இந்தியாவின் சாபக்கேடு ஆளுமையில்லா ஆட்சியாளர்களால் முழுமை
பெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கும், அவர்களுக்கு வாழ்வியலுக்கும் சற்றும்
பொருந்தாத சட்டங்களால் நாடும், நாட்டின் நிர்வாகமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது.
மக்களாட்சி என்ற பெயரில் மக்களையே மீண்டும் மீண்டும் வாட்டி வதைக்கும் சட்டங்கள்
புதிது புதிதாக முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. எது தேவையில்லை என மக்கள்
ஒதுக்குகிறார்களோ அதுவே அவர்கள் மீது கட்டாயச்சட்டமாக புகுத்தப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு சமீபமாக 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் கட்டமைப்பு
தலைகீழாக மாறியுள்ளது.
மக்களுக்கான நாடாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பணம் கொழித்தவர்களுக்கும்
சாமரம் வீசும் அடிமை ஆட்சியாளர்களால் நாட்டின் வளர்ச்சி படிப்படியாக பின்னோக்கி
சென்று கொண்டிருக்கிறது. இது வெளியில் தெரியாமல் பூசிமெழுகும் வேலைகள்
கனக்கச்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தோல்வியை தோல்வி என ஒப்புக்கொள்ளாத,
ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் திறமையற்ற ஆட்சியாளர்களால் ஒவ்வொரு கனமும் இந்தியா
தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறது. வல்லரசுக் கனவை நனவாக விடாமல் பன்னாட்டு
நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காக நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”
என்பதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை. மக்களாட்சி என்ற பெயரில் இந்தியாவின் பல
மாநிலங்களிலும் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப அரசியலும்,
வழிவழியாக பதவி சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்ற
கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் மூச்சுத்திணறி விக்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்துமே மக்களால் முகம் சுளிக்கப்பட்டதும்,
வெறுக்கப்பட்டதுமாகவே இருக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்காமலேயே தன்னிச்சையாக
எதேச்சதிகாரத்துடன் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேளாண் மசோதாவை கண்டித்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆனால் சமரச பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலை
ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படியும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான
நிலைப்பாட்டை மட்டுமே ஆட்சியாளர்கள் எடுக்கப்போகிறார்கள் என்பதுதான் உண்மை.
வீதியில் நின்று போராடும் விவசாயிகளின் நிலைமை கடைசி வரை கவலைக்கிடம்தான். இந்தியா
விவசாயத்தை முதுகெலும்பாக கொண்டிருக்கின்ற நாடு என கூறிக்கொண்டே விவசாயிகளை
பரதேசத்திற்கு அனுப்பும் வேலையைத்தான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தரகர்களின் தலையீட்டை விவசாயிகளிடம் இருந்து அகற்றுவதாக கூறிக் கொண்டு
பன்னாட்டு இடைத்தரகர்களை உட்புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின்
நன்மைக்காகவே என்று கூறப்படும் இந்த சட்டத்தை விவசாயிகள் அறவே நம்பவில்லை.
நம்பிக்கையை ஏற்படுத்தும் சட்டமாகவும் அது இல்லை. பன்னாட்டு இடைத்தரகர்களுக்கு
எதிர்காலத்தில் விவசாயிகளை அடிமையாக்கும் சாசனமாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது.
விவசாயிகளால் எதிர்க்கப்படுகிறது. மக்கள் விரும்பவில்லை எனில் எதற்காக கட்டாய
உட்புகுத்துதல் என்பது பிரயோகிக்கப்படுகிறது. தற்போது புதிதாக கார்களில் பம்பர்
அகற்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எந்த ஆட்சியாளர்களும் கூட
கடைபிடிக்கப்போவதில்லை. அரசியல்வாதிகளும் கைக்கொள்ளப் போவதில்லை. கட்டாய ஹெல்மெட்,
சீட்பெல்ட் சட்டம் போல மக்களிடம் தண்டம் வசூலிக்க மற்றொரு உபாயம் அவ்வளவே.
ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு, அந்த சட்டத்திற்கான தேவை இல்லாத நிலை ஏற்படும்
பட்சத்தில் அதனை திரும்பப் பெறுவதற்கான ஆளுமை ஆட்சியாளர்களிடம் இல்லை. கால
காலத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டை ஆளுகின்றன. இதற்கான உதாரணங்கள் பல
ரூபங்களில் நாட்டில் மலிந்து கிடக்கின்றன. நான்குவழிச்சாலைகளும்,
சுங்கக்கட்டணங்களும் இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்னையாகத்தான் இருக்கிறது. சாலை
போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்றளவும் கட்டண விகிதம்
உயர்த்தப்பட்டு வருகிறதே தவிர மக்களின் சுமை இன்னமும் அவர்களிடம் இருந்து இறக்கி
வைக்கப்படவில்லை. சாலைகளும் செப்பனிடப்படுவதில்லை. அப்படியானால் இந்த பணம் எங்கே,
யாருக்காக செல்கிறது என்பது விடை தெரியாத மர்மமாக நீடிக்கிறது. வழியெங்கும்
வழிப்பறி கொள்ளையர்கள் போலவும், கௌரவ பிச்சையெடுக்கும் கூடாரங்கள் போலவும்தான் இந்த
டோல்கேட்டுகள் காட்சி தருகின்றன. மக்களுக்கு வலிதெரியாமல் அவர்களிடம் பணத்தை
பிடுங்குவதற்காக தற்போது பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட்டு வருவது உச்சக்கட்ட
கொடூரம். உரிமம் காலாவதியான டோல்கேட்டுகள் கூட இன்னமும் வழிப்பறி செய்து கொண்டுதான்
இருக்கின்றன. இதைப் போலவே ஜிஎஸ்டி தொடங்கி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பெட்ரோல்
விலை நிர்ணயம், எட்டுவழிச்சாலைத் திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் என
எட்டுத்திக்கில் இருந்தும் மக்களை நசுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
காலம் காலமாக மக்களும் விவசாயிகளும் போராடித்தான் ஜீவனம் நடத்தும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
`வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.’
மன்னன் அளவுக்கதிகமாக வரிவசூல் செய்யக் கூடாது. வேலோடு வழியில் நின்று பொருட்களை
அடித்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரரைப் போல் மன்னன் இயங்கலாகாது. அந்த
வரி இந்த வரி என்று வரிவரியாய்ச் சட்டங்கள் கொண்டுவந்து நடுத்தர மக்களைச்
சிரமப்படுத்துவதை வள்ளுவம் வன்மையாய்க் கண்டிக்கிறது. இதை மன்னராட்சிக்குச்
சொன்னதாய் மட்டும் கொள்ளத் தேவையில்லை. மக்களாட்சிக்கும் இது பொருந்தும்.



முற்றிலும் உண்மை. அருமையான பதிவு.
ReplyDelete