பனை என்பது வெறும் மரமல்ல. அது தமிழர்களின் உணர்வு. தமிழினத்தின் அடையாளம். தமிழ்நாட்டின் தேசிய சின்னம். தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்து நூற்றாண்டு முன்பு வரை தற்சார்பு பொருளாதாரத்தை மனித இனத்திற்கு ஊட்டி வளர்த்த அற்புதமான பொக்கிஷம் பனை. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கிய இலக்கணங்களையும், காவியங்கள் காப்பியங்களையும் வழிவழியாக ஓலைச்சுவடிகள் வடிவில் இந்த சந்ததிகளுக்கு கொண்டு சேர்த்தது பனைதான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் பனையின் இன்றைய நிலை அந்தோ பரிதாபத்திற்குப் போய் விட்டது. 1970களில் கதர் கிராமத் தொழில்கள் துறை மேற்கொண்ட கணக்கெடுப்புப் படி தமிழகத்தில் 8 கோடி பனைகளும், அதில் 5 கோடி பனைகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய காலக் கட்டத்தில் அரசுக்கு அந்நியச் செலாவணியையும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினையும் பனை பொருளாதாரம் வடிவமைத்து தந்துள்ளது. ஏதோ சில சப்பைக்கட்டு காரணங்களை முன்னிறுத்தி பனை பொருளாதாரம் முறியடிக்கப்பட்டு இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நூற்றாண்டுக்கு முன்புள்ள நிலவரத்தை கணக்கில் கொண்டால், மக்கள் யாவருமே இனிப்பிற்காக பொருளாதார அந்தஸ்தைப் பொறுத்து தேன், கருப்பட்டி, பனஞ்சீனி, இலுப்பை சர்க்கரை ஆகியவற்றைத்தான் உணவில் சேர்த்து வந்துள்ளனர் என்பது தெரியவரும். கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் புகுத்தப்பட்ட வெள்ளைச் சீனி அரசியல் என்பது பனை உள்ளிட்ட இதர இயற்கை இனிப்புச்சுவையூட்டிகளை புறந்தள்ளியுள்ளது என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர்கள் நன்கறிவர். இதன் காரணமாக உற்பத்தி குன்றிப்போய் சாமானியர்களின் புழக்கத்தில் இருந்த பனங்கருப்பட்டி உள்ளிட்டவை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறியிருக்கிறது. வெள்ளைச் சீனி என்பது ஒரு கிலோ ரூ.30க்கும் ரூ.40க்கும் விற்கப்படும் நிலையில் தரமான பனங்கருப்பட்டியின் விலை ரூ.500 வரை உயர்ந்துள்ளது. இதனால் இதன் பயன்பாடு என்பது நாளாவட்டத்தில் குறைந்து கொண்டுதான் வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஏதோ சில இடங்களில் பனங்கள்ளில் மருந்து கலந்து விற்கப்பட்டதாக தெரியவந்ததும் அன்றைய அரசு பனங்கள்ளுக்கு தற்காலிக தடை போட்டு உத்தரவிட்டது. அந்த தடை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் நிரந்தர தடையாக பாவிக்கப்பட்டு இன்றளவும் பனையேறிகளை மரம் ஏறவிடாமல் தடுப்பதாகத்தான் அதற்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் வெறும் வாயளவிலேயே உள்ளது. பதனீருக்காக மரம் ஏறினால் கூட சந்தேகப்பார்வையில் பனைத் தொழிலாளர்கள் சிக்கி சாராய வியாபாரிகளுக்கு இணையாக சித்ரவதைக்கு உள்ளாவது வேடிக்கைக்குரிய நடப்பாக உள்ளது.
ஒரு பக்கம் வெள்ளைச் சீனி அரசியல் பனை பொருளாதாரத்தை மழுகங்கடித்துக் கொண்டிருக்க முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்ட பனங்கள்ளை மதுப்பட்டியலில் இடம்பெறச் செய்து பல கோணங்களில் பனை பொருளாதாரம் சிதைக்கப்பட்டு விட்டதால் தவிட்டு விலைக்கு பனைகளை எரிபொருளுக்கு விற்றுவிட்டு மாற்றுத் தொழில் தேடி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நுகர்வு செய்துவிட்டனர். இதன் விளைவு இன்றளவில் பனையேறுவதற்கே ஆட்கள் இல்லை என்ற நிலை உருவாகி உணவுப் பொருட்கள், உணவிலிப் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகைகளிலும் வருமானத்தை வாரிக் குவித்து வந்த ஒட்டுமொத்த பனை பொருளாதாரமும் சரிந்து போய்விட்டது. மனிதர்களின் உடல் ஆரோக்கியமோ பலவகை நோய்களாலும் தேய்ந்து கொண்டே வருகிறது.
இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகள் பனை பொருளாதாரத்தில் கொழித்துக் கொண்டிருக்க முழுக்க முழுக்க தமிழர்களின் அடையாளமான பனையால் தமிழர்களுக்கு பலனில்லாமல் போய் இருப்பது வேதனைக்குரிய செய்தி.
பனைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் ஒன்றுதான் பருவமழை பொய்த்து வரும் துயரம். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பனையை மழை ஈர்ப்பு மையம் என்றே குறிப்பிடுவது வழக்கம். காரணம், மழையை ஈர்க்கக் கூடிய வல்லமை பனைகளுக்கு உண்டென்பதுதான். மழையை உருவாக்கக் கூடிய சில்வர் நைட்ரேட் வேதிவினை பனைகளில் நிகழ்வது இதற்கான சாத்தியக்கூறுகளில் ஒன்றாக விளக்கப்படுகிறது.
வனவிரிவாக்கம் மற்றும் விதைப்பரவல் நிகழாமை போன்றவற்றிற்கும் பனையழிப்பு காரணமாக அமைந்துள்ளது. பனைகள் என்பது எறும்பு, பூச்சி, வண்டு என பல்லுயிர்ப் பெருக்கத்தின் மாட்சியாகவும், கழுகு, கொக்கு, நாரை ஆந்தை என பல இனப்பறவைகளின் புகலிடமாகவும் இருக்கிறது என்பதை மறந்து தறிக்கப்பட்டதாலேயே இதுபோன்ற இயற்கைக்கான ஆபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. ஒரு பனங்கூட்டம் அழிந்தால் ஒரு காடு அழிவதற்கு சமம் என்ற முன்னோர்களின் எச்சரிக்கைத் தொனியை அலட்சியம் செய்ததால் இயற்கை இடர்பாடுகளுக்கு தூபமிட்டதாக அமைந்து விட்டது.
விளைநிலங்கள் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதற்காக நிலங்களைச் சுற்றி பனைகளை உயிர்வேலியாக நட்டு வைத்த முன்னோர்களின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியாது. நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவதற்காகவும், நிலங்களில் நீரோட்டம் குறைவில்லாமல் இருப்பதற்காகவும் பனைகள்தான் உறுதுணை எனக் கண்டறிந்த அவர்களது விஞ்ஞான அறிவு போற்றுதலுக்குரியது என்பதுவும் மறுப்பதற்கில்லை.
மாநில சின்னம் என்ற அந்தஸ்துக்கு கூட மதிக்கப்படாமல் தொழிற்சாலைகளின் எரிபொருட்களுக்காகவும், செங்கல் சூளைகளுக்காகவும் பனைகள் தறிக்கப்பட்டு தற்போது 3 கோடிக்கும் கீழாக எண்ணிக்கை அருகிவிட்டது. தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள திருவில்லிபுத்தூர் கோபுரத்தை தனிநபர்கள் பயன்படுத்த தடை, மாநில விலங்கான வரையாடு வேட்டைக்கு தடை, மாநில பறவையான மரகதப்புறாவை வேட்டையாட தடை என பலவாறாய் தடைகள் இருக்க பனைகளை தறிக்க தடைச்சட்டம் கொண்டு வராப்படாதது ஏனோ? தெரியவில்லை. நாட்டின் தேசிய சின்னங்களுக்கு அளிக்கும் மரியாதையை அந்தந்த மாநிலத்தின் தேசிய சின்னங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே பொதுநல நோக்கர்களின் கோரிக்கையாக உள்ளது.
பனைகளை தறிக்க தடைச்சட்டம் கோரியும், பனங்கள்ளை மதுப்பட்டியலில் இருந்து நீக்கவும் பல ஆண்டுகளாக “கள்“ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, சட்டை அணியா சாமியப்பன் முதலாய் பலரும் போராடி வருகிறார்கள். தென்னையில் நீராபானம் எடுக்க அனுமதி அளித்துள்ள அரசு பனை தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என பனை வாழ்வியல் இயக்கம் முதலான சமூக அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்தி ஆட்சியாளர்களிடம் மனுக்களை அழித்து வருகின்றன.
ஓகி புயலின் போது இயற்கை சீற்றத்தால் வெகுசீக்கிரம் பனைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தே தற்போது தமிழக அரசு பனைகளின் மீது தனது கரிசனையைக் காட்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆய்வின் பலனாக சுனாமியின் போது கூட பனைகள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் முதற்கட்டமாக தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் பனைகளை விதைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு முன்பாகவே பனை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் பனையின் பலனை உணர்ந்து பனை விதைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில் சில அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியிருப்பது வரவேற்புக்குரியது.
பனை பொருளாதாரம் என்பது உலக அரங்கில் தமிழகத்தை மட்டுல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைநிமிர்த்த வல்லது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதற்கான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். பனைகளை பெருக்குவதற்காகவும், பனை தொழில்களின் அபிவிருத்திக்காகவும் திட்டங்களைத் தீட்டி பனை பொருளாதாரத்தை கைவிடாமல் கோலோச்சி வரும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ளதைப்போல் கிராமிய அளவில் குழுக்களை ஏற்படுத்தி பனையேறுதல், பனைப் பொருட்களைக் கொண்டு உணவு மற்றும் உணவிலிப்பொருட்கள் தயாரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதிக்கான பொருட்கள் தயாரித்தல், கலைப்பொருட்கள் தயாரிப்பு என தொழில் முனைவோருக்கான பயிற்சிகளை வழங்கி நாட்டிற்கு வருமானத்தையும், மதிப்பையும் பெற்றுத்தருவதுடன் இழந்து போன பனை பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதே பனை ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.