடியாக உணர்ந்த வர்த்தகர்கள், சிறுகுறு முதலீட்டாளர்கள் அனைவருமே இந்த போலி போராளிகளின் நோக்கத்தை தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டனர். ஆலை திறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு மனநிலை படிப்படியாக குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிகள் பறிபோனால் மீண்டும் தூத்துக்குடி நகரம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்வாதார முடக்க நிலை ஏற்படக்கூடும் என்பதை கடந்த 100 நாளைய பொருளாதார சரிவு படம்பிடித்துக் காட்டிவிட்டது.
மக்களை பாதிக்கும் உண்மையான காரணிகளை விட்டு விட்டு தொழில் வளர்ச்சியை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் போலி போராளிகள் மட்டும் நாளுக்குநாள் செல்வச் செழிப்பாக இருப்பதை மக்கள் கண்டுணரத் தவறவில்லை. அவர்களது சொத்துக்களும், சுகபோக வாழ்க்கை முறையும், பண நடமாட்டமும் மக்களிடம் இருந்து அவர்களை தனியாக அடையாளம் காட்டி வருகிறது. இவர்களது திடீர் வளர்ச்சி காவல் துறையின் உளவுத்துறையை உஷார்படுத்தி விட்டது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் இவர்களது சொத்து விவரங்கள், வங்கிக் கணக்குகள், பண பரிமாற்றங்கள் ஆகியவற்றை ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கி விட்டனர். விரைவில் இந்த வட்டத்தில் பல பெரும் புள்ளிகளும், போராளிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு திரியும் நபர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள்  மக்கள் சந்திப்புக்காக செல்லும் கிராமங்களிலெல்லாம் எந்த வகையான தகவல்களை பரப்புகின்றனர்? மக்களுக்கு எந்தமாதிரியான வாக்குறுதிகளை அளிக்கின்றனர்? என்றெல்லாம் கண்காணித்து வருகின்றனர். மக்களை மூளைச்சலவை செய்ய சம்பளத்திற்கு ஆட்கள் பிடிக்கும் பணியை போலி போராளிகள் கையாள்வதை காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர். இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பசுமைப்போராளி என பெயர் சூட்டிக்கொண்டு திரியும் பியூஷ்மானூஷ் என்பவரைப்பற்றிய கட்டுரையும் வெளியானது.
போராட்டத்துக்கு வா, ரூ.20 ஆயிரத்தை அள்ளு என்ற தலைப்பிலான அந்த கட்டுரையில் மூளைச்சலவைக்கு ஆள்பிடிக்கும் இவர்களது தந்திரம் அம்பலமானது. இதுபோன்ற மூளைச்சலவை செய்யும் நபர்கள் இரண்டாவது கட்ட கலவரத்திற்கு மக்களை தயார்படுத்த தூத்துக்குடியிலும் களமிறங்கியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அடையாளம் தெரியாத வேற்று மாவட்டத்தவர் யாரேனும் பிரசாரம் என்ற பெயரில் கிராமங்களுக்குள் வந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க ஊர் அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டு வருகின்றனர். விரைவில் இதுபோன்ற கருப்பு ஆடுகளை தூத்துக்குடியில் இருந்து களையெடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
--------------------------------

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending