7/14/2018

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பழரசம் விநாயகமூர்த்தி: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவராக இருப்பவர், பா.விநாயகமூர்த்தி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர். இந்த போராட்டத்தை வீரியம் பெறச் செய்ய பல விதங்களிலும் நிதியுதவி அளித்துள்ளார். வர்த்தகராக இருக்கும் ஒருவர் பல தொழிற்சாலைகளின் பூர்வாங்க பணிகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவர் எதற்காக தனிப்பட்ட முறையில் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையை எதிர்த்து போராட வேண்டும்?
தங்கத்தின் பயன்பாட்டில் தாமிரமும், கந்தக அமிலமும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கையில், தங்க வியாபாரத்தில் தூத்துக்குடி நகரம் மட்டுமல்லாது, கோவில்பட்டி, ராஜபாளையம் என அடுத்தடுத்து கிளைகளை தொடங்கி கொடிகட்டி பறக்கும் இவர் தாமிரமும், கந்தக அமிலமும் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து திடீரென போராட்டத்தில் குதித்தது ஏன்? என அவரைச் சார்ந்த வர்த்தகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தூத்துக்குடி கலவரத்திற்கு பின்னர் மக்கள் மத்தியிலும் பெரிய வினாவை எழுப்பியுள்ளது.
அவர் சார்ந்திருக்கும் வர்த்தகர்கள் சங்கத்திலும் அரசல் புரசலாக இந்த சர்ச்சை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஏதோவொரு நெருடல் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். விநாயகமூர்த்தியின் பின்னணியைப் பற்றி விசாரித்ததில் சில தகவல்கள் சாதக பாதகமாக வெளியே வந்தன.
 தூத்துக்குடியில் மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த செல்லையா நாடார்-பூமரத்தம்மாள்  தம்பதியினரின் மகன் பால்ராஜ் நாடார். இவருக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் பா.விநாயகமூர்த்தி. இவருக்கு பிறகு பா.முருகானந்தம், பா.செல்வராஜ் ஆகிய இரு மகன்கள் பிறந்தனர். ஆரம்பத்தில் தூத்துக்குடி நகர நூற்றாண்டு கட்டிடத்தில் பழக்கடை, பழச்சாறு கடை என  படிப்படியாக உழைப்பின் உத்வேகத்தால் வளர்ந்தவர் பால்ராஜ் நாடார். இதனாலேயே இவருக்கு பழரசம் பால்ராஜ் நாடார் என்ற பெயர் பிரபல அடைமொழியானது.
பழரசக்கடை மட்டுமின்றி அடுத்தகட்டமாக காசுக்கடை பஜாரில் 1982ல் நகை அடகுக்கடையிலும் முதலீட்டை முடக்கி நகைத்தொழிலில் கால்பதித்தார் பால்ராஜ் நாடார். இவருக்கு உதவியாக விநாயகமூர்த்தி உள்ளிட்ட சகோதரர்கள் 3 பேரும் இருந்தனர். இதன்மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொண்ட இவர்கள் 1991ல் தூத்துக்குடியில் அன்னை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் புதிதாக நகைக்கடையை ஆரம்பித்து நடத்தினர். பழரசம் பால்ராஜ் நாடார் மீது கொண்ட பற்று காரணமாக படிப்படியாக மக்கள் மத்தியில் மதிப்பை பெற துவங்கியது இந்நிறுவனம்.
2004ல் பழரசம் பால்ராஜ் நாடார் இறந்த பிறகு, பா.விநாயகமூர்த்தி தலைமையேற்று இந்நிறுவனத்தை நடத்தினார். இவர் மீது வெளிநாடுகளில் இருந்து வெள்ளி கடத்தல் உள்ளிட்ட சிற்சில புகார்கள் அவ்வப்போது வெளிவந்தன. குறுகிய காலத்தில் பெரிய அளவிலான இவரது வளர்ச்சி வர்த்தகர்கள், பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திரைமறைவு முறைகேடு வழிகளில் இவர் பொருளாதார முன்னேற்றம் அடைவதாக நகருக்குள் பரவலாக பேசப்பட்டது. அதன்பிறகு தனது பாதுகாப்புக்காக பல இயக்கங்களிலும், வர்த்தக அமைப்புகளிலும் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்காக ஏராளமான நபர்களை நிரந்தர பணிக்கு அந்நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அவரது எண்ணப்படி அந்நிறுவனம் ஆட்களை ஏற்றுக் கொள்ள வில்லை. இதுவே ஸ்டெர்லைட் மீதான அதிருப்தியை இவருக்கு முதன் முதலில் ஏற்படுத்தியது. சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக பல வகைகளிலும் செயல்படத் தொடங்கினார். அதேபோல் வர்த்தக சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி அளிக்க கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அணுகி பெரும் தொகையை கேட்டபோது இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாது என கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே விநாயகமூர்த்தி சென்றுவிட்டார்.
தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த விநாயகமூர்த்திக்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தொடர் போராட்டம் கைகொடுத்தது. போலி போராளிகளாக களமிறங்கிய நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. பன்னாட்டு நிதியும் தாராளமாக கைகளில் புழங்க தொடங்கியது. மார்ச் 24 முற்றுகை போராட்டம் அறிவித்ததும், அதற்கு முந்தைய தினத்தில் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக தனது வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியதாக நாடகமாடிக் கொண்டார். போலீசாருக்கு இது நாடகமென அப்பட்டமாக தெரிந்தாலும், ஊரில் முக்கிய பிரமுகர், வர்த்தக சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் பெரிதாக காட்டிக் கொள்ள வில்லை.
தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு இதன்பின்னணியில் கூட்டாக சதி செய்து செயல்பட்டவர்கள் பட்டியலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதில் பா.விநாயகமூர்த்தியின் பெயரும் முதன்மை பெற்றிருந்தது. அதே சமயத்தில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பெற்றிருப்பதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. அதனடிப்படையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை என விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது. இதேபோல் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்த சமயத்தில் பொருளாதார வளர்ச்சியில் கொழித்த நபர்களையும் அடையாளம் காணத் துவங்கியுள்ளனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் தூத்துக்குடி நகர மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பரபரப்பையும், தங்களை எப்படியெல்லாம் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற அதிருப்தியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
------------------------------------

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending